அவன் நினைப்பது போல தான் அனைத்தும் நடக்கும். குருவிற்கும் சனிக்கும் சம்பந்தம் இல்லாதவர்களுக்கு விருப்பமும் அவர்கள் அனுபவிக்கும் கர்ம பலன்களும் எதிர்மறையாக இருக்கும்.ஒருவரின் தொழில் அல்லது உத்தியோகத்தை 4 பிரிவாக பிரிக்கலாம். 1.தொழில் அல்லது உத்தியோகத்தில் நிலைத்து நிற்பது. ஒரு சிலருக்கு எந்த தொழில் செய்தாலும் பன் மடங்காக பெருகி கொண்டே இருக்கும். பரம்பரை பரம்பரையாக தொழிலில் பழம் தின்று கொட்டை போட்டவர்களாக இருப்பார்கள். உலக நடப்பிற்கு ஏற்ப புதிய தொழில்களாக உருவாக்கி கொண்டே இருப்பார்கள். இவர்கள் தொழிலை கண்டுபிடித்தார்களா? அல்லது தொழில் இவர்களை கண்டுபிடித்ததா? என்று வியக்கும் அளவிற்கு தொழில் துறையில் வெற்றி வாகை சூடுவார்கள். இவர்களுக்கு வாழ்க்கையில் ஏழரைச் சனி, அஷ்டமச் சனியே வராதோ? என்று எண்ணும் அளவிற்கு ஏற்றம் மிகுதியாக இருக்கும்.
உத்தியோகமாக இருந்தால் அரசு அல்லது தனியார் துறை எந்த வேலையாக இருந்தாலும் வேலைக்கு சேர்ந்த நாள் முதல் ரிட்டயர்மன்ட் வரை ஒரே வேலையில் இருந்து பெரும் பாராட்டு, புகழ் பெறுபவர்கள். 2. நிலையான வருமானமற்ற தொழில். இத்தகைய பிரிவினருக்கும் தர்ம கர்மாதிபதி யோகம் இருக்கும். இந்த அமைப்பிற்கு செவ்வாய் சம்பந்தம் இருக்கும். அல்லது குருவோ, சனியோ பலவீனமாக இருக்கும். சொல்லாலும் செயலாலும் ஒன்றாக இருக்க முடியாது. 6 மாதம் தொழில், 6 மாதம் உத்தியோகம் என எந்த வேலையையும் முறைப்படுத்த முடியாமல் இருப்பார்கள். இவர்களிடம் போதிய திறமை இருந்தும் அதை செயல்படுத்த முடியாத மனநிலையில் வாழ்பவர்கள். வருமானம் ஏற்ற இறக்கமாகவே இருக்கும்.
3. அதிர்ஷ்டத்தை நம்பி பிழைப்பவர்கள். தொழில் அல்லது உத்தியோகம் குறித்த எந்த ஞானமும் இருக்காது. தொழிலின் ஆழம் தெரியாமல் காலை விட்டு அடுத்தவர் மீது குற்றம் குறை கூறி பிழைப்பவர்கள். இவர்களுக்கு குருவும், சனியும் 6,8,12 ஆக இருக்கும்.இந்த பிரிவினருக்கு எந்த வேலை செய்தாலும் தொடர்ந்து தடைகள் உண்டாகும். பணவரவு தடைபடும், தொழிலில் நிரந்தரத்தன்மை இருக்காது. நண்பர்கள் பகைவர்களாவார்கள். கொடுத்த பணம் வராது, கிடைக்க வேண்டிய நியாயமான விசயங்கள் கூட தடைபடும். தாயத்து, மந்திரம் தந்திரம், எந்திரம் என எந்த குட்டிக் கரணம் போட்டாலும் துரும்பை கூட அசைக்க முடியாது. குரு, சந்திரன் சம்பந்தம் இருந்தால் வரவுக்கும் செலவுக்கும் சரியாக இருக்கும்.
