No results found

    சென்னை சித்தர்கள்: ஸ்ரீ மவுனகுரு சுவாமிகள்- பாலவாக்கம் (பெரியபாளையம்)


    ஒரு சித்தர் நினைத்தால் உங்களை ஒரே நாளில் வாழ்வின் உச்சத்துக்கு கொண்டு சென்று விட முடியும். சித்தர்களுக்கு அந்த ஆற்றல் உண்டு. இதற்கு சென்னை வாழ் சித்தர்கள் அனைவருமே சாட்சியங்களாக திகழ்ந்துக் கொண்டு இருக்கிறார்கள். இவர்களில் சற்று தனித்துவம் கொண்டவராக திகழ்ந்தவர் ஸ்ரீ மவுன குரு சுவாமிகள். சென்னை பெரியபாளையம் அருகே உள்ள பாலவாக்கம் என்ற ஊரில் ஸ்ரீ மவுன குரு சுவாமிகளின் ஜீவ சமாதி அமைந்துள்ளது. இவர் செய்த அற்புதங்கள் ஏராளம். அவை இன்றும் பொன்னேரி, மீஞ்சூர், சென்னை, பெரியபாளையம் பகுதிகளில் சிறப்பாக பேசப்பட்டு வருகிறது.

    இவரது பூர்வீகம் ஈரோடு மாவட்டம் பவானி வட்டத்தில் உள்ள பாப்பாங்காடூர் என்ற கிராமம் ஆகும். அப்பச்சி கவுண்டர், மசிரியம்மாள் தம்பதிக்கு மகனாக பிறந்தார். இவருக்கு காளியண்ணன் என்று பெயரிட்டனர். காளியண்ணன் சிறு வயதில் இருந்தே தெய்வ பக்தியில் மிகச்சிறந்து விளங்கினார். அதிகம் கல்வி கற்காத இவரை பசுக்களை மேய்க்கும் வேலையில் ஈடுபடுத்தினார்கள். பசுக்களை கோமாதாவாக போற்றி பராமரித்த காளியண்ணன் அவற்றின் மீது மிகுந்த அன்பு காட்டினார். பசுக்களோடு அவர் பேசுவதை வழக்கத்தில் வைத்திருந்தார். பசுக்களும் இவர் சொல்வதை பாசத்தோடு நின்று கேட்கும். உற்றார்-உறவினர்களிடம் அதிகம் பேசாத காளியண்ணன் பசு மாடுகளுடன் அதிகம் பேசுவதை கண்டு கிராமமே அதிசயிக்கும்.

    வயது ஆக ஆக அவரிடம் சில மாற்றங்களும் ஏற்பட்டன. எப்போதும் மவுனமாகவே அவர் காட்சியளிக்க தொடங்கினார். சில சமயம் வானத்தை நோக்கி பார்த்துக் கொண்டே இருப்பார். சில சமயம் வெட்ட வெளியில் நின்று சிந்தனை செய்தபடி இருப்பார். மனநலம் பாதித்து விட்டதோ என்று அனைவரும் சந்தேகப்படும் அளவுக்கு அவரது செயல்கள் இருந்தன. ஆனால் அவர் உண்மையில் அந்த சிறு வயதிலேயே சித்தராக மாறி இருந்தார் என்பது யாருக்கும் புரியவில்லை. மகனுக்கு திருமணம் செய்து வைத்து விட்டால் நல்ல நிலைக்கு வந்து விடுவான் என்று காளியண்ணனின் பெற்றோர் நினைத்தனர். எனவே மாராயான் என்ற பெண்ணை அவருக்கு திருமணம் செய்து வைத்தனர். விருப்பம் இல்லாமல் அவர் இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டார். ஒரு மகன், ஒரு மகள் பிறந்த பிறகு அவருக்கு இல்லற வாழ்க்கை முழுமையாக வெறுத்தது.

