No results found

    சென்னை சித்தர்கள்: குணங்குடி மஸ்தான் சாகிபு


    தண்டையார்பேட்டைக்கு அந்த பெயர் எப்படி வந்தது தெரியுமா? பல ஆண்டுகளுக்கு முன்பு தற்போதைய தண்டையார்பேட்டை பகுதியை தொண்டியார் பேட்டை என்று அழைத்து வந்தனர். பிறகு அது தொண்டையார்பேட்டை என்று ஆனது. நாளடைவில் மக்கள் பேச்சு வழக்கில் அது தண்டையார்பேட்டையாக மாறிவிட்டதாக சொல்கிறார்கள்.

    இங்கு சென்னையில் வாழ்ந்த சித்தர்களில் தனித்துவம் நிறைந்த சித்த புரு‌ஷராக குணங்குடி மஸ்தான் சாகிபு வாழ்ந்தார். இவரது பூர்வீகம் ராமநாதபுரம் மாவட்டம், தொண்டிக்கு வடமேற்கே 10 மைல் தொலைவில் உள்ள குணங்குடி என்னும் கிராமம் ஆகும். இதனால் தான் இவரை தொண்டியார் என்று அழைத்தனர். இவர் சிறுவயதிலேயே இறை ஞானியாக மாறியதும் இறை தேடலுக்காக நாடு முழுவதும் சுற்றி அலைந்ததும் இறுதியில் சென்னையில் தன்னை பரிபூரணம் செய்து கொண்டதும் மிகப்பெரிய அற்புதமாக கருதப்படுகிறது.

    1788-ம் ஆண்டு பிறந்த இவருக்கு சுல்தான் அப்துல் காதர் என்று பெயர் சூட்டினார்கள். செல்வ செழிப்பான குடும்பத்தில் பிறந்தாலும் சிறுவயதிலேயே இவருக்கு இறைவன் மீது நாட்டம் ஏற்பட்டது. தமிழிலும், அரபியிலும் ஆழ்ந்த புலமை பெற்ற இவர் சிறுவயதிலேயே இறைவன் மீது பாடல்கள் எழுதும் திறனை பெற்றிருந்தார்.

    மேலும் குரான் உள்ளிட்ட சமய நூல்களையும் அதிகம் கற்று பக்குவத்தையும் எட்டி இருந்தார். சிறுவயதில் அவர் இறைவன் மீது காட்டிய ஆர்வத்தை குடும்பத்தினர், உறவினர்கள் பெரிதாக நினைக்கவில்லை. ஆனால் நாட்கள் செல்லச்செல்ல அவரது இறைதேடல் அதிக மானதும் குடும்பத்தினர் முதலில் சற்று பயந்து போய்விட்டனர்.

    இவர் திருமண வயதை அடைந்தபோது இவரது உறவினர்கள் இவரது தாய்மாமன் மகளான மைமூன் என்ற பெண்ணை திருமணம் செய்துவைக்க முடிவு செய்தனர். சுல்தான்அப்துல் காதரை கலந்து பேசாமலேயே திருமணத்துக்கான ஏற்பாடுகளை செய்தனர். ஆனால் அப்துல் காதருக்கு திருமணம் செய்து கொண்டு இல்லறத்தில் ஈடுபட விருப்பம் இல்லாமல் இருந்தது.

    குடும்பத்தில் உள்ள பெரியவர்களையும், உறவினர்களையும் அழைத்த அவர் தனது நிலையை விளக்கமாக எடுத்துச்சொன்னார். இறைவனை தேடி தனது பயணம் இருக்கும் என்றும் கூறினார். இதனால் அவரது உறவினர்கள் திருமண பேச்சை கைவிட்டனர். 17-வது வயதில் அவரது தந்தையும் திருமணத்துக்கு வற்புறுத்த மாட்டேன் என்று தெரிவித்து விட்டார்.

    அதன்பிறகு அப்துல் காதரின் ஆன்மிக பயணம் தங்குதடையின்றி தொடர ஆரம்பித்தது. இஸ்லாத்தில் இறைவனை அறியவும், அவனை அடையவும் வழிகாட்டும் பாதைக்கு ‘தரீக்கா’ என்று பெயர். இறைஞானிகளை தரீக்காக்கள் என்று அழைப்பார்கள். அப்துல் காதர் தரீக்காவின் ஷேக் அல்துல் காதிரி லெப்பை என்பவரிடம் மதக்கோட்பாடுகளை கற்று அறிந்தார்.

    1813-ம் ஆண்டு மவுனபி ஷாம் சாகிப் என்பவரிடம் தீட்சை பெற்று இஸ்லாமிய யோக நெறியில் வாழ்ந்தார். இதனால் ‘ஆலிம்’ எனும் இஸ்லாமிய சமய கல்வி அறிஞர் பட்டத்தையும் பெற்றார். ஆலிம் என்றால் இஸ்லாம் தொடர்பான பல்வேறு துறைகளை நன்கு கற்றறிந்தவர் என்று பொருள் ஆகும்.

