No results found

    சென்னை சித்தர்கள்: குரு ஞானப்பிரகாச சுவாமிகள்-திருவொற்றியூர்


    சென்னை கூடுவாஞ்சேரியில் புகழ் பெற்ற சைவநெறி குடும்பத்தில் பிறந்தவர் தாண்டவராயபிள்ளை. இவர் ஆப்பூர் மலையில் தவம் செய்து அரிய வரங்கள் பெற்றவர். இவரது மகன் மதுரபிள்ளை. இவர் வைணவ நெறியில் பற்றுக்கொண்டு சோளிங்கர் நரசிம்ம பெருமாளை ஏற்று வழிபட்டு வந்தார். இவருக்கும் சைவ நெறியில் முருகபக்தையாக திகழ்ந்த பொன்னியம்மாள் என்பவருக்கும் திருமணம் நடந்தது. அவர்களுக்கு பிறந்த மகனுக்கு முதலில் ஏழுமலை என்று பெயர் சூட்டி பிறகு அது வேலுப்பிள்ளையாக மாறியது. சைவம், வைணவம் இரண்டும் கலந்த நெறிமுறைகளுடன் வேலுப்பிள்ளை வளர்க்கப்பட்டார். இதையும் படியுங்கள்: புற்றுநோய் காவலன் 'வெங்காயம்' வேலுப்பிள்ளை சிறு வயதாக இருந்தபோது ஒரு சாதுவுடன் தொடர்பு ஏற்பட்டது. ஒரு சமயம் அந்த சாது அலுமினிய நாணயத்தின் மீது எச்சில் துப்பி வேலுப்பிள்ளையிடம் கொடுத்தார். அந்த நாணயம் தங்கமாக மாறி இருந்தது. இதனால் சாதுக்களுடன் மேலும் மேலும் வேலுப்பிள்ளை பழக்கத்தை அதிகரித்துக் கொண்டார். முதலில் சாதாரணமாக தொடங்கிய பழக்கம் நாளடைவில் ஆத்ம ஞானத்தை பெறுவதற்கான வழியாக இருப்பதை வேலுப்பிள்ளை உணர்ந்தார். ஆத்ம ஞானத்தை அவ்வளவு எளிதாக அடையமுடியாது என்று உணர்ந்த வேலுப்பிள்ளை தன்னை அடக்கி ஆள தொடங்கினார். இந்த நிலையில் குடும்ப சூழல் காரணமாக மின்வாரிய பணியில் சேர்ந்தார். பிறகு பொதுப்பணித்துறையில் பணியாற்றினார். அப்போது அன்னிபெசன்ட் அம்மையாருடன் தொடர்பு ஏற்பட்டது. அடையாறில் பிரம்மசமாஜம் என்ற ஆன்மீக அமைப்பு மூலம் தொண்டாற்றி வந்த அன்னிபெசன்ட் அம்மையார் தனது பாட சாலையில் வேலுப்பிள்ளையை சேர்த்து மொழி அறிவை மேம்படுத்த வழிவகை செய்தார். இதையும் படியுங்கள்: பார்மசி கோர்ஸ்: சொந்தத் தொழில் செய்ய கற்றுத்தரும் படிப்புகள் இது வேலுப்பிள்ளையின் ஆன்மீக நாட்டத்தை அதிகரிக்க செய்தது. அவர் பணிபுரிந்த இடங்களில் எல்லாம் தொழில், கல்வி, ஆன்மீகம் மூன்றுக்கும் சம அளவில் முக்கியத்துவம் கொடுத்தார். இதனால் கர்மயோகம், ஞானயோகம், பக்தி யோகம் மூன்றும் ஒருங்கிணைந்து வேலுப்பிள்ளையை புதிய மனிதனாக மாற்றியது. இதற்கிடையே வேலுப்பிள்ளைக்கும், தேவி அம்மாள் என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. 