பெற்றோர்கள், முன்னோர்களினால் எந்த வழிகாட்டலும் உதவியுமின்றி கஷ்டத்தைப் பார்த்து சிறு வயது முதல் சாதிக்க வேண்டும் என்ற வெறியோடு சாதனையாளராக மாறுபவர்களும் இருக்கிறார்கள். நான் முன்னேற எனக்கு யாரும் உதவவில்லை. என் வாழ்க்கை முடிந்துவிட்டது. என் பிள்ளை சமுதாயத்தில் தலை நிமிர்ந்து வாழ வேண்டும் என தன் பிள்ளையை சாதனை மனிதனாக மாற்ற தன் வாழ்வை அற்பணிக்கும் பெற்றோர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதே போல் பெற்றோர்கள் என் வளர்ச்சிக்கு உதவவில்லை. அதனால் அவர்களை பராமரிக்க முடியாது என்று கூறும் குழந்தைகளும் இருக்கிறார்கள். என் பெற்றோர்கள் பருவ வயதில் எந்த நல்லதும் அனுபவிக்க வில்லை. அவர்கள் வாழ்வின் கடைசி காலத்தில் சுக போகங்களை அனுபவிக்க வேண்டும் என்பதை விரும்பும் சந்ததியினரும் இருக்கிறார்கள்.
தந்தை மகன் உறவை மூன்றாக வகைப்படுத்தலாம். 1. தந்தையும் மகனும் ஒருமித்த கருத்துடன் வாழ்வது. இவர்களுடைய ஜாதகத்தில் தர்ம கர்மாதிபதி யோகம் இருக்கும். அல்லது 9ம் இடத்திற்கு லக்ன சுபர் அல்லது குருவின் பார்வை இருக்கும். தர்மகர்மாதிபதியோகம் வரமாக செயல்படும். பரம்பரை பரம்பரையாக தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்ற தாரக மந்திரத்துடன் வாழ்வார்கள். 2. தந்தை மகன் கருத்து வேறுபாடு இருந்தாலும் வெளி காட்டாமல் வாழ்வது. இவர்களுடைய ஜாதகத்திலும் தர்மகர்மாதிபதி யோகம் இருக்கும். இவர்களுக்கு தர்மகர்மாதிபதி யோகம் சாபமாக செயல்படும். குரு, சனி வக்ரமாக இருக்கும் அல்லது பலம் இழந்து இருக்கும் அல்லது குரு அல்லது சனிக்கு செவ்வாய்க்கு சம்பந்தம் இருக்கும்.
3. தந்தை மகன் கருத்து வேறுபாடு குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் மன வருத்தத்தை தரும் விதத்தில் இருப்பது. இதனை தந்தையால் மகனுக்கு பாதிப்பு அல்லது மகனால் தந்தைக்கு மன வேதனை என்றும் வகைப்படுத்தலாம். ஒரு ஜாதகத்தில் தந்தையைக் குறிக்கும் பாவகம் லக்னத்திலிருந்து ஒன்பதாமிடமாகும். தந்தையை குறிக்கக்கூடிய கிரகம் சூரியன். ஒருவனுக்கு தந்தையால் பயனற்ற நிலை ஏற்பட ஜோதிடரீதியான காரணங்கள் 9-ம் அதிபதி, 9-ல் நின்ற கிரகம் வக்ரம், நீசம், அஸ்தமனம் பெற்று இருந்தால் அல்லது 9-ல் சனி, ராகு/கேது இருந்தால் தந்தை மகன் ஒற்றுமை இருக்காது.
