No results found

    அதானி நிறுவனத்துக்கு கைமாறும் காரைக்கால் துறைமுகம்- கூடுதல் வருவாய் கிடைக்க அரசு நடவடிக்கை


    புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் 2006-ம் ஆண்டு துறைமுகம் அமைக்க தனியார் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. காரைக்கால் துறைமுகத்திற்காக 600 ஏக்கர் நிலத்தை அரசு ஒதுக்கி தந்தது. துறைமுகத்தின் வருவாயில் ரூ.100-க்கு ரூ.2.6 சதவீதம் அரசுக்கு வழங்க வேண்டும் என ஒப்பந்தம் போடப்பட்டது. மார்க் என்ற தனியார் நிறுவனம் புதுவை அரசுடன் ஒப்பந்தம் செய்து துறைமுகத்தை 2009-ல் தொடங்கியது. கடந்த 14 ஆண்டாக மார்க் நிறுவனம் துறைமுகத்தை நடத்தி வந்தது. காரைக்கால் துறைமுகம் மூலம் ஆண்டுக்கு சராசரியாக ரூ.9.5 கோடி வீதம் 14 ஆண்டுகளில் மொத்தம் ரூ.133.45 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

    தனியாருக்கு துறைமுகத்தை வழங்கும்போதே அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அரசின் ஈவுத்தொகையை கூடுதலாக பெற வேண்டும் என்றும், அப்பகுதி இளைஞர்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தன. இந்த விவகாரம் அவ்வப்போது சட்டசபையிலும் எதிரொலித்து வந்தது. இதனிடையே காரைக்கால் துறைமுகத்தில் நிலக்கரி இறக்குமதி செய்யப்படு வதால் அப்பகுதியில் மக்கள் காற்று மாசுபாடால் பாதிக்கப்படுவதாக புகாரும் எழுந்தது. மேலும் காரைக்கால் துறைமுகத்தை இறக்குமதி, ஏற்றுமதியை கண்காணிக்க சரியான அமைப்புகள் இல்லை என்ற குற்றச் சாட்டும் எழுந்தது. காரைக் கால் துறைமுகம் கடத்தல் கேந்திரமாக மாறிவிட்டதாக அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டி வந்தன.

    இதனிடையே காரைக்கால் மார்க் துறைமுக நிறுவனம் தொழில் நஷ்டம் காரணமாக நலிவடைந்து விட்டதாக அறிவித்தது. இதனால் துறைமுகத்தை விற்பனை செய்ய தொழில் தாவா தீர்ப்பாயத்தை அணுகியது. இந்த தீர்ப்பாயம் மார்க் நிறுவனம் வங்கிகளில் பெற்ற கடனை ஈடுசெய்யும் வகையில் துறைமுகத்தை தனியாருக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. காரைக்கால் துறைமுகத்தை அதானி நிறுவனம் நடத்துவதற்காக முன்வந்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் விரைவில் போடப்பட உள்ளது. இந்த புதிய ஒப்பந்தத்தில் அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் வகையில் விதிகளை உருவாக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றன. புதிய ஒப்பந்தத்தில் புதுவை அரசுக்கு 10 சதவீத ஈவுத்தொகை வழங்க வேண்டும். காரைக்கால் மாவட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் பெரும் பகுதியை வழங்க வேண்டும். காரைக்கால் மாவட்ட வளர்ச்சிக்கு ஒரு சதவீத நிதி வழங்க வேண்டும் என்பது உட்பட முக்கிய விதிகளை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இந்த விதிமுறைகளோடு புதிய ஒப்பந்தந்தை நிறைவேற்ற தலைமை செயலருக்கு முதல்- அமைச்சர் ரங்கசாமி அறிவுறுத்தியுள்ளார்.

    Previous Next

    نموذج الاتصال