ஒவ்வொருவரிடமும் குண்டலினி சக்தி இருக்கிறது. நமது உடம்பில் மூலாதாரத்தில் பாம்பு சுருண்டு கிடப்பது போல மூன்று சுற்றுகளாக குண்டலினி சக்தி சுருண்டு கிடக்கிறது. பாம்பின் செயலுக்கும், குண்டலினி பயிற்சியில் ஈடுபடும் போது ஏற்படும் அனுபவத்துக்கும் ஒற்றுமை உண்டு. அதனால்தான் சித்தர்கள் குண்டலினி சக்தியை பாம்போடு உருவகப்படுத்தி உள்ளனர்.
குண்டலினி சக்தி என்பது உயிர் சக்தியாகும். மனித உடலை இயக்கும் சக்தியாகும். மகான்கள் இந்த சக்தியை ‘சக்தியின் அம்சம்’ என்று கருதுகிறார்கள். உச்சந்தலையில் துரியம் இருக்கும் இடத்தில் சிவ அம்சம் இருப்பதாக சொல்கிறார்கள். மூலாதாரத்தில் இருக்கும் சக்தி உடம்பு முழுக்க பரவி உச்சந்தலையில் உள்ள சிவ அம்சத்துடன் சேரும்போது பேரின்பம் உண்டாகும். இதுதான் குண்டலினி சக்தி தரும் மிக முக்கிய பலன் ஆகும்.
அஞ்ஞானம் உள்ளவர்களால் குண்டலினி சக்தியை உணர இயலாது. யார் ஒருவர் மனதை ஒருமுகப்படுத்தி பிராணனால் தூண்டப்படும் போது குண்டலினி சக்தி விழிப்படைந்து மேலே ஏறும். அப்போது நாடி நரம்புகளில் அதிர்வுகள் உண்டாகும். நமது உடலில் மூலாதாரம், சுவாதிஷ் டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞை என்று சக்கரங்கள் உள்ளன. இந்த சக்கரங்களை குண்டலினி சக்தியை பயன்படுத்தி இயங்க செய்ய முடியும்.
அதாவது மூலாதாரத்தில் ‘லம்’ என்ற ஓசையுடனும், சுவாதிஷ்டானத்தில் ‘வம்’ என்ற ஓசையுடனும், மணிபூரகத்தில் ‘ரம்’ என்ற ஓசையுடனும், அனாகதத்தில் ‘யம்’ என்ற ஓசையுடனும், விசுத்தியில் ‘ஹம்’ என்ற ஓசையுடனும், ஆக்ஞையில் ‘ஓம்’ என்ற ஓசையுடனும் குண்டலினி சக்தியை மேலே ஏற்றினால் உன்னதமான ஆற்றல்கள் உண்டாகும். இந்த ஆற்றலை பெறும்போது ஒருவர் சித்த நிலைக்கு உயர முடியும்.
ஆனால் குண்டலினி சக்தியை தவறாக செய்து விட்டால் அது எதிர் மறை விளைவுகளை ஏற்படுத்தி விடும். எனவே குண்டலினி சக்தியை நன்கு தெரிந்து கொண்டு புரிந்து கொண்டு செய்தால் ஏராளமான நன்மைகளை பெறலாம். குறிப்பாக ஜீவ அணுக்களை மேன்மைப்படுத்தி அண்டத் தோடு கலந்து மகிழ முடியும்.
இந்த மகிழ்ச்சியை சென்னையில் உள்ள மக்களுக்கு தந்து வழிகாட்டிய மகான்களில் கன்னியப்ப சுவாமிகளும் ஒருவர். இவர் 1902-ம் ஆண்டு ஜனவரி மாதம் 2-ந்தேதி துரைசாமி முதலியாருக்கும், தனபாக்கியத்துக்கும் மகனாக பிறந்தார். சிறு வயதிலேயே இவருக்குள் ஆன்மீகத்தேடல் மிக அதிகமாக இருந்தது. அடிக்கடி சிவ ஆலயங்களுக்கு சென்று தன்னை மறந்து தவம் இருந்து அதில் மூழ்கிவிடுவார்.
