இந்த மாவட்ட செயலாளர்கள் அனைவரும் 50-க்கும் மேற்பட்ட வாகனங்களில் திருச்சி மாநாட்டுக்கு வரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதையொட்டி ஆதரவாளர்களின் கூட்டத்தை மாவட்ட செயலாளர்கள் கூட்டி ஆலோசனை நடத்தி வருகிறார்கள். எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களை பொறுத்தவரையில் ஓ.பி.எஸ். பக்கம் யார் இருக்கிறார்கள்? என்று கூறுவதை வழக்கமாகவே வைத்துள்ளனர். அவர்களை வாயை அடைக்கும் வகையில் திருச்சி மாநாட்டை பிரமாண்டமாக நடத்திக்காட்ட ஓ.பன்னீர்செல்வம் வியூகம் வகுத்துள்ளார். இதன் மூலம் பல்லாயிரக்கணக்கானோரை திரட்டி தனது பலம் என்ன? என்பதை காட்டவும் ஓ.பி.எஸ். காய் நகர்த்தி வருகிறார். அ.தி.மு.க. பெயரை குறிப்பிட்டும் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் என்ற பதவியை குறிப்பிட்டுமே மாநாட்டு அழைப்பிதழ் அச்சிடும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
இப்படி நடத்தப்படும் மாநாட்டில் ஆட்களை அதிக எண்ணிக்கையில் திரட்டுவதன் மூலமாக நாங்கள்தான் உண்மையான அ.தி.மு.க. என்று கூறி அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்றும் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் நம்புகிறார்கள். திருச்சி மாநாடு தனது அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் மாநாடாக இருக்க வேண்டும் என்று ஓ.பி.எஸ். விரும்புகிறார். எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வை கைப்பற்றி இருக்கும் நிலையில் ஓ.பி.எஸ். நிலை என்ன? என்பது மிகப்பெரிய கேள்வியாகவே மாறி இருக்கிறது. திருச்சி மாநாட்டை பிரமாண்டமாக நடத்தி விட்டால் இந்த பிம்பத்தை உடைத்தெறிந்து விடலாம் என்றே ஓ.பி.எஸ். கணக்கு போட்டுள்ளார். ஓ.பன்னீர்செல்வத்தையும் சேர்த்துக்கொண்டு ஒன்றுபட்ட அ.தி.மு.க. மாற வேண்டும் என்றும் அதுவே பாராளுமன்ற தேர்தலில் வெற்றிக்கு வழி வகுக்கும் என்றும் டெல்லி பாரதிய ஜனதா தலைவர்கள் எடப்பாடி பழனிசாமியிடம் தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டே உள்ளனர். இப்படி டெல்லியில் இருந்து தொடர்ந்து "கிரீன் சிக்னல்" கிடைத்து வருவதாலேயே ஓ.பி.எஸ். திருச்சி மாநாட்டு அறிவிப்பை வெளியிட்டு காய் நகர்த்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திருச்சி மாநாடு ஓ.பி.எஸ்.சுக்கு திருப்புமுனையாக அமையும் என்று அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள்.