No results found

    சென்னை சித்தர்கள்: மலையாள சுவாமி-நந்திவரம் (கூடுவாஞ்சேரி)


    ஞானத்தை எளிதில் பெற்றுவிடலாம். ஆனால் ஆத்ம ஞானத்தை பெறுவது என்பது சற்று சவாலான விஷயமாகும். முதலில் ஆத்மாவை உணர வேண்டும். ஆத்மாவின் பயணத்தை புரிந்துகொள்ள வேண்டும். அதில் மனதை முழுமையாக ஈடுபடுத்த வேண்டும். அதில் மேம்பாடு பெற்றால் தான் ஆத்ம ஞானத்தின் முதல் படியில் காலடி எடுத்து வைக்க முடியும். ஆனால் சித்தர்களை தவறாமல் வழிபட்டால் மிக எளிதாக ஆத்ம ஞானத்தை எட்டிபிடிக்க முடியும். ஆத்ம ஞான சிந்தனை யார் ஒருவருக்கு மேலோங்கி இருக்கிறதோ, அவர்களை சித்தர்களே அழைத்து தரிசனம் கொடுத்து விடுவார்கள். இது ஏராளமானோர் வாழ்வில் நடந்த, நடந்துவரும் நிதர்சனமான உண்மை ஆகும்.

    சித்தர்களை தேடி செல்லச்செல்ல தான் ஆத்ம ஞானத்தில் விழிப்புணர்வு வரும். ஒரு கட்டத்தில் சித்தர்களை ஞான குருவாக ஏற்றுக்கொண்டு இந்த பிறவியை நிறைவு செய்ய வேண்டும் என்ற மன உறுதி பிறக்கும். ஞான குருவாக இருப்பதால் தான் சித்தர்கள் மிக உயர்ந்த நிலையில் வைத்து போற்றப்படுகிறார்கள். அத்தகைய சித்தர்களில் ஒருவர் ஞான குரு சுவாமிகள் என்றே அழைக்கப்பட்டார். அப்படியானால் அவர் எந்த அளவுக்கு மிக மிக உயர்ந்த நிலையில் இருந்திருப்பார் என்பதை புரிந்துகொள்ளலாம். சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இந்த சித்தர் வாழ்ந்தார்.

    ஒரு கால கட்டத்துக்கு பிறகு இவர் கூடுவாஞ்சேரி நந்திவரம் பகுதியில் குடியேறினார். யாரிடமும் எதுவும் பேசமாட்டார். இதனால் ஆரம்ப காலங்களில் இவரை யாருமே கண்டுகொள்ளவில்லை. நந்திவரம் சிவன் கோவில் அருகே அந்த காலகட்டத்தில் மிகப் பெரிய அன்னச்சத்திரம் ஒன்று கட்டப்பட்டு இருந்தது. அந்த அன்னச்சத்திரத்தை நாடி தினமும் ஏராளமான சாதுக்கள் வருவதுண்டு. ஞான குரு சுவாமிகளையும் அப்படி வந்தவர்களில் ஒருவர் தான் என்று முதலில் பெரும்பாலானவர்கள் நினைத்தனர். ஆனால் அந்த அன்னச் சத்திரத்தில் ஞான குரு சுவாமிகள் நிரந்தரமாக தங்கினார்.

    ஆனால் ஒரு தடவை கூட அவர் யாரிடமும் எந்த ஒரு யாசகமும் கேட்டதே கிடையாது. யாரிடமும் பேசவும் மாட்டார். எப்போதும் மவுனம்... மவுனம்... மவுனம் என்றே இருந்து கொண்டிருந்தார். இதனால் அவரை பற்றிய தகவல்கள் எதையும் யாராலும் தெரிந்துகொள்ள முடியவில்லை. நாளடைவில் இவர் மிகப்பெரிய மகான் என்பதை நந்திவரம் பகுதி மக்கள் புரிந்து கொண்டனர். அவரது தோற்றம் மிக மிக ஒல்லியான தோற்றமாக இருந்தது. ஆனால் பார்வையில் தீட்சண்யம் காணப்பட்டது. இதனால் ஞானத்தை தேடி அலைந்தவர்கள் அவரிடம் சரணடைந்தனர். நந்திவரத்தை விட்டு வெளியே எங்கும் செல்லாத அவர் மதியம் ஒருநேரம் மட்டும் சாப்பிடுவதை வழக்கத்தில் வைத்திருந்தார். அதுவும் அறுசுவை உணவு சாப்பிடமாட்டார். அகத்திக்கீரையை மட்டும் வதக்கி எடுத்து சாப்பிடுவார். அந்த அகத்திக்கீரையை அவரே கடைகளுக்கு சென்று வாங்கிவருவார்.