இவர் பள்ளிக்கூடத்தில் சேர்க்கப்பட்ட போதிலும் ஆரம்பக்கல்வியோடு அவரது படிப்பு முடிந்துவிட்டது. விரல் நுனியை கொக்கி போல பயன்படுத்தி மரம் ஏறும் கலையை இவர் நன்கு கற்று அறிந்து இருந்தார். இந்த கலை காரணமாக அவருக்கு சர்க்கஸ் கம்பெனியில் வேலை கிடைத்தது. அந்த சர்க்கஸ் கம்பெனியுடன் அவர் இந்தியா முழுக்க சுற்றி வந்தார். பர்மாவுக்கும் சென்று வந்தார்.
ஊர் ஊராக சென்றாலும் அவருக்குள் இருந்த ஆன்மீகத் தேடுதல் வேட்டை குறையவில்லை. தனது ஆன்மாவை அறிந்து கொள்ளும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டார். இதற்காக நேரம் கிடைக்கும் போதெல்லாம் சிவனை நினைத்து தியானத்தில் ஆழ்ந்தார். சிவனை மனதுக்குள் நிறுத்தி அவர் செய்த தவத்தின் பலனாக அவருக்குள் ஞானம் மலர்ந்தது. அன்பு கொண்ட அருளாளராக அவர் வடிவெடுத்தார்.
இதன் காரணமாக சர்க்கஸ் கம்பெனி வேலையில் இருந்து விலகினார். சென்னை திருவொற்றியூரில் அப்போது பரஞ்சோதி மகான் புகழ்பெற்ற மகானாக திகழ்ந்து கொண்டிருந்தார். அவரிடம் சென்று கன்னியப்ப சுவாமிகள் சேர்ந்தார். அவருக்கு அடிப்படை பயிற்சிகள் அனைத்தையும் கொடுத்து குண்டலினி யோக கலையையும் பரஞ்சோதி மகான் கற்றுக் கொடுத்தார். பின்பு தீட்சையும் வழங்கினார்.
இதன் காரணமாக மிகச்சிறந்த சித்த புருஷராக கன்னியப்ப சுவாமிகள் மாறினார். தன்னை நாடி வருபவர்களுக்கு அவர் அருளை வாரி வாரி வழங்கினார். ஒரு கட்டத்தில் யோக பயிற்சியிலும், தீட்சை வழங்குவதிலும் குருவை மிஞ்சிய சிஷ்யனாக மாறினார்.
அவருடன் வேதாத்ரி மகரிஷியும் பயிற்சி பெற்றார். பரஞ்சோதி மகான் மூலம் வேதாத்ரி மகரிஷியும், கன்னியப்ப சுவாமிகளும் புகழ் பெற்றனர். ஆனால் இருவருக்கும் இடையே மிகப் பெரிய வேறுபாடுகள் இருந்தன. குறிப்பாக கன்னியப்ப சுவாமிகள் எதற்காகவும், யாரிடமும் கைநீட்டி காசு வாங்கவே மாட்டார்.
இதன் காரணமாக பரஞ்சோதி மகான் மடத்தில் இருந்தவர்களுக்கும், கன்னியப்ப சுவாமிகளுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனவே அவர் அங்கிருந்து வெளியேறினார். வடசென்னை பகுதியில் பழைய பத்மநாபா தியேட்டர் அருகே அப்பாயி தெருவில் ஒரு வீட்டில் குடியேறினார். இல்லற வாழ்வில் ஈடுபட்ட அவர், குடும்பத்துடன் இருந்துதான் ஆன்மீகத்தில் ஈடுபட வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
ஆன்மீக பயிற்சி பெறுவதற்கு அவர் எந்த ஒரு கட்டுப்பாட்டையும் விதித்ததே கிடையாது. பல்வேறு ஆலயங்களுக்கும் சென்று இந்து மதத்தின் சிறப்புகளை விளக்கி உரையாற்றினார். சிவபுராணத்தை செம்மையாக வெளிப்படுத்துவதில் நிகரற்று திகழ்ந்தார்.
