No results found

    ஒரே இரவில் 2 அரசாணைகள் நிறுத்தம்: தி.மு.க. அரசை வெளி சக்திகள் இயக்குகிறதா? வானதி சீனிவாசன் கேள்வி


    அகில இந்திய பா.ஜனதா மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருமண மண்டபங்கள், விருந்து நிகழ்ச்சிகளில் மதுபானங்களை விநியோகிக்க சிறப்பு அனுமதி அளிக்கும் அரசாணையை, ஒரே நாளில் தி.மு.க., அரசு திரும்பப் பெற்றுள்ளது. அதுபோல, 12 மணி நேரம் வேலை சட்டத்தையும் நிறுத்தி வைப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு, கடந்த இரண்டு ஆண்டுகளில் இது போல ஓர் அறிவிப்பை, ஓர் உத்தரவை ஓர் அரசாணையை வெளியிட்டுவிட்டு திரும்பப் பெறுவது ஏற்கனவே நடந்திருக்கிறது. தி.மு.க. அரசின் நிர்வாக சீர்கேடுகளுக்கு இதை விட சிறந்த உதாரணம் எதுவும் இருக்க முடியாது. திருமண மண்டபங்களில், விருந்து நிகழ்ச்சிகளில் மதுபானங்களுக்கு அனுமதி என்ற முடிவை, தமிழ் கலாசாரத்தை நன்கறிந்த ஒருவரால் நிச்சயமாக எடுத்திருக்கவே முடியாது. ஏழை, நடுத்தர குடும்பங்களின் வாழ்வியலை அறிந்திராத ஓர் அரசு தமிழ்நாட்டில் இருக்கிறது என்பதற்கு இந்த அரசாணையே சிறந்த எடுத்துக்காட்டு. தமிழ் மக்களிடம் ஏற்பட்ட கடும் கொந்தளிப்பு, தி.மு.க. அரசை பணிய வைத்திருக்கிறது. ஒரு பக்கம் சட்டப் பேரவையில் 500 மதுக் கடைகளை குறைப்போம் என்று அறிவித்துவிட்டு, மறுபக்கம், மதுவை ஆறாக ஓட விடும் திட்டத்தை அறிவித்து மக்களை முட்டாள் ஆக்க நினைத்து உள்ளது தி.மு.க. அரசு. இது தகவல் தொழில்நுட்ப புரட்சி யுகம். இப்போது எந்தவொரு ஏமாற்று வேலையும் மக்களிடம் எடுபடாது. உண்மையை ஒரு நொடியில் மக்கள் உணர்ந்து விடுவார்கள். தி.மு.க. அரசின் முடிவுகளுக்கு தமிழக மக்களிடம் கடும் எதிர்ப்பு எழும்போதெல்லாம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தெரியாமல் நடந்துவிட்டது என்பது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்த காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் முயற்சித்து வருகின்றன. இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை விடுப்பது, கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வக்காலத்து வாங்குவது என்று ஒரு நாடகத்தை ஒவ்வொரு முறையும் அரங்கேற்றி வருகின்றனர். வரும் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.விடம் இருந்து அதிக தொகுதிகளை பெற வேண்டும், கடந்த பாராளுமன்ற தேர்தலைப் போலவே தி.மு.க.விடம் இருந்து கோடிக்கணக்கில் பணம் பெற வேண்டும் என்ற கவலை, தி.மு.க.வின் கூட்டணி கட்சிகளுக்கு இருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. அதற்காக மக்களை ஏமாற்ற நினைத்தால் அது இனி எடுபடாது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு தெரியாமல் நடந்துவிட்டது என்றால் தமிழகத்தில் உள்ள, தி.மு.க. அரசு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இயங்குகிறதா? அல்லது வெளியில் இருந்து வேறு சில சக்திகள் அரசை இயக்குகிறதா என்ற சந்தேகம் எழுகிறது. இதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்தான் பதில் அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    Previous Next

    نموذج الاتصال