சிவபெருமான் திரிபுரம் எரித்தபோது இமயமலை சிவனுக்கு வில்லாகப் பயன்பட்ட கதை பரிபாடல், கலித்தொகை போன்ற சங்க நூல்களில் இடம்பெற்றுள்ளது. 'மன்னும் இமயமலை எங்கள் மலையே மாநில மீததுபோல் பிறிதிலையே! இன்னறு நீர்க்கங்கை ஆறெங்கள் ஆறே இங்கிதன் மாண்பிற்கு எதிரெது வேறே?' என்று பெருமிதத்துடன் பாடுகிறார் மகாகவி பாரதியார். ராமாயணத்தில் இமயமலை வருகிறது. ராவணன் தன் வழிபடு கடவுளான சிவபெருமானை இமயமலையோடு இலங்கைக்கு எடுத்துச் செல்ல முயல்கிறான். அப்படித் தூக்க முயலும்போது, அவன் கை இமயமலையின் கீழ் சிக்கிக் கொள்கிறது. காரணம் சிவன் கால் கட்டை விரலால் இமயமலையை அழுத்தியதுதான்.
பின் சாம கானம் இசைத்து சிவன் மனத்தை ராவணன் இளக வைத்ததையும், அவன் கை விடுபட்டதையும் சிவனிடம் அவன் பற்பல வரங்களைப் பெற்றதையும் ராமாயணம் விரிவாகப் பேசுகிறது. யாராலும் வெல்ல முடியாத வகையில் சந்திரகாசம் என்னும் வாளையும் சிவனிடமிருந்து பெறுகிறான் ராவணன். அவன் அறநெறி தவறி வாழ்ந்ததால் சந்திரகாசம் என்னும் வாள் ராம ராவண யுத்தத்தில் அவனுக்குப் பயன்படாமல் போகிறது. 'வாரணம் பொருத மார்வும் வரையினை எடுத்த தோளும் நாரத முனிவர்க் கேற்ப நயம்பட உரைத்த நாவும் தாரணி மவுலி பத்தும் சங்கரன் கொடுத்த வாளும் வீரமும் களத்தே போட்டு வெறும் கையோடு இலங்கை புக்கான்!'
என ராவணன் இமயமலையை எடுத்ததையும் சங்கரன் ராவணனுக்கு வாள் கொடுத்ததையும் கம்ப ராமாயணம் பேசுகிறது. ராமாயணத்தில் இமயமலை தவிர வேறு பல மலைகளும் வருகின்றன. அனுமன் கடலைத்தாண்ட முயலும்போது மகேந்திர மலைமேல் நின்று அதனை அழுத்தி அந்த மலையில் இருந்து வில்லில் இருந்து புறப்படும் அம்பைப் போல் தாவிச் சென்றான். அவன் மலையை அழுத்தியபோது நேர்ந்தவற்றைக் கம்பர் கவிநயத்துடன் விவரிக்கிறார். அருவி நீரில் மலையில் உள்ள செந்தூரப் பொடி கலந்து பொழிந்ததால் மலையரக்கன் ரத்தம் கக்குவதுபோல் தென்பட்டதாம். பாம்புகள் மலைக் குகைகளிலிருந்து அச்சத்தோடு வெளியேறியது மலையின் குடல்கள் வெளிப்பட்டதுபோல் தோன்றியதாம். மலை சார்ந்த இவ்வித வர்ணனைகளை மேலும் அடுக்குகிறார் கவிச்சக்கரவர்த்தி.
