அதேபோன்று சிங்கபெருமாள் கோவில் அருகே உள்ள திருக்கச்சூர் மலை பகுதியும் சித்தர்களின் ஆட்சி பீடமாக இருந்தது. திருக்கச்சூர் அருகே உள்ள ஆப்பூர் மலை என்ற பகுதியும் சித்தர்கள் நிறைந்த பகுதியாக திகழ்ந்தது. இந்த ஆப்பூர் மலைக்கு மிகச்சிறந்த வரலாற்று பின்புலம் இருக்கிறது.
திரேதாயுகத்தில் ராமருக்கு ஏற்பட்ட மயக்கத்தை தீர்ப்பதற்காக ஆஞ்சநேயர் வடக்கே இருந்த சஞ்சீவி மலையை பெயர்த்து எடுத்துக்கொண்டு தென்னகத்துக்கு வந்ததாக வரலாறு உண்டு. அப்படி அவர் ஆகாய மார்க்கமாக வந்தபோது அந்த மலையில் இருந்து ஒரு சிறு பகுதி கீழே விழுந்தது. அது தான் ஆப்பூர் மலை என்று சொல்கிறார்கள். இந்த சிறிய மலையை ஒளஷத குன்றம் என்றும் சொல்வார்கள்.
இந்த மலையில் மிக மிக அபூர்வமான அரிய மூலிகைகள் ஏராளமாக உள்ளன. இந்த மலை உச்சியில் நித்திய கல்யாண பிரசன்ன வெங்கடேசபெருமாள் ஆலயம் உள்ளது. இத்தலத்து பெருமாள் மார்பில் தாயார் வாசம் செய்வதால் இந்த பெருமாளுக்கு வஸ்திரமாக புடவைதான் அணிவிக்கப்படுகிறது. இவரை வணங்கினால் திருமணத்தடை நீங்கும் என்பது ஐதீகமாகும்.
இத்தகைய சிறப்புடைய இந்த மலையில் அகத்தியர் உள்பட ஏராளமான சித்தர்கள் தவமிருந்து ஆற்றல் பெற்றிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சிங்கபெருமாள் கோவிலில் இருந்து ஒரகடம் செல்லும் சாலையில் சுமார் 6 கி.மீட்டர் தொலைவில் ஆப்பூர் மலை உள்ளது. திரும்பிய திசை எல்லாம் பச்சைபசேல் என அந்த பகுதியே ரம்மியமாக காட்சி அளிக்கிறது. மூலிகைகள் நிறைந்த வனம் என்பதாலோ என்னவோ சித்தர்கள் அதிகளவு இங்கு வந்து தவம் செய்து சக்தி பெற்றிருக்கிறார்கள். நூற்றுக்கணக்கான சித்தர்கள் இந்த மலையில் தவம் இருந்துவிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று மக்களுக்கு நோய் தீர்க்கும் பணிகளை செய்துள்ளனர். இதனால் ஆப்பூர் மலை பகுதியை ஜீவ பூமி என்று சொல்கிறார்கள்.
இத்தகைய சிறப்புடைய இந்த ஜீவ பூமியில் சமீபகாலத்தில் ஓம் நாத சுவாமிகள் என்ற மகான் வாழ்ந்து ஆயிரக் கணக்கான அன்பர்களுக்கு வழிகாட்டி உள்ளார். இவர் வாசி யோகத்தில் மிகச்சிறந்த பயிற்சி பெற்றவர். சிவானந்த பரமஹம்சரிடம் மூச்சு பயிற்சி பெற்று அவரது முதன்மை சீடர்களில் ஒருவராக இவர் திகழ்ந்தவர்.
ஓம்நாத சுவாமிகளின் பூர்வீகம் வேலூர். எளிய குடும்பத்தில் பிறந்த இவர் இளம் வயது வரை மற்றவர்களை போல சாதாரண வாழ்க்கைதான் வாழ்ந்து வந்தார். கல்வி கற்க ஆர்வமில்லாத இவருக்கு ஆன்மீகத்தில் மிகப்பெரிய அளவில் நாட்டம் உருவானது.
வேலூரில் உறவினர் வைத்திருந்த நகைக்கடையில் குமாஸ்தாவாக சில ஆண்டுகள் பணிபுரிந்தார். அதன்பிறகு ஆன்மீக வாழ்க்கை அவரை முழுமையாக ஆட்கொண்டு விட்டது. திருமணம் செய்துகொள்ளாத அவர் குடும்பம், உற்றார் உறவினர், வேலை அனைத்தையும் உதறித்தள்ளிவிட்டு வேலூரை விட்டு வெளியேறினார்.
