No results found

    சென்னை சித்தர்கள்: பலராமலிங்க சுவாமிகள்- திருவான்மியூர்


    தி்ருவான்மியூர் என்றதும் ஆன்மிகத்தில் உள்ளவர்களுக்கு மருந்தீஸ்வரர் நினைவுக்கு வருவார். சித்தர்கள் மீது அதிக ஈடுபாடு கொண்டவர்களுக்கு பாம்பன் சுவாமிகளும், சர்க்கரை அம்மாளும் நினைவுக்கு வருவார்கள். இந்த வரிசையில் அடுத்து பலராமலிங்க சுவாமிகள் சித்தரும் இடம்பெற போகிறார். யார் இந்த பலராமலிங்க சுவாமிகள் என்று நீங்கள் கேட்கலாம். இவர் பற்றிய உண்மையான தகவல்கள் இதுவரை எந்த ஆவணத்திலும் பதிவு செய்யப்படவில்லை. அவரை பற்றி நன்கு அறிந்தவர்கள்கூட அவரை பற்றிய தகவல்களை வெளியிடவில்லை. அந்த அளவுக்கு பலராமலிங்க சுவாமிகள் சித்தர் தன்னை ஒருபோதுமே விளம்பரப்படுத்திக் கொண்டதில்லை. அதற்கு அவருக்கு அவசியமும் இல்லை.

    சித்தர்கள் பெரும்பாலும் தங்களை விளம்பரப்படுத்திக் கொண்டு புகழுக்காக வெளிப்படுத்தி கொள்ள விரும்ப மாட்டார்கள். அவர்களது சொல், செயல் எல்லாமும் புரிந்துகொள்ள முடியாத வகையில்தான் இருக்கும். சித்தர்கள் எந்த அளவுக்கு பரிபாஷையுடன் பேசி தகவல்களை வெளிப்படுத்துகிறார்களோ அதேபோன்றுதான் அவர்களது நடவடிக்கைகளும் அமைந்திருக்கும். சென்னை திருவான்மியூரில் கடந்த நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த பலராமலிங்க சுவாமிகள் இதேபோன்றுதான் இருந்தார். அவரை அறிந்து கொண்டவர்கள் அதிகம் பேராக இருந்தாலும், புரிந்து கொண்டவர்களை விரல் விட்டு எண்ணிவிடும் அளவுக்குத்தான் இருந்தனர். அந்த அளவுக்கு பலராமலிங்க சுவாமிகள் சித்தர் தன்னை பிரபலப்படுத்திக் கொள்ளாமல் ஒரு வட்டத்துக்குள் தன்னை அடக்கிக்கொண்டு நிகரற்ற மக்கள் சேவை செய்தார்.

    சமீப காலமாகத்தான் பலராமலிங்க சுவாமிகள் சித்தர் பற்றி வெளியே தெரிய தொடங்கி இருக்கிறது. இவரது ஜீவ சமாதி திருவான்மியூர் மருந்தீஸ்வரர் ஆலயத்தின் புனித திருக்குளம் பகுதியில் இருந்து குப்பம் பகுதிக்கு செல்லும் சாலையில் எஸ்.ஆர். நகரில் இருக்கிறது. அந்த எஸ்.ஆர்.நகரில் மிக மிக பழமையான காசி விஸ்வநாதர் ஆலயம் ஒன்று இருக்கிறது.

    மருந்தீஸ்வரர் ஆலயத்துக்கும் சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த காசி விஸ்வநாதர் ஆலயம் வழிபாட்டில் இருந்து வந்ததாக குறிப்புகள் உள்ளன. அடர்ந்த வனப்பகுதியில் புதர்களுக்கு மத்தியில் இந்த ஆலயம் மறைந்திருந்ததாகவும், ஆங்கிலேயர்கள் தான் இதை கண்டுபிடித்து சீரமைத்ததாகவும் சொல்கிறார்கள்.

