No results found

    திருமணத் தடை நீக்கும் பரிகாரங்கள்


    மனித வாழ்க்கையின் மகத்தான அத்தியாயமான திருமணமே மனிதனுக்கு சமுதாய அங்கீகாரத்தைப் பெற்றுத் தருகிறது. ஒரு மனிதன் வாழ்வில் முழுமை அடைவது திருமண பந்தத்தில் தான் என்பது மறுக்க முடியாத உண்மை. ஒருவருடைய வாழ்க்கையின் அனைத்து சம்பவங்களையும் நிர்ணயிப்பது ஒருவரின் பிறந்த ஜாதகம் தான். ஒரு மனிதன் அவனுடைய பிறப்பு முதல் வாழ்நாள் முழுவதும் எப்படி இருப்பான் என்பதை ஜனன ஜாதகத்தைக் கொண்டு அறிய முடியும். பனிரெண்டு பாவகங்களும் ஜாதகரின் வயதிற்கேற்ப அதன் தசாபுத்தி காலங்களில் தான் தூண்டப்படுகின்றன. அதன் அடிப்படையில் ஜாதகனின் வயதிற்கு ஏற்ப இல்வாழ்க்கை சக்கரம் சுழன்று செயல்பட லக்னத்திற்கு ஏழாம் பாவகம் மிக முக்கியம். நிரந்தரமான ஒரு வாழ்க்கை துணையால் மட்டுமே மனிதனை முழுமையடையச் செய்ய முடியும். ஒரு மனிதனின் ஜாதக அமைப்பு படி ஏழாம் பாவகமும் அதன் அதிபதியும் அதில் அமரும் கிரகங்களும் ஜாதகரை சிறப்பு பெற்ற மனிதனாக உயர்த்துகிறது.

    ஏழாம் பாவகமும் அதன் அதிபதியும் அதில் அமரும் கிரகங்களும் ஜாதகனுக்கு வாழ்க்கை துணை அமைய துணை புரிகிறது.ஏழாம் பாவகமும் அதன் அதிபதியும் அதில் அமரும் கிரகங்களும் வாழ்க்கை துணையைத் தீர்மானிக்கிறது. ஏழில் அமர்ந்த கிரகமே வாழ்க்கை துணையை அமைத்து தருகிறது அல்லது வாழ்க்கை துணை அமைவதை தடை செய்கிறது. திருமணம் என்ற இல்லற பந்தத்தில் ஈடுபடும் போதே ஒரு மனிதனின் கர்மா முழு வீச்சில் செயல்படுகிறது. வினை இல்லாமல் விளைவு இல்லை. ஜாதகரின் வினைப்பதிவில் உள்ள சுப கர்மா நல்லதை நடத்தும். ஒரு குற்றம் நல்லதை தடுக்கும். அதன் அடிப்படையில் ஜாதகரின் 21 தலைமுறை முன்னோர்கள் செய்த பாவ, புண்ணியமே உரிய வயது திருமணம், காலம் தாழ்ந்த திருமணம் அல்லது திருமணமே நடக்காத நிலையையும் தீர்மானிக்கிறது. மனிதர்களுக்கு மன உளைச்சலை தருவதில் திருமணமும் திருமண வாழ்க்கையும் பெரும் பங்கு வகிக்கிறது. பொதுவாக ஏழாமிடத்தில் எந்த கிரகமும் இல்லாமல் இருந்தால் உரிய பருவத்தில் திருமணம் நடந்து விடும். ஏழாமிடத்தில் கிரகம் நின்றால் திருமணத்திற்கு முன்பு அல்லது பின்பு சில அசவுகரியங்கள் ஏற்படுகிறது.

