No results found

    கணவன் - மனைவி உறவைவிட உன்னதமான உறவு உண்டா?


    கணவன் - மனைவி என்னும் பந்தத்தைவிட புனிதமான உறவு வேறொன்று இருக்க முடியாது. புனிமானது மட்டுமல்ல; இதயத்திற்கு மிக நெருக்கமானதும், வாழ்வின் இறுதி வரையில் தொடர்ந்திருப்பதும் அந்த உறவுதான். பெற்றோர் பார்த்துச் செய்துவைத்த திருமணமானாலும், காதலித்துச் செய்துகொண்ட திருமணமென்றாலும், கணவன் - மனைவி என்றானபின் இல்லற நியதிகளும் கடமைகளும் ஒன்றுதான். இல்லறம் என்பது குடும்ப வாழ்வின் மூலம் இருவரும் இணைந்து ஆற்ற வேண்டிய அறச்செயல்களுக்கான களம். அறச்செயல்கள் அனைத்திற்கும் அன்பே அடிநாதம். புரிதலுடன்கூடிய தம்பதியரின் நல்லுறவு, ஒழுக்க நெறியில் குழந்தை வளர்ப்பு, பெற்றோர் பராமரிப்பு, உறவு பேணுதல், உதவி புரிதல் ஆகியவையே நல்ல குடும்பத்தின் உட்கூறுகள்.

    குடும்பம் என்னும் ஓர் ஒழுங்கமைவு இல்லாதிருந்த காலத்தில், மனித இனம் எப்படி இருந்திருக்கும். யோசித்துப் பாருங்கள். விலங்குக்கும் தனக்கும் வேறுபாடில்லாத ஒரு வாழ்க்கையைத்தானே அன்று மனிதன் வாழ்ந்திருப்பான். ஆனால், காலம் கனிந்த போது குடும்ப அமைப்பு உருவானது. மனித சமுதாயத்தின் மிகத் தொன்மையான அமைப்பு குடும்பம்தான். அந்த அமைப்பை ஏற்படுத்துவது திருமணம். திருமணம், குடும்பம் ஆகியவை பிற்காலத்தில் வந்த சொல்லாட்சிதான். தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியத்திலும் இச்சொல்லாட்சி இடம்பெற்றதாகத் தெரியவில்லை என்று தமிழ் ஆய்வறிஞர்கள் கூறுகின்றனர். குடிமை, குடி, கூடி என்னும் சொற்களே சங்க இலக்கியத்தில் இடம்பெற்றிருக்கின்றன. ஆனால், குடும்பம் என்னும் சொல் முதன்முதலாய் திருக்குறளில்தான் கையாளப்படுகின்றது.

    '(இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக் குற்றம் மறைப்பான் உடம்பு)' என்கிறது அந்தக் குறள். கூடும் உறவே கூட்டுறவு. கூடி வாழ்தலே குடும்பம். இது ஓர் அற்புதமான அமைப்பு. நல்ல தம்பதியர் நல்ல குடும்பத்தை உருவாக்குகின்றனர். நல்ல குடும்பங்கள் நல்ல சமுதாயத்தை உருவாக்குகின்றன. இல்லற இன்பத்தையும், அதன் மேன்மையையும் உணர்ந்தவர்களுக்கு வாழ்க்கை ஒரு வரமாகத் தெரிகிறது; உணராதவர்களுக்கு குடும்பமே மாபெரும் பாரமாகத் தோன்றுகிறது. உண்மை என்ன? குடும்பம் என்பது பாரமல்ல; அது மகிழ்ச்சியின் ஊற்றுக்கண். இல்லறம் என்பது நிர்ப்பந்தம் அல்ல; அது கீர்த்திமிகு வாழ்வின் உயிர்நாடி. இதைப் புரிந்து கொள்ளாததன் விளைவுதான், பல குடும்பங்களில் பிரச்சினைகள், மனக்கசப்புகள், பிரிவினைகள்.

