* நரம்புகளின் செயல்பாட்டிற்கு அவசியமானது. இப்படி பல நன்மைகளைக் கூறலாம். சரி இதன் குறைபாடு காட்டும் அறிகுறிகள் என்ன? * கவனிக்கும் திறன், மறதி, மூளையில் கூர்மைத் திறன் குறைவு இருக்கலாம். * சாதாரண தலைவலி முதல் ஒற்றை தலைவலி வரை அடிக்கடி ஏற்படலாம். தசைகள் பிடிப்பின்றி, இறுக்கமின்றி எளிதாய் அசைவுகள் கொடுக்க மக்னீசியம் அவசியமாகின்றது. கால்ஷியம் நரம்பு செல்களில் சீராய் இருக்க மக்னீசியம் சத்து அவசியமாகும். கால்ஷியம் நரம்பு செல்களில் குறையும் பொழுது உடலில் குறுகுறுப்பு, மரத்து போகுதல் போன்றவை ஏற்படுகின்றது. * தசைகளில் வலி, பிடிப்பு போன்றவை பல காரணங்களால் ஏற்படலாம். பொதுவில் பொட்டாசியம் குறைபாடு முக்கிய காரணமாக கூறப்படுகின்றது. ஆனால் மக்னீசியம் குறைபாடு காட்டும் ஒரு அறிகுறி தூக்கத்தில் ஏற்படும் தசை பிடிப்பாகும். இது கால், பாதம், கண் இமைகள் இவற்றில் ஏற்படும்.
* மக்னீசியம் குறைபாடு இருந்தால் அதிக சோர்வும், சக்தியின்மையும் உணரப்படும். * எலும்பு உறுதி என்றாலே எல்லோரும் 'கால்ஷியம்' சத்து அவசியம் என்பர். இது சரிதான். ஆனால் மக்னீசியம் இல்லாமல் கால்ஷியம் வேலை செய்ய முடியாது. மக்னீ சியம் உறுதியான எலும்புகளுக்கு மட்டுமல்ல உறுதியான தசைகளுக்கும் இன்றியமையாதது. * சர்க்கரை நோயாளிகள் மதிய சோர்வு, அட்ரினல் சோர்வு- (உடல் வலி, சோர்வு, படபடப்பு, சரிவர தூக்கம் இன்மை, ஜீரண கோளாறு) மற்றும் சக்தியின்மை இவை இருப்பின் மக்னீசியம் குறைபாடு இருக்கின்றதா? என்பதனை பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.
* மக்னீசியம் குறைபாடு உயர் ரத்த அழுத்தம், ஸ்ட்ரெஸ் இவற்றினை ஏற்படுத்தலாம். * இருதய தசைகள் சீராய் சுருங்கி விரிய பொட்டாசியம். கால்ஷியம் சத்து அவசியம். இதன் செயல்பாட்டிற்கு மக்னீசியம் சத்து மிக அவசியம். இருதய துடிப்பு குறைந்தோ, கூடியோ அல்லது ஏதாவது மாற்றம் இருப்பின் மருத்துவர் மக்னீசிய அளவினை பரிசோதனை செய்வார். * அவ்வப்போது அதிக ஸ்ட்ரெஸ் காரணமாக இரவில் தூக்கமின்மை ஏற்படலாம். ஆனால் இது தொடர்ந்து இருந்தால் மக்னீசிய குறைபாடு உள்ளதா? எனவும் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். * மலச்சிக்கல் பாதிப்பு இருக்கலாம்.
