No results found

    வருமானம் வரும் வழி எது?


    செல்வாக்கு உள்ள மனிதர்களின் சொல்வாக்கே சபையில் அரங்கேறும். செல்வாக்கு உள்ள ஒருவரால் மட்டுமே தன் சொல்வாக்கால் குடும்ப உறவுகளை தன் வசப்படுத்த முடியும். ஒருவரின் வாழ்க்கை செல்வச் செழிப்பானதா? அல்லது வறுமையில் கஷ்டப்பட நேரிடுமா? சுயதொழில் மூலம் செல்வச் சேர்க்கை ஏற்படுமா? அல்லது உத்தியோகத்தின் மூலம் தனச் சேர்க்கை ஏற்படுமா? வாழ்க்கைத்துணை மூலம் அவருக்கு பொருள் சேர்க்கை உண்டாகுமா? அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஜாதகருக்கு உண்டா? ஒருவர் உண்மை பேசுபவரா அல்லது பொய் பேசுபவரா என்பதையும் அவருக்கு அமையும் குடும்ப உறவுகளையும் லக்னத்திற்கு இரண்டாம் இடமான தனம், வாக்கு, குடும்ப ஸ்தானம் மூலம் அறிந்துகொள்ளலாம். ஒருவரின் வாழ்வாதாரத்தை நிர்ணயிக்கும் பன்னிரு பாவகங்களும் இரண்டாம் இடமான தன ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவதால் ஏற்படும் நன்மை, தீமைகளையும், தன ஸ்தானத்தை வலிமைப்படுத்தும் பரிகாரங்களையும் இந்த கட்டுரையில் காணலாம்.

    இரண்டாம் அதிபதி லக்னத்தில் நின்றால் ஜாதகருக்கு சுய முயற்சி, உழைப்பால் ஒன்றுக்கு மேற்பட்ட தொழில் அல்லது வேலை மூலம் பல வழிகளில் வருமானம் தேடி வரும். அதிகாரமான தெளிவான பேச்சால் சாதுர்யமாக பேசி வருமானம் ஈட்டுவார்கள். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வருமானம் திரட்டுவார்கள். ஜாதகர் செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தவராக இருப்பார். இவர் பிறக்கும் போது குடும்பம் சாதாரண நிலையில் இருந்தாலும் பிறந்த பிறகு வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். தனத்தை பெருக்குவது பற்றியும், தன் குடும்பத்தை காப்பது பற்றியும் சிந்தனை மிகைப்படுத்தலாக இருக்கும். இவர்கள் பூர்வீகத்தில் வருமானம் ஈட்டி சொந்த பந்தங்களுடன் மகிழ்ச்சியாக வாழ்வார்கள். மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை அமையும். வெள்ளிக்கிழமை பசுவிற்கு 6 மஞ்சள் வாழைப்பழம் வழங்க மேலும் தன வரவு அதிகரிக்கும்.

    இரண்டாம் அதிபதி இரண்டில் நின்றால் ஜாதகருக்கு வேலை, தொழில், எதை செய்தாலும் வருமானம் உண்டு, கையில் பணம் சரளமாக புரளும். ஜாதகர் செல்வாக்கு சொல்வாக்கு மிகுந்தவர். செல்வச் சீமானாக விளங்குவார். பணக்கஷ்டம் தெரியாதவர். பேச்சுத் திறமையால் வருமானம் ஈட்டும் காரியவாதிகள். பேச்சுத் தொழிலை மூலதனமாக கொண்டு பல வழிகளில் வருமானம் ஈட்டும் தந்திரவாதிகள். கலகலப்பாக பேசி தன்னை சார்ந்தவர்களை சந்தோஷமாக வைத்து காப்பாற்றுவார்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றும் நாணயவாதிகள். வாக்கு சுத்தம் உண்டு. தொழில், உத்தியோகத்திற்கு குடும்ப உறுப்பினர்களின் அன்பும் அனுசரனையும் உண்டு. வெள்ளிக்கிழமையில் சுக்ர ஓரையில் மகாலட்சுமியை வழிபட மேலும் செல்வம் சேரும்.