    இந்த ஆலயத்தின் கருவறையில் உள்ள லிங்கம் சுயம்புவாக தோன்றியதாம். காசிக்கு நிகரான வழிபாடுகள் கொஞ்சமும் குறைவின்றி இந்த ஆலயத்தில் நடப்பது குறிப்பிடத்தக்கது. மிகப்பெரிய ஆலமரத்தின் கீழ் அதன் விழுதுகளால் இந்த ஆலயம் சூழப்பட்டு அமைந்துள்ளது. ஆலமரத்தின் விழுதுகள் கருவறை முழுக்க சுற்றி பின்னி பிணைந்துள்ளன. இதன் மூலம் இதன் பழமை சிறப்பை பார்த்தவுடனேயே உணர்ந்துகொள்ள முடிகிறது. சிவபெருமான் இந்த ஆலயத்தில் தம்பதி சகிதம் இல்லாமல் தனியாக அமர்ந்திருக்கிறார். அவர் தியான நிலையில் இருப்பதாக சொல்கிறார்கள். அதை பிரதிபலிப்பது போல அந்த ஆலயத்துக்குள் நுழைந்ததுமே மிகப்பெரிய அமைதி இருப்பதை அனுபவப் பூர்வமாக உணர முடிகிறது. இதற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் பலராமலிங்க சுவாமிகள் சித்தர் இந்த ஆலயத்தில் அமர்ந்து மக்களை நல்வழிப்படுத்தி உள்ளார்.

