இது மாற்றம் பெற்று அடுத்து வந்த காலக்கட்டங்களில் கணவர் பெயரை பச்சை குத்தும் நடைமுறை சடங்கு, சம்பிரதாயமாக மாறி போய் இருந்தது. பின்னர் படிப்பறிவு, நாகரிக வளர்ச்சியால் பழங்கால பச்சை குத்தும் மரபு குறைய தொடங்கியது. பெண்கள் தங்கள் கணவர் பெயரை கூறுவதற்கு தயக்கம் காட்டும் நிலை கடந்து போனது. இவ்வாறு பழங்கால பச்சை குத்தும் நடைமுறை குறைந்து போன அதேவேளையில், அது இன்றைக்கு கால மாற்றத்தில் மேற்கத்திய கலாசாரம் என்ற பெயரில் டாட்டூவாக புது வடிவம் பெற்று விட்டது. நடிகர், நடிகைகள் இந்தியாவில் பிரபலமாக பல பாலிவுட் பிரபல நடிகர், நடிகைகள் தங்கள் காதலர்கள் பெயரை டாட்டூவாக குத்திக்கொண்டது டாட்டூவின் மீது இளைஞர்கள் குறிப்பாக இளம்பெண்களின் கவனத்தை ஈர்க்க தொடங்கியது என கூறலாம். இன்றைய காலக்கட்டத்தில் கிரிக்கெட், கால்பந்து விளையாட்டு வீரர்கள் என்று பலரும் டாட்டூ குத்திக்கொண்டு டாட்டா காட்டுவது ஒரு ஸ்டைலாக தான் மாறி விட்டது.
குறிப்பாக இளம்பெண்கள் தங்கள் அழகுக்கு அழகு சேர்க்க மெகந்தி இடுவதையும், டாட்டூஸ் (பச்சை குத்துதல்) வரைந்து கொள்வதையும் நாகரிகத்தின் அடையாளமாக பார்க்கிறார்கள். முதலில் பெயரை மட்டுமே டாட்டூஸ் குத்திய இளைஞர்கள், இளம்பெண்கள் தற்போது கை, கால் தொடங்கி உடலில் பல்வேறு இடங்களில் விதவித வண்ணங்களில் டாட்டூஸ் வரைவது தற்போது பேஷனாகி விட்டது. அழகானதா? ஆபத்தானதா? இந்த டாட்டூ குத்துவது பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை செய்கின்றனர். டாட்டூ கிரைன்லோமா, டாட்டூ ட்யூபர்க்ளோசிஸ், டாட்டூ சர்காயடேசிஸ், பங்கல் இன்பெக்ஷன் போன்ற பல விதமான தோல் நோய்கள் இந்த டாட்டூவால் உருவாகும் வாய்ப்பு உள்ளதாக டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். இளைஞர்களின் டாட்டூஸ் மோகம் அழகானதா? அல்லது ஆபத்தானதா? என்று இளைஞர்கள், டாக்டர்கள் கூறிய கருத்துளை காண்போம்.
பக்க விளைவுகள் பென்னாகரத்தை சேர்ந்த தோல் சிகிச்சை நிபுணா் டாக்டர் முனுசாமி:- உடலில் டாட்டூ வரைந்து கொள்ளும் ஆசை தற்போது இளைஞர்களிடையே பரவலாக ஏற்பட்டு வருகிறது. இந்த டாட்டூவை உடலில் வரைவதற்கு பயன்படுத்தும் கருவிகள் மூலம் உடலில் பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. டாட்டூ போடும்போது அதிக வலி ஏற்படும். அந்த வலி சில வாரங்கள் வரை கூட தொடரும். குறிப்பாக பல்வேறு கலர்கள் மற்றும் ரசாயனங்கள் சேர்க்கப்பட்ட டாட்டூவை வரைந்து கொள்ளும்போது தோலில் ஒவ்வாமை உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும். டாட்டூ வரைந்து கொண்டவர்களுக்கு எதிர்காலத்தில் பல்வேறு பக்கவிளைவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இவ்வாறு டாட்டூ போட்டு கொண்டவர்களில் பலர் தோல் எரிச்சல் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்கு சிகிச்சை பெறும் நிலை ஏற்படுகிறது. அழகு, நாகரிகம் ஆகியவற்றை விட உடல் ஆரோக்கியம் முக்கியம் என்பதை இளைஞர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். டாட்டூ போட்டு கொள்வது அவசியமா? என்பது குறித்து சிந்தித்து செயல்பட வேண்டும்.