    சம்சார பந்தத்தில் இருந்து விலகி ஓட அவரது மனம் துடித்துக் கொண்டே இருந்தது. ஒருநாள் பசுக்களை மேய விட்டுவிட்டு இதுபற்றியே சிந்தித்த அவர் அப்படியே அருகே உள்ள ஒரு ஆலயத்தில் தியானத்தில் மூழ்கி விட்டார். அப்போது அவரது காதில் "சிதம்பரத்துக்கு செல்" என்று அசரிரீ ஒலித்தது. இதை கேட்டதும் அடுத்த வினாடியே அங்கிருந்து புறப்பட்டு விட்டார். பசுக்கள், உற்றார்-உறவினர்கள் அனைவரையும் உதறி தள்ளி விட்டு சிதம்பரத்துக்கு சென்று சேர்ந்தார். சிதம்பரம் நடராஜர் ஆலயத்தின் உள்ளே இருக்கும் புனித குளத்தில் இறங்கி நீராடினார். அவரது வாய் சிவநாமங்களை உச்சரித்துக் கொண்டே இருந்தது. நீராடி விட்டு வெளியே வந்த போது அவர் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்தது போல உணர்ந்தார். வலி தாங்க முடியாமல் கதறி துடித்தார். நடராஜரை நோக்கி அழுதார்.

