சென்னையிலும் இந்த மாதிரி வாழ்ந்து சித்தராக மாறிய ஒருவரது மகிமை பிரமிக்க வைக்கிறது. அந்த சித்தரின் பெயர் ஸ்ரீலஸ்ரீ மதனகோபால் சுவாமிகள். இவரது பூர்வீகம் பெரம்பூர். அங்குள்ள மாணிக்கவிநாயகர் கோவில் தெருவில் இவர் பெற்றோர் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு 3 மகன்கள் பிறந்தனர். அவர்களில் ஒருவர் மதனகோபால். அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியே வசித்து வந்தனர். இந்த சகோதரர்களுக்குள் சொத்து பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த கருத்துவேறுபாடு காரணமாக மதனகோபால் 1970 களில் வீட்டைவிட்டு வெளியேறினார். மனைவியுடன் பெரம்பூரில் ஆங்காங்கே தெருக்களில் வசித்து வந்தார். ஒரு காலகட்டத்தில் அவரது மனைவியும் இறந்துபோனார். குழந்தைகள் இல்லாததால் மதனகோபால் தனிமரமானார். உறவினர்கள் யார் வீட்டுக்கும் சென்றால் அவர்களுக்கு பாரமாக இருக்க நேரிடும் என்று நினைத்த மதனகோபால் பெரம்பூர் தெருக்களில் சுற்றித்திரிந்தார்.
ரெயில் நிலையத்தில் இருப்பார். திடீரென செம்பியம் பகுதியில் சுற்றித்திரிவார். நடந்து கொண்டே இருப்பார். மேல்பட்டி பொன்னப்பன் தெருவில் யார் வீட்டு திண்ணையிலாவது அமர்ந்திருப்பார். அவர் அந்த பகுதியை சேர்ந்தவர் என்பதால் அவரை விரட்ட மாட்டார்கள். மதனகோபால் வீட்டை விட்டு வெளியேறியதில் இருந்தே ஒருவித மனநிலைக்கு தள்ளப்பட்டு இருந்தார். வானத்தையே வெறித்து பார்த்துக் கொண்டிருப்பார். யாரிடமும் எதுவும் பேச மாட்டார். தெரிந்தவர்களாக இருந்தாலும் பேசுவது கிடையாது.
சில ஆண்டுகளில் தலைமுடி வளர்ந்து தாடியுடன் சாமியார் போன்ற தோற்றத்துக்கு மாறினார். அவர் எங்கு சாப்பிடுகிறார்? எங்கு உறங்குகிறார்? என்பதெல்லாம் அந்த பகுதி மக்களுக்கு புரியாத புதிராக இருந்தது. அவர் சரியாக தூங்குவதும் இல்லை. முழுமையாக குளிப்பதும் இல்லை.
என்றாலும் அவர் முகம் ஒளிபொருந்தியதாக பிரகாசித்தது. கண்கள் கூர்மையான பார்வையுடன் இருந்தன. தெருக்களில் தன்னந்தனியாக பேசிக்கொண்டு சுற்றித்திரிந்த அவரை முதலில் அந்த பகுதி மக்கள் வேறுவிதமாக நினைத்தனர். மனநலம் பாதிப்பு இருப்பதாக கருதினார்கள். குடும்பத்தினர் ஒதுக்கிவிட்டதால் அவர் இப்படி ஆகிவிட்டார் என்று பலரும் பேசினார்கள். ஆனால் அவர் சித்தர்களுக்கு உரிய சக்தியுடன் திகழ்ந்ததை சிறிது நாள் கழித்து தான் தெரிந்து கொண்டனர். அவர் யாரிடமும் எதுவும் யாசகம் கேட்டதே கிடையாது. உணவு தாருங்கள் என்று கூட அவர் வாய் திறந்து கேட்டு கையேந்தியது இல்லை. அவரை பார்த்து பரிதாபப்பட்டு யாராவது உணவு வாங்கி கொடுத்தால் அதையும் கூட அவர் தொடமாட்டார். அவர் விரும்பினால் மட்டுமே அந்த உணவை ஏற்றுக்கொள்வார். அதுவும் கொஞ்சம் தான் சாப்பிடுவார்.
