வேதங்கள் சொல்லிக்கொடுக்கும் ஆன்மீக சேவையை இவர் மேற்கொண்டிருந்தார். இவரிடம் ஏராளமான மாணவர்கள் சீடர்களாக சேர்ந்து வேதபாடம் கற்றனர். அப்போதுதான் அவர் வேதத்தின் வடிவமான தெட்சிணா மூர்த்திக்கு பிரமாண்டமான சிலை ஒன்றை செய்ய முடிவு செய்தார். அதன்படி 9 அடி உயரம், 5 அடி அகலத்தில் அவர் தெட்சிணாமூர்த்தி உருவம் வடிவமைத்து வடிவுடை அம்மன் ஆலயத்தின் அருகில் பிரதிஷ்டை செய்தார். பொதுவாக சிவாலயங்களில் கருவறை தெற்கு பக்கத்தில் தெட்சிணா மூர்த்தி சிலை அமைக்கப்பட்டு இருக்கும். கருவறை கோஷ்டத்தில் தெட்சிணாமூர்த்தி சிலை இருப்பதை அனைவரும் பார்த்திருப்பீர்கள். தெட்சிணாமூர்த்தியை வழிபடும் போது நாம் வடக்கு பார்த்து அமர்ந்து வழிபட வேண்டும் என்பது ஐதீகமாகும். மேலும் தெட்சிணாமூர்த்தியை தியானம் செய்யும்போது 'நமசிவாய' என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை மனதிற்குள் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். இது அவரது அருளை பெற்றுத்தர உதவும்.
தெட்சிணாமூர்த்தி சிவனின் 64 வடிவங்களில் 32-வது வடிவம் ஆவார். பொதுவாக இவரை ஞான குரு என்று சொல்வார்கள். தெய்வத்தை அடைய அதாவது முக்தி பாதைக்கு செல்ல இவர் நமக்கு குருவாக இருந்து வழிகாட்டுகிறார் என்றும் சொல்வார்கள். பிரம்மாவின் மகன்களுக்கு வழி காட்டியது போன்று அவர் பக்தர்களுக்கு வழி காட்டுவதாகவும் நம்பப்படுகிறது. தெட்சிணாமூர்த்தியை வழிபட்டால் வாழ்வில் மேன்மையும், மன அமைதியும் உண்டாகும். இவர் ஓலைச்சுவடியை ஏந்தி இருப்பதால் கல்விகளில் மேன்மை பெறலாம் என்பார்கள். யார் ஒருவர் தினமும் தவறாமல் தெட்சிணாமூர்த்தியை வழிபட்டு வருகிறாரோ அவரால் மிக எளிதாக ஆத்ம ஞான தியானத்துக்கு செல்ல முடியும்.
குறிப்பாக அமைதி இல்லாத மனதில் அமைதியை ஏற்படுத்தும் ஆற்றல் தெட்சிணாமூர்த்தி வழிபாட்டுக்கு உண்டு. இதை கருத்தில் கொண்டுதான் திருவொற்றியூரில் யோகீஸ்வரர் சுவாமிகள் தனது மடத்தில் தெட்சிணாமூர்த்தியை பிரதிஷ்டை செய்ததாக சொல்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் எங்கும் இல்லாதபடி திருவொற்றியூரில் மட்டும் தான் தெற்கு திசைக்கு பதில் வடக்கு திசை நோக்கி தெட்சிணாமூர்த்தி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். இந்த அமைப்பு அதிக புண்ணியம் தரும் அமைப்பு என்று யோகீஸ்வரர் தெரிவித்துள்ளார். அந்த சிலையில் 18 மகரிஷிகள் இடம்பெற்றிருப்பதும் அரிய காட்சியாக கூறப்படுகிறது. தெட்சிணாமூர்த்தியை குரு என்று அழைப்பதால் இந்த தலத்தை வடகுரு தலம் என்றும் சொல்கிறார்கள்.
