No results found

    கோவையில் பயணிகள் ஏறி இறங்க டவுன் பஸ்களில் ஆடியோ அறிவிப்பு கருவி அறிமுகம்


    கோவையில் 675 டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பஸ்கள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. இதில் பெரும்பாலான பஸ்கள் தாழ்தள சொகுசு பஸ்களாகும். இந்த பஸ்களில் கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் பயணம் செய்து வருகின்றனர். வழக்கமாக பஸ்களில் பயணிகள் ஏறவும், பயணிகள் பஸ்சை விட்டு இறங்கும் பொழுதும் கண்டக்டர்கள் விசில் ஊதுவார்கள். கண்டக்டர் விசில் ஊதியவுடன் பஸ்சை டிரைவர்கள் நிறுத்தி விடுவார். அதன்பின்னர் பயணிகள் இறங்குவதும், ஏறுவதும் வழக்கத்தில் இருந்து வருகிறது. இந்த நிலையில் பயணிகளின் வசதிக்காவும், கண்டக்டர்களின் வேலைப்பளுவை குறைக்கவும், டவுன் பஸ்களில் தானியங்கி அறிவிப்பு ஆடியோ கருவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    இந்த தானியங்கி அறிவிப்பு ஆடியோ கருவி கோவையில் இயங்கும் டவுன் பஸ்களில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கருவி பஸ் நிறுத்தம் நெருங்கும் போது, பஸ் நிறுத்தத்தின் பெயரை அறிவிக்கிறது. பஸ் புறப்பட்டவுடன், அடுத்து வரும் பஸ் நிறுத்தத்தின் பெயரை அறிவித்து இறங்கும் பயணிகளை தயார்படுத்துகிறது. இதனால் கண்டக்டரின் விசிலுக்கு வேலை இல்லை. இதுகுறித்து அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:- தமிழகத்தில் முக்கிய நகரங்களில் ஓடும் டவுன் பஸ்களில் இந்த ஆடியோ அறிவிப்பு கருவி பொருத்தப் பட்டுள்ளது. கோவையில் 35 டவுன் பஸ்களில் சோதனை முறையில் பொருத்தி இருக்கிறோம். பயணிகளுக்கு இந்த கருவி எந்தளவு பயனுள்ளதாக இருக்கிறது என்பதை அறிந்து கொண்டு மேலும் அதிகரிக்கப்படும் என்றனர்.

    Previous Next

    نموذج الاتصال