தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சரும் தி.மு.க. மாநில இளைஞர் அணி செயலாளருமாண உதயநிதி ஸ்டாலின் திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டு இன்று காலை 10.45 மணிக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட எல்லையான மணலூர்பேட்டைக்கு வந்தடைந்தார். அங்கு அவருக்கு கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரும் தமிழக நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணி துறை அமைச்சருமான எ.வ.வேலு முன்னிலையில் கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ.வுமான வசந்தம் கார்த்திகேயன் தலைமையில் சுமார் 25 ஆயிரம் பேர் வரவேற்பளித்தனர்.
மேளதாளம், வான வேடிக்கை முழங்க, பூரண கும்ப கலசத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. பறை இசை, பம்பை, மயிலாட்டம், ஒயிலாட்டம், செண்டை மேளம், கொம்பை வாத்தியங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. இது தவிர 3 இடங்களில் அமைக்கப்பட்டிருந்த தனி மேடைகளில் கலை குழுவினரின் வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. வரவேற்பை ஏற்றுக் கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 100 அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பத்தில் தி.மு.க. கொடி ஏற்றினார். தொடர்ந்து நூற்றுக்கணக்கான வாகனங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான மோட்டார் சைக்கிளுடன் புறப்பட்டு லா.கூடலூர் கிராமத்திற்கு சென்றார்.
அங்கு நடைபெற்ற தி.மு.க. தேர்தல் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை மற்றும் கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்று பேசினார். இதில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஊராட்சி குழு தலைவர் புவனேஸ்வரி பெருமாள், திருக்கோவிலூர் ஒன்றிய குழு தலைவர் அஞ்சலாட்சி அரசகுமார், ரிஷிவந்தியம் ஒன்றிய குழு தலைவர் வடிவுக்கரசி சாமி சுப்பிரமணியன், ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் அய்யனார், ராஜேந்திரன், கிருஷ்ணமூர்த்தி, பாரதிதாசன், மணலூர்பேட்டை நகர தி.மு.க. செயலாளர் வக்கீல் எம்.ஜெய்கணேஷ் பேரூராட்சி மன்ற தலைவர் ரேவதி ஜெய்கணேஷ், மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை அறங்காவலர் குழு தலைவர் வக்கீல் பாலாஜிபூபதி, மாவட்ட ஆவின் துணைச் சேர்மன் பாலகிருஷ்ணன் ஆகியோர் உள்பட தி.மு.க, நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டனர்.