நான் தேசிய கட்சியில் இருந்தவன் என்பதால் இன்னொரு தேசிய கட்சியான காங்கிரசில் சேர்ந்துள்ளேன். எனக்கு உரிய மரியாதையை கொடுக்க வேண்டும் என்று காங்கிரசில் கேட்டு கொண்டேன். தற்போது காங்கிரசார் எனக்கு அனைத்து நிலைகளிலும் ஆதரவு அளிக்கிறார்கள். நான் பசவண்ணரின் கொள்கைகளை பின்பற்றுகிறேன். சமத்துவம், நல்லிணக்க கொள்கைகளை பின்பற்றுகிறவர்களுக்கு எந்த கட்சியிலும் பிரச்சினை ஏற்படாது. ஆட்சி அதிகாரத்திற்காக காங்கிரசில் இருந்து வந்த எம்.எல்.ஏ.க்களை வரவேற்றது. அப்போது அந்த கட்சியில் கொள்கை எங்கே போனது?. நான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இருந்து வந்தவன் என்றாலும், காங்கிரசில் இருப்பதால் எனக்கு எந்த இக்கட்டான நிலையை ஏற்படவில்லை. பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா மீது எனக்கு மரியாதை உள்ளது.
ஆனால் கர்நாடக பா.ஜனதா பி.எல்.சந்தோஷ் என்ற ஒரு நபரின் கட்டுப்பாட்டில் உள்ளது. நான் மீண்டும் பா.ஜனதாவில் சேருவது என்பது முடிந்துபோன அத்தியாயம். பிரதமர் மோடியே அழைத்தாலும் நான் மீண்டும் பா.ஜனதாவுக்கு செல்ல மாட்டேன். இந்த பா.ஜனதா அரசின் ஊழல்கள் குறித்து நடந்து முடிந்த கடைசி சட்டசபை கூட்டத்தொடரில் பேசினேன். மதவாதம் குறித்த விவாதத்திற்குள் நான் செல்ல விரும்பவில்லை. பா.ஜனதாவில் என்னை போன்ற தலைவர்களை வெளியே அனுப்புகிறார்கள். இதன் மூலம் ஆட்சி அதிகார நாற்காலியில் அமர சிலர் முயற்சி செய்கிறார்கள். 25 முதல் 30 தொகுதிகளில் காங்கிரசுக்கு ஆதரவு வழங்குவதாக லிங்காயத் சமூகத்தினர் கூறியுள்ளனர். இது பா.ஜனதாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இவ்வாறு ஜெகதீஷ் ஷெட்டர் கூறினார்.