இதனால் சுகாதாரத்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமியை சந்திக்க நேற்று 100-க்கான ஒப்பந்த செவிலியர்கள் புதுச்சேரி சட்டப்பேரவை வாயில் முன்பு முற்றுகையிட்டனர். அங்கு வந்த சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் சிவா மற்றும் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஒப்பந்த செவிலியர்களை அழைத்து பேசினர். சில செவிலியர்களை மட்டும் முதலமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்த அழைத்து சென்றனர். கொரோனா காலத்தில் நியமிக்கப்பட்ட செவிலியர்கள் பாதிக்கப்பட சுகாதாரத்துறை அதிகாரிகள்தான் காரணம் என்று தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் குற்றம்சாட்டினர். அப்போது அவர்களிடம் முதலமைச்சர் ரங்கசாமி கூறுகையில்,
"முன்பு இருந்த நிர்வாகம் வேறு. தற்போது இருப்பது வேறு. கொரோனா காலத்தில் நியமிக்கப்பட்ட தற்காலிக செவிலியர்களை ஒப்பந்தம் முடிந்ததும் பணியில் இருந்து விடுவிக்கலாம் என அதிகாரிகள் கூறினர். நான் தான் 3 மாதங்களுக்கு ஒரு முறை பணி ஒப்பந்தத்தை நீட்டித்து தருகிறேன். இங்கு 18 ஆண்டுகளாக பணிபுரிந்தோருக்கே ஏதும் செய்ய முடியவில்லை. உங்களிடம் சொல்வதற்கு சங்கடமாகத்தான் உள்ளது. முதலமைச்சர் இருக்கையில் ஏன் உட்கார்ந்திருக்கிறோம் என்று எண்ணுகிறேன். முதலமைச்சர் சொன்னால் முன்பெல்லாம் நடைபெறும். இப்போது அதுபோல் செய்ய முடியாது. விழாவுக்கு சென்றாலே, கல்வெட்டில் பெயர் இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டியுள்ளது. பல அதிகாரிகள் வி.ஆர்.எஸ். தரக்கூறுகிறார்கள். மின்துறையில் விடுப்பு எடுத்து சென்று விட்டனர் புதிதாக ஆட்கள் எடுத்தால், கொரோனா காலத்தில் நீங்கள் பணி புரிந்ததற்காக வெயிட்டேஜ் செய்கிறோம். அதுதான் செய்ய முடியும். கொரோனா காலத்தில் பணிபுரிந்த செவிலியர்களுக்கு 5 ஆண்டுகள் பணி நீட்டிப்பு என் கையில் இருந்தால் செய்து விடுவேன். அது முடியவில்லை. இதை புரிந்து காத்திருங்கள்" என்றார்.