சிவபெருமான் மீது ஏராளமான பாடல்களும் பாடினார். அவை இசைப்பாடல்களாக வெளி வந்துள்ளன. சாதாரண மனிதர்கள் போல கன்னியப்ப சுவாமிகள் வாழ்க்கை நடத்தினார். ஆனால் அவருக்குள் ஆன்மீக சக்திகள் அதிகம் இருந்தன. அந்த சக்தியின் துணை கொண்டு அவர் பல்வேறு அற்புதங்களையும் நிகழ்த்தி காட்டினார். நோய்களை தீர்த்தார். தன்னை நாடி வரும் ஒவ்வொருவரிடமும் தினமும் சிவ பூஜை செய்யும்படி கேட்டுக் கொண்டார்.
ஏழைகளுக்கு அன்னதானம் கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி செயல்படுத்தினார். மெய் கண்ட ஞான சபை என்ற சபையை உருவாக்கி குண்டலினி சக்தியை பெறுவது பற்றி மிக மிக எளிமையாக சொல்லிக் கொடுத்தார். குண்டலினி சக்தி பெறுவதை அவர் எளிமையாக சொல்லிக் கொடுத்து வழிகாட்டியது சிலருக்கு பிடிக்கவில்லை. அப்படி சொல்லிக் கொடுக்காதே என்று தடை போட்டனர்.
என்றாலும் கன்னியப்ப சுவாமிகள் ஏழைகள், நடுத்தர மக்கள் மற்றும் ஆன்மீகத்தில் ஆர்வம் உள்ளவர்களுக்கு குண்டலினி சக்தியை எளிதாக பெறும் வழிகளை சொல்லிக் கொடுத்துக் கொண்டே இருந்தார். அந்த வகையில் அவரிடம் சுமார் 6 ஆயிரம் பேர் பயிற்சி பெற்று தீட்சையும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த 6 ஆயிரம் பேருக்கும் அவர் ஞான மார்க்கத்தை போதித்து நல்வழிப்படுத்தி இருக்கிறார்.
‘உணர்வின் ஒளியும் உன்னுள் உலகமும்’ என்ற மிக சிறப்பான புத்தகத்தையும் கன்னியப்ப சுவாமிகள் எழுதி உள்ளார். 223 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகத்தின் முதல் 20 பக்கத்தை படித்தாலே போதும் குண்டலினி பயிற்சியை மிக மிக எளிதாக எப்படி கற்றுக் கொள்வது என்பதை தெரிந்து கொள்ள முடியும். குண்டலினி பயிற்சியை கற்றுக் கொடுத்ததற்காக அவர் ஒருவரிடம் கூட ஒரு பைசா வாங்கியது இல்லை. இதில்தான் அவரது தனித்துவம் அடங்கி இருக்கிறது.
எந்த தட்சணையும் பெறாமல் தீட்சை வழங்கியதால் அவர் ‘ஒப்பற்ற அருள் ஞானி’யாக இன்றும் கருதப்படுகிறார். ஆனால் தனது சக்திகள் பற்றி அவர் யாரிடமும் எதுவும் சொன்னதே கிடையாது. இவருடன் பயிற்சி பெற்றவர்கள் உலகப்புகழ் பெற்ற நிலையில் இவர் பல மகான்களை உருவாக்கி விட்டுவிட்டு சாமானிய மனிதனாக உலாவினார்.