    இந்த சித்தரின் பூர்வீகம் அடையாறில் உள்ள நாராயணன் தோட்டம் என்கிறார்கள். அங்கு வசித்த ஒரு மீனவரின் மகனாக இவர் பிறந்தார். சிறு வயதிலேயே இவருக்கு ஆன்மிக மலர்ச்சி ஏற்பட்டது. இதனால் சித்தன் போக்கு சிவன் போக்கு என்பார்களே அப்படி தன்னை ஆலய வழிபாட்டிலும், மக்கள் சேவையிலும் ஈடுபடுத்திக் கொண்டார். காதி கிராப்ட் நிறுவனத்தில் சில ஆண்டுகள் இவர் பணிபுரிந்ததாக தெரிய வந்துள்ளது. பெரும்பாலும் திருவான்மியூரில் உள்ள பாம்பன் சுவாமிகள் ஜீவ சமாதி ஆலயத்துக்கு சென்று மிக நீண்ட தியானத்தில் ஈடுபடுவார். இதன் காரணமாக பாம்பன் சுவாமிகளின் அருள் காட்சியை இவர் பெற்றதாக சொல்கிறார்கள். ஆனால் எந்த காலகட்டத்தில் எப்படி இவர் மிக உயர்ந்த சித்த புருஷர் நிலைக்கு சென்றார் என்பது தெரியவில்லை. இவரது பூர்வீகம் தெரிந்தாலும் மற்ற விவரங்களை சேகரிக்கவில்லை. ஏனெனில் அதை பலராமலிங்க சுவாமிகள் சித்தர் விரும்பியது கிடையாது. எனவே அவர் காட்டிய வழிகளை மட்டும் நாம் தெரிந்து கொண்டால் போதும். பலராமலிங்க சுவாமிகள் சித்தர் பல ஆண்டுகள் பாம்பன் சுவாமிகள் ஆலயத்தில் இருந்துள்ளார். ஒரு தடவை பாம்பன் சுவாமிகள் அவரை ஆட்கொண்டு சில உத்தரவுகளை பிறப்பித்ததாக தெரிகிறது. அதன் அடிப்படையில்தான் பலராமலிங்க சுவாமிகள் சித்தர் அங்கிருந்து புறப்பட்டு எஸ்.ஆர்.நகரில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்துக்கு வந்தார் என்று கூறப்படுகிறது. முதலில் அந்த பகுதி மக்கள் அவரை ஏற்கவில்லை. ஆலய வழிபாட்டுக்கும் அனுமதி மறுத்தனர். என்றாலும், பலராமலிங்க சுவாமிகள் சித்தர் தனது முடிவில் உறுதியாக இருந்தார். காசி விஸ்வநாதர் ஆலய கருவறை லிங்கத்தை கட்டிப்பிடித்தபடி 48 நாட்கள் அப்படியே இருந்தார். தியான நிலையிலும், பஞ்சாட்சர மந்திரத்தை உச்சரித்தபடியே அவர் இருந்தார். ஒரு நேர உணவு கூட எடுத்துக்கொள்ளாமல் 48 நாட்கள் அவர் லிங்கத்தை கட்டிப்பிடித்தபடி இருந்ததை கண்டதும் அந்த குப்பத்து மக்கள் இவர் மிகப்பெரிய மகான் என்று புரிந்து கொண்டனர். அதன்பிறகுதான் காசி விஸ்வநாதர் ஆலயத்தில் அவர் தங்கியிருக்கவும், ஆலய சேவை செய்யவும் அனுமதித்தனர். ஆலய வழிபாடு விஷயங்களில் யாருடைய ஒத்துழைப்பு கிடைக்காவிட்டாலும், பலராமலிங்க சுவாமிகள் சித்தர் கவலைப்பட்டதே கிடையாது. அந்த காலகட்டத்தில் காசி விஸ்வநாதர் ஆலயத்தின் எதிரே மிகப்பெரிய குளம் ஒன்று இருந்தது. அந்த குளத்தில் காலை நீராடி விட்டு புனித நீர் எடுத்துவந்து காசி விஸ்வநாதரை அபிேஷகம் செய்து வழிபடுவதை சித்தர் வழக்கத்தில் வைத்திருந்தார். காசியில் நடப்பது போன்றே அதிகாலையிலேயே பூஜைகள் செய்துவிடுவார். 6 கால பூஜையையும் சிரத்தையாக செய்தார். யாரிடமும் பேசவே மாட்டார். எழுதி காட்டுவார். அதன்படி நடக்க சொல்லுவார். இவரது சிறப்பை நீண்ட நாட்களுக்கு பிறகே அந்த பகுதி மக்கள் உணர்ந்தனர். அதன் பிறகுதான் வாழ்க்கை பிரச்சினை, நோய் போன்றவற்றை தீர்ப்பதற்காக பலராமலிங்க சுவாமிகள் சித்தரை நாடிவர தொடங்கினார்கள். தன்னை தேடி வருபவர்கள் தூரத்தில் வரும் போதே இந்த சித்தருக்கு தெரிந்துவிடும். யார் வருகிறார்கள்? எதற்காக வருகிறார்கள்? என்பதை சொல்லி விடுவார். பெரும்பாலும் அவரது பார்வையே அத்தனை தோஷங்களையும் விரட்டும் வல்லமை பெற்றிருந்தது. தன்னை தேடி வருபவர்களுக்கு முதலில் உணவு வழங்குவதை இவர் வழக்கத்தில் வைத்திருந்தார். ஷீரடியில் வாழ்ந்த சாய்பாபா ஒவ்வொரு நாளும் தன் கைப்பட சமைத்து தன்னை தேடி வருபவர்களுக்கு வழங்குவது உண்டு. அதேபோன்றுதான் பலராமலிங்க