    அப்போது அவரது காதில் மீண்டும், "ஆடையில்லாமல் வெளியே செல்" என்று அசரிரீ ஒலித்தது. இதனால் இடுப்பில் கட்டி இருந்த துண்டை அவிழ்த்து வீசினார். மறுநிமிடம் அவரது உடலில் ஜோதி பிரகாசித்தது போன்று ஒளி தோன்றியது. தன்னிலை மறந்து அவர் ஆழ்ந்த இன்பத்துக்குள் மூழ்கினார். எனவே இனி ஆடையில்லாமல் அவதூதராக மாறுவது என்று முடிவு செய்தார். நிர்வாண நிலையில் அவர் முற்றும் துறந்த உயர்ந்த நிலைக்கு சென்று இருந்தார். அன்றே அவர் வாய் திறந்து பேசுவதையும் நிறுத்தினார். அவரது கண்கள் பிரகாசமாக மாறியது. அவரது பார்வை தீட்சை தரும் வல்லமைக்கும் மேம்பட்டது. இந்த கோலத்தில் அவர் சிதம்பரத்தில் இருந்து ஒவ்வொரு ஊராக நடக்க தொடங்கினார். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரரை பார்த்து விட்டு அப்படியே சென்னையை நோக்கி நகர்ந்தார். இதற்கிடையே அவரது பெற்றோர், மனைவி மற்றும் குடும்பத்தினர் அவரை கண்டுபிடித்து தங்களோடு ஊருக்கு வந்து விடும்படி கெஞ்சி கேட்டனர். ஆனால் எதையும் ஏற்றுக் கொள்ளாத காளியண்ணன் தொடர்ந்து அவதூதராக நடந்து கொண்டே இருந்தார். அதன் பிறகுதான் அவர் மிக உயர்ந்த சித்தர் நிலைக்கு சென்று விட்டதை அவர் குடும்பத்தினர் புரிந்துக் கொண்டனர். அதன் பிறகு அவரை யாரும் தொந்தரவு செய்யவில்லை. ஊர் ஊராக நடந்த காளியண்ணன் யாரிடமும் பேசாததால் மவுன சுவாமியாக மாறி இருந்தார். அதுவே அவரது பெயராகவும் மாறிப் போனது. இந்த நிலையில் அவர் சென்னைக்கு வந்து சேர்ந்தார். சென்னையில் சைதாப்பேட்டை, மயிலாப்பூர் மற்றும் வடசென்னை பல பகுதிகளிலும் அவர் சுற்றி திரிந்தார். நிர்வாண கோலமாக அவரை பார்த்தவர்கள் அவரை பைத்தியம் என்றே நினைத்தனர். சில இடங்களில் அவர் மீது கல்வீசி தாக்கினார்கள். சென்னையில் உள்ள போலீஸ்காரர் ஒருவர்தான் இவர் பைத்தியம் அல்ல. சித்தர் என்பதை கண்டு கொண்டார். மவுன சுவாமிகளிடம் மிகவும் பணிவாக, "இந்த ஊரில் நீங்கள் இப்படி இருந்தால் பிரச்சினைதான். ஒரு கோவணத்தை மட்டுமாவது அணிந்து கொள்ளுங்கள்" என்று வலியுறுத்தினார். இதை ஏற்று கோவணத்துடன் சென்னை புறநகர் பகுதிகளில் சுற்றி திரிந்தார். ஒரு கால கட்டத்தில் சென்னையில் இருந்து வெளியேறினார். பொன்னேரிக்கும், மீஞ்சூருக்கும் இடையே எலியம்பேடு என்ற கிராமம் அருகே இருந்த அடர்ந்த காட்டுக்குள் சென்றார். அங்கே புதர்கள் நிறைந்த ஒரு பகுதியில் போய் உட்கார்ந்து விட்டார். அங்கே அவர் கண்களை மூடி தியானத்தை மேற்கொண்டார். பல வாரங்கள் உணவு, தண்ணீர் எதுவும் இல்லாமல் தியானத்திலேயே அவர் இருந்தார். இது அந்த பகுதி மக்களுக்கு மிகுந்த ஆச்சரியத்தை கொடுத்தது. அவரை தட்டி எழுப்பி விசாரிக்க சிலர் முடிவு செய்தனர். அவர் அருகில் சென்றபோதுதான் அவரை சுற்றி ஏராளமான நல்ல பாம்புகள் படுத்திருப்பது தெரிந்தது. அந்த பாம்புகள் வேறு யாரும் மவுன சுவாமிகள் அருகே வராதபடி காவலுக்கு இருந்தது தெரிந்தது. இதனால் எலியம்பேடு கிராம மக்களின் ஆச்சரியம் மேலும் அதிகரித்தது. இந்த நிலையில் பெரியபாளையம் அருகே உள்ள ஈன்றபாளையம் என்ற ஊரைச் சேர்ந்த முனுசாமி என்பவர் தனது சகோதரியைப் பார்ப்பதற்காக எலியம்பேடு கிராமத்துக்கு வந்தார். எலியம்பேடு காட்டில் சித்தர் தியானத்தில் மூழ்கி கிடக்கும் தகவல் அவருக்கு தெரிய வந்தது. அங்கு சென்ற அவர் மவுன சுவாமிகளை பார்த்த அடுத்த வினாடியே அவரிடம் மனதை பறிகொடுத்தார். சித்தரை நோக்கி நெடுஞ்சான்கிடையாக விழுந்து வணங்கினார். இதை தனது ஞான திருஷ்டியால் உணர்ந்த மவுன சுவாமிகள் கண் விழித்து பார்த்தார். என்ன என்பது போல் கேட்டார். உடனே முனுசாமி, "நீங்கள் மிகப்பெரிய மகான். உங்களுக்கு சேவை செய்ய நான் மிகவும் ஆசைப்படுகிறேன். என்னுடைய ஊர் ஈன்றபாளையம். அங்கு என்னோடு நீங்கள் வாருங்கள். உங்களை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்" என்றார். இதை கேட்டதும் மவுன சுவாமிகள் சற்று யோசித்தார். பிறகு பாம்புகளை பார்த்து இங்கிருந்து