மீதமுள்ள உணவை தன்னையே சுற்றி வரும் நாய்க்கு போட்டுவிடுவார். இப்படித்தான் சுமார் 20 ஆண்டுகள் அவரது வாழ்க்கை பெரம்பூரில் கழிந்தது. பெரம்பூர் ரெயில் நிலையம், மேல்பட்டி பொன்னப்பன் தெரு பகுதிகளுக்கு இடையே நடந்துகொண்டே இருப்பார். ஒரு காலகட்டத்தில் அவர் வாய் திறந்து பேசத்தொடங்கினார். சிலரை பார்த்ததும் சினேகத்துடன் சிரிப்பார். அவர்களுக்கு நாளை என்ன நடக்கப்போகிறது என்பதை சொல்லுவார். அவர் சொன்னபடியே துல்லியமாக அப்படியே நடந்தது. சிலரிடம் உங்கள் வீட்டுக்கு சிலர் வருவார்கள். அவர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று சொல்லிக்கொடுப்பார். அது எல்லாம் அப்படியே நடந்தன. சிலருக்கு தொழில் ரீதியாகவும் வழிகாட்டியாக உள்ளார். அவர்கள் இன்று மிகப்பெரிய செல்வந்தர்களாக இருக்கிறார்கள். சிலரிடம் மட்டும் நேரடியாக அவர் எதுவும் சொல்லமாட்டார். பரிபாசையில் பேசுவார். புரிந்தவர்கள் தங்களை மேம்படுத்திக்கொண்டனர். புரியாதவர்கள் அவர் என்ன சொன்னார் என்று கடைசி வரை புரியாமலேயே தவித்தனர். குடும்பத்தகராறில் வீட்டை விட்டு வெளியேறிய மதனகோபால் எப்படி இப்படி சக்தி வாய்ந்தவராக மாறினார் என்பது அனைவருக்கும் ஆச்சரியமாக இருந்தது. ஆனால் தினமும் மதனகோபால் தெய்வத்தன்மையுடன் அந்த பகுதிகளில் உலா வந்தார். குளிக்காத அவர் உடம்பில் இருந்து விபூதி வாசனையும், சந்தன வாசனையும் வெளிப்பட்டு அனைவரையும் மிரள வைத்தது. மதனகோபால் சாதாரண மானிடர் அல்ல. சித்தர் என்பதை ஒவ்வொருவரும் ஆத்மார்த்தமாக உணர்ந்தனர். இதனால் அவரை மதனகோபால் சுவாமிகள் என்று அழைக்கத் தொடங்கினார்கள். அவரது மகிமையை பல்வேறு பகுதி மக்களும் கேள்விப்பட்டு பெரம்பூருக்கு வந்தனர். பெரம்பூர் வாழ் மக்கள் மூலம் மதனகோபால் சுவாமிகளின் புகழ் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பேசப்பட்டது. கும்பகோணத்தை சேர்ந்த வரதராஜன் என்பவர் மதனகோபால் சுவாமிகளை சந்தித்து தனக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்தார். அப்போது மதனகோபால் சுவாமிகள் வானத்தை பார்த்துவிட்டு, 'உனக்கு குழந்தை பாக்கியம் நிச்சயம் உண்டு. விரைவில் பலன் கிடைக்கும்' என்று ஆசீர்வதித்தார். அடுத்த ஆண்டே வரதராஜருக்கு குழந்தை பாக்கியம் கிடைத்தது. இப்படி பலரது வாழ்வில் மதனகோபால சுவாமிகள் அற்புதங்கள் நிகழ்த்தி உள்ளார். 2001-ம் ஆண்டுக்கு பிறகு பெரும்பாலும் அவர் மேல்பட்டி பொன்னப்பன் தெருவிலேயே இருக்கத்தொடங்கினார். அங்குள்ள ஈஸ்வரி திருமண மண்டபத்துக்கு எதிரே ரோட்டோரத்தில் அமர்ந்திருப்பார். தன்னை நாடி வருபவர்களுக்கு ஜாதி, மத பேதமில்லாமல் எந்தவித ஏற்றத்தாழ்வும் இல்லாமல் திருவருள் புரிந்தார். அவரது சிறப்பை உணர்ந்த ஆட்டோ டிரைவர்கள் காலையில் அவரிடம் ஆசிபெற்று தொழிலை தொடங்குவது உண்டு. அவர்களுக்கு மவுனத்தாலும், மலர்ந்த முகத்தாலும், தெளிந்த வார்த்தை யாலும், சில சமயம் பரிபாசையாலும் ஆசி வழங்குவார். முக்காலமும் அறிந்த ஞானியாக திகழ்ந்த அவரை பலரும் தங்களது வீட்டுக்கு வந்து இருக்குமாறு கூறினார்கள். பலர் தனி இடம் அமைத்து தருவதாக தெரிவித்தனர். ஆனால் யாருடைய வேண்டுகோளையும் அவர் ஏற்கவில்லை. வானமே கூரையாகவும், பூமியே தாயாகவும் அவர் வாழ்ந்தார். அவரை பார்த்தால் தோஷங்கள் கழிவதாக பலரும் கருதினார்கள். சிலருக்கு