No results found

    சனி பகவானும் புனர் பூ தோஷமும்


    அன்றாட வாழ்க்கையில் மனிதர்கள் அனைவரும் சந்திக்கும் பொதுவான பிரச்சினையில் ஒன்று காரியத்தடை. ஜோதிட ரீதியாக சந்திராஷ்டம நாளில் காரியத்தடை மிகுதியாக இருக்கும் என்ற கருத்து பலராலும் நம்பப்பட்டு வருகிறது. ஆனால் சந்திராஷ்டமம் என்று பயப்படும் நாளில் எல்லா காரியங்களும் சுமூகமாக நடைபெறும். அதே நேரத்தில் சந்திராஷ்டமம் அல்லாத மாதத்தின் ஒரு சில நாட்களில் இனம் புரியாத மன சஞ்சலம் மற்றும் காரியத்தடையை அனைவரும் உணர்ந்து இருப்பார்கள். அந்த நாளே புனர் பூ நாளாகும். அந்த நாளில் தொட்ட காரியங்கள் இழுபறியாகும். என்ன செய்தாலும் தவறாகவே முடியும். ஒருவருக்கு காரிய தடை, முன்னேற்றத் தடை செய்வதற்கு ஜோதிட ரீதியான பல தோஷங்கள் இருந்தாலும் குறிப்பிட்டு சொல்லும்படியான தோஷம் புனர் பூ தோஷமாகும்.

    கோட்சார சந்திரன் ஜனன ஜாதகத்தில் உள்ள சனியை தொடர்பு கொள்ளும் காலம் புனர் பூ நாள். சனியும் சந்திரனும் தொடர்பு உள்ள அந்த நாட்களில் எந்த ஒரு செயலை செய்தாலும் அது மிக பெரிய தடை, காலதாமதத்தை செய்யும். அந்த நாட்களில் மன சஞ்சலம், காரியத் தடை அதிகமாக இருக்கும். இது மாதம் ஒரு முறை ஏற்படும் நிகழ்வு என்றால் சிலருக்கு வாழ்நாள் முழுவதும் எடுத்த செயலில் இழுபறியாகி தடை தாமதம் இருந்து கொண்டே இருக்கும். ஒரு ஜாதகத்தில் சனி, சந்திரன் சம்பந்தம் இருந்தால் உருவாகும் கடுமையான கருணையற்ற தோஷமாகும். சுய ஜாதகத்தில் சனியும் சந்திரனும் எந்த விதத்தில் தொடர்பு இருந்தாலும் எந்த ஒரு செயலை செய்தாலும் அது மிக பெரிய தடை, காலதாமதத்தை செய்யும்.

    புனர் பூ தோஷத்திற்கான கிரக அமைப்புகள் 1. சனியும், சந்திரனும் ஒரே ராசியில் இருப்பது 2. சனி, சந்திரன் பரிவர்த்தனையின்போது மகரம், கும்பம் ராசியில் சந்திரன் இருப்பது, கடக ராசியில் சனி இருப்பது. 3. சனி, சந்திரன் ஒருவரை ஒருவர் சமசப்தமாக பார்த்து கொள்வது 4. சனி, சந்திரன் சார பரிவர்த்தனை சனியின் நட்சத்திரமானபூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரத்தில் சந்திரன் நிற்பது சந்திரனின் நட்சத்திரமான ரோகிணி, ஹஸ்தம், திருவோணம் ஆகிய நட்சத்திரத்தில் சனி நிற்பது. 5. நவாம்சத்தில் சனி பகவானும், சந்திர பகவானும் ஒன்றாக சேர்ந்து நிற்பது ஆகிய அமைப்புகள் எல்லாம் புனர் பூ தோஷமாகும்.

