No results found

    புற்றுருவில் அருளும் ஒற்றியூர் ஈசன்


    திருவாரூரில் பிறந்தால், திருவண்ணாமலை என்று சொன்னால், சிதம்பரத்தை தரிசித்தால், காசியில் இறந்தால் முக்தி என்பார்கள் ஆனால் திருவொற்றியூரை நினைத்தாலே முக்தி என்கிறது புராதன தொல்வரலாறு. தொண்டைநாட்டு பாடல் பெற்ற சிவாலயங்களில் முதன்மையாகவும் மூன்றுலகிலும் உள்ளவர்கள் வேண்டுவதையெல்லாம் தரும் தலம் திருவொற்றியூர். திருவடியையும் திருமுடியையும் காணமுடியாத அக்கினிஸ்தம்பமாக விளங்கும் சிவபெருமான் புற்றுருவில் வீற்றிருக்கின்ற திருத்தலம் திருவொற்றியூர். பொய்யும் புரட்டும் வழுவும் தவறும் உலகம் முழுவதும் அதிகரித்தது. அதனை சீரமைக்க வேண்டிய காலம் உருவானது. உலகம் முழுவதும் நெருப்பாலும் காற்றாலும் பகுதி பகுதியாய் அழிந்து போனது. அதுபோக நீரால் ஜலப்பிரளயம் உண்டாகி முற்றிலும் அழித்தது. உலகம் புதியதாக உருவாகத் தொடங்கிய நேரம், ஒரு பகுதி மட்டுமே எஞ்சி நின்றது. கடல் அதனையும் தன்னுள்ளே அடக்கிக் கொள்ளத் துடித்தது. அந்நிலையில் அங்கிருந்த அரன் அதனை " போதும் வந்தது! சற்று ஒத்தியிரு!" எனக்கட்டளையிட கடலும் பின்வாங்கியது. அதனால் அரன் இருந்த அந்த இடம் ஒத்தியூர் என இருந்து ஒற்றியூர் என்பதுடன் மரியாதை முன்னிணைப்பு சேர்ந்து திருவொற்றியூர் என வழங்கத் தொடங்கியது. உலகம் முழுவதும் உற்பத்தியாவதற்கு முன்பே உருவான இடமாதலால் இப்பகுதி ஆதிபுரி எனவும் இவ்வூர் இறைவன் ஆதிபுரீஸ்வரர் எனவும் அழைக்கப்பட்டார்

    பிரளயத்திற்குப் பின்பு பிரும்மனை உற்பத்தி செய்ய, திருப்பாற்கடலில் திருமால் ஆலிலை மேல் அரனை தியானித்துக் கொண்டு யோக நித்திரை செய்தார். அவரது நாபிக்கமலத்திலிருந்து நான்முகன் தோன்றி பலவாறாக வணங்கி போற்றி வழிபட்டார். அவருக்கு காட்சி தருவதற்காக அக்கினி சொரூபமான இறைவன் அவ்வக்கினியின் மத்தியில் சதுர வடிவமாகிய சித்திரப் பலகை வடிவில் வன்னிமரத்தடியில் எழுந்தருளினார். அவ்வாறு தோன்றிய இறைவன் யாராலும் உருவாக்கப்படாத தானே சுயம்புவாய் உருவானதால் தீண்டாத் திருமேனியன் எனப்பட்டார், சுயம்புலிங்கமான ஆதிபுரீசுவரர் தானே புற்றுமண்ணிலே தோன்றியவர். புற்றே ஈசனாய் தீண்டாத் திருமேனியனாய் விளங்குகின்றார் என்பதனால் புற்றிடங்கொண்டார் எனப்பட்டார்.

