No results found

    சென்னை சித்தர்கள்: சாதுராம் சுவாமிகள்- நங்கநல்லூர்


    திருப்போரூரில் முதியவர் மடித்துப் போட்ட காகிதத்தில் 108 ஹரஹரோ ஹர நாமாவளிகள் தன்னுடைய கையெழுத்திலேயே எழுதி இருந்ததை பார்த்து சேதுராமன் ஆச்சரியம் அடைந்தார். வேல்மாறல் பாடினால் வினைகள் தீரும் என்று சொல்வார்கள். வேல்மாறல் பாடப்பாட மனநலம் மட்டுமல்ல, உடல் நலமும் மேம்படும். அந்த அளவுக்கு வேல்மாறல் மந்திரம் சக்தி வாய்ந்தது. வேல்மாறல் என்பது முருகனைப் போற்றி முருகப்பெருமானின் அருள் பெறுவதற்காக அருணகிரிநாதரால் பாடப்பட்டதாகும். அவரது வரிகளை பாடியவர்கள் தங்களின் பிரச்சினைகளில் இருந்து விடுபட்டனர். இதனால்தான் பல முருகர் தலங்களில் வேல்மாறல் உணர்வுப்பூர்வமாக பாடப்பட்டு வருகிறது. எந்தவொரு பாராயணமும் பலன் கொடுப்பதற்கு ஒரு மண்டலம் ஆகும் என்று சொல்வார்கள். ஆனால் வேல்மாறல் பாராயணம் உடனே பலன் கொடுக்கும் ஆற்றல் கொண்டது. இத்தகைய சிறப்புடைய வேல்மாறல் பாடல்களின் வரிகளை முன்னும், பின்னும் மாற்றிப் போட்டு புதிய கவசம் ஒன்றை வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகள் உருவாக்கினார்.

    அவரிடம் சீடராக இருந்தவர் சாதுராம் சுவாமிகள். இவர் வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகள் உருவாக்கிய வேல்மாறல் கவசத்தை பிரத்யேக யந்த்ர வடிவில் வடிவமைத்து அதன் புகழை பரப்பினார். இந்த யந்த்ர வடிவ வேல்மாறல் கவசம் இன்றும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு பலன் அளித்துக் கொண்டிருக்கிறது. இந்த யந்த்ரத்தை உருவாக்கிய சாதுராம் சுவாமிகளின் ஜீவசமாதி நங்கநல்லூரில் ஸ்டேட் பாங்க் காலனியில், மாடர்ன் பள்ளி அருகில் அமைந்துள்ளது. குடியிருப்புகளுக்கு மத்தியில் அமைந்துள்ள இந்த ஜீவசமாதி ஆலயத்தை ‘பொங்கி மடம்’ என்று அழைக்கிறார்கள். இந்த மடாலய ஜீவசமாதியில் அமர்ந்து வேல்மாறல் பாராயணம் செய்தால், கேட்டதெல்லாம் கிடைக்கும் என்பது பலரும் அனுபவித்த உண்மையாகும். இதற்கு வித்திட்ட சாதுராம் சுவாமிகள் கடந்த நூற்றாண்டில் சென்னையில் பிறந்து வளர்ந்தார்.

    இவரது இயற்பெயர் சேதுராமன். 1944-ம் ஆண்டு பழனியில் நடைபெற்ற திருப்புகழ் மாநாட்டிற்கு உறவினர்களுடன் சேதுராமன் சென்றிருந்தார். அப்போது ஸ்ரீவள்ளி மலை சுவாமிகள் ‘உம்பர் தருது எனும் விநாயகர் திருப்புகழையும், ‘மதியால் வித்’ என தொடங்கும் கருவூர்த் திருப்புகழையும் ராக தாளத்துடன் பதம் பிரித்து பாடினார். இதன் மூலம் ‘உபதேச தீட்சை’ வழங்கினார். அந்த சிறுவயதில் சேதுராமனுக்கு கொஞ்சம், கொஞ்சமாக ஆன்மீக அமுதம் உருவாகத் தொடங்கியது. ஆனால் அவர் வள்ளிமலை சுவாமிகளுக்கு காது கேட்காது என நினைத்து கொண்டிருந்தார். ஒரு தடவை வள்ளி மலை சுவாமிகளை பார்த்து உரத்த குரலில் ‘தாத்தா’ என்று கத்தினார்.

