No results found

    சென்னை சித்தர்கள்: பாம்பாட்டி சித்தர் என்ற குப்புசாமி அய்யா -தண்டையார்பேட்டை


    திருமண வாழ்க்கையில் குப்புசாமிக்கு ஈடுபாடு இல்லை. இல்லறத்தில் நாட்டம் இல்லாமல் வாழ்ந்து வந்தார். பத்மாவதியுடன் 10 ஆண்டுகள் மட்டுமே அவர் குடும்பம் நடத்தினார்.

    சித்தர்களை அவ்வளவு எளிதில் உணர்ந்து கொள்ள இயலாது. ஒரு சித்தரைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் அது இன்னொரு சித்தரால்தான் முடியும். சாதாரண மனிதர்களால் சித்தர்களையோ அவர்களது சித்தாடல்களையோ உணர்ந்து கொள்ளவே முடியாது.

    இந்த பூமியில் வாழ்ந்து ஜீவ சமாதி ஆகி உள்ள சித்தர்களில் 99 சதவீதம் பேர் இப்படித்தான் வாழ்ந்து விட்டு சென்றுள்ளனர். அவர்கள் பரிபூரணம் ஆன பிறகுதான் அவர்கள் பற்றிய தகவல்கள் வெளியில் தெரிய வரும். வடசென்னையில் ஐக்கியமாகி உள்ள பல சித்தர்களின் அருமைகள், சிறப்புகளை இப்போதுதான் மக்கள் உணர தொடங்கி இருக்கிறார்கள்.

    அந்த வரிசையில் தண்டையார்பேட்டையில் வாழ்ந்து பரிபூரணம் அடைந்த பாம்பாட்டி சித்தர் என்ற குப்புசாமி அய்யா சித்தரும் ஒருவர் ஆவார். இவர் பிறந்தது வளர்ந்தது எல்லாமே சென்னையில்தான். இவருக்குள் எப்படி சித்தர்களுக்குரிய ஆற்றல் வந்தது என்பது இன்னமும் முழுமையாக தெரியவில்லை.

    வடசென்னையில் சின்னய்யா நாயுடுவுக்கும், மாணிக்கம் அம்மாளுக்கும் இவர் மகனாக பிறந்தார். அவருக்கு பெற்றோர் குப்புசாமி என்று பெயரிட்டனர். குப்புசாமிக்கு சிறுவயதில் ஆன்மீக நாட்டம் இருந்தது. ஆனால் அவர் சித்தராக மாறப் போகிறார் என்பது யாருக்குமே தெரியாது. வறுமையுடன் போட்டி போட்டு வாழ்ந்த குடும்பத்தில் பிறந்த அவர் சிறிதளவே கல்வி கற்று இருந்தார்.

    அவரது 20-வது வயதில் அவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முடிவு செய்தனர். ஆனால் தனக்கு இப்போது திருமணம் வேண்டாம் என்று அவர் மறுத்தார். என்றாலும் திருமண ஏற்பாடுகள் தொடர்ந்து நடந்ததால் வீட்டை விட்டு வெளியே எங்கோ சென்று விட்டார். அவர் எங்கே போனார்? என்ன ஆனார்? என்பதெல்லாம் மர்மமாகவே இருந்தது.

    சுமார் 40 வயது ஆன நிலையில் அவர் வீட்டுக்கு திரும்பி வந்தார். 20 ஆண்டுகளாக எங்கே சென்று இருந்தீர்கள் என்ற கேள்விக்கு ராணுவத்தில் டிரைவராக சேர்ந்து பணிபுரிந்து வந்ததாக கூறினார். வேறு எந்த தகவல்களையும் அவர் வெளியிடவில்லை. அவருக்கு ஈரோடு பெரியார் பாசறையில் பயின்று வளர்ந்த பத்மாவதி என்ற பெண்ணை வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைத்தனர்.

    திருமண வாழ்க்கையில் குப்புசாமிக்கு ஈடுபாடு இல்லை. இல்லறத்தில் நாட்டம் இல்லாமல் வாழ்ந்து வந்தார். பத்மாவதியுடன் 10 ஆண்டுகள் மட்டுமே அவர் குடும்பம் நடத்தினார். அதன் பயனாக 3 மகன்களும், ஒரு மகளும் பிறந்தனர். அதன் பிறகு குப்புசாமி இல்லற வாழ்க்கையை துறந்து தனிமையில் இருக்கத் தொடங்கினார்.