    அதன்படி லக்னத்திற்கு ஏழாம் இடத்தில் நிற்கும் கிரகங்களால் ஏற்படக் கூடிய திருமணத் தடையையும் அதை தகர்க்கும் பரிகாரங்களையும் காணலாம். ஏழில் சூரியன் கோபம் மற்றும் உஷ்ணத்திற்கு காரககிரகமானவர் சூரியன், ஒருவரின் சமூக மதிப்பையும் நிர்வாகத் திறமையையும் கனவுகளையும், லட்சியங்களையும் பற்றி கூறும் கிரகமாகும். ஏழில் சூரியன் அமர்ந்தவர்கள் தனது வாழ்க்கைத் துணையை பற்றிய மிகைப்படுத்தலான பகல் கனவுகளை கண்டு ஒரு கோட்டை கட்டி சாம்ராஜியம் நடத்துவார்கள். இவர்களுக்கு இல்வாழ்க்கையில் நாட்டம் மிகுதியாக இருக்கும். தன் கனவுக் கற்பனை கோட்டையில் வசிக்கும் வாழ்க்கையே கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மிகுதியாக இருக்கும். அழகு, படிப்பு, பொருளாதாரம், உத்தியோகம், கவுரவம், அந்தஸ்து என பல கனவுகள் இருக்கும். இதில் சிறு குறை இருந்தாலும் திருமணம் கேன்சல் தான். இவர்கள் பல வரனை பார்த்து ஒதுக்குவார்கள். அதனால் எளிதில் திருமணம் நடக்காது. இதனால் திருமணத் தடை அதிகரிப்பதுடன் திருமணத்திற்குப் பிறகு வாழ்வில் குறிப்பிட்ட சில ஆண்டு காலங்கள் தம்பதிகளுக்குள் புரிதல் இல்லாமலே இருக்கும் .கோப உணர்வு மிகுதியால் அடங்கிப் போவதில் சிரமம் மிகும்.

    கர்மா ரீதியாக இதை உற்று நோக்கினால் தந்தை வழி முன்னோர்கள் சிவன் கோவில் சொத்தை அபகரித்த குற்றம், அரசியலில் ஊழல் செய்த குற்றம் , குடும்ப உறுப்பினர்களை முறையாக நிர்வகிக்காத குற்றம் மற்றும் தந்தையை அவமதித்த குற்றத்தின் பதிவு இருக்கும். பரிகாரம் ஞாயிறு காலை 6 மணி முதல் 7 மணிக்குள் சூரிய ஒரையில் 6 வாரம் பசும் பாலால் அபிசேகம் செய்ய வேண்டும். திருமணம் முடியும் வரை சிவன் கோவில் மூலஸ்தானத்தில் எரியும் விளக்கிற்கு எண்ணெய் வாங்கி தர வேண்டும். ஆறு அரசு அதிகாரிகளுக்கு ஆறு வாரம் சாம்பார் சாதம் தானம் தர வேண்டும்.