    வள்ளிமலை சுவாமிகளுக்கு இதனை கேட்டதும் கோபம் வந்தது. சேதுராமனின் தலையில் ‘நச்’ என ஒரு குட்டு குட்டினார். அந்த குட்டை தனக்கு கிடைத்த தீட்சையாக சேதுராமன் கருதினார். வள்ளிமலை சுவாமிகளிடம் இருந்து மிகப்பெரிய விலை மதிப்பில்லாத ஆசீர்வாதம் தனக்கு கிடைத்து விட்டதாக நினைத்து நினைத்து மகிழ்ந்தார். 1950-ம் ஆண்டு வள்ளிமலை சுவாமிகள் சமாதி ஆனார். அவர் சமாதி அடைவதற்கு முந்தைய தினம் இரவு, சேதுராமனின் கனவில் தோன்றினார். அவர், சேதுராமனை பார்த்து ‘‘டேய் சேது எழுந்திரு’ என்று கனவில் கூறினார். அதற்கு பிறகு சேதுராமனின் நல்ல உணர்வுகளை தட்டி எழுப்பினார். அதோடு ஆன்மிகத் துறையில் பணி புரியும், பக்தி நெறியை பரப்பும் ஆசுகவிகள் படைக்க ஆசி வழங்கினார். இதனால் யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் வீட்டை விட்டு வெளியேறினார். கால்போன போக்கில் நடந்து கொண்டே இருந்தார். சென்னையில் இருந்து நடக்கத் தொடங்கிய அவர், திருவள்ளூர் வழியாக திருத்தணிக்கு சென்றார்.