4. குறுகிய கால தொழில் வளர்ச்சி. மேலும் ஒரு பிரிவினருக்கு தொழில் ஒரு குறுகிய கால வளர்ச்சியை கொடுக்கும். மிகப் பெரிய தொகையை குறுகிய காலத்தில் சம்பாதிப்பார்கள். சம்பாதித்த பணத்தை முழுமையாக அனுபவிக்கும் முன்பு சம்பாதித்ததை விட அதிகமாக இழப்பு ஏற்பட்டு கடனாளியாகி விடுவார்கள். இவர்களின் தொழில் குறுகிய காலத்திற்கு மட்டுமே இருக்கும். மறுபடியும் தொழிலை நினைத்து கூட பார்க்க முடியாத வகையில் இழப்பு நரக வேதனையை கொடுக்கும். இவர்கள் கோட்சார சனி 9,10,11ல் வரும் காலங்களில் தொழில் துவங்கி மிகுதியான லாபம் சம்பாதித்து 12,1,2-ம் இடங்களில் நிற்கும் காலங்களில் தொழிலை இழப்பார்கள். மேலே கூறிய இந்த 4 பிரச்சினைக்கும் சனி பகவான் தான் காரணம். ஆனால் நான் இங்கே பிரதானப்படுத்த விரும்புவது ஏழரை, அஷ்டமச் சனியின் தாக்கம் பற்றிய கருத்துக்கள். ஏழரைச் சனி ஒருவரின் சந்திரன் நின்ற ராசிக்கு, முன் ராசியிலும், பின் ராசியிலும், சந்திரன் நின்ற ராசியிலும் சனீஸ்வரன் சஞ்சாரம் செய்யும் காலம் தான் ஏழரைச் சனியாகும். அந்த மூன்று வீடுகளிலும் தலா இரண்டரை வருடங்கள் வீதம் மொத்தம் ஏழரை ஆண்டுகள் தங்கிவிட்டுப் போகும் கால கட்டமே ஏழரைச் சனியாகும். ஏழரைச் சனியின் முதல் பகுதியை விரையச் சனி என்பார்கள். பண நஷ்டம், காரிய நஷ்டம், உடல் உபாதைகள் என்று நஷ்டமாகவே அக்காலம் இருக்கும். அடுத்த பகுதியை ஜென்மச் சனி என்பார்கள். அதாவது ராசியை சனி பகவான் கடந்து செல்லும் காலம். அந்தக் கால கட்டங்களில் மனப் போராட்டமாக இருக்கும். மன உளைச்சல்களாக இருக்கும். அடுத்த பகுதியை கழிவு சனி என்பார்கள். அந்தக் காலகட்டம், கடந்து போன ஐந்தாண்டுகளை விடச் சற்று தொல்லைகள் குறைந்ததாக இருக்கும். அஷ்டமச் சனி: ஒருவரது ராசிக்கு எட்டாவது இடத்தில் கோச்சார சனி வருவது தான் அஷ்டமத்து சனி. அஷ்டம சனியில் தொட்டது துலங்காது, அஷ்டமத்து சனி காலத்தில் பூர்வீகத்தை விட்டு இடம் பெயர நேரும். வீண் பிரச்சினைகள் சிக்கி, பழி ஏற்க நேரும்.புத்தி தடுமாற்றம் மிகுதியாக இருக்கும். புத்தி வேலை செய்யாது ஆனால்உணர்ச்சி மட்டும் வேலை செய்யும். ஏழரை சனி 7 1/2 ஆண்டுகளில் செய்யும் வேலையை அஷ்டமச் சனி இரண்டரை வருடத்தில் செய்து முடித்து விடும். ஏழரைச் சனியும் அஷ்டமச் சனியும் எல்லோரையும் பாதிக்குமா? 3.சுற்று ஏழரை, அஷ்டமச் சனியை கடந்தவர்கள் பலர் எந்த பதட்டமும் இல்லாமல் நிதானமாக சனி பகவான் என்றால் யார் ? என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள். 3 சுற்றிலும் அடி வாங்கி ரண வேதனையில் முற்றும் துறந்த முனியாக ஞான மார்க்கத்திற்கு முக்திக்கு வழி தேடி சென்றவர்களும் இருக்கிறார்கள். லக்னம் வலிமை பெற்றவர்களையும் சந்திரனுக்கு குரு பார்வை இருப்பவர்களுக்கும், தர்ம கர்மாதிபதி யோகம் அமைந்தவர்களையும் எந்த சனிப் பெயர்ச்சியும் எதுவும் செய்யாது. மேலே கூறிய அமைப்புகள் இருந்தும் ஜாதகத்தில் சாதகமான தசா புத்தி இல்லாமல் போனாலும் குரு, சனி, சந்திரன் பலவீனமாக இருந்தாலும் தாக்கம் மிகுதியாகவே இருக்கும். இந்த காலகட்டத்தில் சாதகமற்ற தசாபுத்தி இருந்தால் சொந்த தொழில் செய்பவர்களுக்கு தொழிலில் ஏற்ற இறக்கம், தடை தாமதம், பண விரயம், பண இழப்பு இருக்கும்.