    திருமண பந்தமே தேவையில்லை என்று, வாழ்வைத் தவறாகப் புரிந்து கொண்டு தவறான வழிகளில் செல்கின்ற இளைஞர்களின் எண்ணிக்கை இன்று பெருகி வருகின்றது. கல்யாணம் பண்ணாமல் 'லிவிங் டுகெதர்' என்னும் கேடுகெட்ட கலாச்சாரம், பலரின் வாழ்வைச் சீரழித்துக் கொண்டிருக்கிறது. உன்னதமான வாழ்க்கை நீரோட்டத்தைச் சாக்கடைக்குள் இழுத்துச் செல்கின்ற கீழ்த்தரமான கலாச்சாரத்திற்கு முடிவு கட்ட வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும்? இல்லறத்தைப் பற்றிய தெளிவான சிந்தனையை இன்றைய இளைய தலைமுறை பெற்றாக வேண்டும். ஒருவருக்காக ஒருவர்; ஒருவரை ஒருவர் தாங்கி அணைக்கின்ற அன்பு; இரண்டறக் கலந்த வாழ்வு என்பதெல்லாம், கணவன் - மனைவி என்னும் உறவிற்கே உரித்தானவை. இல்லறத்தில் இருவரும் இரு கண்கள். ஒரு கண்ணில் வலியிருக்க மற்றொரு கண் தூங்குவதில்லை. ஓருள்ளம் துயருறும் போது இணை உள்ளம் அதைப் பொறுத்துக் கொள்வதில்லை.