    பிரளயத்திற்குப்பின் புதியதாக மீண்டும் உலகை அரன் சொற்படி பிரும்மன் படைக்கத் தொடங்கினார். புதியதாக புல் முதல் அனைத்தையும் படைத்தார். ஆதிபுரீஸ்வரரின் அருளால் அகில உலகமும் செழித்து வளரத் தொடங்கியது. தேவர் முனிவர் மக்கள் மாக்கள் அனைவரும் வந்து வணங்கும் வகையில் ஆதிபுரியும் ஆதிபுரீஸ்வரரும் விளஙகத் தொடங்கினர். நந்தி தேவர் திருமால் உரோமச முனிவர் பிரும்மா ஆகியோர் திருவொற்றியூரில் நடனக்காட்சி காண வேண்டுமெனக் கேட்டுக் கொண்டதனால் ஒரு பௌர்ணமி நாளில் திருவொற்றியூரில் நடனம் புரிந்தருளினார். மதுகடைபர்கள் என்னும் அசுரர்கள் வேதங்களைக் கவர்ந்து சென்று ஏடு ஏடாகப்பிரித்து தனித்தனியாக ஒளித்து வைத்தனர். மச்ச உருவில் சென்ற திருமால் அவர்களுடன் போரிட்டு அதனைச் சேர்த்து எடுத்துக் கொண்டு வந்து ஆதிபுரீஸ்வரர் சன்னதியில் வைத்துத் தொழுதார். அதனை வகை பிரித்து வரிசைப்பட அடுக்கி அசுரர்களால் ஏற்பட்ட ஸ்பரிஸ தோஷம் நீக்கி, மீண்டும் பாதுகாத்திட திருமாலிடமே தந்தார்.

    பல சிவத்தலங்களையும் வணங்கி வந்த வான்மீகி முனிவர் ஆதிபுரிக்கு வந்து தொழுது அழிவில்லாத நித்தியத்தைப் பெற்றார், வாசுகி என்னும் பாம்பு அஷ்ட நாகங்களில் ஒன்றாகும். நாகலோகத்தில் நல்லபடியாய் அரசு நடத்திக் கொண்டிருந்தான். சிவன் பால் அதீத பக்தி கொண்டிருந்தவன். வான்மீகி முனிவர் "ஒற்றியூர் கோ" மூலம் நித்தியம் பெற்றதை அறிந்து அவன் மகனுக்கு அரச பட்டத்தைக் கட்டிவிட்டு பூலோகம் அடைந்தான். நந்தனகிரியில் உபமன்னியு முனிவரை சந்தித்து இறைவனை அடையும் வழியை தனக்கு உணர்த்த வேண்டினான். அவனுக்கு தீட்சை தந்து திருவொற்றியூருக்குப் போய் பிரும்ம தீர்த்தத்தில் நீராடி சதுர வடிவமாகிய சித்திரப் பலகை வடிவில் வன்னி மரத்தடியில் எழுந்தருளியுள்ள இறைவனை துதிக்கக் கூறினான்..அவ்வாறே செய்தவன், இறைவன் மகிழ்ந்து இருக்கும் நேரத்தில் உங்களை விட்டு விலகாத தன்மையை எனக்கருள வேண்டுமென வேண்டினான். இறைவன் கட்டளைப்படி திருப்பாலைவனம் சென்று தரிசித்து மீண்டும் ஒற்றியூர் வந்து தரிசனம் செய்து வணங்கி உங்கள் திருவடி சேர்த்து அருள வேண்டுமென வேண்டினான். அந்த வாசுகிப்பாம்பைத் தன் திருக்கரம் கொண்டு பற்றியிழுத்து தம்முடைய திருவடியில் பொருந்தும்படிச் செய்தார்.அதுவும் சிவபெருமானிடத்தில் ஐயக்கியமானது. பாம்புக்கு படம் என்றொரு பெயர் உண்டு. படம் எனப்படும் பாம்பு சிவனின் பக்கத்தில் ஒதுங்கியதால்" படம் பக்க நாதர் " என்ற பெயரும் ஆதிபுரீஸ்வரருக்கு உண்டானது. இன்றும் புற்றுத் திருமேனியிடத்து ஒரு சர்ப்பவாசம் இருக்கும் எனப்படுகிறது.