சிலர் தவறான தொழில் முதலீடு செய்து பாதிப்படைகிறார்கள். அதிக முதலீடு செய்த முதலீட்டாளர்கள் , தொழிலில் கொடி கட்டி பறந்தவர்கள் கூட மிகச் சாதாரணமாக கண் இமைக்கும் முன் தொழிலில் சரிசெய்ய முடியாத இழப்பை சந்திக்கிறார்கள். இதனால் தொழிலை விட்டு விலகவும் முடியாமல் மேலே தொழிலை தொடரவும் முடியாமல் மன உளைச்சலை சந்திக்கிறார்கள். இந்த காலத்தில் தொழிலாளர்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் கருத்து வேறுபாடு மிகுதியாகும். முதலாளிகளுக்கு சரியான வேலையாட்கள் கிடைக்கமாட்டார்கள். மேலும் ராசிக்கு 3,6,11-ல் சனி வரும் போது பல புதிய எண்ணங்கள் உதயமாகும். பல புதிய தொழில் முனைவோர்கள் உருவாகுவார்கள். மிகக் குறுகிய காலத்தில் வாழ்வில் பார்க்க முடியாத பெரிய பணத்தை சம்பாதிக்கிறார்கள். ஏழரை, அஷ்டமச் சனி ஆரம்பித்தவுடன் வாழ்நாளில் மீள முடியாத இழப்பை சந்திக்க நேருகிறது. புதிய தொழில் முனைவோர்கள், புதியதாக பெரிய தொழில் முதலீடு செய்பவர்கள் சுய ஜாதக ஆலோசனைக்குப் பிறகே தொழில் முயற்சியில் ஈடுபட வேண்டும். அதாவது கோட்சார சனி சாதகமாக இருக்கும் காலங்களில் சம்பாதித்த பணத்தை கோட்சார சனி சாதகமற்ற இடங்களுக்கு வரும் காலங்களில் இழந்துவிடுகிறார்கள். சனிபகவான் கர்ம காரகர், ஆயுள் காரகர், ஒருவர் ஜாதகத்தில் ஜனனம் முதல் வாழ்நாள் இறுதி வரை சனி பகவானின் ஆதிக்கம் தான் தொடரும். சனிபகவான்-வாயு, காற்று .அதாவது பிராணன் (சுவாசம்), குரு பகவான் அங்கத்தில் மூக்கு என்றால் அதனுள் ஏற்படும் சுவாசக்காற்று சனி பகவானே. கால புருஷ 10, 11-ம் அதிபதி என்பதால் தொழில், உத்தியோகம் அதன் மூலமாக கிடைக்கக்கூடிய லாப நஷ்டங்களுக்கு இவர்தான் பிரதிநிதியானவர். நீதி வழங்கும் நீதிமானாவார். சனி பகவானை கணிப்பதற்கு மிகப்பெரிய ஞானம் வேண்டும். கொடுப்பதும் அதனை கெடுப்பதும் அவரே. கொடுக்கும் போது அளவில்லாமல் கொடுப்பார். அதேபோல கெடுக்கும் போது அனைத்தையும் உருவி விடுவார். நன்மை செய்தால் நன்மையை பலனாகவும், தீமை செய்தால் தீமையை பலனாகவும் தருபவர். இதற்காக தான் "நன்மை செய்யாமல் இருந்தாலும் பரவாயில்லை மற்றவர்களுக்கு கெடுதலை செய்யாமல் இருப்பது நல்லது" என்று சொல்வார்கள். யாரையும் எளிதாக ஏய்துவிடலாம் ஏமாற்றியும் விடலாம். ஆனால் இது சனி பகவானிடம் செல்லாது. பரிகாரம் ஒரு மனிதன் சனி பகவானால்தான் அறிவுக்கும் சக்திக்கும் அப்பாற்பட்ட பல விஷயங்கள் இருக்கிறது என்பதை உணருகிறார்கள். 'நம்ம கையில எதுவும் இல்லை' என்கிற சரணாகதி தத்துவமும் புரிகிறது. எல்லோருக்கும் எல்லா பணிகளிலும் உதவியாக இருங்கள். உங்களை சனி பகவான் உயர்ந்த இடத்தில் வைத்து அழகு பார்ப்பார். மனசாட்சியை மீறி எது செய்தாலும் சனியின் பாதிப்பிற்கு ஆளாக நேரும். உங்கள் மனசாட்சி தான் சனிபகவான். சனி பகவான் தான் உங்கள் மனசாட்சி. பார்வையற்றோர், மாற்றுத் திறனாளிகள், நோயாளிகள், முதியோர்கள், ஆதரவற்றோர், கடின உழைப்பாளிகள், தொழிலாளிகள், பாரம் தூக்குவோர், துப்புரவு தொழிலாளிகள் போன்றவர்களுக்கு செய்யும் உதவிகள் நல்ல பலன் தரும். தொழிலாளிகள், வேலையாட்களால் பிரச்சினையை சந்திப்பவர்கள் சனியின் நட்சத்திரமான பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரம் வரும் நாட்களில் சிவ வழிபாடு அன்னதானம் செய்வது சிறப்பு. சனிக்கிழமை விரதமிருந்து பெருமாளை வழிபட்டு காக்கைக்கு உணவு படைத்தல் வேண்டும். தேய்பிறை அஷ்டமி நாளில் கால பைரவரை வணங்கி வரலாம். தினமும் ராம நாமம் ஜெபித்து வந்தால் சனிபகவானின் தாக்கம் குறையும். திருநள்ளாறு சென்று சனி பகவானை வழிபட்டு அன்னதானம் செய்ய வேண்டும். சனிக்கிழமை வரும் பிரதோஷ தினத்தில் சிவனுக்கு வில்வ அர்ச்சனை செய்து வழிபடலாம்.