சுவாமிகள் சித்தரும் தினமும் தன் கைப்பட சமையல் செய்து உணவு பரிமாறுவார். அவர் சமையல் செய்வதே தனி அலாதியாகஇருக்கும் என்று சொல்வார்கள் சமையல் அறைக்குள் சென்றுவிட்டால் கதவை பூட்டிக்கொண்டு சமைப்பார். சில நிமிடங்களுக்குள் உணவு வகைகள் தயாராகி விடும். வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு இது மிகுந்த ஆச்சரியத்தை கொடுக்கும். அவர் கைப்பட்ட சாதம் அவ்வளவு ருசியாக இருக்குமாம். தன் கைப்பட அள்ளி அள்ளி உணவை வைத்து வயிராற சாப்பிடுங்கள் என்று செரல்வாராம்.மற்றவர்கள் சாப்பிட்டு கொண்டு இருக்கும்போதே இவர் ஏப்பம் விடுவாராம். மற்றவர்களுக்கு அந்த உணவு மருந்தாக மாறி புத்துணர்ச்சி தந்தது என்கிறார்கள். அந்த அளவுக்கு தனது உணவு மூலம் தினம் தினம் அற்புதங்களை இந்த சித்தர் நிகழ்த்தி காட்டி உள்ளார். சில சமயம் உணவு பரிமாறும்போதே இந்த சாம்பார் போன மாதம் வைத்தது என்று தனக்குத் தானே சொல்லிக் கொள்வாராம். அந்த சாம்பார் அந்த அளவுக்கு அற்புதமான ருசி கொண்டதாக மாறி இருக்குமாம். சில சமையல் பாத்திரங்களில் உணவு நிரம்ப இருக்கும். அந்த பாத்திரங்களை ஒருவரால் நகர்த்த கூட முடியாது என்பார்கள். ஆனால் சித்தர் மிக எளிதாக ஒரு கையால் அதை நகர்த்திகொண்டு வருவதைப் பார்த்து ஆச்சரியப்படுவார்களாம். இப்படி அற்புதங்களுக்கு மேல் அற்புதங்கள் செய்த இந்த சித்தர் ஒரு தடவை கூட சாப்பிட்டு எந்த பக்தரும் பார்த்ததே கிடையாது. அதுபோல அதிக நேரம் தூங்கியும் யாரும் பார்த்ததில்லை. ஆனால் பெரும்பாலும் காசி விஸ்வநாதர் கருவறை அருகே தியானத்தில் ஆழ்ந்து விடுவாராம். இவர் தியானத்தில் இருக்கும் பொழுது 2 மிகப்பெரிய பாம்புகள் இவரை சுற்றி கொண்டு இருப்பதை பலரும் பார்த்திருக்கிறார்கள். சில சமயம் இவருடன் பாம்புகள் விளையாடுமாம். அதையும் அந்த பகுதி மக்கள் பார்த்து ஆச்சரியப்பட்டு இருக்கிறார்கள். பாம்புகள் விளையாடி கொண்டிருக்கும் போது யாராவது கோவிலுக்குள் வந்தால் சித்தர் கைவிரலால் சொடுக்கு போடுவாராம். அடுத்த நிமிடம் பாம்புகள் அவர் மீதிருந்து இறங்கி எங்காவது சென்று மறைந்து கொள்ளும் என்கிறார்கள். மிக உயர்ந்த நிலையில் வாழ்ந்த இந்த சித்த புருஷர் எத்தனையோ பேரின் வாழ்வில் மகத்துவங்களை செய்து காட்டியுள்ளார். இவர் 1993-ம் ஆண்டு சித்திரை மாதம், திருவாதிரை நட்சத்திரம், சஷ்டி திதி அன்று பரிபூரணம் அடைந்தார். அவரை காசி விஸ்வநாதர் ஆலயத்தின் கருவறை பகுதியில் ஜீவ சமாதி அமைத்துள்ளனர். அங்கிருந்து அவர் இன்றும் தனது அருளை வாரி வாரி வழங்கி கொண்டிருக்கிறார். இப்போதும் கூட அவர் தன்னை நம்பிக்கையுடன் வணங்குபவர்களுக்கு நல்லது செய்து கொண்டு இருக்கிறார். தன்னை நம்பி வந்து வழிபடும் பக்தர்களின் கனவிலும் இவர் சென்று அறிவுரை கூறியுள்ளார். ஆனால் சென்னை நகரில் பெரும்பாலானவர்களுக்கு இப்படியொரு மகான் இப்போதும் அருள் பாலித்து கொண்டிருக்கிறார் என்ற உண்மை தெரியாமலேயே இருக்கிறது. ஆனால் யாரை அவர் அழைக்கிறாரோ அவர்கள்தான் அவரை சென்று பார்க்க முடியும் என்று சொல்கிறார்கள். பலராமலிங்க சுவாமிகள் சித்தரிடம் சீடராக இருந்த ஒருவர் தற்போது பூஜைகள் செய்து வருகிறார். குருவை போன்றே இவரும் விளம்பரங்களை விரும்புவதில்லை. குரு காட்டிய வழியில் தன்னடக்கத்துடன் செயல்பட்டு கொண்டிருக்கிறார். வாய்ப்பு கிடைக்கும்போது நீங்களும் அந்த சித்தரை வழிபட்டு அவர் ஜீவ சமாதி ஆலயத்தை 12 தடவை சுற்றி வாருங்கள் போதும். நல்லதே நடக்கும்.

    Previous Next

    نموذج الاتصال