No results found

    சென்னை சித்தர்கள்: ஸ்ரீலஸ்ரீ பகவான் வெங்கட்ராமசுவாமிகள்-மேலையூர்


    சென்னை வடபழனியில் வாழ்ந்து மக்களுக்கு சேவை செய்து இன்னமும் ஜீவ சமாதிகளில் இருந்தபடி அருள் அலைகளை பரப்பிக் கொண்டிருக்கும் சித்தர்களில் சமீபத்திய ஆண்டுகளில் மக்கள் மனதை மிகவும் கவர்ந்தவர்களில் 2 சித்தர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.

    ஒருவர் பரஞ்ஜோதி சுவாமிகள். மற்றொருவர் ஸ்ரீலஸ்ரீ பகவான் வெங்கட்ராம சுவாமிகள். இவர்கள் இருவரையும் இரட்டையர்கள் என்றே சித்தர் ஆய்வாளர்கள் அழைப்பதுண்டு. இவர்களிடம் ஆத்மார்த்தமான நட்பு கொண்டிருந்த பக்தர்கள் இவர்களை சிவன் - விஷ்ணு என்று மகிழ்ச்சியோடு குறிப்பிடுவதுண்டு.

    இன்னும் சிலர் பரஞ்ஜோதி சுவாமிகளை மூலவர் என்றும் ஸ்ரீலஸ்ரீ பகவான் வெங்கட்ராம சுவாமிகளை உற்சவர் என்றும் அழைப்பார்கள். இன்னும் நெருங்கி பழகியவர்களுக்கு அவர்கள் இருவருமே ஒரே நிலையில் வாழ்ந்த மகான்கள் என்பது தெள்ளத் தெளிவாக புரியும்.

    சும்மா இருப்பது சுகம் என்று சித்தப் புரு‌ஷர்கள் சொல்வதுண்டு. ஆனால் அந்த சுகத்தை பெருவது என்பது அவ்வளவு எளிதானதல்ல. மகான்களை பார்த்தால்தான் அதில் இருக்கும் ஆழ்ந்த கருத்துக்களையும், சூட்சுமத்தையும் புரிந்துகொள்ள முடியும். புரிந்துகொள்ள முடியுமே தவிர நடைமுறைப்படுத்துவது என்பது மிக மிக கஷ்டமானது.

    ஆனால் அந்த கஷ்டத்தை கிடைக்கும் வகையில் நம்மோடு வாழ்ந்து, ஜீவசமாதி ஆனவர் ஸ்ரீலஸ்ரீ பகவான் வெங்கட்ராம சுவாமிகள். வடபழனியில் சுமார் 45 ஆண்டுகள் இவர் வாழ்ந்தார். ஆனால் இவருக்கென்று சொந்தமாக எந்த இடமும் இருந்ததில்லை. வடபழனி முருகன் கோவில் முன்பு உள்ள தெருதான் அவரது இருப்பிடம்.

    பெரும்பாலும் வடபழனியில் உள்ள வேங்கீஸ்வரர் ஆலயம் முன்பு நின்று கொண்டிருப்பார். யாரிடமும் எதுவும் கேட்கமாட்டார். யார் கொடுத்தாலும் வாங்கவும் மாட்டார். வழக்கமாக ஒரு கடையில் எப்போதாவது தயிர் சாதம் வாங்கி சாப்பிடுவார். அதுவும் அந்த கடையில் வெங்காயம் உரித்துக் கொடுத்துவிட்டுத்தான் அந்த உணவை பெற்றுக்கொள்வார்.

    இவரது பூர்வீகம் பற்றி யாருக்கும் எதுவும் தெரியாது. கும்பகோணம் இவரது ஊராக இருக்கலாம் என்று பலரும் சொல்வதுண்டு. ஆனால் அதற்கும் எந்த ஆதாரமும் இல்லை. வடபழனியில் அவர் வாழ்ந்த சுமார் 45 ஆண்டு காலத்தில் அவரைத் தேடி உறவினர்கள் என்று யாரும் வந்ததில்லை. அதுபோல அவரது ஜீவசமாதி அமைக்கப்பெற்று அவரது புகழ் சமூக வலைதளங்களில் பரவிய பிறகும்கூட அவரை சொந்தம் கொண்டாடி யாரும் வந்ததில்லை.