அழிப்பது எப்படி? சேலம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த டாட்டூ வரையும் கலைஞர் மகேஷ்குமார்:- பி.சி.ஏ. முடித்துள்ள நான் கடந்த ஓராண்டுக்கு மேலாக டாட்டூஸ் குத்தும் கடை நடத்தி வருகிறேன். இதற்காக பயிற்சி மையத்துக்கு சென்று முறையாக பயிற்சி பெற்றுள்ளேன். டாட்டூஸ் மோகம் பலரிடம் அதிகரித்து தான் வருகிறது. மற்றவர்களிடம் இருந்து தங்களை வேறுபடுத்தி தனித்துவமானவர்கள் என்பதை காட்டிக்கொள்வதற்கும், ஒரு செய்தியை வெளிப்படுத்தும் விதமாகவும், மன அமைதிக்காகவும் பலர் டாட்டூஸ் குத்தி கொள்கின்றனர். ஏராளமானவர்கள் தங்களது தாய், தந்தை மற்றும் பிடித்தமானவர்களின் பெயர்களை கைகளில் டாட்டூஸ் குத்தி கொள்கின்றனர். ஒரு சிலர் அவர்களுடைய முகத்தை தனது மார்பு பகுதியில் குத்திக்கொள்கின்றனர். டாட்டூ குத்தும் போது ஒவ்வொரு தோலின் தன்மைக்கு ஏற்றவாறு கலர்களை பயன்படுத்தி வருகிறோம். முக்கியமாக ஒவ்வொருவருக்கும் புதிய ஊசியை தான் பயன்படுத்துகிறோம். ஒரு அங்குலம் டாட்டூ குத்துவதற்கு ரூ.600 வரை வாங்கப்படுகிறது. முகம் உள்ளிட்ட பெரிய டாட்டூஸ் வரைவதற்கு சுமார் 4 மணி நேரம் வரை ஆகும். குத்தும் போது லேசாக வலி இருக்க தான் செய்யும். அதன்பிறகு வலி குறைய தொடங்கி விடும். இன்றைய காலக்கட்டத்தில் பிரேக்கப்பிற்கு பிறகு காதலன் அல்லது காதலின் பெயர் உள்ள டாட்டூவை அழிக்க வேண்டும் என்றால் லேசர் உள்ளிட்ட பலவகையான சிகிச்சை முறைகள் உள்ளன. இதனால் பலர் எவ்வித பயமோ, தயக்கமோ இன்றி உடலில் தாங்கள் விரும்பும் இடங்களில் பிடித்தமான டிசைன்களில் டாட்டூ குத்தி கொள்கின்றனர். மேலும் அவற்றை அழிப்பதற்கு பதிலாக அதிலேயே வேறு ஒரு டிசைனை வரைந்து அதை மறைக்க முடியும். முறையாக பயிற்சி பெற்றவர்களிடம் டாட்டூஸ் குத்தினால் உடலில் எந்த பாதிப்பும் ஏற்படாது. புதிய ஊசி சேலம் 5 ரோடு பகுதியை சேர்ந்த மோகன் ராமு:- இன்றைய உலகில் அனைவரும் சகோதரத்துவத்துடன் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக கையில் அனைத்து மதத்தையும் குறிக்கும் வகையில் டாட்டூஸ் வரைந்துள்ளேன். மேலும் கழுத்து பகுதியிலும் டாட்டூ வரைந்துள்ளேன். இதன் மூலம் எனக்கு ஒரு மன நிம்மதி இருக்கிறது. தற்போது பெண்கள், இளைஞர்கள் உள்பட பலர் டாட்டூஸ் வரையும் கலாசாரத்தை பின்பற்றி வருகின்றனர். வருங்காலங்களில் டாட்டூ கலாசாரம் மேலோங்கி தான் இருக்குமே தவிர குறைய வாய்ப்பில்லை. டாட்டூ குத்தும் ஒரு வாரத்திற்கு முன்பே நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். முக்கியமாக டாட்டூ வரையும் கலைஞர்கள் புதிய ஊசியை தான் பயன்படுத்துகிறாரா? என்பதை