    இரண்டாம் அதிபதி மூன்றில் ஜாதகருக்கு வருமானம் என்பது அவர் முயற்சி செய்தால் மட்டும் கிடைக்கும்.தன் தனித் திறமையால் தகவல் தொடர்பு சாதனங்களான பத்திரிக்கை, டிவி, பேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம் மூலம் அதிகம் சம்பாதித்து பிரபலமடைவார்கள். எழுத்து, ஆன்லைன் வேலைமூலம் வருமானம் கிடைக்கும், அக்கம் பக்கம், உறவினர்களுடன் இணைந்து சிறு தொழில் மூலம் வருமானம் திரட்டுவார்கள்.மூன்றாமிடம் பலம் குறைந்தால் சுயமாக சிந்தித்து செயல்படத் தெரியாது. உடன் பிறந்த சகோதர, சகோதரிகளை நம்பி பிழைப்பார்கள். அல்லது இவர்களுடைய பொருளாதாரம் உடன் பிறந்தவர்களுக்கே பயன்படும். சுப கிரக சம்பந்தம் அதிகம் இருந்தால் சகோதர ஆதாயம் உண்டு. செவித்திறன் குறைந்தவர்களுக்கு உதவுவதால் நன்மைகள் மேலும் அதிகரிக்கும்.