    வாசுகி, சிவன் பாதம் சேர்ந்த தகவலறிந்த ஆதிசேஷன் தினமும் தன் நந்தவனத்தில் மலர்ந்த மலர்களை பறித்துவந்து புஷ்பாஞ்சலி செய்து அவன் பிறவித்துயரறுக்க வழி வேண்டினான். மறுநாள் காலை வரும்போது தான் சூட்டிய மலர்கள் அகற்றப்பட்டு புதியதாக பூஜை செய்யப்பட்டிருப்பதை அறிந்து மன வருத்தம் அடைந்தான். ஒரு விருச்சிகப் பௌர்ணமி நாள் இரவில் ஒளிந்திருந்து பார்த்தபோது நள்ளிரவில் சந்திரன் வந்து ஏற்கனவே இருந்த மலர்களை அகற்றி பூஜை செய்வதைக் கண்டு அவனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டான். அது சண்டையாக வலுத்து இருவரும் போரிடத்துவங்கினர். அப்போது அக்கினிஸ்தம்பம் போல் இருவர் மத்தியிலும் சிவபெருமான் தோன்றினார். இருவரும் போரிடுதலை விட்டு போற்றித் துதித்தனர். அவர்களின் பக்தியைப் போற்றி அவர்களுக்கும் நித்தியத்துவத்தை அருளினார் இத்தனைச் சிறப்பு வாய்ந்த மூலவர் படம்பக்கநாதரை, புற்று வடிவ சுயம்பு லிங்கத் திருமேனியை திருவொற்றியூரில் 362 நாட்களும் கவசத்துடன் மட்டுமே தரிசிக்க முடியும். வருடத்தில் 3 நாட்களைத் தவிர மற்ற நாட்களில் பெட்டி போன்ற அமைப்பில் கவசம் சாத்தப்பட்டு மூடியே இருக்கும். பாதுகாப்புக்காகவும் புனிதம் வேண்டியும் மேலும் உறுதித்தன்மைக்கும் சந்திரனுக்கும் ஆதிசேஷனுக்கும் இடையில் அக்னிஸ்தம்பமாய் எழுந்து நின்ற விருச்சிக(கார்த்திகை) முழுநிலவு நாளன்று கவசம் திறக்கப்பட்டு பெளர்ணமியன்று மாலையில் இறைவனுக்கு புனுகு மற்றும் சாம்பிராணி தைலத்தால் அபிஷேகம் செய்யப்படும், தொடர்ந்து 3 நாட்களுக்கு இறைவனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். இம்மூன்று நாட்களிலும் பிரம்மா, வாசுகி ஆதிசேஷன் சந்திரன் ஆகியோர் அரூபமாய் வந்திருந்து சிவனை பூசிப்பதாக நம்பப்படுகிறது. திருவொற்றியூர் தலபுராணமும் இவர்கள் வந்து வழிபாடு செய்ததைக் குறிப்பிட்டுள்ளது மூன்றாம் நாள் இரவில் மீண்டும் சுவாமிக்கு கவசம் சார்த்தப்படும். இங்குள்ள லிங்கத் திருமேனி தீண்டா திருமேனியனாக இருப்பதால், இவருக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. சாதாரண நாட்களில் ஆவுடையாருக்கு மட்டும் அபிஷேகம் செய்கின்றனர். இந்த மூன்று நாட்கள் மட்டுமே, சுவாமியின் உண்மை உருவாகிய சிவனின் லிங்க ரூபத்தைக் காண முடியும். மற்ற நாட்களில் காணமுடியாது .இந்த தைலம் சார்த்தும் பூசைச் சடங்கு காலம் காலமாக விடுதலின்றி தொடர்ந்து செய்யப்பட்டு வருகின்றது. இத்திருக்கோவில், கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் அழகுற காட்சியளிக்கிறது. கோபுரத்தின் எதிரே பிரம்மாண்ட திருக்குளம், 'பிரம்ம தீர்த்தம்' அமைந்துள்ளது. ராஜகோபுரத்தினுள் நுழைந்ததும், வலதுபுறம் தெற்கு நோக்கிய வடிவுடையம்மன் சன்னிதி உள்ளது. தொடர்ந்து மகிழமரம், அதன் அருகே விநாயகர், முருகன், குழந்தையீசர் ஆகியோரது