No results found

    சென்னை சித்தர்கள்: மயிலை சிவஞான நடராஜ சுவாமிகள்-பெரவள்ளூர்


    திருமயிலை சிவஞான நடராஜ சுவாமிகள் 1896-ம் ஆண்டு சித்ரா பவுர்ணமி அன்று பிறந்தார். தனது 19-வது வயதில் இருந்தே ஞானத்தேடல் பயணத்தைத் தொடங்கினார். அவர் இளம் வயதில் குடும்ப சூழல் காரணமாக ஆரம்பக் கல்வி தான் பயின்றார். பின், அவர் கைத்தொழிலான எம்ப்ராய்டரிங் கற்று சம்பாதித்தார். தனது 19-வது வயதில் ஓட்டேரிப் பகுதியில் அவர் வசித்து வந்தார். அங்கு ஒரு சாமியாரை சந்தித்தார். நடராஜ சுவாமிகள் தன் வலிமை, தைரியம் பற்றி அந்த சாமியாரிடம் பெருமையாக கூறினார். அதற்கு அந்த சாமியார் இந்த உடல் வலிமை, தற்போதுள்ள மன வலிமை எல்லாம் காலத்தால் மாறும். ஆனால், ஆத்ம நிலைதான் உண்மையானது. அதுதான் உண்மையான வலிமையாகும் என்று கூறினார்.

    ஆத்ம நிலை என்றும் வளர்ந்து, நம்மை இறை நிலைக்கு கொண்டு சேர்க்கும் என்று கூறியிருக்கிறார். நடராஜ சுவாமி அதைக் கேட்டுக்கொண்டு வீடு திரும்பி விட்டார். அன்று இரவு அந்த சாமியார் சொன்ன வார்த்தை அவரது மனதில் பலமாக பதிந்துவிட்டது. மறுநாள் அந்த சாமியாரை தேடினார், அவர் ஓட்டேரி சுடுகாட்டில் தியானத்தில் இருந்தார். (அக்காலத்தில் சாமியார்கள் சுடுகாட்டில் தியானம் செய்வார்கள்). நடராஜ சுவாமி அவரிடம் சென்று சுவாமி நான் இந்த ஆத்ம வித்தையை கற்க வேண்டும் என்று கூறினார். அவர் சரி, நாளை வா என்று கூறி சென்றுவிட்டார். மறுநாள் அங்கு சென்று பார்த்தால் அவர் அங்கு இல்லை. பலரிடம் கேட்டார். யாரும் அந்த சுவாமியைப் பார்க்க வில்லை என்று கூறினார்கள். அன்றுமுதல் அவருடைய ஞானத்தேடல் ஆரம்பித்தது.

    நூற்றுக்கணக்கான சுவாமிகளை சந்தித்தாலும் 53 குருமார்களிடம் தான் உபதேசம் பெற்றார். பல குருமார்களிடம் சில மாதங்கள் சேவை செய்து பயிற்சி கற்றுக்கொண்டார். இடையில் அவரது திருமணம் 22-வது வயதில் நடந்தது. அவர் மனைவியின் பெயர் கமலம்மாள். திருமணம் ஆனாலும், தொடர்ந்து ஞானத்தேடல் இருந்தது. இப்படி பல சாமியார்களிடம் பயிற்சி பெற்று வந்த போது, சிலரிடம் சித்த வைத்தியத்தை முழுமையாக கற்று, மருந்து செய்யும் முறையையும் கற்றுத்தேர்ந்தார். அப்போது அவர் சித்தயோகப் பயிற்சி செய்தாலும் அதில் முக்தி நிலையை அடைய முடியவில்லை. இதற்காக அவர் தஞ்சாவூரில் கலைமணி யோகானந்தர் என்ற சுவாமிகளை சந்தித்து, தான்பட்ட கஷ்டம், தேடல் இவைகளை அவரிடம் சொல்லி தான் செய்த பயிற்சி முறைகளையும் தெரிவித்தார். யோகானந்தர் சுவாமி அதைக்கேட்டு தன்னுடைய பயிற்சி வழிமுறையையும் நடராஜ சுவாமிகளின் பயிற்சிகளையும் இணைத்து, அவற்றை ஒழுங்குபடுத்தி, நடராஜ சுவாமிகளிடம் கொடுத்து ஒரு மாதம் அங்கு தங்கி இருந்து பயிற்சி செய்யச் சொன்னார். நடராஜ சுவாமிகள் ஏற்கனவே பல வருடங்கள் தீவிரமாக பயிற்சி செய்து சில உயர் நிலைகளை அடைந்திருந்ததால், அங்கு தங்கி பயிற்சி செய்யும்போது 20 நாட்களிலேயே முக்தி நிலையை அடைந்தார்.