மகேந்திர மலையில் இருந்து புறப்பட்டு, அனுமன் கடலைத் தாண்டும்போது அவனுக்குக் குறுக்கே வந்து நிற்கிறது இன்னொரு மலை. அது மைநாக மலை. உண்மையில் தடையாக அல்ல, அனுமன் மேல் கொண்ட அன்பால் அவனை விருந்தளித்து உபசரிக்க விரும்புகிறது மைநாகம். பழங்காலத்தில் மலைகள் இறக்கைகளோடு பறக்கும் சக்தி பெற்றிருந்தன. அவை பறந்து சென்று பல நகரங்களின் மேல் அமர்ந்து நகரங்களை அழித்தன. இந்திரன் அதனால் சீற்றம் கொண்டு மலைகள் அனைத்தின் சிறகுகளையும் வெட்டி வீழ்த்தினான். மைநாக மலையின் சிறகை அவன் வெட்ட வரும்போது வாயு பகவான் பெருவேகம் கொண்டு வீசி மைநாகம் பறந்து சென்று கடலில் மூழ்கித் தப்பிக்க உதவினான். அனுமன் வாயு புத்திரன் அல்லவா? எனவே தந்தை தனக்குச் செய்த உதவிக்கு நன்றியாக அனுமனுக்கு விருந்துபசாரம் செய்ய முனைகிறது மைநாகம். நேரமின்மை காரணமாக அன்போடு அதனை மறுத்து அனுமன் மேலே தாவிச் சென்று கடலைக் கடந்த செய்தியை ராமாயணம் பதிவு செய்கிறது. ராமாயணத்தில் மேலும் ஒரு மலை வருகிறது. அது இமயமலையின் ஒரு பகுதியான சஞ்சீவி மலை. இந்திரஜித்தின் அஸ்திரத்தால் லட்சுமணன் மயங்கியபோது, லட்சுமணன் உயிரைக் காப்பாற்ற வானில் தாவி இமயமலைக்குச் செல்கிறான் அனுமன். அதன் ஒரு பகுதியான சஞ்சீவி பர்வதத்தில் தான் உயிர்காக்கும் மூலிகைகள் உள்ளன. மூலிகைகளைத் தேட நேரமில்லாததால் சஞ்சீவி மலையை அப்படியே பெயர்த்து எடுத்துக் கொண்டு இலங்கை வருகிறான் அனுமன் என அனுமனின் வீர சாகசத்தைச் சொல்கிறது ராமாயணம். தன் அண்ணன் வாலிக்கு அஞ்சிய சுக்ரீவன் ரிஷியமுக பர்வதத்தில் தஞ்சமடைந்து வாழ்ந்த செய்தி ராமாயணத்தில் கிஷ்கிந்தா காண்டத்தில் வருகிறது. அந்த மலைக்கு வந்தால் வாலி இறப்பான் என அவனுக்குச் சாபமிருந்தது. எனவே வாலி வராத மலையில் சுக்ரீவன் வாழ்ந்து வந்ததாகச் சொல்கிறது ராமாயணம். கண்ணன் கதையைச் சொல்லும் பாகவதத்தில் வரும் ஒரு முக்கியமான மலை கோவர்த்தன கிரி. கண்ணனின் அறிவுரைப்படி இந்திரனுக்கு பூஜை செய்யாமல் கோவர்த்தன கிரிக்கு பூஜை செய்கிறார்கள் கோபர்கள். சீற்றமடைந்த இந்திரன் கோகுலத்தின் மேல் வருணனை ஏவிக் கடும் மழை பொழியச் செய்கிறான். பிரளய காலம் போல் கொட்டும் மழையிலிருந்து தப்பிப்பது எப்படி? கோபர்கள் கண்ணனையே சரணடைகிறார்கள். கோவர்த்தன கிரியை அப்படியே ஆள்காட்டி விரலால் தூக்கி கோபர்களை மலையின் கீழ் வரச் செய்து மழையிலிருந்து அனைவருக்கும் பாதுகாப்பளிக்கிறான் கண்ணன். இந்திரன் கர்வமடங்கி இறுதியில் அவனும் மழையை நிறுத்தி, கண்ணனைச் சரணடைகிறான் என்கிறது பாகவதம். மேரு மலை என்றொரு மலை நம் புராணங்களில் பேசப்படுகிறது. மேருமலையை இமயமலையின் ஒரு பகுதி என்கிறார்கள். தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் வேண்டி பாற்கடலைக் கடைந்தபோது, மத்தாகப் பயன்பட்டது மேரு மலைதான் என்கிறது கூர்ம புராணம். 'வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கி கடல் வண்ணன் பண்டொ ருநாள் கடல்வயிறு கலக்கினனே!' என இந்தப் புராணச் செய்தியைச் சிலப்பதிகாரமும் குறிப்பிடுகிறது. வடவரை என இளங்கோ குறிப்பிடுவது மேரு மலையைத் தான். நம் பழந்தமிழ் இலக்கியங்கள் ஐவகை நிலப்பரப்புகளைச் சொல்கின்றன. அவற்றுள் 'மலையும் மலைசார்ந்த இடமும் குறிஞ்சி' என வகுக்கிறது தொல்காப்பியம். 