    இதனால் ஸ்ரீலஸ்ரீ பகவான் வெங்கட்ராம சுவாமிகளின் பிறப்பு பற்றி யாருக்கும் எதுவும் தெரியாது. வடபழனி தெருக்களில் பரஞ்ஜோதி சுவாமிகள் எதாவது ஒரு இடத்தில் நின்றுகொண்டே இருப்பார். ஆனால் ஸ்ரீலஸ்ரீ பகவான் வெங்கட்ராம சுவாமிகள் நடந்து கொண்டே இருப்பார்.

    கையில் சிறிய துணி மூட்டை ஒன்றை வைத்திருப்பார். வேறு எந்தவித அடையாளங்களும் அவருக்கு தெரியாது. நடந்துகொண்டே ஏதாவது சொல்லிக்கொண்டே இருப்பார். அவை அனைத்தும் பரிபாஷைகளாக இருக்கும். புரிந்தவர்களுக்கு மட்டும்தான் அந்த பரிபாஷையில் உள்ள அர்த்தங்களை கண்டுபிடிக்க முடியும். மற்றவர்களுக்கு அது கடைசிவரை புரியவே புரியாது.

    தன்னை நோக்கி வரும் பக்தர்களை ஸ்ரீலஸ்ரீ பகவான் வெங்கட்ராம சுவாமிகள் ‘சார்’ என்றே அழைப்பார். சிலரை பார்த்ததும், ‘சார் நம்மகிட்ட நிறைய மூட்டைகள் இருக்கிறது. அந்த மூட்டைகளுக்குள் நிறைய வி‌ஷயங்கள் இருக்கின்றன. அவை என்னென்ன என்று நமக்குத் தெரியாது. அதை தெரிந்து கொள்வதற்காக அந்த மூட்டைகளை பிரித்து பார்க்கவும் முடியாது. வேறு யாரிடமும் கொடுக்கவும் முடியாது. கீழேயும் வைக்க முடியாது’ என்பார்.

    ‘அப்படியானால் இந்த மூட்டைகளோடு கடைசிவரை அலைந்து கொண்டே இருக்க வேண்டியதுதானா?’ என்று எந்த பக்தராவது தன்னிலை உணர்ந்து மிகவும் கவலையோடு கேட்டால் அவர்களுக்கு ஸ்ரீலஸ்ரீ பகவான் வெங்கட்ராம சுவாமிகள் அழகாக வழி காட்டுவார்.

    ‘பெரியவரைப் போய் பாருங்கள்’ என்று கை காட்டுவார். அவர் பெரியவர் என்று குறிப்பிடுவது பரஞ்ஜோதி சுவாமிகளைத்தான். ‘பெரியவர் பாதத்தை கெட்டியாக பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் எவ்வளவு பெரிய மூட்டைகள் வைத்திருந்தாலும், எவ்வளவு சுமையாக இருந்தாலும் பெரியவர் காட்டிய பாதையில் எளிதாக நடந்து சென்று விடலாம்’ என்று சொல்வார்.

    தாத்தா பரஞ்ஜோதி சுவாமிகள் பெரியவர் என்று அழைக்கப்பட்டதால் பக்தர்கள் அனைவரும் ஸ்ரீலஸ்ரீ பகவான் வெங்கட்ராம சுவாமிகளை சின்னய்யா என்று அன்போடு அழைத்தனர். இவர் பெரிய அளவில் எப்போதும் தன்னை வெளிப்படுத்திக் கொண்டு பிரபலப்படுத்தி புகழ்பெற விரும்பியதே கிடையாது. தான் ஒரு சித்தர் என்றுகூட மற்றவர்கள் நினைக்காத அளவுக்கு அவர் நடந்துகொண்டார்.

