பலன்: குறைகள் நீங்கும். பிரிந்தவர் கூடுவர்.
வருந்தாவகை என் மனத்தாமரையினில் வந்து புகுந்து
இருந்தாள், பழைய இருப்பிடமாக, இனி எனக்கு
பொருந்தாதது ஒரு பொருள் இல்லை. - விண் மேவும் புலவருக்கு
விருந்தாக, வேலை மருந்தானதை, நல்கும் மெல்லியலே.
பொருள்:
விண் மேவும் புலவருக்கு விருந்தாக, வேலை மருந்தானதை, நல்கும் மெல்லியலே -
விஷ்ணு விண்மேவும் புலவருக்கு (தேவர்களுக்கு) விருந்தாக பாற்கடலில் தோன்றிய அமுதத்தை பகிர்ந்து அளித்தார். அதற்கு உறுதுணையாக இருந்தவள், மெல்லிய இடையுடைய நம் அன்னை அபிராமி. இவ்வாறு பட்டர் கூறுவதற்கு காரணங்கள் இரண்டு.
1. பாற்கடலை தேவர்கள், அசுரர்கள் இருவரும் கடையும்போது, முதலில் தோன்றியது ஆலகால விஷம். அதனை சிவபெருமான் உண்டார். விஷத்தை உண்டால் மாய்ந்து விடுவோம். எனினும் அவர் தைரியமாக உண்டார். எப்படி?
அபிராமியின் மாங்கல்ய பலத்தின் மேல் அவர்க்கு உள்ள நம்பிக்கையால். தன் மனைவியின் (அபிராமி அன்னை) தாடங்கங்கள், தான் கட்டிய திரு மாங்கல்யம் இவ்விரண்டும் அன்னையிடம் இருக்கும் வரை தனக்கு ஒரு ஆபத்தும் நேராது என்ற தைரியம்.
அதேபோல், அவர் உண்டதும் அன்னை பார்வதி, விரைந்து சென்று தன் கணவரின் கழுத்தை அழுத்தி பிடித்தாள். அதனால் விஷம் உள்ளே செல்லாமல், வெளியிலும் வராமல், சிவனின் கழுத்திலேயே நின்றது. அந்த இடம் நீலமாக மாறியது. அவர் நீலகண்டன் ஆனார்.
விஷம் உள்ளே சென்றிருந்தால் சிவன் மாண்டிருப்பார். வெளியே வந்தால் உயிர்கள் அனைத்தும் (நாம்) மாண்டிருக்கும்.
2. திருக்கடையூரில் அபிராமியின் துணைவர் அம்ருத கடேஸ்வரர். அமுதீசர் என்று அபிராமி பட்டர் அபிராமி அம்மை பதிகத்தில் பாடியுள்ளார். "அமுதீசர் ஒருபாகம் அகலாத சுக பாணி அருள்வாமி அபிராமியே!" என்று ஒவ்வொரு பாடலின் முடிவிலும் வரும். பிரளய காலத்தில், நீரில் எல்லாம் மூழ்க, அமிர்தம் ஒரு கடத்தில் (குடம்) மிதந்து வந்து இந்த கடையூரில் நின்றது. அதனை தன் கையில் ஏந்தி விஷ்ணுவிடம் கொடுத்தவர் நம் பெருமான் சிவன். அதனால் அவர் இத்தலத்தில் அம்ருத கடேஸ்வரர்.
இவ்வாறு தேவர்களுக்கு அமுதம் கிடைக்க காரணமான அபிராமி அன்னை, அடியவன் தன் (பட்டர்) மனத்தாமரையில் வந்து புகுந்தாள். தனது பழைய இருப்பிடம் அதுவே (அடியார்களின் மனம்) என்று உரிமையோடு வந்து அமர்ந்தாள். அன்னையே வந்துவிட்டாள். அதனால் இனி அடியவர்களுக்கு கிடைக்க வேண்டிய பொருள் வேறெதுவும் இல்லை. தான் இனி வருத்தப்பட வேண்டியது இல்லை. ஏனெனில் தனது பிறப்பு இறப்புகளை அன்னை அறுத்தெறிந்துவிட்டாள்.
பாடல் (ராகம் - சிந்து பைரவி, தாளம் - --விருத்தம்--) கேட்க