    இதில் சனி, சந்திரன் சேர்க்கை , சம சப்தமபார்வை முதல் தர புனர்பூ தோஷமாகும். அத்துடன் சனி அல்லது சந்திரன் நீசமாகி இருந்தால் அதி பயங்கர புனர் பூ அமைப்பாகும். நன்மையானாலும் தீமையானாலும் இரட்டிப்பான பலன்களைத் தரும். புனர்பூ என்றால் அதீத தடை, தாமதம் என்று பொருள். ஜாதகரின் அனைத்து செயல்களிலும் தடை, தாமதம் ஏற்படும். சனி, சந்திரனுடன் சேரும்போது, பார்க்கும் கிரகங்களின் ஆதிபத்தியம், காரகத்துவம், சாரம், பரிவர்த்தனைக்கு ஏற்ப செயல்பாடுகளின் தன்மை இருக்கும். சனியை ஆயுள்காரகன், கர்ம காரகன், மந்தன் என்று கூறுவார்கள். மந்தன் என்றால் மிக மிக மெதுவாக வலம் வருபவர் என்று பொருள். சனி ஒரு ராசியை கடக்க 2½ ஆண்டுகள் ஆகும். ராசி மண்டலத்தை முழுமையாக கடக்க 30 ஆண்டுகள் ஆகும். சனி ஒரு முறை கடந்து முடியும் போது வாழ்க்கையில் திடீர் திருப்பங்கள், ஏற்ற இறக்கங்கள் நிகழும்.