    ராமனின் பட்டாபிஷேகத்திற்காக நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. மகனின் முடிசூட்டு விழாவை எண்ணி கௌசலை பூரித்திருக்கிறாள். ஆனால், நாடாள வேண்டியவன் காடாளச் செல்லும் கோலத்துடன் வருகின்றான். அதைக் கண்டு தாய் கவுசலை அதிர்ச்சி அடைகிறாள். விஷயத்தை அறிந்ததும், தானும் இராமனுடன் தண்ட காருண்யத்திற்கு வருவதாகப் பிடிவாதம் செய்கிறாள். தனது தாயை இராமன் சமாதானப்படுத்துகிறான். கணவனுக்குப் பணிவிடை செய்வதுதான் மனைவியின் தர்மம் என்று சொல்கிறான். தாயைத் தேற்றுகிறான். பின்னர் தாயிடம் விடைபெற்றுக் கொண்டு சீதையிடம் வருகிறான். '14 ஆண்டுகள் வனவாசம் புரிந்துவிட்டு வந்துவிடுவேன். அதுவரையில் என் தந்தையையும், அன்னையர் மூவரையும் கண்ணும் கருத்துமாக நீதான் பார்த்துக் கொள்ள வேண்டும்' என்கிறான். சீதை அமைதியாக ராமனைப் பார்த்து, 'தங்களுடைய தாய் கவுசல்யா தேவிக்கு நீங்கள் என்ன சமாதானம் கூறினீர்கள்?' என்று கேட்கிறாள். 'கணவருக்குப் பணிவிடை செய்வதே மனைவியின் கடமை என்று கூறினேன்' என்று பதில் சொல்கிறான் ராமன். சீதை புன்னகைத்தபடி, 'பிரபு, எனக்கும் அதுதானே தர்மம்' என்று சொல்ல, ராமனால் அவளைத் தடுக்க முடியவில்லை. வனவாசத்தில் எதிர்கொள்ளக்கூடிய சிரமங்களை எல்லாம் சொல்லிப்பார்க்கிறான். சீதை இணங்கவில்லை. 'ராமர் இருக்கும் இடமே எனக்கு அயோத்தி' என்று சொல்லி ராமனுடன் வனவாசம் செல்கின்றாள். அதுதான் கணவன் - மனைவி உறவின் ஆத்மார்த்த பிணைப்பு. பிரித்தெடுக்க முடியாத அந்த பிணைப்பு, அன்பின் மிகுதியினால் மேலும் மேலும் வலுப்பெறுகிறது. இன்பத்தை மட்டுமன்றி, துன்பத்தையும் மனம் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கிறது. கணவனுக்குத் தலைவலி. நெற்றியை அழுத்திப் பிடித்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்திருக்கிறான். மனைவி கொஞ்சம் தைலம் எடுத்து வந்து, கணவன் அருகில் அமர்ந்து இதமாக அவன் நெற்றியில் தடவும்போதே தலைவலி பறத்துவிடுகிறது. அவளுடைய விரல்களின் மென்மையான ஸ்பரிசம் அவனுக்கு சுகமாக இருக்கிறது. மனைவிக்கு ஒருநாள் முடியவில்லை. அவள் குளிப்பதற்காக கணவன் வெந்நீர் போட்டு, அதைக் கொண்டுபோய் குளியலறையில் இறக்கி வைக்கிறான். இந்தப் பேரானந்தத்தில் மனைவிக்கு உடற்சோர்வெல்லாம் பட்டென்று நீங்கிவிடுகிறது. ஒருவர் மீது ஒருவர் காட்டுகின்ற பரிவு; ஒருவரை ஒருவர் சார்ந்திருக்கின்ற ஆத்மார்த்தம்; இணைபிரியாமல் கைகோர்த்து நடக்கின்ற இன்பம்...கணவன் மனைவியைத் தவிர வேறு யாருக்கு இவை வாய்த்துவிட முடியும்! வாழ்க்கை எத்தனை அழகானது என்பதைக் குடும்பம்தான் நமக்குக் காட்டுகிறது. இல்லறம் எத்தனை இன்பமானது என்பதைத் தாம்பத்தியம் நமக்கு உணர்த்துகிறது. முதலில் வாழ்வை ரசிக்கின்ற பண்பு வேண்டும். ஏனெனில், ரசனைதான் நம் வாழ்விற்குச் சுவையூட்டுகிறது. கணவனின் விருப்பமறிந்து ஆசை ஆசையாய் மோர்க்குழம்பு சமைக்கிறாள் மனைவி. கணவன் வீட்டிற்கு வந்ததும் ஆவலாய் உணவு பரிமாறுகிறாள். அவன் ரசித்து ரசித்துச் சாப்பிடுவதைப் பார்த்து ஆனந்திக்கிறாள். 'நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே' என அந்தப் பெண்ணின் மகிழ்ச்சியையும் மனநிறைவையும் சொல்லோவியமாய்ப் பதிவு செய்கிறார் கூடலூர்க்கிழார் என்னும் புலவர். இது ஒரு குறுந்தொகைப் பாடல். இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் பாடப்பட்டது. எனினும், இதன் பொருள் இன்றைய கம்ப்யூட்டர் யுகத்திற்கும் நூற்றுக்கு நூறு பொருந்தக்கூடியதே. மேலை நாட்டுப் பத்திரிகை ஒன்று, ஓர் ஆய்வு நடத்தியது. 'ஒரு பெண்ணுக்கு அவளது கணவனின் எந்தப் பேச்சு அதிக மகிழ்ச்சியைக் கொடுக்கும்?' என்பதுதான் கேள்வி. அதற்கான விடையை பல்லாயிரக்கணக்கான வாசகர்களிடமிருந்து திரட்டி வெளியிட்டது. பெரும்பாலான பெண்கள் அளித்திருந்த விடை என்ன தெரியுமா? 