    ஏழில் சந்திரன் சந்திரன் ஒரு குளிர்ந்த கிரகம். திருமண உறவில் சந்திரன் உடலையும் மனதையும் குறிக்கும் காரக கிரகம்.சந்திரன் என்றால் நீர், நீரும் மனமும் ஒரு நிலையில் நிற்காது. இங்கும் அங்கும் அலைந்து கொண்டே இருக்கும். திருமண விசயத்தில் வரன் குறித்து தெளிவாக முடிவு செய்யும் தன்மை இருக்காது. நடக்காததை நடப்பதாக கற்பனை பண்ணுவார்கள். சந்திரன் ராகுவின் சாரம் பெற்றால் திருமணத்தை நடத்தி பிரச்சினன தரும். கேதுவின் சாரம் பெற்றால் திருமணத்தை நடத்தாமல் பிரச்சினை தரும். சந்திரன் உடைபட்ட நட்சத்திரங்களான சூரியன், செவ்வாய் மற்றும் குருவின் நட்சத்திரத்தில் இருந்தாலும் திருமணத் தடை இருக்கும்.சந்திரன் பாசத்தை பொழியும் கிரகம். ஏழில் சந்திரன் திருமணத்திற்கு பிறகு தாயின் பாசத்தை களத்திரத்திடம் ஒப்பிட்டு பிரச்சினையை அதிகரிப்பார்கள் அல்லது தங்களின் அந்தரத்தைப் பற்றிய அனைத்தையும் தாயிடம் பகிர்ந்து களத்திரத்தின் வெறுப்பை சம்பாதிப்பார்கள். கர்மா ரீதியாக இதை உற்று நோக்கினால் தாய் வழியில் 21 தலைமுறையாக வாழாத பெண்கள் இருப்பார்கள்.தினமும் கண்ணீர் விட்டு அழுத பெண் சாபம். தண்ணீரில் மூழ்கி தற்கொலை செய்தவர் சாபம், வயதான தாயை முறையாக பராமரிக்காத குற்றம், ஒரு பெண்ணை மனநலம் பாதிக்கும் வகையில் துன்புறுத்தியதன் வினைப்பதிவாகும். பரிகாரம் திங்கட்கிழமை காலை 6 மணி முதல் 7 மணிக்குள் சந்திர ஓரையில் அம்பிகைக்கு 10 வாரம் பால் அபிசேகம் செய்ய வேண்டும். பச்சரிசிமாவில் மாவிளக்கு செய்து பிரதோஷ வேளையில் நந்திக்கு நெய் தீபம் ஏற்ற வேண்டும். வயது முதிர்ந்த 11 பெண்களுக்கு பச்சரிசி உணவு 11 வாரம் தண்ணீருடன் தானம் தர வேண்டும். ஏழில் செவ்வாய் ஏழில் செவ்வாய் தோஷம் உண்டா? என்ற விவாதம் எத்தனை நூறு ஆண்டுகளானாலும் முடிவுக்கு வராத விஷயம் என்பதால் நாம் அதைப் பற்றி பேச வேண்டாம். ஏழில் செவ்வாய் என்றால் திருமணத்திற்கு முன்பு திருமணத் தடையையும் பின்பு ஈகோவால் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதில் பிரச்சினை ஏற்படுகிறது. செவ்வாயுடன் ராகு-கேதுகள் சம்மந்தம் பெறும் போது பிரச்சினை மிகுதியாக இருக்கிறது. செவ்வாய் முரட்டுத்தனமான கிரகம். எது வந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்ற தைரியம் இருக்கும். செவ்வாய் முழுக்க, முழுக்க தாய், தந்தை வழி கர்மாவை மிகுதியாக பிரதிபலிக்கும் கிரகமாகும். செவ்வாயால் எற்படும் பிரச்சினைகள் காசு, காமம், சொத்து என்ற மூன்று வினையின் விளைவுகளாகவே இருக்கிறது. காமம் மனிதர்கள் இல்லற இன்பத்தை வாழ்க்கைத் துணைவியிடம் மட்டுமே பெற வேண்டும். முறையற்ற காமத்தால்பொருள் விரயத்துடன் தீராத நோயும், சாபமும் வினைப்பதிவும் சேரும்.இதனால் பலரின் பரம்பரைச் சொத்துக்கள் சம்பந்தம் இல்லாத நபர்களிடம் சிக்கி பயனற்றுப் போகிறது. பல குடும்பங்கள் பிரிந்து நிர்கதியாக வாழவும் முடியாமல், மீளவும் முடியாமல் தவிக்கிறார்கள். காசு தன் விதிப்பயனையும் மீறிய பொருள் ஆசை அநீதியான வழியில் பொருள் ஈட்டும் உணர்வை தூண்டும்.காசு என்றால் பொருள் மட்டுமல்ல. பணம் சேர்க்க அநீதியை கடைபிடித்து ஒருவரை துன்புறுத்துவது.