    கடின உழைப்பு, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, நீதி, நேர்மை, நியாயம், தர்மம் போன்றவற்றை கற்றுக்கொடுப்பவர். அவரவரின் 9ம் பாவக வலிமைக்கு ஏற்ப சனியின் செயல்பாடுகள் இருக்கும். சந்திரன் மனோகாரகன், மனதை ஆள்பவர். ஒருவருக்கு எந்தவிதமான கஷ்ட, நஷ்டங்கள் வந்தாலும் முதலில் பாதிப்பது மனம்தான். அமைதியின்மை, கோபம், பிடிவாதம், சோகம், இயலாமை, உணர்ச்சி வசப்படுதல் போன்ற மனநிலை பாதிப்பு ஏற்படும். ஒரு தெளிவான சிந்தனை மற்றும் முடிவு எடுப்பதற்கு காரணமாக விளங்குபவர் சந்திரன். சனிக்கும், சந்திரனுக்கும் பல வகைகளில் ஒத்துப்போகாத தன்மைகள் உண்டு. சந்திரன் தினக்கோள் 27 நட்சத்திரங்களை மிக அதிவேகமாக பயணித்து, 30 நாட்களில் ராசி மண்டலத்தை கடக்கிறது. சனியுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது நேர் எதிர்மாற்றமாக இருக்கும். சந்திரனுக்கு ராசி மண்டலத்தை சுற்றி வர 30 நாட்கள், சனிக்கு ராசி மண்டலத்தை சுற்றி வர 30 வருடங்கள். சனி-மந்தம், இருள். சந்திரன் -வேகம், சந்திரன் ஒளி. இப்படி எல்லாமே எதிரும் புதிருமாக அமைந்துள்ளதால் சனியும், சந்திரனும் ஜாதக கட்டத்தில் எந்த வகையிலாவது சம்பந்தம் பெற்றால் புனர்பூ தோஷம் செயல்படும். ஒரு சிலருக்கு கோச்சார ரீதியாக குறுகிய கால பாதிப்பு இருக்கும். புனர்பூ அமைப்பு இருப்பவர்களுக்கு தூக்கமின்மை இருக்கும். மற்றவரின் குறைகளைக் கண்டறிந்து அதை பெரிதுபடுத்துவதில் வல்லவர்களாக இருப்பதுடன், ஒருவரை பார்த்தவுடன் அவரின் குணநலன்களை துல்லியமாக கணித்துவிடும் தன்மையுடையவர்கள். இந்த தோஷமானது எப்போதுமே ஆழ்மனதில் ஓர் இனம்புரியாத சோகத்தை வைத்து இருப்பதுடன் சின்ன சின்ன விசயங்களில்கூட பய உணர்வைத் தரும். மேலும், கோட்சாரத்திலோ அல்லது தசா-புக்தியிலோ சனி-சந்திரன் தொடர்புபடும்போது இனம் புரியாத கவலைகள் மற்றும் துக்கங்களை தரும். மன சஞ்சலத்தின் உச்சகட்ட சேர்க்கை இந்த புனர்பூ அமைப்பு. மேலும் புனர்பூ அமைப்பு வாழ்வில் கடுமையாக சந்திக்கும் பிரச்சினைகளில் ஒன்று திருமணத் தடை, இரண்டாவது அதீத தொழில் தடை. திருமணத் தடை:- புனர்பூ தோஷத்தால் திருமணத்திற்கு முன்பு ஏற்படும் பிரச்சினைகள். கால தாமத திருமணம், நிச்சயித்த திருமணம் நின்று போவது, நிச்சயிக்கப்பட்ட திருமணத்தேதி, திருமண மண்டபம் மாறுவது, மணப்பெண்ணோ மாப்பிள்ளையோ மாறிப் போவது, தாலி கட்டும் நேரத்தில் இரு வீட்டாருக்கும் சண்டை சச்சரவு ஏற்படுவது போன்றவையாகும். புனர்பூதோஷம் திருமணத்திற்கு பிறகு இல்லற இன்பத்தை கெடுத்து விவாகரத்து, மறுமணம் போன்ற பிரச்சினைகளை தரும். சிலருக்கு இல்லற துறவறத்தையும் ஒரு சிலருக்கு சந்நியாச யோகத்தையும் தந்துவிடும். இல்வாழ்வில் பற்றற்ற நிலையை ஏற்படுத்தும். மிக கடுமையாக இருந்தால் வெகு சிலருக்கு திருமணமே நடக்காமல் பிரம்மச்சாரி வாழ்க்கையை கூட வாழ வைத்துவிடும். தொழில் தடை:- தொழிலுக்கு காரக கிரகமான சனியுடன், வளர்ந்து தேயும் கிரகமான சந்திரன் சம்பந்தம் பெறும் போது கடுமையான தொழில் தடையை ஏற்படுத்தும். எதை செய்தாலும் தவறாகவே முடியும். வாழ்வில் எவ்வளவு உயரமாக சென்றாலும் பெரும் வீழ்ச்சியை ஏற்படுத்தும். சம்பளம் இல்லாமல் வேலை செய்யும் நிலை அல்லது மிகவும் அடிமைத்தனமான வேலை செய்யும் நிலை, குறைந்த ஊதியத்தை பெறுதல் என்ற நிலையை ஏற்படுத்தும். நன்கு படித்திருந்தாலும் தன் தகுதிக்கு சம்பந்தமில்லாத தகுதிக் குறைவான இடத்தில் குறைவான சம்பளத்தில் வேலை செய்யும் சூழ்நிலை ஏற்படும். சிலருக்கு சட்டத்திற்குப் புறம்பான அல்லது சட்டத்திற்கு உட்படாத வேலை, தொழில் செய்யும் சூழ்நிலை ஏற்படும். நல்ல திறமை இருந்தும் சரியாக சம்பாதிக்காமல் வருமானம் இல்லாமல் இருப்பார்கள். ஒரு சிலருக்கு 40 வயது ஆகியும் கூட சொல்லிக் கொள்ளும்படியான வேலை யில்லாமலும் சூதாட்டம் திருட்டு என வாழ்ந்து கொண்டிருக்கும் சூழ்நிலையை ஏற்படுத்தும். இந்த கிரக சேர்க்கை உள்ளவர்கள் அதிக