'கணவன் தன் சமையலைப் பாராட்டிக் கூறும் வார்த்தைகளில்தான் ஒரு பெண் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறாள்' என்பதுதான். ஏன் பாராட்ட வேண்டும்? பாராட்டு என்பது ஒருவரின் நற்செயலுக்கான அங்கீகாரம். பாராட்டுவது அன்பின் அடையாளம். எனவே, பாராட்டப்படுபவரின் மனம் மகிழ்ச்சி அடைகிறது. தனது வேலையை மேலும் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்ற ஊக்கம் பிறக்கிறது. அதே சமயம், பாராட்டியவரின் மீது அன்பும் மதிப்பும் அதிகரிக்கிறது. குடும்ப வாழ்வில் ஒருவரை ஒருவர் பாராட்டும் போது, வாழ்க்கை தித்திப்பாகும். மனைவியின் சிக்கனம், உடை உடுத்தும் நேர்த்தி, பரிமாறும் அருமை - இப்படி எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. மனசார பாராட்டலாமே! கணவனின் பொறுப்புணர்வு, உழைப்பு, அன்பளிப்பு, செய்யும் சிறு சிறு உதவிகள்...இப்படி பல. மனைவியும் அவ்வப்போது பாராட்டி மகிழ்விக்கலாமே! குடும்பத்தின் மகிழ்ச்சி நம் கையில்தான் இருக்கிறது. இந்த உண்மையைச் சிலர் உணர்வதே இல்லை. அற்ப விஷயங்களுக்கெல்லாம் சண்டை போட்டு வீட்டையே சிலர் போர்க்களமாக்கிவிடுவார்கள். அப்படியே நாளும் பொழுதும் போராடிக் கொண்டிருப்பதில் என்ன மகிழ்ச்சி. தேவையற்ற வாக்குவாதங்களும், விட்டுக்கொடுக்காத பிடிவாதங்களும் வீட்டை நரகமாக்கிவிடும். அன்பான வார்த்தைகளே இல்லத்தை சொர்க்கமாக்கும். கனிவாகப் பேசும் கணவன் மனைவி இடையே சண்டைகள் வருவதில்லை. அவர்களின் வார்த்தைகள் ஒருபோதும் காயப்படுத்துவதில்லை. ஒருவரை ஒருவர் மதிக்கின்ற குடும்பத்தில்தான் சமத்துவம் இருக்கும்; சந்தோஷம் பெருகும். அப்படிப்பட்ட குடும்பங்களில் பிறக்கின்ற பிள்ளைகள் நல்ல பண்புகளுடன் வளர்வார்கள். எனவே கணவனாக இருந்தாலும் சரி, மனைவியாக இருந்தாலும் சரி; இனிமையான வார்த்தைகளையே பேசுங்கள். வெளியிடங்களில் மற்றும் அலுவலகத்தில் எல்லாரிடமும் சிரித்துச் சிரித்துப் பேசிவிட்டு, வீட்டிற்குள் நுழையும் போது முகத்தில் இறுக்கத்தையும் பேச்சில் கடுகடுப்பையும் காட்டாதீர்கள். அது உங்கள் வாழ்விற்கு நீங்களே செய்கின்ற துரோகம். குடும்பம் என்றால் சின்னச் சின்ன பிரச்சினைகள் வரத்தான் செய்யும். அப்போது பதற்றம் அடைய வேண்டாம். இருவரும் அமர்ந்து நிதானமாகப் பேசுங்கள். பிரச்சினைகள் காணாமல் போய்விடும். அதை விட்டு விட்டு, மூன்றாம் நபரிடம் உங்கள் வீட்டுப் பிரச்சினைகளைப் பேசாதீர்கள். உங்களைச் சுற்றி இருப்பவர்கள் தங்கள் காதுகளைத் தீட்டிக்கொண்டு ஆவலாய்க் கேட்பார்கள். உங்கள் குடும்பத்தை இரண்டு துண்டாக்க என்னென்ன யோசனைகள் தர முடியுமோ அதையெல்லாம் தருவார்கள். அப்படிதான் பல குடும்பங்கள் சிக்கிச் சின்னாபின்னமாகி சிதைந்து போகின்றன. எனவே, ஜாக்கிரதையாக இருங்கள். உங்கள் குடும்பத்தை அதிகதிகமாக நேசியுங்கள். அதுதான் மிகப்பெரிய பலம். குடும்பத்தை நேசிக்கின்றவர்களதான் உலகத்தை நேசிக்க முடியும். உலகத்தை நேசிப்பவர்களால் தான் நல்ல உறவுகளை உருவாக்க முடியும். இல்லறத்தை நிலைக்களனாகக் கொண்டு இயங்குவதுதான் உலக வாழ்வு. இங்கு சிறப்போடு வாழ்வதற்குதான் குடும்பம் என்னும் கூட்டுறவு. அதில் தீங்கு நுழையாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது இல்லறத்தாரின் கடமை. 'குடும்ப நண்பர்கள்' என்று கண்டவர்களையும் சேர்த்துக் கொள்ளாதீர்கள். முன்பின் அறியாதவர்களை வீட்டிற்கு வரவழைக்காதீர்கள். பேசுவதை மட்டுமே வைத்து யாரையும் நல்லவர்கள் என்று நம்பிவிடாதீர்கள். அப்படிப்பட்டவர்களால் கணவன் - மனைவி உறவில் விரிசல் ஏற்பட்டு, பல குடும்பங்கள் தரைமட்டமாகிப் போயிருக்கின்றன. உங்கள் குடும்பத்தின் நிம்மதிக்குக் கேடு விளைவிக்கக்கூடிய எந்த விஷயத்தையும் அனுமதிக்காதீர்கள். குடும்ப வாழ்வைக் கொண்டாடுங்கள். தாம்பத்திய சுகத்தை இணைந்து அனுபவியுங்கள். ஒருவருக்கொருவர் உண்மையுள்ளவராய் இருங்கள். உங்கள் இல்லறம் செழிக்கும்; வாழ்வில் இன்பங்கள் தழைக்கும்.

    Previous Next

    نموذج الاتصال