* மனச் சோர்வு, படபடப்பு இருக்கலாம். சத்து குறைந்த உணவு, குடல் பிரச்சினை, அதிக சர்க்கரை, காய்கறிகள் தேவையான அளவு எடுத்துக் கொள்ளாது இருப்பது, அதிக மது போன்றவை மக்னீசியம் குறைபாடு ஏற்பட காரணங்கள் ஆகும். * பாதாம், முந்திரி, அத்திப்பழம், பூசணி விதை, தயிர், கொத்தமல்லி, வாழைப்பழம், கீரை, பப்பாயா, கொய்யா போன்றவைகள் மக்னீசியம் சத்து நிறைந்தவை ஆகும். தேவைப்படின் மருத்துவர் சத்து மாத்திரைகளையும் பரிந்துரைப்பார். ஆக சிறு குறைபாடுகளாக பசியின்மை, வயிற்றுப் பிரட்டல், வாந்தி, அதிக சோர்வு, உடலில் ஊசி குத்துவது போன்ற உணர்வு, தசை துடிப்பு இப்படி சில அறிகுறிகளும், மேற் கூறப்பட்ட அறிகுறிகளும் தோன்றும் போது மக்னீசியம் குறைபாடாகவும் இருக்கக் கூடும் என்பதனை உணர்ந்து மருத்துவர் ஆலோசனை பெற வேண்டும். (அடுத்து நாம் கால்ஷியம் தாது சத்தினைப் பற்றி பார்ப்போம்) 99 சதவீதம் நமது உடலின் கால்ஷியம் சத்து எலும்பில்தான் உள்ளது. மேலும் தசை செல்களிலும், ரத்தத்திலும் உள்ளது கால்ஷியம் எனும் சுண்ணாம்பு சத்து. * எலும்பு, பற்கள் உருவாக, தசைகள் இயங்க, என்சைம் செயல்பாடு, ரத்த உறைவு, சீரான இருதய துடிப்பு இவற்றுக்கு அவசியம் ஆகின்றது. நமது உடல் தசைகளிலும், ரத்தத்திலும் சீராய் இருக்கச் செய்கின்றது. உடலுக்கு கால்ஷியம் தேவைப்படும் போது எலும்பில் இருந்து கால்ஷியம் சத்தினை எடுத்துக் கொள்கின்றது. ஆனால் நாம் தேவையான அளவு கால்ஷியம் சத்தினை உட்கொள்ளாத போது அதிக அளவு கால்ஷியம் எலும்புகளில் இருந்து செல்வதால் எலும்புகள் வலுவிழக்கின்றன. பாரா தைராய்டு சுரப்பிகளில் பிரச்சினை இருந்தாலும், உணவில் குறைபாடு இருந்தாலும், சிறு நீரகம் சரிவர செயல்படா விட்டாலும், சில வகை மருந்துகளாலும் கால்சியம் குறைபாடு ஏற்படுகின்றது. இதன் வெளிப்பாடாக தசைகளில் பிடிப்பு, மனச்சோர்வு, மறதி, பாதம், விரல்கள், உதடுகளில் குறுகுறுத்த தன்மை, தசைகளில் இறுக்கம், வலி போன்றவை ஏற்படும். * ரத்த பரிசோதனை மூலம் கால்ஷியம் குறைபாட்டினை அறிய முடியும். * கால்ஷியம் மற்றும் வைட்டமின் டி சத்து மாத்திரைகள் மூலம் இதனை சரி செய்ய முடியும். (இதனை அடுத்து பொட்டாசியம் தாது சத்தினை பற்றி பார்ப்போம்) பொட்டாசியம் சத்து உயர் ரத்த அழுத்தம் குறைவதற்கும் உடலில் நீர் சத்து இருப்பதற்கும், பக்கவாதம் ஏற்படாமல் தடுப்பதற்கும், எலும்பு தேய்மானத்தினை வெகுவாய் குறைப்பதற்கும், சிறுநீரகத்தில் கற்கள் ஏற்படாமல் பாதுகாக்கவும் உதவுகின்றது. நமது உடலில் அதிகமாக இருக்கும் தாது சத்துகளில் பொட்டாசியமும் ஒன்று. நமது திசுக்களில் மொத்த பொட்டாசியத்தில் 98 சதவீதம் சத்து உள்ளது. * நரம்பு மண்டலம், தசைகளின் இயக்கம், இருதய துடிப்பு இவற்றிற்கு பொட்டாசியம் சத்து மிக அவசியமாகின்றது. நம் உணவின் மூலம் எளிதில் பொட்டாசியம் சத்தினை நாம் பெற முடியும். தக்காளி, பீட்ரூட், சேனை, உருளை, சர்க்கரை