இந்த தலத்துக்கு வருபவர்கள் தட்சிணா மூர்த்தியை வழிபடுவதுடன் யோகீஸ்வரரையும் தியானித்து வழிபட்டு செல்கிறார்கள். யோகீஸ்வரர் வாழ்ந்ததால் அந்த ஆலயத்தின் பகுதியை யோகீஸ்வரர் மடம் என்றும் அழைக்கிறார்கள். ஆனால் திருவொற்றியூர் ஆலய தல புராணத்தில் இந்த யோகீஸ்வரர் மடம் பற்றிய குறிப்புகள் எதுவும் இல்லை. திருவொற்றியூர் தல புராணம் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. அதில் திருவொற்றியூர் தலம், தீர்த்தம், மூர்த்தி ஆகியவற்றின் சிறப்புகள் விரிவாக கூறப்பட்டுள்ளன. திருவொற்றியூரில் இருக்கும் சிவபெருமான் தியாகராஜர், சுயம்பு மூர்த்தியாக இருப்பதாக வரையறுக்கப்பட்டுள்ளது. பல யுகங்களாக அவர் அங்கு அருள்பாலித்து வரும் தகவலும் தலபுராணத்தில் இடம்பெற்றுள்ளது. ஆதி காலத்தில் திருவொற்றியூரை ஆதிபுரி என்று அழைத்தனர். இந்த தலத்தில் ஈசனின் அருள் அலைகள் மிகுந்து இருப்பதால் சித்தர்கள் மிகவும் விரும்பி இங்கு வந்து தவம் செய்தனர். ஒரு காலத்தில் திருவொற்றியூரில் திரும்பிய திசையெல்லாம் சித்தர்கள் மயமாகவே இருந்தது. அதை உறுதிப்படுத்துவது போல இன்றும் திருவொற்றியூரில் பல சித்தர்களின் ஜீவ சமாதிகள் சிறப்பான நிலையில் உள்ளன. அங்கெல்லாம் சித்தர்கள் மீது நம்பிக்கையும், ஈடுபாடும் கொண்டவர்கள் சென்று வழிபட்டு வருகிறார்கள். ஆனால் வடிவுடை அம்மன் ஆலயம் அருகில் இருக்கும் தெட்சிணாமூர்த்தி ஆலயத்தை நிறுவிய யோகீஸ்வரர் பற்றிய குறிப்புகள் அதிக அளவில் எங்கும் இல்லை. சுமார் 400 ஆண்டுகளுக்கு முற்பட்டவர் என்பதால் தற்போதைய தலைமுறையினர் யாருக்கும் அவரை பற்றிய உண்மையான தகவல்கள் தெரியவில்லை. ஆன்மீக சேவையில் இருப்பவர்களும், ஆலயங்களில் பணியாற்றும் குருக்களும் கூட யோகீஸ்வரர் பற்றிய தகவல்கள் தெரியவில்லை என்றே கூறினார்கள். சிவனுக்கு யோகீஸ்வரர் என்றும் ஒரு பெயர் உண்டு. அந்த அடிப்படையில் வேதங்கள் சொல்லிக்கொடுக்கும் மடத்துக்கு யோகீஸ்வரர் மடம் என்று பெயர் வைக்கப்பட்டு இருக்கலாம் என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால் வேறு சிலர் சொல்லும் போது அந்த இடத்தில் யோகீஸ்வரர் என்ற சித்தர் வாழ்ந்தார் என்று நம்பிக்கையோடு சொல்கிறார்கள். யோகீஸ்வரர் சித்தருக்கு என்று அந்த தலத்தில் சிறப்பு வழிபாடுகள் எதுவும் செய்யப்படவில்லை. ஆனால் சித்தர் ஆய்வாளர்கள் அங்கு யோகீஸ்வரர் அருள் இருப்பதாக தெரிவிக்கிறார்கள். இதில் மாறுபட்ட கருத்துகள் உள்ளன. பூலோக கைலாயம் என்று வர்ணிக்கப்படும் திருவொற்றியூரில் அதிகளவில் வேதங்கள் ஓதப்பட்டதாக திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோர் பாடிய பாடல்கள் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது. குறிப்பாக திருவொற்றியூர் ஆலயத்தை சுற்றி ஏராளமான வேதபாட சாலைகள் நிரம்பி இருந்ததாக உறுதி படுத்தப்பட்டுள்ளது. அதில் தனித்துவம் மிக்க வராக யோகீஸ்வரர் திகழ்ந்துள்ளார் என்பது சித்தர் ஆய்வாளர்களின் நம்பிக்கை ஆகும். தற்போது தெட்சிணாமூர்த்தி ஆலயம் அமைந்துள்ள இடத்தில் தான் யோகீஸ்வரரின் பிரமாண்டமான வேத பாட சாலை இருந்துள்ளது. அந்த ஆலயத்தின் பின் பகுதியில் மிக பிரமாண்டமான அரசமரம் இருக்கிறது. இந்த மரத்தின் அடியில் தான் யோகீஸ்வரர் அமர்ந்து அற்புதங்கள் செய்ததாக