அவரது நோக்கம் எல்லாம் மூட நம்பிக்கை இல்லாமல் ஞானம் பெறும் வழியை சுட்டிக்காட்டி இருக்கும் சித்தர்களின் பாடல்களை எல்லோரிடமும் கொண்டு சேர்ப்பதாக இருந்தது. குறிப்பாக பதஞ்சலி முனிவர் வெளிப்படுத்திய குண்டலினி யோகப்பயிற்சியை தன்னை நாடி வந்தவர்களுக்கு இலவசமாக சொல்லிக் கொடுப்பதில் உறுதியாக இருந்தார்.
இவரது சேவையை அந்த காலகட்டத்தில் ம.பொ.சிவஞானம் அடிக்கடி பல்வேறு மேடைகளில் புகழ்ந்து பேசினார். வள்ளலாருக்கு பிறகு வடசென்னையில் ஏழை, எளிய மக்களுக்கு ஆன்மீக சேவை அளித்த சிறப்பான வள்ளல் என்று இவரை பாராட்டினார். வடசென்னை பகுதி மக்களுக்கு பல்வேறு வகைகளிலும் கன்னியப்ப சுவாமிகள் விழிப்புணர்வை ஏற்படுத்தினார் என்று சொன்னால் மிகையாகாது. இதனால்தான் இன்றும் வடசென்னை பகுதி மக்கள் இவரை ‘மெய் ஞானி’ என்று புகழ்கிறார்கள்.
வடசென்னையில் உள்ள ஏழைகள் அதிகம் வசிக்கும் குடிசைப் பகுதிகளுக்கு தாமாகவே சென்று ஆன்மீகப் பயிற்சி அளிப்பதை இவர் வழக்கத்தில் வைத்து இருந்தார். சாதி, மதம், இனம் பேதம் பார்க்காமல் அவர் மக்களை குண்டலினி யோகப் பயிற்சி மூலம் நல்வழிப்படுத்தினார். அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அவர் தீட்சையும் வழங்கினார்.
தனது பொருளாதார தேவைகளுக்காக சிறிது காலம் சுவாமிகள் பேனா விற்பனை செய்யும் தொழிலையும் மேற்கொண்டார். ஒரு கால கட்டத்துக்கு பிறகு அவரது ஆன்மீக எழுச்சி மிகப்பெரிய அளவில் மாறியது. 1994-ம் ஆண்டு அவர் தன்னை சமாதி செய்து கொள்ள முடிவு செய்தார். அதன்படி 1994-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ந் தேதி அவர் பரிபூரணம் அடைந்தார்.
அம்பத்தூர் ஞானமூர்த்தி நகரில் உள்ள இந்தியன் பேங்க் காலனியில் குருசுவாமி தெருவில் அவரது மெய்கண்ட ஞான சபை இருக்கிறது. அங்கு அவர் ஜீவசமாதி செய்யப்பட்டுள்ளார். அவர் உயிரோடு வாழ்ந்த வரை ஆண்டுதோறும் தனது பிறந்தநாளை ஆண்டுவிழாவாக கொண்டாடி வந்தார். அவர் ஜீவசமாதி ஆன பிறகு அது குருபூஜையாக நடத்தப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 2-வது ஞாயிற்றுக்கிழமை மெய் கண்ட ஞான சபையில் குருபூஜை நடத்தப்படுகிறது. வருகிற 13-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) 28-வது ஆண்டு குருபூஜை நடைபெற உள்ளது. அன்று சிறப்பு பூஜைகளும், அன்னதானமும் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
அம்பத்தூரில் உள்ள மெய் கண்ட ஞான சபையில் தியானம் செய்வதற்கு வசதிகள் உள்ளது. குண்டலினி யோக பயிற்சியில் மேன்மை பெற விரும்புவோர்கள் அங்கு அமர்ந்து தியானித்தால் கன்னியப்ப சுவாமிகளின் அருள்- வழிகாட்டியாக கிடைக்கும்.
அவரது ஜீவசமாதியை பேரன் ஞானபிரகாசம் பராமரித்து வருகிறார். அவரை 98408 12939 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல்கள் பெறலாம்.