வள்ளி, வாழைப்பழம், பட்டானி, பசலை, மீன் இவற்றின் மூலம் பொட்டாசியம் சத்தினை பெறலாம். இதன் மிக அதிகமான குறைபாடு தசைகள் பலவீனம், தசை பிடிப்பு, தசை துடித்தல், பக்கவாதம், முறையற்ற இருதய துடிப்பு, சோர்வு மரத்து போகுதல் போன்றவைகளை ஏற்படுத்தலாம். பொட்டாசியம் குறைபாடு உடனடியாக கவனிக்கப்பட வேண்டிய ஒன்று ஆகும். இது கூடுதலாக ரத்தத்தில் இருந்தாலும் ஆபத்தானதே. அதிக பொட்டாசியம் இருந்தால் மூச்சு வாங்குதல், படபடப்பு, நெஞ்சுவலி, வயிற்றுப் பிரட்டல், வாந்தி போன்றவை ஏற்படும். இது உடனடியாக அவசர சிகிச்சை தேவைப்படும் ஒன்று. பொதுவில் வருடம் ஒருமுறை உடல் பரிசோதனையினை செய்து கொள்ளும் பொழுது பல பிரச்சினைகளை தவிர்த்து விடலாம். தானே சத்து மாத்திரைகளை எடுத்துக் கொள்வதும் சரியல்ல என்பதனை உணர வேண்டும். (வைட்டமின் - பி பிரிவு வகையினை பற்றி பார்ப்போம். இந்த பி குழுவில் சுமார் 8 வகை வைட்டமின்கள் உள்ளன. அவை ஒன்றாகவும் தனித் தனியாகவும் பல முக்கிய செயல்களை உடலுக்குள் ஆற்றுகின்றன.) தயமின் - பி1, ரிபோக்கப்ளேவின்-பி2, நியாசின்-பி3 பேன்டதினிக் ஆசிட்-பி5, பிரிடாக்ஸின்-பி6, பயோடின் பி-7, ப்போலேட்-பி9, கோபாலமின்-பி12 இவை அனைத்தும் சேர்ந்ததுதான் பி காம்ப்ளெக்ஸ் ஆகும். பி1-கல்லீரல், இருதயம், சிறுநீரகம், மூளை இவற்றில் நிறைந்து இருக்கும். உணவில் கார்போஹைடிரேட்டினை உடைத்து சக்தி உருவாக்கும். கொழுப்பு அமிலங்கள் கொடுக்கும். சில ஹார்மோன்கள் உருவாக உதவும். முழு தானிய உணவு, விதைகள், கொட்டைகள், பீன்ஸ் குறிப்பாக சோயாவில் இருந்து பெற முடியும். அதிக மது அருந்துபவர்கள், வயதானவர்கள், சர்க்கரை நோயாளிகள், இருதய பாதிப்பு உடை யோர், எய்ட்ஸ் பாதிப்பு உடையவர்களுக்கு இது முழுமையாய் கிடைப்பதில்லை. * பசியின்மை, எடை குறைதல், இருதய பாதிப்பு, தசைகள் உறுதி இழத்தல், மரத்து போகுதல், குழப்பம், இவை இதன் குறைபாடு கை, கால் அறிகுறிகளாக இருக்கும். இங்கு கூறப்படும் அனைத்தும் உடல் நலன் பற்றி அறிவதற்காக மட்டுமே. மனம் போனபடி எந்த வைட்டமின் மாத்திரைகளையும் எடுத்துக் கொள்ளக்கூடாது. மருத்துவர் ஆலோசனையும், பரிந்துரையும் மிக அவசியம். * பி2 சக்தியானது ஓட்ஸ், பால், தயிர், பாதாம், காளான் இவற்றில் எளிதாய் கிடைக்கும். * பி2 குறைபாடாக சரும பாதிப்பு, வாய் ஓரத்தில் புண், வாய், தொண்டையில் வீக்கம், முடி கொட்டுதல், சிவந்த அரிக்கும் கண்கள் போன்ற அறிகுறிகள் இருக்கும். மிக அதிகமான குறைபாடு ரத்தசோகை, கண்புரை போன்ற பாதிப்புகளையும் ஏற்படுத்தும். பி2 -400 வகை என்சைம் செயல்பாடுகளுக்கு அடிப்படையானது. இதன் விளக்கம் மிகவும் மருத்துவரீதியாக இருக்கும் என்பதால் இதன் முக்கியத்துவத்தினை கோடிட்டு காட்டியுள்ளோம். கொட்டை வகைகள், பருப்பு வகைகள், தானிய வகைகள், மீன், அசைவம் இவற்றில் எளிதில் கிடைப்பது. * இதன் குறைபாடு சூரிய ஒளியில் நிறமாற்றம் * சருமம் மென்மை இன்றி