No results found

    விவேகானந்தர்... பின்பற்ற வேண்டிய சிந்தனையாளர்!


    இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில் வாழ்ந்தவர் சுவாமி விவேகானந்தர். அவர் நேரடி அரசியலுக்கு வரவில்லை. ஆனால் எண்ணற்ற சுதந்திரத் தியாகிகளை அவரது சிந்தனைகள் தீவிரமாய் பாதித்திருந்தன. சுதந்திரத் தியாகியும் ஆன்மிகவாதியுமான ஸ்ரீஅரவிந்தர் விவேகானந்தரைத் தம் குரு எனக் கூறியிருக்கிறார். தாம் சிறையில் இருந்து தவம் செய்த காலத்தில் சூட்சும உருவில் விவேகானந்தர் தம்மை வழிநடத்தியதாகவும் தெரிவித்திருக்கிறார். 'விவேகானந்தரது எழுத்துக்களைப் படித்து என் தேசபக்தி ஆயிரம் மடங்கு அதிகமாயிற்று' என்று மகாத்மா காந்தி குறிப்பிட்டிருக்கிறார்.

    'தனி மனிதனின் ஆளுமை வளர்ச்சியில் விவேகானந்தர் இலக்கியத்தை விட, வேறொன்றை என்னால் உயர்ந்ததாகக் கூற முடியாது' என்பது நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் கூற்று. பண்டித ஜவகர்லால் நேரு சுவாமி விவேகானந்தரை வானளாவப் பாராட்டுகிறார். தன்னை அவர் பெரிதும் பாதித்ததாக எழுதுகிறார். எண்ணற்ற தேச பக்தர்கள் உள்ளங்களில் சுதந்திரம் பெறவேண்டும் என்ற எழுச்சி தோன்றும் வகையில் பாரத தேசத்தின் பெருமைகளை உரத்து முழங்கிய விவேகானந்தர், அடிப்படையில் ஓர் ஆன்மீகவாதி. ஆன்மீகம் தவிர்த்து பாரதம் இல்லை என நம்பியவர். 'இந்தியா என்ற தேசத்தின் ஊற்றுக்கண் ஆன்மீகம்தான். அதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அரசியலில் எனக்கு நாட்டமில்லை. சமுதாய சீர்திருத்தவாதி என்று நான் புறப்படவும் இல்லை. ஆனால் இந்த பாரத தேசத்தின் புனித மண் ஆன்மீக மண். ஆன்மிகத்தைத் தவிர்த்து பாரதமில்லை என்பதை நான் நன்கு அறிந்து வைத்திருக்கிறேன்!' என்று தன்னிலை விளக்கம் தந்தவர் அவர்.

    உலகம் முழுவதையும் ஒரு வீடு என்று கருதினால், இந்தியா அதன் பூஜை அறை!' என்றார் அவர். துறவியர் வரிசையைப் பட்டியலிடும்போது, விவேகானந்தரை நாம் இளைஞர்களுக்கான துறவி என அழைத்துப் பெருமைப்படுத்தலாம். முக்தி அடைவதற்கு மட்டுமல்ல, உலகியல் வாழ்வில் வெற்றிபெறவும் பற்பல அரிய கருத்துக்களைச் சொன்னவர் அவர். 'உலகியல் வாழ்வில் கூட உன்னால் வெற்றி பெற முடியவில்லை என்றால் பின் எப்படி நீ முக்தி அடைய முடியும்?' எனக் கேட்டவர். இன்று வெளியாகும் எண்ணற்ற சுயமுன்னேற்ற நூல்களுக்கான ஊற்றுக்கண் விவேகானந்தர் சிந்தனைகள்தான். * தாய் புவனேஸ்வரி அம்மையாருக்கும் தந்தை விஸ்வநாத தத்தருக்கும் 1863 ஜனவரி 12 -ந் தேதி மகனாகப் பிறந்த விவேகானந்தரின் இயற்பெயர் நரேந்திரர். 1902 ஜூலை 4-ந் தேதி அவர் சித்தி அடைந்தார். அவர் உலகில் வாழ்ந்தது 39 ஆண்டுகள்தான்.