முதலீடு செய்து தொழில் செய்யாமல் இருப்பது நல்லது. முதலீடு உள்ள தொழில் செய்யும்போது தொழிலில் எட்ட முடியாத பிரமாண்ட வளர்ச்சியை கொடுத்து மீளமுடியாத திடீர் வீழ்ச்சியையும், இழப்பையும் தரும். இவர்களுக்கு அடிமைத் தொழிலே சிறப்பு. மேலும் புனர்பூ தோஷம் உள்ளவர்கள் சொந்த ஊரில் பூர்வீக சொத்தில் குடியிருக்க விடாது. பூர்வீகத்தை விட்டு வெளியேற்றும். பூர்வீக சொத்தில் இருக்க விடாது. இந்த கிரக தோஷம் இருப்பவர்கள் யாரையும் மதிக்காமல் சுதந்திரமாக செயல்படக் கூடியவராக இருப்பர். விதிக்கு கட்டுப்பட்டு இந்த கிரகச் சேர்க்கை செயல்படுவதால் இவர்கள் வாழ்வில் எந்த விதத்திலும் சிறப்படைவதில்லை. கர்மக்காரகரான சனி நாள் கிரகமான சந்திரனுடன் சேரும்போது கர்மசெயல்படுகளின் தன்மையில் அதிவேக மாற்றமும், தனித்தன்மையும் ஏற்படும். கால புருஷ நான்காம் அதிபதி சந்திரன் பேரின்பம். கால புருஷ 10,11-ம் அதிபதி சனி சிற்றின்பம். கர்ம வினைப்பதிவை வெளிப்படுத்துபவர். சிற்றின்பம் சனி பேரின்பம். சனி சந்திரன் சம்பந்தம் இருப்பவர்கள் இல்லற சிற்றின்பத்தை அனுபவித்து கர்மவினையில் உழல்வார்கள். கர்மகாரகன் சனி பகவான் சந்திரனுடன் சம்பந்தப்படுபவர்களை அவரவர் கர்மவினைக்கு ஏற்ப பக்குவப்படுத்தி ஞான மார்க்கப்பாதையில் கொண்டு விட்டு விடுவார். ஒரு சிலர் இல்லறத்தில் இருந்து கொண்டே பக்தி மார்க்கத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வார்கள். இல்லற வாழ்க்கையில் இருக்கும்போது பலவிதமான எண்ணங்கள் அலைமோதும். முடிவு செய்ய முடியாமல் திணருவார்கள். துறவறத்திற்கு சென்ற பிறகு அவர்கள் முடிவு தீர்க்கமாக இருக்கும். பல்வேறு மகான்கள், அவதார புருஷர்களின் ஜாதகத்தில் இந்த அமைப்பு இருக்கும். உதாரணம் ராமர் ஜாதகம். மகாபாக்கியவான்கள், பூர்வ புண்ணியம் மிகுதியாக இருக்க பிறந்தவர்கள் பற்றற்ற நிலை ஏற்பட்டு வாழ்வில் ஒரு குறிப்பிட்ட நோக்கோடு பயணிப்பார்கள். தனித்தன்மையான கொள்கைப் பிடிப்போடு இருந்து புகழின் உச்சத்தைத் தொட்டுவிடுவார்கள். அதாவது புனர்பூ என்பது இப்பிறவியில் கழிக்க வேண்டிய சஞ்சித கர்மாவாகும். விட்டுப்போன கர்ம வினையை இப்பிறவியிலேயே நடத்திவிடும். ஆசைகளை குறைக்கும்போது புனர் பூ தோஷம் வலிமை இழக்கும். விதிவிலக்காக லக்ன சுபர், குருவின் பார்வை சனி, சந்திரனுக்கு கிடைத்தாலோ சனி, சந்திர தசையோ வராமல் இருந்தால் பாதிப்பு குறைவாக இருக்கும். இந்த அமைப்பு உள்ளவர்களுக்கு எல்லாமே எதிர்பாராத விதமாக கூடிவரும். எதிர்பாராத விதமாக எல்லாமே நடக்கும். கோட்சாரமும் புனர் பூ தோஷமும் கோட்சாரத்தில் திருக்கணித பஞ்சாங்கப்படி 17.1.2023 அன்று மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு மாறும் சனி பகவான் நின்ற இடமான கும்பம் 3ம் பார்வைபடும் மேஷம், 7-ம் பார்வை பதியும் சிம்ம ராசி, 10-ம் பார்வைபடும் விருச்சிக ராசியினருக்கு புனர் பூ தோஷ பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. இவர்கள் தொழில் மற்றும் திருமணம் தொடர்பான விஷயங்களில் விழிப்புடன் இருக்க வேண்டும். பரிகாரம் உளவியல் ரீதியான பரிகாரமாக திட்டமிட்டு காரியத்தை செயல்படுத்த வேண்டும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உப்பு இல்லாமல் சாப்பிட வேண்டும். சுவையான உணவுகளை தவிர்க்க வேண்டும். திருமணம் நிச்சயமான பிறகு ஆண். பெண் இருவரும் 10-வது கிரகமான செல்போனில் குடும்ப விசயங்களை பேசி தங்கள் வாழ்க்கையை கெடுக்க கூடாது. பலரும் பயன்படுத்தி வெற்றி கண்ட சில பரிகாரங்கள். சந்தர்ப்பம் கிடைக்கும்போது புண்ணிய நதிகளில் புனித நீராடல் செய்ய வேண்டும். திருப்பதி வெங்கடாஜலபதி தரிசனம் நல்ல பலன் தரும். பவுர்ணமி நாளில் விரதமிருந்து சத்திய நாராயணர் வழிபாடு செய்ய வேண்டும் வன்னி மர இலைகளை சிவபெருமானுக்கு சனிக்கிழமை தோறும் சாற்றி வணங்கி வழிபடலாம். வன்னிமரத்தை சுற்றி வந்து வணங்க வேண்டும்.

    Previous Next

    نموذج الاتصال