செல்லுங்கள். நான் விடை பெறுகிறேன் என்றார். அடுத்த வினாடி அந்த பாம்புகள் அனைத்தும் அகன்றன. மவுன சுவாமிகள் தியானத்தை கலைத்து முனுசாமியுடன் புறப்பட்டு ஈன்றபாளையம் வந்தார். ஈன்றபாளையத்தில் அவரை முனுசாமியும், அவரது குடும்பத்தினரும் நன்கு கவனித்துக் கொண்டனர். பல ஆண்டுகள் அந்த ஊரிலேயே தங்கி இருந்தார். அங்குள்ள ஆலமரத்தடியில்தான் பெரும்பாலும் இருப்பார். நிர்வாணமாக அலைந்த அவர் எப்போதாவது கோவணம் கட்டிக் கொள்வார். அந்த நிலையில் அவர் பெரியபாளையம், ஆரணி, பாலவாக்கம், ஊத்துக்கோட்டை, தண்டலம் என்று சுற்றிக் கொண்டே இருப்பார். ஆனால் தங்குவதற்கு பாலவாக்கம் வந்து விடுவார். இவரது முகத்தில் எப்போதும் தெய்வீக சிரிப்பு இருந்து கொண்டே இருந்தது. ஒரு நாளும் குளித்தது இல்லை. என்றாலும் அவர் உடலில் இருந்து திருநீறு மனம் வீசிக்கொண்டே இருக்கும். ஒரு தெருவுக்குள் வந்து விட்டாலே அந்த திருநீறு வாசம் அந்த தெருவில் உள்ள அனைவருக்கும் சித்தர் வருகிறார் என்பதை உணர்த்தி விடும். அவருக்கு உணவு கொடுக்க பெரும்பாலானவர்கள் போட்டி போடுவார்கள். ஆனால் அவர் யாரிடமும் உணவு கேட்டது கிடையாது. மனதிற்கு பட்டால்மட்டுமே யாரிடாமாவது உணவு சாப்பிட சம்மதிப்பார். பிடிக்கவில்லை என்றால் வேண்டாம் என்று சைகையில் சொல்லி விட்டு சிரித்துக் கொண்டே சென்று விடுவார். உணவு சாப்பிடும் போது ஒரு தடவைதான் அவருக்கு உணவு பரிமாற வேண்டும். அதை மூன்றாக பிரிப்பார். ஒன்றை வாயில்லா ஜீவன்களுக்கு கொடுப்பார். மற்றொரு பாகத்தை அருகில் உள்ள குழந்தைகளுக்கு கொடுப்பார். மூன்றாவது பாகத்தில் ஒரு கையளவு மட்டுமே எடுத்து சாப்பிடுவார். அவ்வளவுதான் சாப்பாடு. அவரது மகிமையை உணர்ந்தவர்கள் அவரிடம் தங்களது பிரச்சினைகளை சொல்லி தீர்வு கேட்பார்கள். பல்பம், சிலேடு கொடுப்பார்கள். அதில் மவுன சுவாமிகள் தீர்வை எழுதி காட்டுவார். அவர் என்ன எழுதுகிறாரோ அப்படியே நடக்கும். இதனால் அவர் போகும் கிராமங்களில் எல்லாம் தெருக்களில் ஆங்காங்கே பல்பம், சிலேடு தயாராக இருக்கும். அவற்றின் மூலம் நூற்றுக்கணக்கானவர்களின் வாழ்வில் மவுன சுவாமிகள் அற்புதங்கள் செய்துள்ளார். இன்றும் அவர்கள் மிக உயர்ந்த நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். 20 ஆண்டுகளாக குழந்தைகள் இல்லாத ஒரு தம்பதிக்கு இரட்டை குழந்தைகள் பிறக்கும் என்று எழுதி காட்டினார். அதுபோலவே 2 ஆண் குழந்தைகள் பிறந்தன. ஒருநாள் பாலவாக்கம் தர்மா ரெட்டியின் மகள் ரத்தினம்மாள் என்பவரது வீட்டு முன்பு இருந்த சிலேட்டில் இன்று மாலை விளக்கு ஏற்றும் வேளையில் என் ஆத்மா பிரிந்து விடும் என்று எழுதி இருந்தார். அவர் சொன்னது போல அன்று மாலை அதாவது 1981-ம் ஆண்டு மே மாதம் 24-ந்தேதி அவர் மாலை 6 மணிக்கு பரிபூரணம் அடைந்தார். அவர் ஆன்மா பரமபதம் அடைந்தது. அவரது சீடர்கள் அவரால் மேம்பட்டவர்கள் பஜனை கீர்த்தனைகள் பாடி சரண கோஷங்கள் முழங்க மவுன சுவாமிகளை சித்தர்களுக்கு உரிய முறையில் ஜீவ சமாதி செய்தனர். பாலவாக்கம் பஜார் வீதியில் இந்த ஜீவ சமாதி அமைந்துள்ளது. மவுன சுவாமிகளை தனது 15-வது வயது முதல் பார்த்து வணங்கி பலன் பெற்ற கருணாகரன் என்பவர் இந்த ஜீவ சமாதியை பராமரித்து வருகிறார். கண்டக்டராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற இவர் சிரத்தையுடன் பூஜைகளை மேற்கொள்கிறார். இந்த ஜீவ சமாதிக்குள் சீரடி சாய்பாபா, காஞ்சி மகாபெரியவா சிலைகளும் உள்ளன. தினமும் பூஜைகள் நடத்தப்படுகிறது. வியாழக்கிழமை அன்னதானம் செய்கிறார்கள். பொதுவாக ஒருசித்தர் ஐக்கியமானால் 30 ஆண்டுகள் கழித்து தன்னை வெளிப்படுத்துவார்கள் என்பார்கள். மவுன சுவாமிகளும் அப்படி தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருப்பதாக கருணாகரன் தெரிவித்தார். இவரை 94445 73687 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு மவுன சுவாமிகள் பற்றிய கூடுதல் தகவல்களை பெறலாம்.

    Previous Next

    نموذج الاتصال