இருத்தல் * சிவந்த நாக்கு * வாந்தி, வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், * சோர்வு * மனச்சோர்வு இவற்றினை ஏற்படுத்தும். இது பெலக்ரா என்று குறிப்பிடப்படுகின்றது. சிகிச்சை பெறாவிட்டால் அதிக மறதி, வாழ்வில் விரக்தி, பசியின்மை போன்றவை ஏற்படும் என்பதால் கவனம் தேவை. * பி5-சூரியகாந்தி விதை, சிக்கன், அசைவ உணவு, மீன் இவற்றில் கிடைப்பது ஆகும். இதன் குறைபாடாக கை, கால்கள் மரத்து போகுதல், தலைவலி, எரிச்சல், பொறுமையின்மை, குறைவான தூக்கம், பசியின்மை ஆகியவை இருக்கும். * பி6-மூளை வளர்ச்சிக்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும் பெரிதும் உதவுகின்றது. அசைவம், மூக்கு கடலை, மீன், உருளை போன்றவற்றில் எளிதில் கிடைத்து விடும். * ரத்த சோகை, *உதட்டில் வெடிப்பு * வாயை ஓரத்தில் வெடிப்பு * வீங்கிய நாக்கு * மனச்சோர்வு இவை பி6 வைட்டமின் குறைபாட்டால் வெளிப்படும் அறிகுறிகள். இன்னமும் சில மருத்துவ ரீதியான காரணங்கள் உள்ளன. வைட்டமின் சக்தியின் முக்கியத்துவத்தினை உணர்த்துவதற்காக சில குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. *பி7-சருமம், முடி, நகம் இவற்றிற்கு உதவுவதாக சில செய்வுகள் குறிப்பிடுகின்றன. *அசைவம், முட்டை, சூரியகாந்தி விதை, மீன் இவற்றில் பி7 உள்ளது. இதன் குறைபாடாக முடி மெலிதல், கண், மூக்கு, வாயை சுற்றி அலர்ஜி போன்ற பாதிப்பு, உடையும் நகம், சோர்வு இவை காணப்படும். கர்ப்பிணி பெண்கள், பால் கொடுக்கும் தாய்மார்கள், இவர்களும் இந்த குறைபாட்டினை தவிர்க்க வேண்டும். *பி9- குழந்தை பெறும் காலத்தில் இருக்கும் பெண்கள், கர்ப்ப காலத்தில் இருக்கும் பெண்களும் இதனை சத்து மாத்திரையாக மருத்துவர் பரிந்துரைப்பார். இது பிறக்கும் குழந்தைக்கு மிகவும் பாதுகாப்பானது. அடர்ந்த கீரை வகைகள், பப்பாளி, முட்டை, பீன்ஸ், கொட்டை வகைகள் இவற்றில் பி9 சத்துகிடைக்கும். இதன் குறைபாட்டால் சோர்வு, வீக்கம், முடி, நக பாதிப்புகளும் இருக்கும். * பி12-சிகப்பு ரத்த அணுக்கள் உருவாக, மூளை, நரம்பு மண்டல செயல்பாடு, புரதம், கொழுப்பு இவற்றின் வளர்சிதை மாற்றம் இவற்றிக்கு உதவுவது ஆகும். அசைவ உணவுகளில் எளிதில் பெறக்கூடியது. பால், தயிர் இவற்றிலும் பெறலாம். சோர்வு, எடை குறைவு, மலச்சிக்கல், பசியின்மை, மறதி, மனச் சோர்வு, கை, கால்கள் மரத்து போகுதல் ஆகியவை இதன் குறைபாட்டின் அறிகுறிகளாக இருக்கும். சைவ உணவு உட்கொள்பவர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் இவர்களுக்கு தேவைக்கேற்ப சத்து மாத்திரையினை மருத்துவர் அளிப்பார். இப்படி தாது உப்புகள், வைட்டமின்கள், குறிப்பாக வைட்டமின் பி பிரிவு வைட்டமின்கள் இவற்றின் அவசியத்தினைப் பார்த்தோம். உடனடி கவனிப்பும், மருத்துவர் கண்காணிப்பில் சத்து மாத்திரைகளை எடுத்துக் கொள்வதன் மூலம் எளிதில் பல நன்மைகளைப் பெறலாம் என்பதனையும் அறிந்து செயல்படுவோம்.