    கீழக்கரை உள்பட பல்வேறு தலங்களுக்கு சென்று தன்னை மேம்படுத்திக்கொண்டார். ஒரு காலகட்டத்தில் பித்தர் போன்று தலைவிரி கோலமாக அலையத்தொடங்கினார். சில காலங்கள் அவர் நாடோடி போலவே வாழ்ந்தார். தெய்வீக நாட்டம் அதிகம் இருந்ததால் இயல்பான வாழ்க்கையில் இருந்து விடுபட்டு இறைஞானியாக சுழன்றுகொண்டே இருந்தார்.

    சதுரகிரி மலை உள்பட பல இடங்களுக்கு சென்று தவத்தில் ஈடுபட்டார். பல்வேறு மலைகளில் மாதக்கணக்கில் தவம் இருப்பதை வழக்கத்தில் வைத்து இருந்தார். சில மலை பகுதிகளில் காட்டு விலங்குகள் அதிக நடமாட்டம் இருக்கும். அத்தகைய காடுகளிலும் அடர்ந்த பகுதிக்கு சென்று பல்லாண்டுகள் தனித்து இருந்து தியானத்தில் ஈடுபட்டார்.

    அத்தகைய அடர்ந்த வனத்தில் இருந்த காலத்தில் அவர் உணவுக்கு என்ன ஏற்பாடு செய்துகொண்டார் என்பது இதுவரை யாருக்கும் தெரியாத ஒன்றாகும். சில நாட்களில் அவரை தேடி வனப்பகுதியில் இருக்கும் பலர் சென்றதுண்டு. அப்போது ஏதாவது ஒரு மரத்தில் தலைகீழாக தொங்கிக்கொண்டு கிடப்பதை பார்த்துள்ளனர்.

    இப்படி ஒருநாள் 2 நாள் அல்ல, 7 ஆண்டுகள் கடந்தன. அதன்பின் அவர் நாடுமுழுவதும் சென்றார். ஒரு சமயம் காரைக்கால் சென்று அங்குள்ள ஒரு குப்பை மேட்டில் தங்கி காலத்தை கழித்தார். அவர் இருந்த குப்பை மேட்டுப்பகுதியில் அந்த பகுதி மக்கள் குப்பைகளை கொண்டுவந்து அவர் இருப்பதை கண்டு கொள்ளாமலேயே கொட்டிவிட்டு செல்வார்கள். ஆனால் அவர் எதையும் பொருட்படுத்துவது கிடையாது.

    ஒரு காலகட்டத்துக்கு பிறகுதான் அவர் மிகப்பெரிய இறைஞானி என்ற உண்மை பலருக்கும் தெரியவந்தது. அதன்பிறகு அவரை மரியாதையுடன் நடத்தினார்கள் என்றாலும் சில ஆலிம்கள் அவரது செயலை வெறுத்தனர். குப்பைமேட்டில் தங்கி இருந்து போலி துறவியாக வேடம்போடுவதாக குற்றம்சாட்டினார்கள்.

    அவர்கள் தண்ணீரை அப்துல் காதர் மீது ஊற்றிவிட்டு தொழுகை நடத்த ஆரம்பித்தனர். அப்போது இறைஞானி அப்துல் காதர் சிறிய சித்தாடல் ஒன்றை நடத்தினார். தன்னை நோக்கி தொழுதவர்களை அப்படியே உணர்வற்று நிற்க செய்துவிட்டார். அவர்கள் உணர்வற்ற நிலையில் தொழுகை செய்துகொண்டே இருந்தனர். 3 நாட்கள் தொடர்ந்து அவர்கள் அந்த நிலையிலேயே நிற்கவேண்டியதாகி விட்டது.

    அதன்பிறகுதான் அப்துல் காதர் மிகப்பெரிய இறைஞானி என்று ஆலிம்கள் அனைவரும் புரிந்துகொண்டனர். அவரை மரியாதையுடன் மஸ்தான் என்று அழைக்கத்தொடங்கினார்கள். பிறகு அவர் பெயருடன் சேர்த்து சாகிப் மஸ்தான் என்று சொல்லத் தொடங்கினார்கள். நாளடைவில் அவரது சொந்த ஊரான குணங்குடியையும் சேர்த்து குணங்குடி மஸ்தான் என்று அழைக்க ஆரம்பித்தனர்.

    சிறிதுநாட்கள் திருப்பரங்குன்றம் மலைக்கு சென்று 40 நாட்கள் தனிமையில் தவத்தில் ஈடுபட்டார். இதன் காரணமாக இறைவனுடைய நினைவை தவிர்த்து வேறு எந்த செயலிலும் அவரது மனம் செல்லவில்லை. பின்னர் அறந்தாங்கி நகருக்கு அருகே உள்ள கலகம் என்ற ஊரில் 6 மாதம் தங்கி இருந்து தவம் செய்தார்.