    ஆனால் இந்தக் குறுகிய கால வாழ்வில் அவர் செய்த மாபெரும் சாதனைகளை நினைத்துப் பார்க்கும் போதெல்லாம் நம்மை மலைக்க வைக்கின்றன. பல நூறு ஆண்டுகள் அவர் வாழ்ந்திருப்பாரோ என்ற பிரமிப்பை நமக்கு ஏற்படுத்துகின்றன. இப்படிப்பட்ட அபாரமான சாதனையை அவர் நிகழ்த்தக் காரணம் அவரிடமிருந்த அபரிமிதமான மன ஒருமைப்பாடுதான். இளைஞர்கள் தங்களின் மன ஒருமைப்பாட்டைப் பயிற்சியின் மூலம் வளர்த்துக் கொண்டால், குறுகிய காலத்தில் பல பெரிய சாதனைகளை நிகழ்த்த முடியும் என்பதை அவர் தம் வாழ்நாளெல்லாம் தொடர்ந்து வற்புறுத்திக் கொண்டே இருந்தார். 'அடிப்படையில் ஒரு மனிதனின் மன ஒருமைப்பாடே அவன் அடையும் அனைத்து வெற்றிகளுக்குமான ஆதாரம்!' என்பது வாழ்வியல் சார்ந்த அவரது முக்கியமான உளவியல் கண்டுபிடிப்பு.