9-ம் அதிபதி 6, 8, 12-ல் மறைந்தால் தந்தையால் பயன் அற்றவர். 9-ல் சூரியன் இருந்தாலும் சூரியன் 6, 8, 12-ல் மறைந்தாலும் தந்தையின் ஆதரவு கிட்டாது. 9-ம் அதிபதி 6-ல் இருந்தால் முன்னோர் சொத்தினால் கடன், முன்னோர் சொத்து இழப்பு, எதிரி தொல்லை, புகழுக்கு பங்கம்,முன்னேற்ற குறைவு போன்ற காரணங்களால் தந்தை-மகன் கருத்து வேறுபாடு நிலவும். 9-ம் அதிபதி 8, 12-ல் இருந்தால் அதிர்ஷ்ட குறைவு, விரையச் செலவு, ஏழ்மை, பூர்வீக சொத்து பறி போதல் போன்ற காரணங்களால் தந்தையின் அன்பும் அரவணைப்பும் கிடைக்காது. சூரியனுக்கு சனி,ராகு/ கேது அல்லது மாந்தியால் பாதிப்பு ஏற்பட்டாலும் தந்தையால் பயன் இருக்காது. 9-ம் இடத்தில் சந்திரன் சனி சேர்க்கை அல்லது சந்திரன் சனியின் பார்வை பெற்றால், ஜாதகன் தந்தையால் பலவிதமான துன்பங்களை அனுபவிக்க நேரும். 9-ல் தனித்த சனி, சூரியன் சனி எந்த வகையில் சம்பந்தம் பெற்றாலும் ஜாதகனுக்குத் தன் தந்தையின் பாசம் இருக்காது. மகனால் தந்தைக்கு மன வருத்தம் ஏற்பட ஜோதிட ரீதியான காரணங்கள். 5-ம் இடம் அல்லது 5-ம் அதிபதிக்கு செவ்வாய் + சனி பார்வை சுபமல்ல. 5-ம் அதிபதி, 5-ல் நின்ற கிரகம் நீசம், பகை, அஸ்தமனம், வக்ரம் அடைந்தாலும் 5-ல் ராகு, கேது, சனி போன்ற பாவ கிரகங்கள் இருப்பது வாரிசுகளால் மன வருத்தத்தை ஏற்படுத்தும். 5-ம் இடம், 5-ம் அதிபதிக்கு 6,8,12 போன்ற மறைவு ஸ்தான சம்பந்தம் இருந்தால் பெற்றோர்களை பிரிந்து வாரிசுகள் வெளியூர், வெளிநாடு , வெளிமாநிலத்தில் வாழும் நிலையை ஏற்படுத்தும். ஒரு ஜாதகத்தில் லக்னம் எனும் விதியும், ஐந்தாமிடம் எனும் பூர்வ புண்ணிய ஸ்தானமும், ஒன்பதாமிடம் எனும் பாக்கிய ஸ்தானமும் பலம் பெற்றால் தந்தையால் மகனும் மகனால் தந்தையும் பயன் பெற்று வாழும் பாக்கியம் உண்டு.ஒரு ஜாதகன் தந்தையால் பயன் பெற்றால் அல்லது தந்தை மகனால் பலனடைந்தால் வம்சா வழியாக வாழையடி வாழையாக திரிகோணம் வலிமை பெற்ற குடும்பம் என்பதை உணரலாம்.ஒரு ஜாதகத்தை 1,5,9 என்ற திரிகோணதிபதிகள் இணைந்தே இயக்குவார்கள். திரிகோணத்தில் லக்னம் பலவீனம் அடைந்து 5,9 பலம் பெற்றால் ஜாதகருக்கு சுய சிந்தனை சிறப்பாக இருக்காது. அடுத்தவருடைய கட்டுப்பாட்டில் இயங்குவார். தந்தை, தாத்தாவை நம்பி வாழ்வார்கள். லக்னம் வலிமை பெற்று 5,9 பலவீனமடைந்தால் தந்தையின், குல கவுரவத்தை நிலைநாட்ட முன்னேற்றத்திற்கான பாதையை தேடியே வாழ்க்கை முடிந்துவிடும். ஆக 1,5,9 என்ற திரிகோணாதிபதிகளும் வலிமை பெற்றாலே தந்தைக்கும், மகனுக்கும் புரிதல் ஏற்படும். வாழ்கை சிறப்பாக இருக்கும். 9-ம் அதிபதி 6,8,12-ல் மறையாமல் ஆட்சியோ, உச்சமோ, நட்போ பெற்றிருந்தால் ஜாதகரின் அடிப்படைத் தேவைகள் மட்டும் தந்தையார் மூலம் நிறைவேற்றப்படும். 9-ம் அதிபதி திரிகோண, சூரியன் சம்பந்தம் பெற்றால் வம்சாவளியாக தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என வாழும் குடும்பம். இவர்களும் இவர்களுடைய வம்சாவளியும் குடும்ப கவுரவத்தை கட்டி காப்பார்கள். லக்கினாதிபதியும், ஒன்பதாம் இடத்து அதிபதியும் பரிவர்த்தனை பெற்றிருந்தால் ஜாதகன் எல்லா விதத்திலும் அதிர்ஷ்டம் உள்ளவனாக இருப்பான். 