12 மணி நேர வேலை மசோதா என்பது தொழிலாளர்களின் விருப்பப்படி கொண்டு வரப்பட்டது. எனவே வேலை நேரம் 12 மணி நேரமா? அல்லது 8 மணி நேரமா? என்பதை தொழிலாளர்கள் முடிவு செய்ய வேண்டும் என்பது தான் இந்த சட்டத்தின் அடிப்படை. உலகம் முழுவதிலும் தொழிலாளர்கள் குறித்த ஆராய்ச்சி நடந்துள்ளது. இதில் அதிக நேரம் வேலை செய்து, அதிக நேரம் ஓய்வு கொடுத்தால், பணியின் சக்தி அதிகரிக்கும். இதனால் குடும்ப வாழ்க்கை பயனுடையதாக இருக்கும் என்ற கருத்து உள்ளது. தொழிலாளர் வேலை நேரம் குறித்த விஷயத்தில் பணியின் நேரம் மட்டுமே மாற்றி அமைக்கப்படுகிறது. பணி நேரம் அதிகரிக்கப்படவில்லை. பணி நேரம் என்பது தொழிலாளர்களின் விருப்பமாக இருக்க வேண்டும்.
எனவே இதனை தொழிலாளர்களின் விருப்பப்படி விட்டு விடுவது நல்லது. மற்ற கட்சிகள் இதனை அரசியலாக்கி போராட்டம் நடத்த வேண்டாம். இது என் தனிப்பட்ட கருத்து. அரசியல் கருத்து அல்ல. மருத்துவ ரீதியாக தொழில் செய்யும்போது தொழிலாளர்கள் 4 நாள் வேலை செய்துவிட்டு, 3 நாட்கள் ஓய்வு எடுத்தால் அவர்களின் பணி சக்தி மட்டுமின்றி ஓய்வு நேரம் அதிகரிக்கிறது. பணி செய்வதற்கான திறமையும் அதிகரிக்கிறது என்று மருத்துவர்கள் அறிவியல் ரீதியாக சொல்கின்றனர். எல்லாவற்றையும் கணக்கில் எடுத்துக் கொண்டு தான் பேச வேண்டும். பொத்தாம் பொதுவாக எதிர்ப்பு கருத்துக்களை தெரிவிக்கக் கூடாது. பா.ஜனதா மாநில தலைவர்கள் அதிகாரம் அற்றவர்கள் என்பதால் டெல்லியில் உள்ள தலைமையே கூட்டணி பற்றி முடிவு எடுக்கும் என்பது போல கூட்டணி கட்சியினர் கூறுகின்றனர். நான் ஆளுநராக உள்ளேன். எனவே அரசியல்வாதிகளின் பேச்சு தொடர்பாக நான் கருத்து எதுவும் தெரிவிக்க முடியாது. பா.ஜனதா-அ.தி.மு.க. கூட்டணி குறித்த பேச்சில் என்னை இழுக்காதீர்கள். நான் தலைவராக இருந்தபோது கூட்டணி கட்சி நிர்வாகிகளிடம் எனக்கு நல்ல மரியாதை இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.