    'நாம் எவ்வளவு அதிகமாக ஒரு விஷயத்தில் மனத்தைச் செலுத்துகிறோமோ அவ்வளவு அதிகமாக அவ்விஷயத்தில் நாம் ஞானத்தை விரைவில் அடைய முடியும். மனத்தைப் பூரணமாக ஒன்றில் குவிப்பதுதான் அத்துறையில் மிக விரைவில் உயர்ந்த ஞானம் பெற ஒரே வழி. செருப்புத் தைப்பவன் மன ஒருமைப்பாட்டைப் பயில்வானானால் அவன் சிறந்த செருப்புத் தொழிலாளியாக உருவாவான். அதுபோலவே சமையல் செய்பவன் மன ஒருமைப்பாட்டோடு சமைத்தால் சிறந்த சமையல் கலைஞனாக மாறுவான். கடவுளை வழிபடுவதில் இருந்து பணம் சம்பாதிப்பது வரை எந்தச் செயலானாலும் முழுமையான மன ஒருமைப்பாடு மிகவும் அவசியம்!' என்று ஒரு மாபெரும் உளவியல் உண்மையைத் தன் அனுபவத்தில் உணர்ந்து உலகிற்கு அறிவித்தவர் அவர். விவேகானந்தரின் கருத்துக்கள் அனைத்துமே விவாதபூர்வமானவை. ஆராய்ச்சிக் கண்ணோட்டத்துடன் விவாதம் செய்து தம் கருத்துக்களை நிறுவுவதில் அவர் கைதேர்ந்தவர்: 'உனக்குள்ளே அளவற்ற ஆற்றலும் அளவற்ற அறிவும் யாராலும் வெல்ல முடியாத சக்தியும் இருக்கிறது என்று நினைப்பாயானால், அந்தச் சக்தியை உன்னால் வெளியே கொண்டுவர முடியுமானால் நீயும் என்னைப்போல் ஆக முடியும்! உற்சாகமாக இருக்கத் தொடங்குவதுதான் வெற்றிகரமான வாழ்க்கை வாழத் தொடங்குவதற்கான முதல் அறிகுறி! முதலில் உற்சாகமாக இருக்கப் பழகு. நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். உன்னை வலிமையுடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவனாக ஆவாய்! பலவீனன் என்று நினைத்தால் பலவீனமானவனாக ஆவாய். மரணத்தைப் பற்றிக் கவலைப்படாதே! நீ இருக்கும்போது அது வரப் போவதில்லை. அது வரும்போது நீ இருக்கப் போவதில்லை. பிறகு எதற்குக் கவலை? இளைஞனே! நம் நாட்டின் பொன்னான எதிர்காலம் உன்னைத்தான் நம்பியிருக்கிறது. நம் நாட்டின் வருங்கால நம்பிக்கைகள் உன்னையே எதிர்நோக்கியிருக்கின்றன. கடினமாக உழைப்பாயாக. உறுதியாக இரு. இறைவன் மீது பூரண நம்பிக்கை வைப்பாயாக! வெற்றி உனக்குத்தான்!' என்கிறார் விவேகானந்தர். ஒருமுறை அவர் கலைக்களஞ்சியத்தைப் படித்துக் கொண்டிருந்தார். அது ஒரு பார்வைப் புத்தகம். (ரெபரன்ஸ் புத்தகம்.) அதை சந்தேகம் வரும்போது எடுத்துப் பார்ப்பார்களே தவிர முழுமையாக யாரும் படிக்க மாட்டார்கள். அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவர், 'கலைக்களஞ்சியம் பார்வைப் புத்தகமல்லவா? அதை ஒரு புதினத்தைப் படிப்பதுபோல் வரிசையாகப் படித்துக் கொண்டிருக்கிறீர்களே?' என ஆச்சரியத்தோடு கேட்டார். விவேகானந்தர் புன்முறுவல் பூத்தவாறே, அதுவரை தாம் வாசித்த பக்கங்களில் ஏதேனும் சந்தேகம் கேட்டு தன் படிப்பறிவைப் பரிசோதிக்குமாறு அந்த இளைஞரைக் கேட்டுக் கொண்டார். இளைஞர் ஏதோ ஒரு பக்கத்தில் இருந்து ஒரு வார்த்தையைக் குறிப்பிட்டு அந்த வார்த்தைக்கு விளக்கம் கேட்டார். என்ன வியப்பு! விவேகானந்தர் அந்த வார்த்தை தொடங்கி அடுத்துள்ள வார்த்தைகளையும் அவற்றின் பொருளையும் பக்கம் பக்கமாகத் தொடர்ந்து ஒப்பித்துக்கொண்டே போனார். விவேகானந்தரின் மனத் திறமையைப் பார்த்து ஆச்சரியத்தில் ஆழ்ந்த இளைஞர் பிரமிப்போடு அவரை ஓர் அவதாரம் எனப் புகழ்ந்தார். கடகடவென நகைத்த விவேகானந்தர், 'இந்தத் திறனைப் பெறுவதற்கு ஒருவர் அவதாரமாக இருக்க வேண்டியதில்லை. உறுதியான மன ஒருமைப்பாட்டைப் பயிற்சியின் மூலம் அடைந்தால் அதுவே போதும். இத்தகைய ஆற்றல் தானாக வாய்க்கும். நான் இந்தக் கலைக்களஞ்சியத்தைப் படிக்கும்போது வேறெதிலும் கவனம் செலுத்தாமல் இதிலேயே முழுமையாக ஆழ்ந்திருந்தேன். என்னருகே இடியே விழுந்திருந்தாலும் கூட அது எனக்குத் தெரிந்திருக்காது!' எனக் கூறினார். இளைஞர்கள் தங்கள் துயரங்களை நீக்கும் வழிவகை குறித்து விவாதபூர்வமாகப் பேசுகிறார் அவர். விவேகானந்தரின் எல்லாக் கருத்துக்களுமே, அவரே நம் முன் வைக்கும் விவாதங்களால் ஆராய்ச்சிக் கண்ணோட்டத்துடன் நிறுவப்பட்டவை. அவர் சொல்கிறார்: 'உங்களுக்கு வந்த துன்பங்கள் எல்லாமே நீங்கள் அதற்காக உங்களைத் தயார்ப்படுத்திக் கொண்டதால்தான் வந்தவை என்பதை அறியுங்கள். ஒரு பாதியை நீங்கள் செய்தீர்கள். புற உலகம் மறுபாதியைச் செய்தது. இவ்வாறே துயரம் வந்தது. இந்த ஆராய்ச்சியில் இருந்து ஒரு நம்பிக்கைக் கிரகணமும் வருகிறது. என்னால் புறவுலகை அடக்க முடியாது. ஆனால் என்னுள் எனக்கு அருகில் இருக்கின்ற எனது சொந்த உலகம் என் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டது.