கருதப்படுகிறது. அவர் வாழ்ந்த காலங்கள் உறுதியாக தெரியா விட்டாலும் அவர் அந்த தலத்தில் மிகப்பெரிய அற்புதங்கள் செய்துள்ளார் என்பதை மறுக்க முடியாது. அந்த அரசமரத்தின் பகுதியில் தான் அவர் பரிபூரணம் பெற்றுள்ளார். அங்கேயே அவர் அடங்கி இருப்பதாகவும் கருதப்படுகிறது. எனவே சித்தர் ஆய்வாளர்கள் அந்த அரச மரத்தின் அருகே அமர்ந்து தியானம் செய்வதை வழக்கத்தில் வைத்துள்ளனர். யோகீஸ்வரருக்கு என்று ஜீவசமாதி வழிபாடு நடைபெறாவிட்டாலும் அரசமரத்து அடியில் இருக்கும் விநாயகருக்கு சிறப்பான பூஜைகள் நடத்தப்படுகிறது. அந்த அரசமரத்தை மாலையில் சுற்றக்கூடாது. காலையில் மட்டுமே சுற்றி வந்து வழிபட வேண்டும். இத்தகைய சிறப்புடைய யோகீஸ்வரர் சித்தர் பிரதிஷ்டை செய்த தெட்சிணாமூர்த்தி ஆலயம் ஒரே ஒரு பிரகாரத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு அரங்கில் ஆலயம் உருவாக்கப் பட்டிருப்பதால் இது சமீபத்தில் கட்டப்பட்ட ஆலயம் என்பது தெளிவாகிறது. ஒரே ஒரு பிரகாரத்துடன் உள்ள இந்த ஆலயத்தின் பின் புறத்தில் இருக்கும் அரசமரம் மட்டுமே பழமை சிறப்பை நமக்கு உணர்த்துகிறது. மூலவராக இருக்கும் தெட்சிணாமூர்த்தி அமைப்பு வித்தியாசமானது. சாந்தமான முகத்துடன் சடாமுடி தலை, வளர்பிறை, கைகளில் நாகம், ஓலைச்சுவடி, சின் முத்திரை, அபயஹஸ்தம் கொண்டு தெட்சிணாமூர்த்தி காட்சி அளிக்கிறார். பொதுவாக தெட்சிணாமூர்த்தி காலடியில் ஜனகர், சனாதனர், சனந்தனர், சனத் குமாரர் ஆகியோர்தான் இருப்பார்கள். ஆனால் திருவொற்றியூர் தலத்தில் மூலவர் பீடத்தில் 18 மகரிஷிகள் சீடர்களாக உள்ளனர். கேசரி, பூந்தி போன்றவற்றை படைத்து இவரை வழிபடுகிறார்கள். வியாழக்கிழமைகளில் அதிகமானோர் வந்து வழிபடுவதை காணமுடிகிறது. இவரிடம் வேண்டிக்கொண்டால் திருமணம், கல்வி, குழந்தைபாக்கியம் ஆகியவை கிடைக்கின்றன. பிரார்த்தனை நிறைவேறியதும் தெட்சிணாமூர்த்திக்கு பால், பஞ்சா மிர்தம் அபிஷேகம் செய்கிறார்கள். உற்சவ மூர்த்தியாகவும் தெட்சிணாமூர்த்தி இருக்கிறார். மூலவர் தெட்சிணாமூர்த்தியின் வலது பக்கத்தில் உற்சவரும், இடது பக்கத்தில் சிம்ம வாகனத்தில் தனி சன்னதியில் பஞ்சமுக விநாயகரும் உள்ளனர். இந்த 5 முகங்களும் ஒரே திசையை நோக்கி உள்ளது. இந்த ஹேரம்ப விநாயகரை வழிபடுபவர்களுக்கு வெற்றிகள் கிடைக்கும் என்பது ஐதீகமாகும். தினமும் காலை 6 மணி முதல் 11 மணி வரையும், மாலை 4 மணிமுதல் 8 மணிவரையும் இந்த ஆலயம் திறந்து இருக்கும். வியாழக்கிழமைகளில் அதிகாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை இந்த ஆலயம் திறந்து இருக்கும். வியாழக் கிழமைகளில் இந்த ஆலயத்தில் விளக்கேற்றி வழிபடுவது மிகச்சிறப்பாக கருதப்படுகிறது. ஆலயத்துக்கு உள்ளேயே விளக்கு விற்பனை செய்கிறார்கள். அதுபோல விளக்கு ஏற்றவும் ஆலயத்திற்கு உள்ளேயே வசதிகள் இருக்கிறது. இந்த ஆலயத்திற்கு எதிரே பாணலிங்கம் இருக்கிறது. அதையும் வழிபட மறக்காதீர்கள். தெட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்த பிறகு பின்புறம் உள்ள அரசமரம் பகுதியிலும் சென்று யோகீஸ்வரரையும் தியானித்து வழிபடுங்கள். இருவரது அருளும் நிச்சயம் கிடைக்கும். தெட்சிணாமூர்த்தி ஆலயத்தில் தியானம் செய்ய நிறைய இடவசதி உள்ளது. அதையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.