    இரண்டாம் அதிபதி நான்கில் நின்றால் ஜாதகர் செல்வச் சீமானாகவும், மாடு கன்று உள்ளவராகவும், பாக்கியவானாகவும், விளங்குவார்கள். விவசாயத்தில் ஈடுபாடு மற்றும் விருப்பம் உள்ளவராகவும் இருப்பர். அசையும், அசையாச் சொத்துக்கள் சேர்க்கை அதிகமாக இருக்கும். அதன் மூலம் வாடகை வருமானங்கள் அதிகமாக பெறுவார்கள்.தாய், தாய்வழி உறவுகளால் ஆதாயம் உண்டு.ரியல் எஸ்டேட் துறையில் அதிக வருமானம் சம்பாதிப்பார்கள். கற்ற கல்வியை பயன்படுத்தி சம்பாதிக்க முடியும். நலிந்த விவசாயிகளின் தேவையறிந்து உதவ சுப பலன்கள் மிகுதியாகும். இரண்டாம் அதிபதி ஐந்தில் நின்றால் ஜாதகர் ஆன்மீகம், கலை, இலக்கியம், ஜோதிடம், மேடைப் பேச்சு, கவுரவப் பதவி, நல்ல சிந்தனை, புத்திசார்ந்த ஆலோசனைகள் வழங்குதல் ஆகியவற்றின் மூலம் பெயர், புகழ் அந்தஸ்து பெற்று வருமானம் ஈட்டுவார். அரசினால் வருமானம் உண்டு. பூர்வ புண்ணியம், முன்னோர்களின் நல்லாசி நிரம்பியவர்கள் என்பதால் இவர்களின் வாக்கு தெய்வ வாக்கிற்கு இணையானது. வாக்கு சொல்லுதல், சாமியாடி குறி சொல்லுதல் போன்றவற்றில் வல்லவர்கள்.சொகுசு வாகனங்கள், விலை உயர்ந்த நகைகள், ரத்தினங்களை வெகுமானமாகப் பெறுவார்கள். குலதெய்வ வழிபாடு நல்லது. இரண்டாம் அதிபதி ஆறில் நின்றால் இரண்டாமிடத்துடன் சம்பந்தம் பெறும் ஆறாம் அதிபதிக்கு சுப கிரக சம்பந்தம் இருந்தால் வட்டி வருமானம், பினாமி சொத்து யோகம், அரசியல் யோகம் உண்டு. எதிரிகள் ஓடி ஒழிவார்கள். உத்தியோகமே சிறப்பு. முதலீடு இல்லாத சுய தொழில் செய்யலாம்.அசுப கிரக சம்பந்தம் இரண்டு, ஆறாம் இடத்திற்கு இருந்தால் ஜாதகர் வேலைக்கு செல்வது உத்தமம். நிலையற்ற வருமானம், கடனால் கவலை, அதிகமான வைத்தியச் செலவு உண்டு. குடும்பத்தில் சதா சண்டை, சச்சரவு, கூச்சல் குழப்பம் நிலவும். கடன் கொடுப்பதாலும், கடன் பெறுவதாலும், ஜாமீன் பிரச்சினையாலும் குடும்பத்தில் நிம்மதி இருக்காது. குடும்ப உறவுகளுக்காக சூழ்நிலை கைதியாக வாழ்வார்கள். குடும்ப உறவுகளே எதிரியாக இருப்பார்கள். குடும்பத்தினரின் அன்பு, ஆதரவு கிடைக்காது. கெட்ட சகவாசம், தீய பழக்கம் உள்ளவர்கள். நேரத்திற்கு சாப்பிட முடியாது. பிறரை இகழ்வது, போட்டுக்கொடுப்பது, பொய், புரளி பேசுவது போன்றவற்றால் நிலையற்ற உத்தியோகமே அமையும்.கூலித் தொழிலாளிகளுக்கு உதவினால் ஆதாயம் பெருகும். இரண்டாம் அதிபதி ஏழில் நின்றால் பெரும்பாலும் இந்த அமைப்பினர் கூட்டுத் தொழிலில் ஈடுபடுவார்கள். குடும்ப உறுப்பினர்கள், வாழ்க்கை துணை, நண்பர்கள், தொழில் கூட்டாளிகள், வாடிக்கையாளர்களால் ஆதாயம் உண்டு. அசு பகிரக சம்பந்தம் இருப்பவர்கள் கூட்டுத் தொழிலை தவிர்த்து தனியாக சுய தொழிலில் ஈடுபடலாம். சிலருக்கு இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு அதிர்ஷ்டம் கூடும். அரசியல் மற்றும் பொது ஜன தொடர்பில் இருப்பவர்களுக்கு நன்மைகள் சேரும். சிறிய வயது முதல் பெரிய வயது வரை அனைத்து துறையினரின் நட்பும் கிடைக்கும். எதிர்பாலினத்தவரை வேலைக்கு வைப்பதால் அதிர்ஷ்டம் இரட்டிப்பாகும். வெள்ளிக்கிழமை லட்சுமி சகஸ்ர நாமம், குங்கும அர்ச்சனை செய்து வழிபட மேன்மை உண்டு. இரண்டாம் அதிபதி எட்டில் ஜாதகருக்கு உழைப்பற்ற அதிர்ஷ்ட வருமானம், பிறர் உழைப்பால் வருமானம் கிடைக்கும். அதிர்ஷ்டத்தை நம்பி இருப்பதையும் இழப்பார்கள். பேசுவது நியாயமற்றது என்று தெரிந்தாலும் நடைமுறைக்கு ஒத்து வராததை எதிர்மறையாக பேசி இன்பம் அடைவார்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றத் தவறுவார்கள். தாழ்வு மனப்பான்மை மிகுந்தவர்கள். தீராத கடன், கடனால் கவலை, அவமானம் உண்டு. நோயால் வருமான இழப்பு அல்லது நோய்க்காக வருமானத்தை செலவு செய்வார்கள். கோர்ட்டு, கேஸ் என அலைந்து நிம்மதியை தொலைப்பவர்கள்.