    என்றாலும், அவரை நன்கு புரிந்து கொண்டவர்கள் அவரை தேடி வரத் தவறவில்லை. தினமும் அவரை பார்த்து, ஆசி பெற்று பலன் அடைந்தனர். பாவ, புண்ணியத்தை சமம் செய்யும் ஆற்றல் மனிதர்களுக்கு கிடையவே கிடையாது. மகான்களுக்கு மட்டுமே அந்த சக்தி உண்டு. இந்த சக்தியை அபரிமிதமாக பெற்றிருந்த ஸ்ரீலஸ்ரீ பகவான் வெங்கட்ராம சுவாமிகள் அதை பக்தர்களுக்கு வாரி வாரி வழங்கினார்.

    இவரை நம்பிக்கையோடு தேடி வந்தவர்களுக்கு நல்லதே நடந்தன. இவர்மீது நம்பிக்கை வைத்து செயல்பட்டவர்களுக்கு நோய்கள் தீர்ந்தன. பெரும்பாலான பக்தர்கள் ஏதாவது ஒரு வாழ்வியல் பிரச்சினைகளோடு அவரை அணுகுவதுண்டு. அத்தனை பிரச்சினைகளுக்கும் அவர் தீர்வு பாதையை காட்டியுள்ளார்.

    அவரால் பலன் பெற்ற பக்தர்கள் பல்லாயிரக் கணக்கானவர் உள்ளனர். இப்போதும் அவர்கள் ஸ்ரீலஸ்ரீ பகவான் வெங்கட்ராம சுவாமிகளின் சிறப்பை இந்த உலகுக்கு சொல்லும் ஆதாரங்களாக உள்ளனர். அவர்களில் நெல்லை பேட்டையைச் சேர்ந்த சுரேஷ் முதன்மையானவர் ஆவார். சென்னையில் பிளாஸ்டிக் தொழில் செய்து வரும் இவர் பரஞ்ஜோதி சுவாமிகளிடம் ஆசி பெறுவதற்காக வடபழனிக்கு சென்றார்.

    அப்போது பரஞ்ஜோதி சுவாமிகள் சொன்ன உத்தரவின் பேரில் ஸ்ரீலஸ்ரீ பகவான் வெங்கட்ராம சுவாமிகளை சுரேஷ் சென்று சந்தித்தார். முதலில் சுரேசை ஸ்ரீலஸ்ரீ பகவான் வெங்கட்ராம சுவாமிகள் எட்டிகூட பார்க்கவில்லை. என்றாலும், சுரேஷ் மனம் தளராமல் அவரை பின்தொடர்ந்து கொண்டே இருந்தார். கண்கலங்கி வேண்டிய பிறகுதான் சுரேசை தனது பக்கத்தில் சுவாமிகள் சேர்த்துக் கொண்டார்.

    அதன்பிறகு சுவாமிகளின் ஆத்மார்த்த சீடராகவே சுரேஷ் மாறிப் போனார். சுவாமிகளுடன் பத்ரிநாத், கேதார்நாத், ரிஷிகேஷ், காசி, கயா, சீரடி, தென்காசி, குற்றாலம், கும்பகோணம், சபரிமலை என்று பல்வேறு இடங்களுக்கும் சுரேஷ் சென்று வந்துள்ளார். அந்த இடங்களில் எல்லாம் சுவாமிகள் நடத்திய அற்புதத்தை நேரில் பார்த்து உணர்ந்துள்ளார்.

    ஒரு தடவை வேங்கீஸ்வரர் ஆலய வாசலில் ஸ்ரீலஸ்ரீ பகவான் வெங்கட்ராம சுவாமிகள் நின்றுகொண்டிருந்தார். மாலை 6 மணி அளவில் அவரை சந்திக்க சென்ற சுரேஷ் மனதில் சில சந்தேகங்கள் எழுந்தன. அடுத்த நிமிடம் சுவாமிகள் அடுத்தடுத்து பல்வேறு வடிவங்களாக தன்னை வெளிப்படுத்தி அற்புதம் நிகழ்த்தினார்.

    சாய்பாபாவாக, ராமகிருஷ்ண பரம ஹம்சராக, விவேகானந்தராக அவர் மாறி மாறி தோன்றியதைப் பார்த்ததும் சுரேஷ் மெய்மறந்து போனார். இதேபோன்று வடமாநில யாத்திரையின்போதும் ஒருதடவை சுவாமிகளின் சிறப்பை நேரில் பார்த்து சுரேசால் உணர முடிந்தது.