    தோல்விக்கு இரண்டும் தேவையானால், என் துயரத்திற்கு இரண்டும் காரணமானால் என் பக்கத்தில் இருந்து நான் ஒத்துழைக்க மாட்டேன். அப்போது துயரம் எப்படி வரும்? உண்மையிலேயே என்னை நான் அடக்கினால் துயரம் ஒருபோதும் வராது என்பதே அந்த நம்பிக்கை. நமது குழந்தைப் பருவம் முதலே காலமெல்லாம் நமக்கு வெளியே உள்ள ஏதோ ஒன்றின்மீது பழி சுமத்தவே நாம் பழக்கப்படுத்தப்படுகிறோம். எப்போதும் பிறரைத் திருத்தத்தான் கங்கணம் கட்டுகிறோமே தவிர நாம் நம்மையே திருத்திக்கொள்ள முயல்வதில்லை. நமது தகுதிக்கு ஏற்றதையே நாம் பெறுகிறோம். 'உலகம் கெட்டது. நாம் மட்டும் நல்லவர்கள்' என்று சொன்னால் அது பொய். அப்படி ஒருபோதும் இருக்க முடியாது. கற்றுக்கொள்ள வேண்டிய முதற்பாடம் இதுவே. வெளியில் உள்ள எதையும் சபிக்காமலும் வெளியில் உள்ள ஒருவர் மீதும் பழி சுமத்தாமலும் இருக்கத் தீர்மானியுங்கள். மனிதனாக இருங்கள். எழுந்து நில்லுங்கள். பழியை உங்கள் மீதே சுமத்திக் கொள்ளுங்கள். எப்போதும் அதுவே உண்மை என்பதை அப்போது காண்பீர்கள். உங்களையே வசப்படுத்திக் கொள்ளுங்கள்! பிறகு எல்லா வெற்றிகளும் உங்களுக்கு வசமாகும்!' விவேகானந்தரைப் பயிலும் இளைஞர்கள் அவரைப் பார்த்து பிரமித்தால் போதாது. அவரைப் பின்பற்றி தம் வாழ்வைச் செழுமைப்படுத்திக் கொள்ள வேண்டும். விவேகானந்தர் விரும்பியது அதைத்தான். இன்று விவேகானந்தர் எழுதிய நூல்களும் விவேகானந்தரைப் பற்றிய நூல்களும் ஏராளமாகக் கிடைக்கின்றன. விவேகானந்தரைப் படித்தால் அவர் பின்பற்றப்பட வேண்டியவர் என்பதையும் நாம் புரிந்துகொள்வோம். அவரைப் பயில்வதென்பதும் அவர் சொன்ன கருத்துக்களை அறிவதென்பதும் அவரைப் பின்பற்றுவதற்காகத் தான் என்பதை இளைஞர்கள் உணரவேண்டும். விவேகானந்தரைப் பின்பற்றுவதன் மூலம் உலகியல் வாழ்விலும் ஆன்மிக வாழ்விலும் ஒருசேர இளைஞர்கள் வெற்றிபெற முடியும்.

    Previous Next

    نموذج الاتصال