    சரியாக மதியம் 12 மணிக்கு அகத்திக்கீரையை சுத்தம் செய்து வதக்குவார். அதில் ஒரு கைப்பிடி எடுத்து சாப்பிடுவார். அதுதான் அவருக்கு உணவு. இதைப் பார்த்து நந்திவரம் பகுதி மக்கள் ஆச்சரியம் அடைந்தனர். மூலிகைகளை பயன்படுத்தும் வித்தையையும் அவர் அறிந்து இருந்தார். இதனால் நந்திவரம் பகுதி மக்களுக்கு அவர் மீது தனி மரியாதை உருவாகி இருந்தது. சுமார் 12 ஆண்டுகள் இப்படி உருண்டோடியது. அவரது சிறப்பை உணர்ந்த மக்கள் அவரிடம் தங்களை ஆசீர்வதிக்கும் படியும், நோய் தீர்க்கும் மருந்துகள் தரும்படியும் கேட்டனர். முதலில் ஞானகுரு சுவாமிகள் அதில் ஆர்வம் காட்டவில்லை. ஆனால் ஒரு கட்டத்துக்கு பிறகு தன்னை நாடி வரும் மக்களின் கவலைகளை போக்க உதவி செய்ய வேண்டும் என்று முடிவு செய்தார். இதனால் ஞானகுரு சுவாமிகள் பல ஆண்டுகளாக கடைபிடித்து வந்த மவுனத்தை உடைத்தார். மக்களிடம் பேசத்தொடங்கினார். மக்கள் சொல்லும் பிரச்சினைகளை காது கொடுத்து கேட்டார். அவர்களுக்கு தேவையான அறிவுரைகளை வழங்கினார். தன்னை நாடிவரும் மக்களில் யார் யார் செல்வத்தை விரும்புகிறார்கள். யார் யார் ஆன்மீகத்தை விரும்புகிறார்கள் என்று அவரால் மிக எளிதாக எடைபோட முடிந்தது. ஆன்மீகத்தில் ஈடுபாடு உள்ளவர்களை தனியாக பிரித்துக்கொண்டார். அவர்களுக்கு மட்டும் அதிக கருத்துக்களை வெளியிட்டார். சில பக்தர்களிடம், 'நான் யார் என்று நீங்கள் கேட்டுப்பாருங்கள். உங்களுக்கு விரைவில் ஒரு விடை கிடைக்கும்' என்று அறிவுறுத்தினார். குறிப்பாக இந்த உலகத்துக்கு என்னை அனுப்பியது யார்? எதற்கு அனுப்பினார்? எப்படி அனுப்பினார்? எங்கிருந்து அனுப்பினார்? ஏன் அனுப்பினார்? அடுத்து எங்கு அனுப்புவார்? என்பன போன்ற கேள்விகளை எல்லாம் தினமும் கேட்க வைத்தார். இப்படி இந்த கேள்விகளை தனக்குத்தானே கேட்டுக்கொண்ட ஒவ்வொருவரும் மிகப் பெரிய ஆத்ம ஞானத்தை மிக எளிதாக பெற்றனர். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் பிரபஞ்ச ரகசியத்தை ஞானகுரு சுவாமிகள் மிக மிக எளிதாக தேட வைத்தார். அவர் மூலம் சித்தபுருஷராக பலரும் மாறி இருக்கிறார்கள். தான் 12 ஆண்டுகள் தனித்து இருந்து தவம் செய்தது போல, 12 ஆண்டுகள் மவுனமாக இருந்தது போல பலரையும் தனித்திருக்க வைத்தார். இந்த தவ வாழ்க்கை பலரையும் மேம்படுத்தியது. அந்த சமயங்களில் எல்லாம் ஞானகுரு சுவாமிகள் மிக மிக சரளமாக பேசுவார். சித்தர்கள் பெரும்பாலும் பரிபாசையில் தான் பேசுவார்கள். ஞானகுரு சுவாமிகளும் நிறைய பரிபாசையில் பேசினார். ஆனால் பிரச்சினை என்று வருபவர்களிடம் மிக சாதாரண மொழிகளில் புரியும்படி பேசுவார். அப்போது அவரது பேச்சில் மலையாளம் அதிகமாக காணப்படும். இதன்மூலம் ஞானகுரு சுவாமிகள் கேரளாவை சேர்ந்தவராக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. கேரளா மாநிலத்தில் அவர் எங்கு பிறந்தார்? எங்கு வளர்ந்தார்? எப்படி சென்னைக்கு வந்தார்? எந்த ஆண்டு சென்னைக்கு வந்தார்? என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது. அவரிடம் விடாபிடியாக கேட்ட போதும் அவர் தன்னை பற்றிய பூர்வீக தகவல்களை வெளிப் படுத்திக்கொள்ளவில்லை. மலையாளத்தில் ஏதாவது சொல்லி விரட்டிவிடுவார். மலையாளம் மொழியை சரளமாக பேசியதால் அவரை மலையாள சுவாமிகள் என்று பலரும் அழைக்கத் தொடங்கினார்கள். இதனால் ஞானகுரு சுவாமிகள் என்ற பெயர் மறைந்து மலையாள சுவாமிகள் என்ற பெயர் நிலைத்து போனது. முதலில் உடல்நோய் தீர்ப்பதற்காக