    சுவாமியின் 50-வது வயதில் கலைமணி யோகானந்தர் அவரிடம் ஒரு வாக்குறுதி வாங்கினார் "நீ 20 வருடம் இந்த ஞான யோகப் பயிற்சியை மற்றவர்களுக்கு கற்றுத்தர வேண்டும்" என்று கூறினார். பிறகு சென்னை வந்து அவருக்கு தெரிந்தவர்களுக்கு உபதேசம் கொடுத்து வந்தார். இதில் சித்த மருத்துவம் பயிலவும், ஞான யோகம் பயிலவும் பலர் வந்தனர். நடராஜ சுவாமிகள் இந்த நிலையில் தனது ஆத்மாவை இறை ஒளி யாக்கும் சித்தி நிலையை தனது 60 வயதில் அடைந்தார். இதனால் அவர் இந்த கலையினால் தனக்கு ஏற்பட்ட உயர்ந்த நிலையை எண்ணி மகிழ்ந்து தொடர்ந்து தவத்தில் இருந்தார்.

    அதை உணர்ந்த ஒரு சத்சங்கத்தார் அவருக்கு "சிவஞான"என்ற பட்டத்தைக் கொடுத்தனர். ரசவாதத்தில் தங்கம் செய்யும் முறையும் அவருக்கு தெரிந்திருந்தது. ரசமணி, குளிகைகள் இவற்றையும் செய்யும் முறையை தெரிந்து வைத்திருந்தார். இதை தொடர்ந்தால், எல்லோரும் தங்கம் செய்ய நினைப்பார்கள், அது ஞானம் அடைய தடையாக இருக்கும் என்று அந்த முயற்சியை கைவிட்டார். இப்படி அவர் ஞான வாழ்வில் தன் ஆன்மாவை முழு இறை ஒளியாக்கியதால் சித்தராக உருவானார். சித்தர் என்பவர் யார் என்றால் தன் ஜீவனை இறை ஒளியாக்கி, தன்னிடம் கற்றுக் கொள்பவரது ஆன்மாவையும் இறைஒளி ஆக்குபவர் தான் சித்தர் ஆவார். பலர், சித்தர் என்றால் பல சித்து வேலை செய்பவர்கள் என்று நினைக்கிறார்கள், அது அப்படி அல்ல. குருமார்கள் பல சித்து செய்வார்கள், அது அவருடைய சீடர்கள் துன்பத்தையும், பயிற்சியில் ஏற்படும் தடைகளையும், சூட்சுமமாக நீக்கி சித்து செய்வார்கள். பொதுமக்கள் ஆசீர்வாதம் வாங்க வரும்போது, அவர் மனதில் இவருக்கு நன்மை உண்டாகட்டும் என்று மனதில் நினைத்தால், அவருக்கு நன்மைகள் நடக்கும். ஆக வெளியே தெரியும்படி சித்து செய்ய வேண்டும் என்று நிலை கிடையாது. இப்படி நடராஜ சுவாமி பல சீடர்களுக்கு மரணத்தை ஏற்படுத்தும் விதிகளையும் தள்ளிப்போட்டு உள்ளார்.மற்றும் சீடர்களின் குடும்பம், தொழில், உடல் நோய்கள் இவற்றையும் சரி செய்துள்ளார். இப்போதும் தொடர்ந்து அவருடைய ஆசீர்வாதம் கிடைக்கிறது. சித்தர்கள் "மனிதனும் இறை நிலை அடையலாம்" என்று கூறியுள்ளார்கள். இதற்கான பயிற்சி முறைகள் இங்கு கற்றுத் தரப்படுகிறது. பயிற்சி மட்டும் செய்தால் முக்தி அடைய முடியாது, பயிற்சியால் ஏற்படும் சக்தியை கொண்டு புலன்களைக்கட்டுப்படுத்தி, உடல் இச்சை, பொருள் இச்சை இவற்றை பயிற்சியின் சக்தியால் கட்டுப்படுத்தவேண்டும். இதனால் மனநிலையில் மாற்றம் உண்டாகும். அந்த மாற்றத்தால்தான்அன்பு, கருணை, பொறுமை, எளிமை, எல்லா உயிரும் தன்உயிராக பாவித்தல் போன்ற