ஒவ்வொரு ஊர் ஊராக சென்று ஆலய வழிபாடு செய்தார். நீண்ட தியானம் அவரை பக்குவப்படுத்தியது. சிவானந்தர் மூலம் வாசியோக கலையை கற்றுக் கொண்டார்.
நாம் விடும் மூச்சுக்காற்றை முறைப்படுத்தினால் மிக ஆனந்தமாக வாழ முடியும் என்பதை இவர் தன்னை நாடி வந்த ஒவ்வொருவருக்கும் உணர்த்தினார். மூக்கின் இடது பக்கம் வழியாக செல்லும் மூச்சுக்காற்றுக்கு சந்திரகலை என்றும் வலது பக்கம் செல்லும் சுவாசத்திற்கு சூரியகலை என்றும் பெயர்.
சூரியன் என்றால் வெப்பம், சந்திரன் என்றால் குளிர்ச்சி. மூச்சுக்காற்று தத்துவம் மூலம் உடலுக்கு தேவையான வெப்பத்தையும், குளிர்ச்சியையும் ஒருவரால் பெறமுடியும். சிவ வழிபாடுடன் இந்த மூச்சுப்பயிற்சி மிகுந்த தொடர்புடையது. இந்த மூச்சுப்பயிற்சியை வாசி என்று சொல்வார்கள். வாசி வாசி என்று சொல்லிக்கொண்டே இருந்தால் அது சிவா சிவா என்று தான் வரும்.
இந்த தத்துவத்தை தன்னை பின்தொடர்ந்த அனைவருக்கும் ஓம் நாத சுவாமிகள் சொல்லிக்கொடுத்தார். கேரளா மற்றும் வடமாநிலங்களில் சுற்றி அலைந்து அருள்பெற்ற ஓம் நாத சுவாமிகள் சில இடங்களில் மட்டும் பல நாட்கள் தங்கி தவம் இருப்பதை வழக்கத்தில் வைத்திருந்தார். செய்யாறு அருகே உள்ள திருவத்திபுரத்தில் இருக்கும் வேதபுரீஸ்வரர் கோவில் அருகே ஓடும் ஆற்றாங்கரை ஓரத்தில் அனகாபுத்தூர் என்ற கிராமம் உள்ளது. அந்த கிராமத்தில் ஆசிரமம் அமைத்து சுமார் 20 ஆண்டுகள் மக்களுக்கு தேவையான பணிகளையும், ஆன்மீக பணிகளையும் ஓம் நாத சுவாமிகள் செய்து வந்தார்.
சித்தன் போக்கு சிவன் போக்கு என்பது போல திடீரென ஒருநாள் அனகாபுத்தூர் கிராமத்தில் இருந்து வெளியேறினார். மீண்டும் கோவில் கோவிலாக அலைந்த அவர் ஆப்பூர் மலை பகுதிக்கு வந்ததும் மிகுந்த மன அமைதி கொண்டார். இதனால் அங்கேயே நிரந்தரமாக தங்கிவிட அவரது மனம் முடிவு செய்தது.
ஆப்பூர் மலையில் உள்ள அரிய வகை மூலிகைகள் அவரை மிகவும் கவர்ந்தன. எனவே அந்த மூலிகைகளை பறித்து வந்து ஆப்பூர் மற்றும் சுற்றுப் பகுதி கிராம மக்களுக்கு சித்த வைத்தியம் செய்யத்தொடங்கினார். அவருக்கு மணவாள நாயுடு, சீனிவாச நாயுடு மிகவும் உதவியாக இருந்தனர். ஓம் நாத சுவாமிகள் தங்கி இருப்பதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தனர்.
அங்கிருந்து ஆன்மீக பணிகளை செய்து வந்த ஓம் நாத சுவாமிகள் தன்னை தேடி வருபவர்களுக்கு தியானத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தினார். குறிப்பாக வாசி யோகம் செய்யும்படி ஒவ்வொருவரையும் வலியுறுத்தினார். அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தீட்சையும் அளித்தார். அந்த வகையில் சுமார் 2 ஆயிரம் பேர் அவரிடம் தீட்சை பெற்றுள்ளனர்.
வாசியோகத்தின் தந்தையாக கருதப்படும் சிவானந்த பரமஹம்சரிடம் நேரடி பயிற்சி பெற்றிருந்த ஓம் நாத சுவாமிகள் தன் குருவின் வழிகளை அப்படியே கடைபிடித்தார். சிவானந்த பரமஹம்சர் சித்த சமாஜத்தை நிறுவி ஞான உபதேசம் கொடுத்தார். அதே பாணியில் ஓம் நாத சுவாமிகளும் ஆப்பூரில் ஜெகஜோதி சித்த சமாஜத்தை உருவாக்கினார். அதன் மூலம் அவர் செய்த அருட்சேவை ஏராளம்.
சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தடவை ஓம் நாத சுவாமிகள் ஆந்திராவில் கோதாவரி ஆற்றங்கரை ஓரத்தில் நடந்த ஒரு தியான நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார். அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் ஒரு மணி நேரம் அல்லது 2 மணிநேரம் தியானத்தில் இருந்துவிட்டு இயல்பு நிலைக்கு திரும்பினார்கள்.
ஆனால் ஓம் நாத சுவாமிகள் மேற்கொண்ட தியானம் ஆழ்நிலை தியானமாக மாறியது. அவர் ஆடாமல் அசையாமல் ஒரே இடத்தில் அப்படியே தியானத்தில் மூழ்கிவிட்டார். சுமார் 9 மணிநேரம் அவர் தியானத்தில் இருந்தார்.
அந்த தியானம் அவருக்குள் ஒரு ஒளிநிலையை உருவாக்கியது. ஏற்கனவே ஆத்மஞானம் பெற்றிருந்த அவர் ஒளிநிலை மூலம் கூடுதல் யோக ஞானத்துக்குள் நுழைந்தார். இதை கண்டு அங்கிருந்தவர்கள் ஆச்சரியம் அடைந்தனர். அன்றுமுதல் ஓம் நாத சுவாமிகளின் கருணை மேலும் அதிகரித்தது.
அவரை தேடி வந்தவர்கள் அவரை ஆப்பூர் சுவாமிகள் என்று புகழ்ந்தனர். நடிகர் சூர்யா இவரை பற்றி கேள்விப்பட்டதும் ஆப்பூருக்கு நேரில் சென்று சந்தித்து பேசி ஆசி பெற்றார்.
வாசி யோகத்தை மிக எளிதாக எல்லோராலும் கற்றுக்கொள்ள இயலாது. உரிய குரு அமைய வேண்டும். அந்த குரு மூலம் சரியான பயிற்சி கிடைக்க வேண்டும். குரு காட்டும் வழிகாட்டுதல்களை சீடர்கள் சிரத்தையாக கடை பிடிக்க வேண்டும். அப்படி கடைபிடித்தால் தான் வாசி யோகத்தில் முழுமையான உயர்ந்த நிலைக்கு செல்ல முடியும்.
வாசி யோகத்தில் மிக உயர்ந்த நிலைக்கு சென்றுவிட்டால் அச்சம், ஆணவம், ஆத்திரம், அகம்பாவம், அத்துமீறல், அட்டூழியம் போன்ற தீய எண்ணங்கள் வரவே வராது. யாரிடமும் கோபம் ஏற்படாது. அத்தகைய நிலைக்கு ஓம் நாத சுவாமிகள் பலரையும் உயரச்செய்து இருக்கிறார்.
அதுமட்டுமின்றி ஏழை-எளிய மக்களுக்கு ஜாதி, மத வேறுபாடு இல்லாமல் இலவசமாக மருந்து கொடுக்கும் உண்மையான சேவையை செய்ய வேண்டும் என்று வழிகாட்டியுள்ளார். இதுதான் இன்றும் ஓம் நாத சுவாமிகள் பற்றிய சிறப்பை சொல்லிக்கொண்டே இருக்கின்றது. ஓம் நாத சுவாமிகள் 8 ஆண்டுகளுக்கு முன்பு பரிபூரணம் அடைந்தார். அவரை ஆப்பூரில் அவர் வாழ்ந்த பகுதியிலேயே ஜீவசமாதி செய்துள்ளனர்.
சமீபத்தில் அந்த ஜீவசமாதியில் 8-வது ஆண்டு குருபூஜை ஆராதனை நடத்தப்பட்டது. ஒவ்வொரு மாதமும் ஞாயிற்றுக்கிழமை தோறும் ஓம் நாத சுவாமிகள் ஜீவ சமாதியில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. அன்று காலை கஞ்சி வழங்குவார்கள். பவுர்ணமி தோறும் சிறப்பு ஆரத்தி எடுக்கப்பட்டு மதியம் அன்னதானம் செய்யப்படுகிறது.
ஓம்நாத சுவாமிகளிடம் சீடராக இருந்த சீனிவாசன் தற்போது இந்த ஜீவ சமாதியை சிறப்பாக பராமரித்து வருகிறார். அவரிடம் 9444662132 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு ஓம் நாத சுவாமிகள் பற்றிய கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.