மலையாள சுவாமிகளை நாடிவந்த மக்கள் பிறகு மனநிலையையும் அமைதிகொள்ளச் செய்ய தேடி வந்தனர். அவரை நேரில் பார்த்தாலே போதும் தோஷங்கள் விலகிவிடும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் உருவானது. இதனால் தினமும் நூற்றுக்கணக்கானோர் மலையாள சுவாமிகளை தேடி நந்திவரம் வந்தனர். அவர்கள் அனைவருக்கும் மூலிகைகளை கொடுத்து மலையாள சுவாமிகள் ஆசீர்வாதம் செய்வதுண்டு. சிலருக்கு மட்டும் விபூதி, மிளகு கொடுப்பார். அவர்கள் உயர்ந்த நிலைக்கு சென்றனர். சித்தர்களுக்குரிய அனைத்து ஆற்றல்களும் மலையாள சுவாமிகளிடம் நிரம்ப இருந்தது. ஆனால் அதை அவர் விளம்பரத்துக்காக ஒருபோதும் பயன்படுத்தியதே இல்லை. ஏராளமானோர் அவரிடம் மிகப்பெரிய நிலம் வாங்கித்தருவதாக ஆசை வார்த்தை காட்டினார்கள். லட்சக்கணக்கில் பணம் தருவதாக சொன்னார்கள். ஆசிரமம் அமைத்து தருவதாக கூறினார்கள். ஆனால் யாருடைய ஆசை வார்த்தைக்கும் மலையாள சுவாமிகள் மயங்க வில்லை. இறை தொண்டு மட்டுமே பிரதானமானது என்பதை குறிக்கோளாக கொண்டு சுவாமிகள் வாழ்ந்தார். அவரிடம் இருந்தது இரண்டே இரண்டு காவி உடைகள் தான். ஒரு கைத்தடி வைத்திருப்பார். யாசகம் எடுத்து சாப்பிட ஒரு திருவோடும் வைத்திருந்தார். இவை தான் அவரது சொத்து. ஆனால் லட்சக்கணக்கில் பணம் தருகிறோம் என்று சொன்னவர்களை பார்த்து சுவாமிகள் சிரித்தார். அந்த பணத்தை கொண்டு ஏழை-எளியோருக்கு அன்னதானம் செய்யுங்கள் என்று வலியுறுத்தினார். சில பணக்காரர்களை குறிப்பிட்ட இடங்களுக்கு அழைத்து சென்று தானங்கள் செய்ய வைத்தார். மிகப்பெரிய பணக்காரர்களை கண்டால் ஆலயங்களை புனரமைக்க உதவும்படி கேட்டுக் கொண்டார். அவரது இந்த வழிகாட்டுதல்களால் பல பழமையான ஆலயங்கள் சீரடைந்து உள்ளன. தற்போது நந்திவரத்தில் உள்ள சிவாலயமும் அவரது கைங்கரியத்தால் மேன்மைபெற்றதாகும். 1912-ம் ஆண்டு 68 ஏக்கர் நிலத்தை அந்த ஆலயத்துக்காக மலையாள சுவாமிகள் பெற்றுக்கொடுத்ததாக சொல்கிறார்கள். அந்த ஆலயத்தில் அவர் பூஜைகள் செய்ததாகவும் குறிப்புகள் உள்ளன. அந்த ஆலயத்தின் எதிரே உள்ள குளத்தில் மலையாள சுவாமிகள் பலதடவை சித்தாடல் செய்ததாக சொல்கிறார்கள். அந்த குளத்து தண்ணீர் மீது அவர் அமர்ந்து அற்புதம் செய்ததாக செவிவழி செய்திகள் உள்ளன. ஆனால் இதற்கு ஆதாரங்கள் எதுவும் இல்லை. என்றாலும் தன்னை நாடி வருபவர்களை பக்குவப்படுத்திய மிகப்பெரிய சிறப்பு மலையாள சுவாமிகளுக்கு உண்டு. அவரால் வாழ்க்கையில் எத்தனையோபேர் உயர்ந்த நிலைக்கு சென்றுள்ளனர். இன்றும் அவர்களது வாரிசுகள் நந்திவரத்துக்கு வந்து மலையாள சுவாமிகளை வழிபட்டு செல்கிறார்கள். 1937-ம் ஆண்டு ஜூலை மாதம் 17-ந்தேதி மலையாள சுவாமிகள் ஜீவ சமாதி அடைந்தார். நந்திவரத்தில் அவருக்கு சிவாலயம் அருகே அருளாலயம் உள்ளது. அங்கு இப்போதும் அதிர்வுகள் இருப்பதை சித்தர் ஆய்வாளர்கள் உணர்ந்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் விசாகம் நட்சத்திர தினத்தன்று சுவாமிக்கு குருபூஜை நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு அவருக்கு 85-வது ஆண்டு மகா குருபூஜை நடத்தப்படுகிறது. மலையாள சுவாமிகளை சுமார் வெறுமனே பூக்கள் போட்டு வழிபட்டால் மட்டும் போதாது. அவர்காட்டிய வழியான 'நான் யார்' என்பதை ஒவ்வொருவரும் தமக்குள் தாமே கேட்டு பலன் பெற்றால் தான் அது மலையாள சுவாமிக்கு காட்டும் உண்மையான அன்பாக இருக்கும்.

    Previous Next

    نموذج الاتصال