    இதையடுத்து சதுரகிரி, பிரான்மலை, நாகமலை உள்பட பல்வேறு பகுதிகளுக்கு சென்று தவம் செய்தார். ஆழ்ந்த தவம் காரணமாக அவரிடம் இருந்து உலக பற்றுகள் அனைத்தும் நீங்கியது. இறைவன் மீது கொண்ட பற்றால் இஸ்லாம் மார்க்கத்தில் முழுமையாக ஈர்க்கப்பட்டார். நாடு, நகரம், மொழி, இனம் அனைத்திலும் வேறு பாடு பார்க்காமல் ஒருமித்த மனநிலையில் வாழ்ந்தார்.

    அவரது தவமும், மனப்பக்கு வமும் அவரை இயற்கையோடு இயற்கையாக வாழ வைத்தது. சில மாதங்கள் வடமாநிலங்களுக்கு சென்றுவந்தார். அங்கு நூற்றுக் கணக்கானவர்களுக்கு ஞான உபதேசம் செய்து அவர்களையும் ஆன்மிகத்தில் மேம்படுத்தினார்.

    இறுதியில் வடசென்னை பகுதிக்கு வந்தார். அங்கு பாவா லெப்பை என்ற இஸ்லாமியருக்கு சொந்தமான இடத்தில் தங்கினார். அந்த இடம் அடர்ந்த முட்புதர்களும், சப்பாத்திகள்ளியும் கொண்ட பகுதியாக இருந்தது. அங்கிருந்த குப்பை மேட்டில் தனது இருப்பிடத்தை மஸ்தான் சாகிபு அமைத்துக்கொண்டார்.

    யாருடைய தொந்தரவும் இல்லாமல் அந்த பகுதியில் அவர் நீண்ட நாட்கள் தவத்தில் இருந்தார். இதன்காரணமாக இருந்த இடத்தில் இருந்தே அற்புதங்கள் நிகழ்த்தும் சக்தி அவரிடம் காணப்பட்டது. நிறைய சித்தாடல்களை இருந்த இடத்தில் இருந்தே நிகழ்த்திக் காட்டினார். அவற்றில் சில மட்டும் பதிவாகி இருக்கிறது.

    இவரது மகிமையை உணர்ந்த மக்கள் இவரை தேடி வந்து பணிவிடைகள் செய்து ஞானம் பெற்றனர். நிறைய பேருக்கு இவர் தீட்சை அளித்துள்ளார். சென்னையில் அந்த காலத்தில் வாழ்ந்த ஆற்காடு நவாப் இவரிடம் தீட்சை பெற்றதாக உறுதி செய்யப்பட முடியாத ஒரு தகவல் உள்ளது. இஸ்லாமியர்கள் மட்டு மின்றி ஏராளமான இந்துக்களும் இவர் காட்டிய ஞானமார்க்கத்தில் மனதை பறி கொடுத்தனர்.

    இதனால் சாதி, மத வேறுபாடு இல்லாமல் இவரை எல்லா மதத்தினரும் தேடி வந்தனர். குறிப்பாக இந்துமத தத்துவங்களில் மேன்மை பெற்றவர்களும் இவரை தேடி வந்தது குறிப்பிடத்தக்கது. மகா வித்துவான், சரவண பெருமாள் அய்யர், கோவளம் சபாபதி முதலியார் ஆகியோர் குணங்குடி மஸ்தான் சாகிபிடம் ஞானம் பெற்றவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவார்கள்.

    இஸ்லாமிய சமயத்தை குறித்தும், இறைவனை குறித்தும் இவர் இயற்றிய தமிழ் இலக்கியங்கள் புகழ்பெற்றவை. அவர் எழுதிய 24 கீர்த்தனைகள் உள்பட 1,057 பாடல்கள் முக்கியமானவைகளாக கருதப்படுகின்றன. குணங்குடி மஸ்தான் படைப்புகளில் அகத்தீசர் சதகம், ஆனந்த களிப்பு, நந்தீசர் சதகம், நிராமயக்கண்ணி, பராபரக்கண்ணி, மனோன்மணிக்கண்ணி ஆகியவை தனித்துவம் கொண்டவை.

    தவநிலை, துறவுநிலை, தியான நிலை, சமாதிநிலை உள்பட பல்வேறு நிலைகளை குணங்குடி மஸ்தான் சாகிபு பாடல்கள் வெளிப்படுத்துகின்றன. ஆனால் 1838-ம் ஆண்டு தனது 47-வது வயதில் அவர் முக்தி அடைந்தார்.

    குறைந்த காலமே வாழ்ந்தாலும் அவர் இந்த உலகுக்கு அருளிச்சென்றது ஏராளம்.அவர் தங்கியிருந்த பழைய வண்ணாரப்பேட்டை, மொட்டை தோட்டம் மேற்கு கல்மண்டபம் பகுதியில் உள்ள பிச்சாண்டி சந்து என்னும் இடத்தில் அவர் நினைவிடம் (தர்கா) அமைந்துள்ளது. அங்கு சென்று தியானம் செய்து குணங்குடி மஸ்தான் சாகிபுவை தியானித்தால் நிச்சயமாக அவரது அருள் அலைகளை உணர முடியும்.

    Previous Next

    نموذج الاتصال