அவர் நோயை தீர்த்தும் அருள்பாலித்துள்ளார். இத்தனை சக்திகள் இருந்தாலும், அற்புதங்கள் செய்தாலும் அவர் யாரிடமும் ஒரு பைசா கூட வாங்கியதில்லை. தனக்கென்று அவர் எதையும் சேர்த்ததே கிடையாது. சில சித்தர்கள் ஏதாவது ஒன்றை தங்களது பொருளாக வைத்திருப்பார்கள். இவர் அதுகூட வைத்துக் கொண்டது கிடையாது. அவரது கடைசி காலகட்டங்களில் நாய்க் குட்டி ஒன்று அவரையே சுற்றி சுற்றி வந்தது. அதையும் அவர் தன் அருகில் சேர்த்துக் கொண்டது இல்லை. போ....போ... என்று விரட்டி விடுவார். ஆனால் அந்த நாய் குட்டி அவரை தான் கடைசி வரை சுற்றி சுற்றி வந்தது. சில சமயங்களில் மதனகோபால் சுவாமிகளின் நடவடிக்கைகள் புரியாத புதிராக இருக்கும். எதற்காக அவர் இப்படி நடந்து கொள்கிறார்? என்று நினைப்பார்கள். ஓரிரு நாட்களில் அதற்கு விடை கிடைக்கும். இப்படி அற்புதங்கள், ஆச்சரியங்களின் குவியலாக மதனகோபால் சுவாமி திகழ்ந்தார். 2006-ம் ஆண்டு மார்ச் மாதம் 6-ந்தேதி அவர் மேல்பட்டி பொன்னப்பன் தெருவில், தான் வழக்கமாக அமர்ந்திருக்கும் ஈஸ்வரி திருமண மண்டபத்தின் எதிரே அமர்ந்திருக்கும் போது தனது ஆத்மாவை பிரித்துக்கொண்டார். அவர் பரிபூரணம் அடைந்த தகவல் அறிந்ததும் ஏராளமானோர் திரண்டனர். எங்கிருந்தெல்லாமோ சாதுக்கள் வந்தனர். சித்தர்களை எப்படி ஜீவசமாதி வைப்பார்களோ அப்படி அவரை வைப்பதற்கு முடிவு செய்யப்பட்டது. பெரம்பூரில் அவரது ஜீவசமாதி அமைக்க யாராவது இடம் தருவார்களா என்று தேடினார்கள். ஆனால் எங்கும் இடம் கிடைக்கவில்லை. இதனால் வியாசர்பாடி மயான பூமியில் ஒரு ஓரத்தில் அவர் வைக்கப்பட்டார். ரோகிணி நட்சத்திரம் தினத்தன்று அவர் பரிபூரணம் அடைந்திருந்தார். இதனால் ரோகிணி நட்சத்திர நாட்களில் பலரும் அவரை வழிபடுகிறார்கள். அவர் பரிபூரணமான ஈஸ்வரி திருமண மண்டபம் எதிரே உள்ள இடத்தில் சிறிய விளக்கு வைப்பதற்கான வசதியும் செய்துள்ளனர். அங்கு அவரது படத்தை வைத்து பூஜைகள் நடத்தப்படுகிறது. பெரம்பூர் மேல்பட்டி பொன்னப்பன் தெருவில் இஸ்திரி போடும் தொழில் செய்துவரும் பால சுந்தரம் என்பவர் தினமும் மதனகோபால் சுவாமி பரிபூரணம் ஆன இடத்தை சுத்தம் செய்து விளக்கு ஏற்றுகிறார். பலரும் அங்கு வந்து மதனகோபால் சுவாமிகளை வழிபட்டு செல்கிறார்கள். ஆண்டுதோறும் சுவாமிகளின் மகா குருபூஜை நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு 16-வது மகா குருபூஜையை அந்த பகுதியில் உள்ள சைக்கிள் ஷாப் வைத்திருக்கும் ரவி குடும்பத்தினர் சிறப்பாக செய்தனர். ஆண்டுதோறும் ரவி குடும்பத்தினர் தான் மதனகோபால் சுவாமிகளின் குரு பூஜையை செய்து வருகிறார்கள். மதனகோபால் சுவாமிகளை நினைத்து பணிகளை தொடங்கினால் எந்த இடையூறும் இல்லாமல் அவை நிறைவேறுவதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர். சென்னையில் எத்தனையோ சித்தர்களுக்கு மிகப்பெரிய அளவில் ஜீவ சமாதி அமைந்துள்ளது. ஆனால் ஒரே ஒரு விளக்கு ஒரு படம் மட்டுமே அமைந்து ரோட்டோரத்தில் இருக்கும் ஒரே ஜீவசமாதி மதனகோபால சுவாமிகளின் ஜீவசமாதியாகத்தான் இருக்கும். சிறிய இடத்தில் இருந்தாலும் இந்த சித்தரின் மகிமை மிகப்பெரியது. உட்கார்ந்து தியானம் செய்யக்கூட அங்கு வழி இல்லை. ஆனாலும் உளப்பூர்வமாக நினைத்தால் நிச்சயம் மதனகோபால சுவாமி உங்கள் மனதில் வந்து குடியேறுவார்.