    ரெயில்வேயில் என்ஜின் டிரைவராகவும், துறைமுகத்தில் கிரேன் ஆபரேட்டராகவும் சில மாதங்கள் பணிபுரிந்தார். பின்னர் தங்கசாலை தமிழ்நாடு அரசு கவர்மெண்ட் பிரஸ்சில் மிஷின் ஆபரேட்டராக வேலைக்கு சேர்ந்தார். அங்கு அவர் பணியில் நீடிக்க முடியவில்லை.

    இதையடுத்து தண்டையார்பேட்டை அருணாசலேஸ்வரர் ஆலயத்தின் பின்புறத்தில் உள்ள மெட்டல்பாக்ஸ் என்ற நிறுவனத்தில் மிஷின் ஆபரேட்டராக பணியில் சேர்ந்தார். அவருக்கு 108 ரூபாய் மாத சம்பளம் கொடுக்கப்பட்டது. ஆனால் அந்த பணத்தையெல்லாம் அவர் வடசென்னையில் உள்ள சாதுக்களுக்கு செலவு செய்து விடுவார். அல்லது அயன்புரத்தில் உள்ள டி.பி. ஆஸ்பத்திரிக்கு கொடுத்து விடுவார்.

    இப்படி வாழ்ந்து வந்த அவர் ஒரு சமயம் திருப்பதிக்கு நடந்தே சென்றார். கீழ்திருப்பதியில் இருந்து திருமலைக்கு மலைப்பாதையில் நடந்து சென்றபோது அவரை ஒரு பெரியவர் வந்து அழைத்துச் சென்றது போல் இருந்தது. இந்த நிகழ்வுக்கு பிறகு குப்புசாமியின் நடவடிக்கைகளில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டது.

    திருப்பதி ஆலயத்தில் இருந்து தண்டையார் பேட்டைக்கு திரும்பியதும் தனது வீட்டுக்குள் நுழைந்த குப்புசாமி ஆடைகள் அனைத்தையும் களைந்து விட்டு அவதூதராக மாறினார். அந்த நிலையிலேயே ஒரு அறைக்குள் போய் உட்கார்ந் தார். அதன் பிறகு அவர் அந்த அறையை விட்டு வெளியில் வரவே இல்லை.

    சுமார் 30 ஆண்டுகள் அவர் அந்த அறைக்குள்ளேயே இருந்தார். வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அவரது உண்மையான ஆற்றல் ஒரு துளி அளவுக்கு கூட தெரியவில்லை. இதுபற்றி அவர் கூறுகையில், “வயசு பொண்ணு மாதிரி மறைந்து இருந்து வாழ்கிறேன்” என்று அடிக்கடி சொல்வார்.

    அவதூதராக மாறிய பிறகு அவரது நடவடிக்கைகள் அனைத்திலும் மாற்றங்கள் ஏற்பட்டன. அவர் இருந்த அறைக்குள் ஏராளமான பாம்புகள் சர்வ சாதாரணமாக இருந்தன. ஆங்காங்கே கூறைகளில் பாம்புகள் தொங்கிக் கொண்டு இருப்பதும் உண்டு. இதனால் அந்த அறைக்குள் அவ்வளவு எளிதாக யாரும் சென்று விட முடியாது.

    பாம்புகளை அவர் விரட்டுவது இல்லை. போ என்று சொல்வார் போய் விடும். பாம்புகளுடன் சேர்ந்து வாழ்ந்ததால் அவரை அந்த பகுதி மக்கள் பாம்பாட்டி சித்தர் என்று சொல்லத் தொடங்கினார்கள். இதனால் அவரது பெயருக்கு முன்பு பாம்பாட்டி சித்தர் என்ற பெயர் ஏற்பட்டு பேசப்படும் வகையில் மாறியது.

    ஆனால் மருதமலையிலும் பாம்பாட்டி சித்தர் என்ற புகழ்பெற்ற சித்தர் இருப்பதால் இவரை பாம்பாட்டி சித்தர் என்ற குப்புசாமி அய்யா என அழைக்க தொடங்கினார்கள். அந்த பெயரே நின்று நிலைத்துள்ளது.

    சாதாரண மக்களின் தொல்லையில் இருந்து விடுபடுவதற்காகவே தங்களை சித்தர்கள் வேறு விதமாக மறைத்துக் கொள்வார்கள். அதுபோல குப்புசாமி அய்யாவும் மறைந்து இருந்து வாழ வேண்டும் என்று சொல்லியே தன்னை சுற்றி ஒரு வளையம் அமைத்துக் கொண்டார்.