தன்மைகள் ஏற்படும். இந்நிலை முக்குணங்கள், விதி, அவஸ்தைகள் போன்றவற்றை கடக்க உதவும். பயிற்சியும், மனநிலை மாற்றமும் தான் முக்திநிலை அடைய உதவும். வேறு எந்த ஒரு பொருளும், சம்பிர தாயங்களும் முக்திக்கு உதவாது. இதைத் தான் சித்தர்கள் கடைபிடித்தார்கள். அதனால்தான் கலாச்சாரம், பண்பாடு, வழிபாட்டு முறைகளை கடந்து சென்றார்கள். இந்த நிலையில் நடராஜ சுவாமி சீடர்கள் சுவாமியிடம் நாம் ஓர் இயக்கம் ஆரம்பிக்க வேண்டும் என்ற போது, வில்லிவாக்கத்தில் 1970-ம் ஆண்டு சித்த யோக பயிற்சி நிலையத்தை அங்குள்ள ஓர் திருமண மண்டபத்தில் ஆரம்பித்தார். பிறகு வயது முதிர்வு காரணமாக பெரவள்ளூரில் செல்லியம்மன் கோவில் திடலில் வந்து, தன் மனைவியுடன் குடியமர்ந்து அங்கு பயிற்சி நிலையத்தை தொடர்ந்து நடத்தி வந்தார். பல சீடர்கள் அவரிடம் சித்த யோக பயிற்சியை கற்றார்கள். நடராஜ சுவாமி ஒரு நாள், ஒருசில சீடர்களிடம் தான் வேலூர் பக்கம் உள்ள காடுகளுக்குச் சென்று, தனிமையாக இருந்து, தவம் செய்து ஒளியாக மாறி மறைந்து விடப் போவதாக சொல்லிவிட்டு சென்றுவிட்டார். இதைக் கேள்விப்பட்ட பல சீடர்கள் ஒன்றுகூடி, நடராஜ சுவாமியை தேடி பல இடங்களுக்கு சென்று அவரை கண்டுபிடித்து, சுவாமியிடம் "சுவாமி நீங்கள் இன்னும்சில காலம் இருந்து, எங்களையும் மற்றும் பலரையும் வழிநடத்த வேண்டும் என்று அவர் காலில் விழுந்து மன்றாடிக் கேட்டு, அவரை மீண்டும் சென்னைக்கு அழைத்து வந்தனர். 1978-ம் ஆண்டு மார்ச் மாதம் "திருமயிலை சிவஞான நடராஜ சுவாமிகள் சித்தயோக பயிற்சி நிலையம்" என்ற பெயரில் பயிற்சி நிலையம் ஆரம்பிக்கப்பட்டது. சித்த கலையான ஞான யோகப் பயிற்சிகள் இங்கு கற்றுத்தரப்பட்டது. முதலில் உடல்நலப் பயிற்சியான வாசி யோகமும், மன வலிமைக்கு நிஷ்டை என்ற பயிற்சியும் தரப்பட்டது. இவை இரண்டும் வாழ்க்கைக்கு போதும். மேல் நிலைக்கு செல்ல விருப்பம் இருப்பவர்களுக்கு மனம், உயிர், ஆன்மா, இறை நிலை, உடல் தன்மையின் செயல், மனத்தன்மை யின் செயல், விதியின் அமைப்பு, வாழ்க்கை நிலை, உலக இயக்கம், முக்தி நிலை என படிப்படியாக கற்றுத் தரப்பட்டது. முக்தி என்பது பயிற்சியாளருடைய ஆத்ம சக்தியை பொறுத்து அவர்பல ஆண்டுகாலம் தொடர்ந்து பயிற்சி செய்தால் தான் அந்த நிலை கிடைக்க வாய்ப்பு இருக்கும். குறைந்தபட்சம் 15 முதல் 20 ஆண்டுகள்ஆகலாம் (குடும்ப வாழ்க்கை, மற்றும் தொழில் செய்து கொண்டு பயிற்சி செய்வதால்) இதற்கு பொறுமை மிக அவசியம் தேவை. அதுபோல் நாள்பட்ட கஷ்டம் அதாவது, ஞானத் தேடலில் குடும்பத்தை சரியாக கவனிக்க முடியாமல் போனது, பலரிடம் அவமானப்பட்டது,பலரதுபரிகாசம், காடு, மலைஎன