    சாதுக்கள் நிறைந்த ஒரு பகுதியில் நடந்து சென்றுக் கொண்டிருந்த ஸ்ரீலஸ்ரீ பகவான் வெங்கட்ராம சுவாமிகள் கையை உதறியபடி ஒருவித குரல் எழுப்பினார். அதைக்கண்டு சாதுக்கள் அடைந்த ஆனந்தத்துக்கு அளவே இல்லை. சாதுக்கள் அனைவரும் ஆனந்த கூத்தாடினார்கள். அவர்களுக்கு சுவாமிகள் ஏதோ ஒரு அருளை வழங்கி இருப்பதை சுரேசால் புரிந்துகொள்ள முடிந்தது.

    தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு ஏதாவது சந்தேகம் என்றால் அதைக் குறிப்பால் உணர்த்தி தெளிவுபடுத்துவார். தன்னிடமோ, தனது பக்தர்களிடமோ அவர் எதையும் சேர்த்து வைத்தது இல்லை. அன்று என்ன தேவையோ அதை யாராவது ஒருவர் மூலமாக நிவர்த்தி செய்து கொள்வார்.

    இப்படி வடபழனி கோவில் தெருவில் அமர்ந்தபடி ஸ்ரீலஸ்ரீ பகவான் வெங்கட்ராம சுவாமிகள் செய்த அற்புதங்கள் ஏராளம். 2007-ம் ஆண்டு மாசி மாதம் அவர் தனது ஆத்மாவை பிரித்து பரிபூரணம் அடைந்தார். அப்போது அவரை எங்கு ஜீவசமாதி செய்வது என்று கேள்வி எழுந்தது.

    வாழ்ந்த காலத்தில் சுரேசிடம் சுவாமிகள் அடிக்கடி, ‘மேலையூர் போய்விட்டால் கடை போட்டு இருந்துவிடலாம். தோட்டங்கள் போட்டு அங்கேயே இருக்கலாம்‘ என்று அடிக்கடி சொல்வதுண்டு. எனவே மேலையூர் பற்றி விசாரித்தபோது அது திருப்போரூர்- செங்கல்பட்டு பாதையில் இருக்கும் கிராமம் என்று தெரியவந்தது.

    அங்கு பெரியநாயகி அம்மன் உடனுறை நாகபாணீஸ்வரர் என்ற சுமார் 2000 ஆண்டுகள் பழமை கொண்ட சிவாலயம் உள்ளது. அந்த சிவாலயம் முன்பகுதியில் வலது பக்கத்தில் ஸ்ரீலஸ்ரீ பகவான் வெங்கட்ராம சுவாமிகளுக்கு ஜீவசமாதி அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி அங்கு சுவாமிகள் குடியேறினார்.

    ஆண்டுதோறும் மாசிமகம் தினத்தன்று குருபூஜை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் வருகிற 17-ந் தேதி (வியாழக்கிழமை) 17-ம் ஆண்டு மகா குருபூஜை, மங்கலவிழா நடைபெற உள்ளது. அங்கு காலை 6 மணி முதல் சுவாமிகள் ஜீவசமாதி ஆலயத்தில் குருபூஜை, ஹோமம் தொடங்கி நடைபெறும். இதனைத் தொடர்ந்து 108 சங்காபிஷேகம் மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படும். மதியம் 1 மணிக்கு அன்னதானம் கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இந்த ஜீவசமாதி ஆலயத்துக்கு திருப்போரூர்- செங்கல்பட்டு சாலை வழியாக சென்றால் வெங்கூர் கூட்டு ரோட்டில் இருந்து மேலையூர் செல்ல வேண்டும். கூடுவாஞ்சேரியில் இருந்து கரும்பாக்கம் செல்லும் 55சி எண் கொண்ட பஸ்சிலும் சென்று வரலாம்.

    இந்த ஜீவசமாதி ஆலயம் தொடர்பாக 9444908198 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு கூடுதல் தகவல்களை பெறலாம்.

    Previous Next

    نموذج الاتصال