    அவரை பற்றி முதலில் யாருக்கும் எந்த தகவலும் வெளியில் தெரியவில்லை. ஆனால் ஒரு கால கட்டத்துக்கு பிறகு மற்ற சித்தர்கள் மூலம் பாம்பாட்டி சித்தர் என்ற குப்புசாமி அய்யா சித்தர் பற்றி தகவல்கள் தெரிய தொடங்கின.

    பாரிமுனை லிங்குசெட்டி தெருவில் வாழ்ந்த பாபா அருள்வெளி சித்தர் அடிக்கடி, “என் குருநாதர் தண்டையார்பேட்டையில் உள்ள ஓட்டு வீட்டுக்குள் ஒளிந்துக் கொண்டிருக்கிறார். அவரை போய் முதலில் பாருங்கள்” என்று சொல்வது உண்டு. முதலில் நிறைய பேருக்கு அருள்வெளி சித்தர் யாரை சொல்கிறார் என்று புரியாமல் இருந்தது. நாளடைவில் குப்புசாமி அய்யா சித்தர் பற்றி பொதுமக்கள் தெரிந்து கொள்ள தொடங்கினார்கள்.

    அதுபோல காஞ்சீபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் இருந்த போடாசாமி சித்தர் அடிக்கடி குப்புசாமி அய்யா சித்தர் பற்றி குறிப்பிட்டு பேசுவது உண்டு. தண்டையார்பேட்டை ஓட்டு வீட்டில் இருக்கும் என் குருநாதரை போய் பாருங்கள் என்று தன்னை தேடி வரும் ஒவ்வொருவரிடமும் அவர் சொல்ல தவறியதில்லை.

    இந்த இரு சித்தர்களும் தங்கள் குருநாதர் என்று குப்புசாமி அய்யாவை குறிப்பிட்டதால் பலரும் தண்டையார்பேட்டையில் அவர் எங்கிருக்கிறார் என்று தேடி வரத்தொடங்கினார்கள்.

    ஸ்ரீரங்கம் கோவில் முன்னாள் அதிகாரி ஜெ.சி. சிவகுமார், முன்னாள் இந்து சமய அறநிலையத் துறை ஐ.ஏ.எஸ். அதிகாரி ராமதாஸ், அலமாதி தங்கவேல் முருகன் கோவிலை நிர்வகித்து வரும் ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவகுமார், மறைந்த முன்னாள் டி.ஜி.பி. ஸ்ரீபால், இசை அமைப்பாளர் கங்கைஅமரன், மறைந்த போலீஸ் அதிகாரி பொன்.பரமகுரு, நடிகர் சண்முகசுந்தரம், ராஜீவ்காந்தி மருத்துவமனை தலைமை அதிகாரியாக இருந்த டாக்டர் சதாசிவம், ஜூபிட்டர் பிலிம்ஸ் தயாரிப்பாளர் காசி உள்பட பல பிரபலங்கள் அடிக்கடி குப்புசாமி அய்யா சித்தரை பார்த்து ஆசி பெற்று செல்வது உண்டு.

    பெரும்பாலும் குறி கேட்பது போன்று வருபவர்களை குப்புசாமி அய்யா சித்தர் தன் அருகில் சேர்த்துக் கொள்வது இல்லை. 10 பேர் வந்தால் ஒன்று அல்லது இரண்டு பேர்தான் அவரது பார்வையை பெற முடியும். சிலரை பார்த்ததும், “ஏய் தொழிலாளி” என்று விட்டத்தை பார்த்து அழைப்பார். அது அவரது பரிபாஷை ஆகும்.

    சிலரை பார்த்ததும் தனது தாடிக்குள் குச்சியை விட்டு வெளியே எடுப்பார். இது தோ‌ஷத்தை கழிப்பதற்கு சமம் என்று சொல்வார்கள். யாராவது அவரிடம் பிரச்சினைகளை பற்றி சொன்னால், “நான் என்ன சாமியாரா” என்று சீறி விடுவார். “என்னை அம்மா அனுப்பி இருக்காங்க... நிறைய வேலை இருக்கு” என்று அடிக்கடி சொல்லிக் கொண்டே இருப்பார்.

    எந்த உணவாக இருந்தாலும் அதை மண் தரையில் கொட்டித்தான் சாப்பிடுவார். பெரும்பாலும் தியானத்தில் இருப்பார். இல்லையெனில் “நாராயணா” என்று குரல் கொடுத்து கொண்டே இருப்பார். இப்படி தன்னை ஒரு அறைக்குள் அடக்கிக்கொண்டு வாழ்ந்த குப்புசாமி அய்யா சித்தர் 1995-ம் ஆண்டு பங்குனி மாதம் பூராடம் நட்சத்திரம் தினத்தன்று பரிபூரணமானார்.