சுற்றுவது போன்ற நிலைகளை இனிமேல் யாரும் அடையக்கூடாது என்று, "காட்டில் இருந்து யோகத்தை நாட்டிற்கு கொண்டு வந்தேன்". அதன் வடிவம்தான் இந்த சித்த யோக பயிற்சி நிலையம் என்று கூறுவார். நாட்டில் பல சித்தர்கள் சமாதிகளில் வழிபாட்டு முறைகள் தான் உள்ளது. இங்கும் அதுபோல் வேண்டாம் என்று முடிவு எடுத்து, பயிற்சி நிலையமாக துவக்கினார். வழிபாட்டுக்கு ஏராளமான சித்தர்கள் சமாதி உள்ளதால் வழிபாடுமுறையை விரும்புபவர்கள் அங்கு செல்லட்டும், இங்கு தியானப்பயிற்சி மட்டும் நடைபெற வேண்டும் என்று விரும்பினார். அதனால் இங்கு பயிற்சி நிலையத்தில் பாட்டு, பஜனை, ஆரத்தி போன்றவை கிடையாது. ஏனென்றால் நடராஜ சுவாமிகள் தனது ஞான தேடலில் இருக்கும்போது நேரம், வாழ்க்கை, தொழில், குடும்பம், பணம் இவற்றில் இழப்புகள் ஏற்பட்டது. அப்படி பயிற்சியாளர்களுக்கு ஏற்படக்கூடாது என்று தான் எந்த வழிபாட்டு முறையும் வேண்டாம் என்று முடிவு செய்ததாக கூறினார். இந்த நிலையில் நடராஜ சுவாமிகள் சமாதி அடைந்தால், அவரை சமாதி செய்ய ஓர் இடம் வாங்க வேண்டும் என்று அவரது சீடர்கள் விரும்பி, நடராஜ சுவாமிகள் வாழ்ந்த இடம் அருகில் 1978 நவம்பரில் ஓர் இடம் வாங்கி அதை நிர்வகிக்க ஒரு அறங்காவலர் குழு அமைத்தனர். இந்நிலையில் பயிற்சி நிலையத்தில் கற்ற மாணவர்கள் பயிற்சியிலும், வாழ்க்கையிலும் நல்ல நிலையை அடைந்தனர். அதில் ரங்கநாத சுவாமிகளுக்கு தனியாக சில பயிற்சிகளையும், எதிர்காலத்தில் பயிற்சியாளர்களை எப்படி வழிநடத்த வேண்டும் என்றும் கற்றுக் கொடுத்தார். 1987-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18-ந்தேதி சிவஞான நடராஜ சுவாமிகள் "மோட்ச சமாதி" அடைந்தார். பயிற்சி நிலைய இடத்தில் சீடர்கள் அவருக்கு சமாதி வைத்தனர். ரங்கநாதசுவாமி அங்கு சமாதியும், தியானக்கூடமும் கட்டி முடித்து சித்த யோக பயிற்சியை கற்றுக்கொடுத்தார். 1998-ம் ஆண்டு சிவஞானரங்கநாதசுவாமிகள் "மோட்ச சமாதி" அடைந்தார். தனக்கு பிறகு பயிற்சி நிலையத்தை வழிநடத்த ரங்கநாத சுவாமிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட நெல்லை ராஜசுவாமிகள் தற்போது இங்கு சித்தயோக பயிற்சி கற்றுக்கொடுத்து வருகிறார். தற்போது செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் மாலை 7மணிமுதல் 9 வரை உபதேசம் அளிக்கப்படுகிறது. சனிக்கிழமை தோறும் சித்தர் பாடல்களுக்கு ஞானவிளக்கம் அளிக்கப்படுகிறது. இது தொடர்பான மேலும் தகவல்களை சிவஞான நெல்லைராஜ சுவாமிகளை 9940278111 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

    Previous Next

    نموذج الاتصال