No results found

    வேங்கைவயல் விவகாரத்தில் இன்று டி.என்.ஏ. பரிசோதனைக்காக 11 பேர் ரத்த மாதிரி சேகரிப்பு


    புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த இந்த சம்பவத்தில் உள்ளூர் போலீசார் விசாரணையை அடுத்து, வழக்கு மாற்றப்பட்டு குற்றவாளிகளை கைது செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதுவரை 147 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ள நிலையில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதில் குறிப்பாக வாட்ஸ்அப் உரையாடல் அடிப்படையில் ஆயுதப்படை காவலர் உள்பட 2 பேரிடம் கடந்த வெள்ளிக்கிழமை சென்னையில் குரல் பரிசோதனை நடத்தப்பட்டது. இதற்கிடையே குடிநீர் தொட்டியில் கலக்கப்பட்டது 2 ஆண்கள், ஒரு பெண்ணின் மனித கழிவு என்பது பகுப்பாய்வு மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.

    இந்தநிலையில் 11 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனை நடத்த முடிவு செய்து, அதற்காக புதுக்கோட்டை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சட்ட நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் உரிய அனுமதியை பெற்றனர். கோர்ட்டு உத்தரவுப்படி புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவக்கல்லூரி உதவி பேராசிரியர் தலைமையில் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு டி.என்.ஏ. பரிசோதனை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யவும் கோர்ட்டு உத்தரவிட்டது. இதற்காக வேங்கைவயல் விவகாரத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள 11 பேருக்கு இன்று காலை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டது. பின்னர் அவை சென்னையில் உள்ள ஆய்வகத்திற்கு டி.என்.ஏ. பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட உள்ளது. இந்த பரிசோதனை முடிவுகள் 3 மாதத்திற்குள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது குடிநீர் தொட்டியில் மனித கழிவுகளை கலந்தவர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்படுவார்கள் என்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே இந்த வழக்கை முழுமையாக விசாரிக்க அவர்கள் கூடுதல் கால அவகாசமும் கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Previous Next

    نموذج الاتصال