    பெரம்பலூர் தலையாட்டி சித்தர், அன்னை சித்தர், ராஜகுமார சுவாமிகள் ஆகியோர் முன்னின்று குப்புசாமி அய்யா சித்தரை ஜீவ சமாதி வைத்து பூஜைகள் நடத்தினார்கள்.

    அவரை ஜீவ சமாதி செய்தபோது கடுமையான மழை பெய்து அவரை அபிஷேகம் செய்தது போல மாற்றியது. தண்டையார்பேட்டை சுடுகாட்டில் அவரது ஜீவ சமாதி அமைந்தாலும் அவர் வாழ்ந்த தண்டையார்பேட்டை வரதராஜ பெருமாள் கோவில் தெருவில் உள்ள அவரது வீட்டில் அருள் அலைகள் இன்னமும் நீடித்துக் கொண்டேதான் இருக்கிறது. இரவு நேரங்களில் அவர் வந்து செல்வது பலராலும் உணரப்பட்டு இருக்கிறது.

    அவர் வாழ்ந்த காலத்தில் தனது அறைக்குள் வெறும் மண் தரையில்தான் அவதூதர் கோலத்தில் அமர்ந்து இருந்தார். எனவே அந்த இடத்து மண், பிரசாதம் போல வழங்கப்படுகிறது. அந்த அறைக்குள் மண் எடுக்க எடுக்க ஊற்று போல பொங்கி வந்து கொண்டிருப்பதாக சொல்கிறார்கள்.

    அதோடு சீட்டு எழுதி போட்டு உத்தரவு பெறும் நடைமுறையும் இங்கு உள்ளது. 1. செய்யலாம், 2.வேண்டாம், 3.அப்புறம் பார்க்கலாம் என்று 3 வகையாக எழுதி போட்டு அதில் ஒரு சீட்டை எடுத்து பார்க்கிறார்கள். அதில் என்ன உத்தரவு வருகிறதோ அதை அப்படியே கடைபிடிக்கும் பழக்கம் அவரது பக்தர்களிடம் உள்ளது.

    அவர் வாழ்ந்த வீடு பாம்பாட்டி சித்தர் பீடமாக மேம்படுத்தப்பட்டுள்ளது. அங்கு குப்புசாமி அய்யா சித்தரின் உருவப்படங்கள் வைத்து தினமும் பூஜைகள் நடந்து வருகின்றன. குப்புசாமி அய்யா சித்தரின் மகன் கோதண்டன் இந்த பூஜைகளை தினமும் சிரத்தையாக செய்து வருகிறார்.

    அவர் கூறுகையில், “சித்தர் சுவாமிகளை நான் அப்பா என்று அழைத்ததே கிடையாது. அவரும் அதை விரும்பியது இல்லை. குடும்ப உறவுகளில் இருந்து அவர் தன்னை விடுவித்துக் கொண்டார். எனவே ஒரு பக்தனாக இருந்து நான் இந்த ஜீவ சமாதியில் தொண்டு செய்து வருகிறேன்” என்றார்.

    ஒவ்வொரு ஆண்டும் இந்த ஜீவ சமாதியில் பங்குனி மாதம் பூராடம் நட்சத்திரம் தினத்தன்று மகாபூஜை நடத்தப்படுகிறது. அதன்படி இன்று (சனிக்கிழமை) குப்புசாமி அய்யா சித்தரின் 27-ம் ஆண்டு குருபூஜை நடந்து வருகிறது. இந்த இடத்தில் யார் கால்பதிக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டு இருக்கிறதோ அவர்கள் மட்டுமே வந்து செல்வார்கள் என்று பாம்பாட்டி சித்தர் என்ற குப்புசாமி அய்யா சித்தர் ஒரு தடவை அருளி உள்ளார்.

    அதன்படி குப்புசாமி அய்யா சித்தர் அருள் பெற்றவர்கள் தவறாமல் இந்த ஜீவ சமாதிக்கு சென்று தங்களை ஆத்மஞானம் பெறும் வகையில் மேம்படுத்திக் கொள்கிறார்கள். முடிந்தால் நீங்களும் இந்த ஜீவ சமாதிக்கு சென்று வாருங்கள். இது தொடர்பான தகவல்களை கோதண்டனிடம் 9940587411 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். 

    Previous Next

    نموذج الاتصال