சன்னிதிகள் இருக்கின்றன. இடதுபுறம் கொடிமரம், பலிபீடம், அதனருகே நந்திதேவர் அருகே ஜகந்நாதர் சன்னிதி, எதிரே சூரியன், நால்வர், சகஸ்ர லிங்கம், ராமநாதர், அமிர்தகண்டேஸ்வரர் ஆகியோரது சன்னிதிகள் அமைந்துள்ளன. வலச்சுற்றில் 27 நட்சத்திரங்களுக்கும் தனித்தனி சன்னிதிகள், காளி சன்னிதி, ஆகாய லிங்கம், ஜம்புகேஸ்வரர், நாகலிங்கேஸ்வரர், காளத்தீஸ்வரர், மீனாட்சி சுந்தரேஸ்வரர், ஒற்றியூர் ஈசர் கோவில், நந்தவனத்தீசர், நந்தவனம், சொர்ண பைரவர் சன்னிதிகள் இடம்பெற்றுள்ளன. கொடிமரத்தின் மேற்கே மாணிக்க தியாகராஜர் சன்னிதி, மூலவர் சன்னிதி, நடராஜர் சன்னிதி உள்ளன. சப்தவிடங்கத் தலங்களின் கணக்கில் வராத தியாகராஜரான இவர், ஏலேலசிங்கர்ருக்கு மாணிக்கங்கள் கொடுத்து உதவியதால், இவர் மாணிக்க தியாகராஜர் என்று அழைக்கப்படுகிறார். இவருக்கு மார்கழி பவுர்ணமி இரவில் 18 திருநடனம் உண்டு. விழாக்கள் சித்திரையில் வட்டப்பாறை அம்மன் உற்சவம், வைகாசியில் 15 நாள் வசந்த உற்சவம், ஆனித் திருமஞ்சனம், ஆடிப்பூரம், கலிய நாயனார் வீதியுலா, ஆவணியில் விநாயகர் சதுர்த்தி, புரட்டாசியில் நவராத்திரி, ஐப்பசியில் அன்னாபிஷேகம், கந்த சஷ்டி, கார்த்திகையில் தீபம், பவுர்ணமியில் மூலவர் கவசம் திறப்பு, மார்கழியில் ஆருத்ரா, 18 திருநடனம், பங்குனியில் பசுந்தயிர் அபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு விழாக்கள் நடைபெறுகின்றன. கார்த்திகை பௌர்ணமியில் படம் பக்க நாதருக்கு கவசம் நீக்கி தைலம் சார்த்தும் விழா நடைபெறுகிறது. இவ்வாண்டும் திருவொற்றியூர் தியாகராஜசுவாமி திருக்கோவிலில் கருவறைக் கடவுளாக எழுந்தருளியிருக்கும் புற்றிடம் கொண்டாரான படம்பக்கநாதர் ஆகிய ஆதிபுரீஸ்வரர் மீதுள்ள கவசம் டிசம்பர் 07ம் தேதி புதன் அன்று மாலை கவசம் களைந்து 6.00முதல் 7.00 மணிக்குள் புனுகு சாம்பிராணி தைலம் மஹாபிஷேகம் செய்து சார்த்தப்பட்டு பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படும், அதன் பிறகு தியாகராஜசுவாமிவீதி புறப்பாடும் நடைபெறும். 08.12.2022 வியாழக்கிழமை முழுநாளும் 09.12.2017 வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணிவரையும் பக்தர்கள் தரிசனத்திற்காகத் தொடரந்து திருக்கோவில் நடை திறந்திருக்கும்.அதன்பிறகு கவசம் மீண்டும் சார்த்தப்படும். சென்னையின் வடகோடியில் வங்கக் கடலோரம் அமைந்துள்ளது, இந்த திருக்கோவில். சென்னை பாரிமுனையில் இருந்து வடக்கே சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் திருவொற்றியூர் இருக்கிறது. மெட்ரோ ரயில் மற்றும் ஏராளமான பேருந்து வசதிகள் உண்டு. சென்ட்ரலில் இருந்து புறநகர் ரெயில் மூலம் திருவொற்றியூர் வரலாம். ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் சுய உருவில் அருட்காட்சி தரும் ஆதிபுரிசனை தரிசனம் செய்து அருள் பெறுங்கள்.

    Previous Next

    نموذج الاتصال