'மாயோன் மேயக் காடுறை உலகமும் சேயோன் மேய மைவரை உலகமும் வேந்தன் மேய தீம்புனல் உலகமும் வருணன் மேய பெருமணல் உலகமும் முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச் சொல்லிய முறையால் சொல்லவும் படுமே.' என்பது தொல்காப்பிய நூற்பா. 'மைவரை உலகம்' என்பது மலை சார்ந்த பகுதியைக் குறிக்கும். குறிஞ்சி நிலத்தின் தெய்வம் முருகன். மலை உள்ள இடத்திலெல்லாம் மலைமீது முருகன் கோயில் இருப்பதைக் காணலாம். குன்று தோறும் கோவில்களில் குடிகொண்டவன் குமரக் கடவுள். * திரிகூட ராசப்பக் கவிராயர் எழுதிய குற்றாலக் குறவஞ்சி சிற்றிலக்கியங்களுள் ஒன்று. தென்காசி அருகே உள்ள குற்றாலத்தில் கோவில் கொண்டிருக்கும் குற்றாலநாதர் மீது பாடப்பட்ட செய்யுள் நூல் அது. அதில் குற்றாலநாதர் மேல் காதல் கொண்ட தலைவிக்குக் குறத்தி குறிசொல்வதாக வரும் பாடல்கள் உண்டு. அவற்றில், மலைவளம் பற்றிக் கூறும் பாடல்கள் புகழ்பெற்றவை. என்னென்ன மலைகள் நம் தேசத்தில் இருக்கின்றன என்பதை அடுக்கிச் சொல்லும் பாடல்கள் அழகானவை. 'கயிலைஎனும் வடமலைக்குத் தெற்குமலை அம்மே கனகமகா மேரு என நிற்குமலை அம்மே சயிலமலை தென்மலைக்கு வடக்கு மலை அம்மே சகலமலை யுந்தனக்குள் அடக்கு மலை அம்மே வயிரமுடன் மாணிக்கம் விளையு மலை அம்மே வான்இரவி முழைகள் தொறும் நுழையுமலை அம்மே துயிலுமவர் விழிப்பாகி அகிலமெங்கும் தேடும் துங்கர்திரி கூடமலை எங்கள் மலை அம்மே! கொல்லிமலை எனக்கிளைய செல்லிமலை அம்மே கொழுநனுக்குக் காணிமலை பழனிமலை அம்மே எல்லுலவும் விந்தைமலை எந்தைமலை அம்மே இமயமலை என்னுடைய தமையன்மலை அம்மே சொல்லரிய சாமிமலை மாமிமலை அம்மே தோழிமலை நாஞ்சிநாட்டு வேள்விமலை அம்மே செல்இனங்கள் முழவுகொட்ட மயிலினங்கள் ஆடும் திரிகூட மலையெங்கள் செல்வமலை அம்மே!'
* தமிழகத்தில் உள்ள திருவண்ணாமலை சிவபெருமானாகவே கருதப்படுகிறது. சிவனை வலம் வரும் எண்ணத்திலேயே பக்தர்கள் கிரிவலம் வருகிறார்கள். பிரமனும் திருமாலும் சிவபெருமானின் அடிமுடி தேடியபோது, திருவண்ணாமலையாக ஜோதிப் பிழம்பாகச் சிவன் காட்சி தந்தார் என்பது புராணக்கதை. திருவண்ணாமலை இடைக்காடர், குகை நமச்சிவாயர், ரமண மகரிஷி, சேஷாத்ரி பரப்பிரும்மம், விசிறி சாமியார் உள்படப் பல சித்தர்கள் வாழ்ந்த புனிதத் திருத்தலம். பெரும்பாலும் மலைகளுக்கு ஆண் பெயர்களே அமைந்துள்ளன. இமயமலை இமவான் எனக் குறிக்கப்படுவது ஓர் உதாரணம். நதிகள் கங்கா, காவேரி எனப் பெண் பெயர்களில் அழைக்கப்படுகின்றன. மலைகள் ஆணைப்போல் ஓர் இடத்திலேயே இருப்பதாலும் நதிகள் பிறந்த வீட்டில் இருந்து புகுந்த வீடு செல்லும் பெண்ணைப் போல் மலையில் தோன்றிக் கடலுக்குச் செல்வதாலும் இவ்விதம் பெயர்கள் அமைந்துள்ளதாகக் கூறுவதுண்டு. வான் நோக்கி உயர்ந்துள்ள மலைகளைப் பார்க்கும்போது, எல்லாச் சக்திகளிலும் உயர்ந்த சக்தியான கடவுள் சக்தி பற்றி நம் நினைவுக்கு வரும் வகையில் நமது ஆன்மிகத் தகவல்கள் அமைந்திருப்பதைப் போற்றத்தானே வேண்டும்?