அடுத்தவரின் பணத்தை கொடுக்காமல் ஏமாற்றும் போது உன் அடுத்த பிறவி உறுதியாகி சத்ருவும், கர்ம வினையும் மிகுதியாகும். அடுத்தவர்களுக்கு கொடுக்க வேண்டிய நிலுவைப் பணம் ஒருரூபாய் இருந்தால் கூட அந்தக் கடனை கொடுத்து முடிக்கும் வரை மறு பிறவி எடுத்து வினையை அனுபவித்துக் கொண்டே இருக்க வேண்டும்.சட்டத்திற்கு புறம்பாக சம்பாதிக்கும் பணம், அடுத்தவரின் வயிற்றெரிச்சலில் ஈட்டிய பொருளால் வாங்கும் சொத்துக்கள்சந்ததிகளுக்கு பாவத்தையே மிகைப்படுத்துகிறது. சொத்து முறையற்ற குடும்பச் சொத்துப் பங்கீடு, அநீதியான முறையில் சொத்து சேர்த்தாலும், வாரிசு இல்லாதவர்களிடம் விருப்பமின்றி பிடுங்கிய பிள்ளையில்லாச் சொத்தும் வாரிசுகளால் அனுபவிக்க முடியாது. அவர்களுடைய வாரிசுகள் பல தலைமுறைக்கு சொத்தை வைத்து உருட்டி வேடிக்கை பார்ப்பார்கள். முடிவில் சொத்து போன வழித்தடம் தெரியாது. ஆனால் பாவம் மட்டும் சரியான பாதை கண்டுபிடித்து வந்து வாசல் கதவை தட்டும். பரிகாரம் தொடர்ந்து ஏழு வாரம் செவ்வாய் கிழமை முருகனுக்கு பால் அபிசேகம் செய்து வழிபடவும். 27 வாரம் செவ்வாய் கிழமை சுமங்கலிப் பெண்களிடம் மங்கலப் பொருட்களான மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு, பூ, பழம் தந்து ஆசி பெற வேண்டும். ஏழு காவலர்களுக்கு ஏழு வாரம் தலா 1 கிலோ மாதுளை தானம் தர வேண்டும். வசதி வாய்ப்பு இருப்பவர்கள் பூமி தானம் செய்யலாம். ஏழில் புதன் புதன் புத்திசாலித்தனத்தை குறிக்கும் காரக கிரகமாகும். ஏழில் தனித்த புதன் இருப்பவர்களுக்கு எளிதாக இளம் வயதில் திருமணம் நடக்கும். தாய்மாமன் வழி உறவில் திருமணம் நடக்கும் வாய்ப்பு அதிகம். தன் புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி வாழ்க்கைத் துணையை சந்தோசமாக வைத்து இருப்பார்கள். வாழ்க்கை துணை இளமைப் பொலிவுடன் இருக்க வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்துவார்கள. இது ஒரு அலி கிரகம் என்பதால் ஆண்களுக்கு காதலியையும் பெண்களுக்கு காதலனையும் குறிக்கும் கிரகம் என்பதால் திருமணத்திற்கு பிறகும் காதலர்களாக ஆதர்சன தம்பதியராக வாழ்வார்கள். தனுசு மற்றும் மீன லக்னமாக இருக்கும் போதும் ரிஷப லக்னததிற்கு ஏழாம் அதிபதி புதனின் நட்சத்திரமான கேட்டையில் நின்றாலும் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணத்தை தரும். மற்றபடி தனித்த புதன் எந்த தொந்தரவும் தராது. புதனுடன் பகை கிரகங்களான செவ்வாய், சந்திரன், ராகு, கேதுக்கள் சேரும் போது உலகப் போரே நடந்த பாதிப்பு வாழ்கையில் இருக்கும். ஊருக்காகவும் உறவுக்காவும் கணவன்-மனைவியாக நடிப்பார்கள்.வாழ்க்கை துணை இருக்கும் போதே அவரை அலட்சியப்படுத்தி மற்றவரோடு சிரித்து பேசி வாழ்க்கை துணையை வெறுப்படைய செய்வார்கள். அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் நடக்கும். ஏழில் புதன் விவாகரத்திற்கு பிறகு கூட சேர்ந்து வாழ்வார்கள். புதனின் சேட்டைகளை கணிப்பது கடினம். சென்ற பிறவியில் இளம் பெண்ணை காதலித்து ஏமாற்றிய குற்றத்தின் பதிவால் இது போன்ற பிரச்சினைகள் ஏற்படும். பரிகாரம் 17 வாரம் புதன் கிழமை மகா விஷ்ணுவிற்கு பால் அபிசேகம் செய்து வழிபட வேண்டும். 17 திருமணம் ஆகாத இளம் பெண்களுக்கு 17 வாரம் இனிப்பு உணவு தானம் தர வேண்டும். புதன்கிழமைகளில் மதுரைமீனாட்சியம்மன் கோவில் சென்று வழிபாடு செய்ய வேண்டும். மற்ற கிரகங்களுக்கான பரிகாரங்களை அடுத்த வாரம் பார்ப்போம்...

    Previous Next

    نموذج الاتصال