உறுதி செய்ய வேண்டும். ஏனென்றால் வேறு யாருக்காவது பயன்படுத்திய ஊசியை பயன்படுத்தினால் அது தீவிரமான வைரஸ் தொற்றுக்களை உண்டாக்க வாய்ப்புள்ளது. எனவே டாட்டூ குத்தும் போது மிகவும் கவனமாக இருப்பது அவசியம். ஜல்லிக்கட்டு காளை எருமப்பட்டி பழனிநகரை சேர்ந்த ரஞ்சித்:- நான் ஆம்புலன்ஸ் டிரைவராக பணியாற்றி வருகிறேன். சிறுவயதில் இருந்தே ஜல்லிக்கட்டு காளைகள் மீது எனக்கு பாசம் அதிகம். எனவே நான் ஜல்லிக்கட்டு காளை ஒன்றை வளர்த்து வருகிறேன். எனது காளை நாமக்கல், சேலம், ஈரோடு மாவட்டங்களில் பல்வேறு பரிசுகளை எனக்கு பெற்று தந்து உள்ளது. கடந்த மாதம் சேந்தமங்கலத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் எனது காளைக்கு மோட்டார் சைக்கிள் பரிசாக கிடைத்தது. நானும் ஆங்காங்கே நடைபெறும் ஜல்லிக்கட்டில் மாடுபிடிவீரராகவும் கலந்து கொள்வேன். ஜல்லிக்கட்டு காளை மீது அளவுக்கு அதிகமான பாசம் இருந்ததால், எனது காளையையே கையில் டாட்டூ குத்தி கொண்டேன். காளையின் புகைப்படத்தை பார்த்து 4 மணி நேரம் பச்சை குத்தப்பட்டது. அதற்கு கீழ் எனது பெயரையும் எழுதி கொண்டேன். சுமார் 7 ஆண்டுகள் ஆகியும் இன்னும் அழியவில்லை. இது எனக்கு மகிழ்ச்சி தருவதாக உள்ளது. பாதுகாப்பானது பரமத்திவேலூரில் டாட்டூ கடை நடத்தி வரும் கோபி:- டாட்டூ மீதான மோகம் இன்றைய இளம் பெண்கள் மற்றும் இளைஞர்களிடையே வேகமாக அதிகரித்து வருகிறது. வண்ண, வண்ண டாட்டூக்களை குத்துவது இளம் தலைமுறையினரிடம் புதிய பேஷனாக மாறிவிட்டது. டாட்டூ குத்தினால் அழிக்க முடியாது என பயம் வேண்டாம். கருப்பு மையால் வரையப்பட்ட டாட்டூவை அழிப்பது சுலபம். கலர், கலரான டாட்டூக்களை அழிப்பது கடினமானாலும் தற்போது லேசர் மூலம் டாட்டூக்களை எளிதாக அழிக்க முடியும். பச்சை குத்தி கொள்வதில் நம்மில் பலர் அச்சம் அடைந்து உள்ளோம். ஆனால் பச்சை குத்தி கொள்வது நோய் எதிர்ப்பு சக்தி மேம்படுத்துவதாக கூறப்படுகிறது. பொதுவாக பிடித்தமான பெயர்கள் மற்றும் உருவங்களை பச்சை குத்தி கொள்கின்றனர். தங்களது உணர்வுகளை அவரவர் விரும்பும் விதத்தில் டாட்டூவாக போட விரும்புகின்றனர். டாட்டூ குத்துவது என்பது பச்சை குத்துவதை விட பாதுகாப்பானது. முந்தைய காலங்களில் கூர்மையான ஊசி மூலம் பெயர் மற்றும் உருவங்களை உடலில் விரும்பும் இடங்களில் வரைந்து பின்பு பச்சிலைகளை அரைத்து திரவம் போல் கரைத்து வரையப்பட்ட இடங்களில் ஏற்றப்படும். இந்த பச்சிலை திரவம் வாழ்நாள் முழுவதும் மறையாமல் இருக்கும். ஆனால் இன்றைய தலைமுறையினர் டாட்டூவையே விரும்புகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.