    அங்கு திருத்தணி முருகனை வழிபட்டார். பிறகு அவரது மனம் திருப்பதி ஏழுமலையானை நோக்கி திரும்பியது. அங்கும் நடந்தே சென்றார். ஏழுமலையானை தரிசித்தார். பிறகு திருப்பதியில் இருந்து காலஹஸ்திக்கு புறப்பட்டு வந்தார். இதற்கிடையே சேதுராமனை காணாமல் அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடி அலைந்தனர். சேதுராமனுக்கு என்ன ஆயிற்றோ என்று கலங்கிப் போனார்கள். இதை உணர்ந்த சேதுராமன் குடும்பத்தினரை அமைதிபடுத்துவதற்காக ஏழு நாட்கள் ‘என்னை மறந்து விடுங்கள்’ என்று வீட்டிற்கு ஒரு மொட்டைக் கடிதம் அனுப்பினார். அதன் பிறகு காலஹஸ்தி சுற்றுப்பகுதிகளில் அலைந்து திரிந்து இறைவழிபாடு செய்து வந்தார். அங்கிருந்து அவரது கால்கள் தானாகவே சென்னை நோக்கி நடந்தன. ஒருவாறு இறையருளால் வீடு வந்து சேர்ந்தார். தொடர்ந்து பள்ளிக்கு சென்றார். ஒன்பதாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று எஸ்.எஸ்.எல்.சி. வகுப்புக்கு சென்றார். ஆனால் மீண்டும் அவருக்கு பள்ளி கல்வி மீது வெறுப்பு ஏற்பட்டது. குடும்பத்தினர் வலியுறுத்தியதால் பள்ளிக்கு சென்று வந்தார். 1952-ம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. இறுதித் தேர்வு எழுதும் நேரம் வந்தது. ஆனால் சேதுராமன், தேர்வு எழுத செல்லவில்லை. அவர் ‘எனக்கு இந்தப் படிப்பு படிக்க இஷ்டமில்லை’ என்று ஒரு துண்டுச்சீட்டில் எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறினார். மேலும் பரீட்சை எழுதுவதற்காக தனக்கு தந்த பதினனந்து ரூபாய் பணத்தையும் அத்துடன் வைத்து விட்டு காஞ்சிபுரம் சென்று விட்டார். பின்னர் அங்கிருந்து எங்கெல்லாமோ அலைந்து திரிந்தார். காஞ்சிபுரத்தில் இருந்து மகாபலிபுரம் சென்றார். அங்குள்ள ஒரு சத்திரத்தில் படுத்து தூங்கினார். அப்போது கனவில் வள்ளிமலை சுவாமிகள் தோன்றினார். ‘‘சேது நீ வீட்டை விட்டு வந்தது நன்மையும், தீமையும் கலந்தது. நாளை திருப்போரூருக்கு போ, ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தில் ஒரு கிழவரை காண்பாய். அவர் உனக்கு நல்ல வழி காட்டுவார்’’ எனக் கூறி மறைந்தார். இதை கேட்டதும் சேதுராமன் மகாபலிபுரத்தில் இருந்து திருப்போரூருக்கு வந்தார். ஆலயத்திற்குள் சென்று முருகப்பெருமானை வழிபட்டார். பிரகாரத்தை சுற்றி வந்தார். சன்னதிகளில் நின்று பார்த்தார். எந்த முதியவரும் அவரது கண்களில் படவில்லை. இதனால் சேதுராமனின் மனம் தளர்ந்து போனது. வள்ளிமலை சுவாமிகள் சொன்னது எப்படி நடக்கப் போகிறது என்ற குழப்பத்துடன் கோவிலை விட்டு வெளியேறினார். அப்போது கோவில் கோபுர வாசல் அருகே ஒரு கிழவர் தென்பட்டார். அந்த முதியவருக்கு எண்பது வயது இருக்கும். அவர் உருவத்தை பார்த்ததும் சேதுராமன் மெய்மறந்து நின்றுவிட்டார். அந்த முதியவரை வணங்கினார். உடனே அந்த முதியவர் சேதுவின் கைப்பையில் ஒரு காகிதத்தை மடித்துப் போட்டார். பிறகு அந்த கைப்பையை சேதுராமனிடமே திருப்பிக் கொடுத்தார். பின்னர் சேதுராமனுக்கு திருப்போரூர் கந்தசாமி கோவில் முழுவதையும் சுற்றிக் காண்பித்தார். அங்குள்ள உணவு விடுதியில் சாப்பாடு வாங்கி கொடுத்தார். பின்னர் அந்த முதியவரும், சேதுராமனும் திருக்கழுக்குன்றம் மலை கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தனர். அங்கிருந்து அவர்கள் இருவரும் செங்கல்பட்டுக்கு வந்து அன்று மாலை ரெயிலில் சென்னை புறப்பட்டனர். ரெயிலில் இருந்து இறங்கியதும் சேதுராமனிடம் அந்த முதியவர், ‘‘உனது வீடு எங்கே இருக்கிறது?’’ என்று கேட்டார். சேதுராமன், அந்த முதியவரை தனது வீட்டுக்கு அழைத்து சென்றார். வாசலில் முதியவரை நிறுத்திவிட்டு குடும்பத்தினரை அழைத்து வர வீட்டுக்குள் சென்றார். சேதுராமனை பார்த்ததும் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர். அவர்கள் வெளியில் வந்து பார்த்தனர். ஆனால் முதியவர் காணாமல் போனார். திருப்போரூரில் முதியவர் மடித்துப் போட்ட காகிதத்தில் 108 ஹரஹரோ ஹர நாமாவளிகள் தன்னுடைய கையெழுத்திலேயே எழுதி இருந்ததை பார்த்து சேதுராமன் ஆச்சரியம் அடைந்தார். அந்த பாடல்களே சாதாரண சேதுராமனை ‘அருட்கவி சேதுராமன்’ ஆக மாற்றியது. அன்று முதல் சேதுராமன் வாயில் இருந்து இறைவன் மீது பாடல்கள் வந்து விழுந்து கொண்டே இருந்தன. பல தலத்து தெய்வங்கள் பேரிலும் பல கவிமழைகளைப் பெய்தார். இவ்வாறு 10 ஆயிரத்துக்கும் மேலான பாடல்களைப் பாடியுள்ளார். 1968-ல் திருவண்ணாமலை கார்த்திகை தீபதரிசனத்திற்கு சென்று விட்டு, திருக்கோவிலூர் தபோவனத்தில் இருக்கும் ஞானானந்த சுவாமிகளை தரிசித்தார். ‘ அப்போது ஞானானந்த சுவாமிகள், சேதுராமனை பார்த்து, ‘‘சும்மா பாடிப்பாடி என்ன செய்வது? பாடியதெல்லாம் போதும், ஆடிப்பாடியது அடங்க வேண்டாமா? என்றார். அதாவது பாட்டு எங்கிருந்து பிறக்கிறது என்று பாட்டின் மூலத்தை ஆராய்ந்து பார்த்து அதைக் கண்டுபிடிக்க முயற்சி செய்யட்டும் என்றும் அது தெரியாமல் சும்மா கவி பாடிக் கொண்டிருப்பதில் பிரயோசனமில்லை என்றும் அவர் உபதேசம் அளித்தார். இதை கேட்டதும் சேதுராமனுக்கு சற்று தெளிவு ஏற்பட்டது. ஞானானந்த சுவாமிகளிடம் விடைபெற்றுக் கொண்டு பூண்டிக்கு சென்று அங்குள்ள பூண்டி சுவாமிகளிடமும் ஆசி பெற்று, உபதேசமும் பெற்று சென்னை திரும்பினார். 1969-ம் ஆண்டு ஜனவரி மாதம் 18-ந் தேதி அமாவாசை விடியற்காலை சேதுராமன் கண்ட கனவில் அவரை சிவராத்திரியன்று சந்நியாசம் மேற்கொள்ள சாது பார்த்தசாரதி அவர்கள் வைஷ்ணவி கோவிலில் நின்று கூறுகிறார். அதன்படி சம்சாரக் கடலை கடக்கவும், சந்நியாசம் ஏற்கவும் சேதுராமன் முடிவு செய்தார். வள்ளிமலை சுவாமிகளின் அவதார தலமான பூநாச்சிபுதூர் சென்று அருள் பெற்று திருமுல்லைவாயல் வைஷ்ணவி தேவியிடமும், அருட்கவி மூலம் ஆக்ஞை பெற்றார். தன் தாயார் மோனாம்பிகை, பெரிய தாயார் ஞானாம்பிகை ஆகியோருடன் சிவராத்திரி அன்று சந்நியாசம் ஏற்றார். அன்று முதல் சேதுராமன் ‘தவத்திரு.அருட்கவி சாதுராம் சுவாமிகள்’ என்ற பெயரில் அழைக்கப்பட்டார். மேலும் எண்ணற்ற கவிகளை இயற்றி பல தெய்வங்களையும் துதி செய்தார். திருப்புகழலில் தன்னிகரற்ற புலமையும், ஆளுமையும் கைவரப் பெற்று ‘வேல் மாறல்’ பாடல்களை புனைந்தார். மக்களின் சம்சாரத் துயர் துடைக்க அத்வைத ஞானத்துடன், லவுகீக துக்கங்களையும் நிவர்த்தி செய்தார். இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான மக்கள் பலன் அடைந்தனர். சித்த புரு‌ஷர்களுக்கு உரிய ஆற்றல் பெற்று அவர் வேல்மாறல் மூலம் அற்புதங்களை நிகழ்த்தினார். 2000-ம் ஆண்டு மார்ச் மாதம் 10-ந் தேதி திருப்போரூர் கந்தசுவாமியின் திருவடி நிழலில் கலந்தார். அவர் நங்கநல்லூரில் ஜீவசமாதி செய்யப்பட்டுள்ளார். அந்த அருள் ஆலயத்தில் சாதுராம் சுவாமிகள் இன்றளவும் சூசகமாக பக்தர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார். அவர் அருள்பாலிக்கும் ‘ஸ்ரீ பொங்கி மடாலாயம்’ கும்பாபிஷேகம் 2012-ம் ஆண்டு நடத்தப்பட்டது. பரபரப்பான, அமைதியற்ற கலியுகத்தில் இங்கு பக்தர்களுக்கு கிடைக்கும் மன அமைதியும், ஆத்ம சாந்தியுமே, மகான்களின் சாந்தித்தியத்தின் அத்தாட்சி ஆகும். அந்த உணர்வை பொங்கி மடத்தில் பெற முடியும்.

    Previous Next

    نموذج الاتصال