உறவுகளின் ஆதரவு குறையும். வெகு சிலருக்கு விபரீத ராஜ யோகம் உண்டாகும். இவர்கள் சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகரை வழிபட நல்ல வருமானம், குடும்பம் அமையும். இரண்டாம் அதிபதி ஒன்பதில் 2-ம் அதிபதி 9-ம் இடத்தில் இருப்பது ஜாதகர்க்கு தந்தை வழி வருமானம், வெளியூர், வெளிநாடு வருமானம், ஆசிரியர், வங்கி, ஜோதிட பணி, மத போதனை, உபதேசம் மூலம் வருமானம் கிடைக்கும். பலவிதமான யுக்திகளால் பொருளை ஈட்ட வல்லவர்கள். பிற நாட்டு தொடர்பாலும் அரசு மூலமாகவும் செல்வம் சேரும். பூமியினாலும், பயிர்களினாலும், தன்முயற்சியினாலும் பொருளீட்டிப் பல நற்காரியங்களுக்கு பயன் படுத்துவர். அமைச்சராகும் அந்தஸ்து உண்டு. பெயர் சொல்லக் கூடிய குடும்பம். தந்தை மற்றும் தந்தை வழி உறவுகள் மீது பற்றும் பாசமும் உண்டு. தந்தையால் ஆதாயம் உண்டு. குடும்ப பெரியவர்களின் ஆலோசனைக்கு செவி சாய்ப்பார்கள். அமாவாசை நாட்களில் முன்னோர்களை வழிபட பாக்கிய பலன் அதிகரிக்கும். இரண்டாம் அதிபதி பத்தில் ஜாதகருக்கு கவுரவம் சார்ந்த வருமானம் உண்டு, தந்தை , மனைவி சொத்து, மாமியார் வழி வருமானம் உண்டு. பேச்சை மூலதனமாகக் கொண்ட தொழிலில் வல்லவர்கள். சாதுர்யமான பேச்சினால் தொழிலில் தனக்கென்று தனி முத்திரை பதிப்பவர்கள். எதிர்காலம் பற்றிய ஞானம் மிகுந்தவர்கள். சுய உழைப்பால் உயர்ந்த உத்தமர்கள். பலர் குறுகிய காலத்தில் தொழில் அதிபர்களாக, சாதனையாளராக மாறியவர்கள். பிரபலமானவர்கள். அதிகார பதவி உண்டு. நீதி, நியாயத்திற்கு கட்டுப்பட்டவர்கள். சனிக்கிழமை உடல் ஊனமுற்றவர்களுக்கு உதவ வேண்டும். இரண்டாம் அதிபதி பதினொன்றில் இருந்தால் ஜாதகருக்கு நண்பர்கள்,மூத்த சகோதரர், சித்தப்பா, மனைவி வழி வருமானம் உண்டு. பல வழிகளில் அதிர்ஷ்ட வருமானம் கிடைக்கும். தொட்டது துலங்கும்.வட்டித் தொழில், வாக்குத் தொழில், கமிஷன் தொழிலில் லாபம் பெறுவார்கள். இது பேரதிர்ஷ்டமான அமைப்பு. லாபம் இல்லாத செயல்களில் ஈடுபடமாட்டார்கள். அமைச்சர் பதவிக்கு நிகரான பதவி வகிப்பவர்கள். ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு தொழில் வாய்ப்பு வழங்குபவர்கள். வீடு, வாகனம் என சகல ஐஸ்வர்யங்களும் உண்டு. இரண்டு குடும்பம் உண்டு. இரண்டாவது திருமணத்திற்குப் பிறகு உயர்வு உண்டு. இவர்கள் பிரதோஷ நேரத்தில் சிவ வழிபாடு செய்வது உத்தமம். இரண்டாம் அதிபதி பனிரெண்டில் இருந்தால் இது சிறப்பித்துச் சொல்லும் பலன் அல்ல. நிம்மதி இல்லாத குடும்ப வாழ்க்கை. ஏழையாகவும் நோயுள்ளவராகவும் இருப்பார்கள். தரித்திரர். கெட்ட சகவாசம் உள்ளவர். குடும்பம்,குழந்தை அற்றவர்கள். தூர தேச நாடுகளில் தனிமையாக சம்பந்தம் இல்லாத நபர்களிடம் வாழ நேரிடும். தன்னைவிட தாழ்ந்தவர்களுடன் சிநேகம் உள்ளவர். தந்தையின் சொத்தை நாசமாக்குபவன். பணத்தை விரயம் செய்பவன். தனது சொந்த பந்தங்களை சத்ருகளாக நினைப்பவன். பவுர்ணமி நாட்களில் சித்தர்களை வழிபட வேண்டும். இரண்டாம் பாவகம் எனும் தனம், வாக்கு ஸ்தானம் பலம் பெற்ற ஒருவரே தனது சாமர்த்தியமான இனிமையான பேச்சால் அனைவரையும் கவர முடியும். வாக்கு சாதுர்யம் இல்லாதவர் ஒருவரால் தொழில் செய்ய முடியாது. தன ஸ்தானத்திற்கு லக்ன தொடர்பு இருந்தால் தொடர் தன வரவு இருந்து கொண்டே இருக்கும். சம்பாதித்த பணத்தை எப்படி பாதுகாக்க வேண்டும் என்ற அறிவும், மேலும் பணத்தை மென்மேலும் வரக்கூடிய வழிகளை பெருக்கக்கூ டிய சுயசிந்தனையும் இருக்கும். இனிமையான இல்லறம் அமையும்.இதற்கு அசுப கிரகங்களின் சம்பந்தம் இருந்தால் பேச்சுத் திறமை இருக்காது. கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாது. பொருள் வரவில் ஏற்ற இறக்கம் நிலவும். இல்லற சுகம் குறைவுபடும்.

    Previous Next

    نموذج الاتصال