தஞ்சையில் இன்று அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழக மக்கள் விரும்பாத எந்த ஒரு திட்டத்தையும் டெல்டாவில் மட்டுமல்ல தமிழகத்தின் எந்த பகுதியிலும் மத்திய, மாநில அரசுகள் அமல்படுத்த கூடாது . மத்திய அரசு நிலக்கரிக்கான ஆய்வை செய்ய மாட்டோம் என கூறியிருக்கிறார்கள். அதை வரவேற்கிறோம். அதே நேரத்தில் வருங்காலத்தில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான டெல்டா பகுதியில் விவசாயத்தை பாதிக்கக்கூடிய எந்த ஒரு திட்டத்தையும் அரசாங்கம் கொண்டு வரக்கூடாது. விவசாயம் சார்ந்த, சுற்றுச்சூழலை, இயற்கையை பாதிக்காத திட்டத்தை தான் கொண்டுவர வேண்டும் என்பதே பகுதி மக்களின் கோரிக்கை . அதுதான் எங்களின் நிலைப்பாடும். பிரதமர் மோடி சென்னைக்கு வந்த போது இ.பி.எஸ், ஓ.பி.எஸ்.சை சந்திக்காதது அவர்களது கூட்டணி பிரச்சினை. அதில் நான் கருத்து கூறுவது நன்றாக இருக்காது. அரியலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அணி செயலாளர் கார்த்திகேயன் மலேசியாவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிக்காக இந்திய கிரிக்கெட் அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார். முதல் கட்டமாக அவருக்கு தேவையான அனைத்து உபகரணங்களையும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் அவர் விளையாடுவதற்கான அனைத்து உதவிகளையும் அ.ம.மு.க. செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.
டெல்டா பகுதியில் விவசாயத்தை பாதிக்கும் எந்த திட்டத்தையும் அரசு கொண்டு வரக்கூடாது- தினகரன்
Tamil News