பயிற்சி மையத்தில் நடத்தப்படும் தேர்வுகளில் மாணவ, மாணவியரில் ஒரு பிரிவினர் 400-க்கும் கூடுதலான மதிப்பெண்களும், இன்னொரு பிரிவினர் 400-க்கும் குறைவான மதிப்பெண்களும் எடுத்திருந்தால், குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களின் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவதும், அவர்களுக்கு சிறப்புப் பயிற்சி வழங்குவதும் தனிப்பயிற்சி மையத்தின் கடமை. அதற்காகத்தான் அவர்களிடமிருந்து பயிற்சி மையங்கள் லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிக்கின்றன. அதற்கு மாறாக, குறைந்த மதிப்பெண் எடுத்ததற்காக மாணவர்களை சிறுமைப்படுத்தும் நோக்குடன் நடந்து கொள்வதும், மன உளைச்சலை ஏற்படுத்துவதும் மன்னிக்க முடியாதவை. மருத்துவராக வேண்டும் என்ற நோக்கத்துடன் சேரும் மாணவ, மாணவியரை பயிற்சி மையங்கள் மரணத்தை நோக்கி அனுப்பக்கூடாது.
மாணவி நிஷாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து தமிழக அரசு விசாரணை நடத்தி, தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தனிப்பயிற்சி மையங்களை ஒழுங்குபடுத்துவதற்கான விதிகளை வகுத்து செயல்படுத்த வேண்டும். பயிற்சி மையங்களும் மாணவ, மாணவியரின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டுமே தவிர, அவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கி தற்கொலைக்கு தூண்டும் செயல்களில் ஒருபோதும் ஈடுபடக்கூடாது. மாணவ, மாணவியரின் தற்கொலைக்கு நிரந்தரத் தீர்வு காணும் நோக்கத்துடன், விரைவாக செயல்பட்டு நீட் விலக்கு சட்டத்திற்கு நடப்பாண்டிற்கான மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு முன்பாக தமிழ்நாடு அரசு ஒப்புதல் பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.