No results found

    பிரதமர் மோடி இன்று சென்னை வருகை: 22 ஆயிரம் போலீஸ் குவிப்பு- 5 அடுக்கு பலத்த பாதுகாப்பு


    பிரதமர் மோடி இன்று பிற்பகல் சென்னை வருகிறார். சென்னை விமான நிலையம், சென்ட்ரல் ரெயில் நிலையம், பல்லாவரம் ராணுவ மைதானம் ஆகியவற்றில் நடக்கும் நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்கிறார். சென்னை விவேகானந்தர் இல்லத்தில் நடக்கும் மயிலாப்பூர் ராமகிருஷ்ணா மடம் 125-வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பிரதமர் மோடி சென்னையில் ஒரே நேரத்தில் அடுத்தடுத்து 4 இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இதையொட்டி சென்னை மாநகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. பிரதமரின் சென்னை வருகையையொட்டி போக்குவரத்து மாற்றம் தொடர்பாக பெருநகர போக்குவரத்து காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

    திட்டப்படி, பிரதமர் நரேந்திர மோடி ஐதராபாத்தில் இருந்து இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் மூலம் இன்று மதியம் 1.35 மணிக்கு புறப்பட்டு சென்னை விமான நிலையத்துக்கு மதியம் 2.45 மணியளவில் வந்தடைகிறார். அவரை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட முக்கிய பிரமுகர்கள் வரவேற்கிறார்கள். இதைத்தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி சென்னை விமான நிலையத்தில் ரூ.2,467 கோடியில் புதிதாக கட்டப்பட்ட ஒருங்கிணைந்த முனையத்தை திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கிறார். விழா முடிந்ததும் ஹெலிகாப்டர் மூலம் மதியம் 3.30 மணியளவில் புறப்பட்டு நேப்பியர் பாலம் அருகே உள்ள ஐ.என்.எஸ். அடையார் ஹெலிபேட் தளத்துக்கு மதியம் 3.50 மணியளவில் வந்தடைகிறார்.

    அங்கிருந்து மதியம் 3.55 மணியளவில் கார் மூலம் சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு புறப்படுகிறார். அப்போது அவருக்கு வழிநெடுகிலும் பா.ஜ.க.வினர் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்துள்ளனர். அவர்களது வரவேற்பை ஏற்றபடி மாலை 4 மணியளவில் சென்டிரல் எம்.ஜி.ஆர். ரெயில் நிலையத்தை வந்தடைகிறார். அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் சென்னை-கோவை 'வந்தே பாரத்' எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இந்த விழா 20 நிமிடங்கள் நடக்கிறது. இதைத்தொடர்ந்து பிரதமர் மாலை 4.25 மணியளவில் கார் மூலம் புறப்பட்டு மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள விவேகானந்தர் இல்லத்துக்கு மாலை 4.40 மணியளவில் வருகை தருகிறார். அங்கு நடைபெறும் மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடத்தின் 125-வது ஆண்டு விழாவில் பங்கேற்கிறார்.

    இந்த நிகழ்ச்சி மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை ஒரு மணி நேரம் நடக்கிறது. அதன்பிறகு பிரதமர் நரேந்திர மோடி கார் மூலம் புறப்பட்டு அடையார் ஐ.என்.எஸ். கடற்படை தளத்துக்கு மாலை 5.55 மணியளவில் வருகிறார். அங்கிருந்து மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு சென்னை விமான நிலையத்துக்கு மாலை 6.20 மணிக்கு வந்து சேருகிறார். பின்னர் பிரதமர் நரேந்திர மோடி அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு பல்லாவரத்தில் உள்ள அல்ஸ்டாம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் விழாவில் கலந்துகொள்கிறார். இந்த நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய மந்திரிகள் அஸ்வினி வைஷ்ணவ், ஜோதிர்தியா சிந்தியா, எல்.முருகன், தமிழக அமைச்சர்கள் எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன், தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு ஆகியோர் பங்கேற்கின்றனர். இந்த விழா மாலை 6.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை ஒரு மணி நேரம் நடக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகையையொட்டி போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் ஆலோசனையின் பேரில் 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். பிரதமர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளது.

    Previous Next

    نموذج الاتصال