9-ம் அதிபதி 5-ல் இருந்தால் குழந்தைகளால் முன்னேற்றம் . உயிர்கல்வி, தந்தை வழி சொத்தை அனுபவித்தல், அரசு பதவி, குலதெய்வ கடாட்சம், அரசு பதவி, ஆலயங்களை உருவாக்குதல் போன்ற பாக்கியங்கள் கிடைக்கப் பெறும். 9-ம் அதிபதி 9-ல் இருந்தால் அதிகமான அதிர்ஷ்டம், ஒழுக்கம், அழகு, தந்தைக்கு தீர்க்கமான ஆயுள், உடன் பிறப்புகளால் இன்பம், தான தர்மம் செய்யும் பாக்கியம், மங்காத புகழ் கிடைக்கும் . புண்ணிய பலத்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெற்றவர்கள். ஜாதகத்தில் சூரியன் எந்த இடத்தில் இருந்தாலும் - நல்ல நிலையில் இருந்தால், ஜாதகன் தன் தந்தை, மகன் அன்பு சிறக்கும். 9-ல் சூரியன் சுபத் தன்மையோடு இருந்தால் தந்தை, மகன் அன்பாக ஐக்கியமாக இருப்பர் 9-ம் இடமும், 10-ம் இடமும் மிகவும் முக்கிய மானதாகும். ஒன்பதாமிடமான தர்ம ஸ்தானத்திற்கும் பத்தாமிடமான கர்ம ஸ்தானத்திற்கும் சம்பந்தம் அதிகப்படியான வருமானம் பெற்று தந்தையும், மகனும் தர்ம காரியங்கள் செய்து மகிழ்வார்கள். 11-ம் இடத்து அதிபதி ஒன்பதில் அமர்ந்து, பத்தாம் இடத்து அதிபதியின் பார்வை பெற்றாலும், 9-ம் அதிபதி 2-ல் அமர்ந்து, பத்தாம் வீட்டு அதிபதியின் பார்வை பெற்றாலும் ஜாதகனுக்கும் தந்தைக்கும் சென்ற இடமெல்லாம் சிறப்பு. சூரியன்+குரு இணைவு தந்தை உறவு மிக சிறப்பாக இருக்கும். இடையே கிரகம் இல்லாமல் இருக்க வேண்டும். சூரியன் குறைந்த பாகையில் இருந்தால் ஜாதகர் தந்தை மீது அளவு கடந்த அன்பு வைப்பார். அதிக பாகையில் சூரியன் இருந்தால் ஜாதகர் தன் தந்தையை உதாசீனபடுத்திவிடுவார். சுய ஜாதகத்தில் ஒன்பதாமிடம் அசுப பலம் பெற்றால் பாரம்பரியத்தை கடைபிடிக்க தவறுவார்கள். முன்னோர்களின் நல்லாசி குறைவுபடும். தந்தை மற்றும் தந்தை வழி முன்னோர்களுடன் சண்டை சச்சரவு மிகுதியாக இருக்கும். இரண்டு திருமணம் உண்டு. சிலர் குடும்பத்தை விட்டு குறுகிய காலம் பிரிந்து வாழ்வார்கள். ஜனன கால ஜாதகத்தில் எந்த கிரக நிலவரம் எப்படி இருந்தாலும் தந்தை மகன் கருத்து ஒற்றுமை மிக அவசியம். இதற்கு தீர்வு கிடைக்குமா? உண்டா? என்பதே பலரின் ஆதங்கம். உளவியல் ரீதியாக எந்த பிரச்சினைக்கும் தீர்வு அவரவர் கையில் தான் இருக்கிறது. ஒருவருடைய உணர்வை புரிந்து கொள்ளாமை, சிறிய பிரச்சினையை பெரிது படுத்துவது , சகிப்பு தன்மை இன்மையும், கருத்து வேறுபாட்டிற்கு பிரதானமான காரணமாக திகழ்கிறது. ஆனால் தாய், தந்தை, முன்னோர்கள், உடன் பிறந்தவர்கள், நமக்கு பிறக்கும் குழந்தைகள், உற்றார் உறவினர்களை தேர்வு செய்யும் உரிமையை பிரபஞ்சம் யாருக்கும் வழங்கவில்லை. எத்தனை கோவிலுக்கு சென்று பரிகாரம் செய்தாலும் இந்த பூர்வ ஜென்ம பந்த ரத்த உறவுகளை உதறித் தள்ள முடியாது, உறவுகளே வேண்டாம் என்று ஒதுங்கி நின்றாலும் நம்முன்னோர்கள் தாய், தந்தை வழியாக நமக்குள் புகுந்த மரபணுக்களே நம்மை இயக்கும். எனவே வாழும் காலத்தில் அனுசரித்து வாழ்வதே அனைவருக்கும் நல்லது. பரிகாரம் வாரிசுகளால் மன உளைச்சலை சந்திப்பவர்கள் பிரதோசத்தன்று சிவனுக்கு மஞ்சள் அபிஷேகம் செய்யவும். தந்தையுடன் கருத்து வேறுபாடு இருப்பவர்கள் சனிக்கிழமை தோறும் ஸ்ரீ மத் ராமாயணத்தில் சுந்தர காண்டம் பாராயணம் செய்து வர வேண்டும். தந்தை-மகன் ஒற்றுமையை அதிகரிக்க கும்பகோணத்துக்கு அருகில் உள்ள சுவாமிமலை சென்று வர நல்ல மாற்றம் தெரியும்.