No results found

    வி.பி.ராமன் சாலை பெயர் பலகை- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்


    மறைந்த வி.பி.ராமன், முன்னாள் இந்திய கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மற்றும் ஒன்றிய அரசின் சட்ட அலுவலராக நியமிக்கப்பட்ட முதல் தென்னிந்தியராகவும், பின்னர் தமிழ்நாடு அரசின் அட்வகேட் ஜெனரலாகவும், அவர் இறக்கும் நாள் வரை இந்திய வழக்கறிஞர் கழகத்தின் முன்னணி உறுப்பினராகவும் இருந்தார். சட்டக் கல்லூரியில் துணைப் பேராசிரியராகவும் பணிபுரிந்தார். பேரறிஞர் அண்ணாவின் கொள்கையில் பெரிதும் ஈர்க்கப்பட்டு திராவிட இயக்கத்தில் சேர்ந்து செயல்பட்டார். பேரறிஞர் அண்ணாவின் ஆங்கில இதழான ஹோம் லேண்ட் இதழின் துணை ஆசிரியர் என்று பல பொறுப்புகளை வகித்தார்.

    முத்தமிழறிஞர் கலைஞர் மற்றும் சமகாலத்து தலைவர்களின் பேரன்பையும் நன்மதிப்பையும் பெற்றவராகவும் திகழ்ந்தார். கல்வி மட்டுமின்றி, கர்நாடக இசை, ஆங்கில இலக்கியம், கிரிக்கெட் என்று பன்முகத் திறன் கொண்டவராகவும் விளங்கினார். வி.பி. ராமனுக்கு சிறப்பு சேர்க்கின்ற வகையில், மெரினா கடற்கரை காமராஜர் சாலை முதல் இந்தியன் வங்கி தலைமை அலுவலகம் வரை கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி செல்லக்கூடிய அவ்வை சண்முகம் சாலை என பெயரிடப்பட்டுள்ள சாலைப்பகுதியினை "வி.பி. ராமன் சாலை" என தமிழ்நாடு அரசால் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வி.பி. ராமன் வாழ்ந்த லாயிட்ஸ் கார்னர் இல்லமும் இப்பகுதியிலே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    நிகழ்ச்சியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மேயர் பிரியா, தலைமைச் செயலாளர் இறையன்பு, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, அரசு உயர் அலுவலர்கள் மற்றும் வி.பி. ராமனின் மகன்கள் வழக்கறிஞர் பி.எஸ். ராமன், பி.வி.மோகன் ராமன், பி.ஆர். ராமன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், காணொலிக் காட்சி வாயிலாக பெருநகர சென்னை மாநகராட்சி நிலைக்குழுத் தலைவர் (பணிகள்) சிற்றரசு, மண்டலக் குழுத் தலைவர் மதன்மோகன், வி.பி. ராமனின் மனைவி கல்பகம் ராமன் மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

    Previous Next

    نموذج الاتصال