2 மகன், ஒரு மகள் பெற்றெடுத்த நிலையில் வேலுப்பிள்ளைக்கு ஆன்மீக நாட்டம் குறையாமல் அதிகரித்தது. சாதுக்களை அழைத்து பணிவிடைகள் செய்து அரவணைத்தார். அதோடு ஆன்மீகத்தில் முதிர்ச்சி அடைந்த சான்றோர்கள் எங்கிருந்தாலும் அவர்களை தேடிச் சென்று தன் ஆன்ம ஞானத்தை மேலும் மேலும் வளர்த்துக் கொண்டார். இதையும் படியுங்கள்: குரு சந்திர யோகமும் சகடை தோஷமும் ஒரு சமயம் தஞ்சை மாவட்டம் தஞ்சாக்கூர் என்ற ஊரில் இருந்த புகழ் பெற்ற மகாயோகியான சிவக்குமார மவுன சுவாமிகள் சென்னை வேப்பேரிக்கு வந்திருந்தார். இவர் அத்வைத ஞானத்தை அமிர்தமாக பிழிந்து அனைவருக்கும் கொடுப்பதில் திறன் பெற்று இருந்தார். இவரை வேலுப்பிள்ளை சந்தித்து தினமும் உரையாடினார். மவுன சுவாமிகள் அளிக்கும் சிவாமிர்த அத்வைத ஞான விளக்கங்களை ஆர்வத்துடன் கேட்டு தனது நிலையை மேம்படுத்திக் கொண்டார். ஒரு சமயம் தனக்கு பதிலாக வேலுப்பிள்ளையை சொற்பொழிவு ஆற்றும்படி மவுன சுவாமிகள் உத்தரவிட்டார். அன்று வேலுப்பிள்ளை வாயில் இருந்து ஆத்மஞான போதனை வெள்ளம் மடைதிறந்தது போல பெருக்கெடுத்து ஓடியது. இதைக் கண்டு மவுன சுவாமிகள் ஆச்சரியப்பட்டார். அந்த நிமிடமே தனது சீடராக வேலுப்பிள்ளையை மவுன சுவாமிகள் எடுத்துக் கொண்டார். இதையும் படியுங்கள்: மருத்துவம் அறிவோம்: சிறுநீரக நோயும்-அறிகுறியும் வேலுப்பிள்ளையிடம் அத்வைத ஞானம் ஒளி வீசிக்கொண்டிருப்பதை மவுன சுவாமிகள் உணர்ந்தார். ஞானதீட்சை கொடுத்து அவரது பெயரை ஞானபிரகாசர் என்று மாற்றினார். 1964-ம் ஆண்டு மார்ச் மாதம் 15-ந்தேதி இந்த அற்புதம் நடந்தது. அதன் பிறகு ஞானபிரகாச சுவாமிகள் இல்லறத்தில் இருந்து விடைபெற்று சன்னியாச துறவு நிலைக்கு தன்னை மாற்றிக் கொண்டார். குறிப்பிட்ட தினத்தன்று மனைவி, மகன்கள், மகளுக்கு ஆசி வழங்கி இன்பமுடன் இருங்கள் என்று வாழ்த்தி விட்டு வீட்டில் இருந்து விடைபெற்றார். தூய்மையான வெள்ளை உடை உடுத்தி குருநாதரை தொழுது தலையாத்திரை புறப்பட்டார். முதலில் சிதம்பரம் சென்றார். பிறகு கும்பகோணம், தஞ்சை, திருச்சி, சமயபுரம், ஸ்ரீரங்கம், ஈங்கோய்மலை, பழனி, மதுரை, திருச்செந்தூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி என்று நடந்து கொண்டே இருந்தார். திருநெல்வேலியில் நெல்லையப்பரை தரிசித்த பிறகு திருப்பதி சென்று ஏழுமலையானை வழிபட்டு தலையாத்திரையை முடிக்க ஞானபிரகாச சுவாமிகள் திட்டமிட்டார். உடனே திருப்பதிக்கு புறப்பட்டு சென்றார். ஏழுமலையானை தரிசனம் செய்த அவருக்குள் அடுத்து எங்கே போவது? என்ற எண்ணம் எழுந்தது. தன்னையும் அறியாமல் அருகில் உள்ள பாகாலா என்ற கிராமத்துக்குள் சென்றார். இந்த கிராமம் மலை வளம், நீர் வளம், மண் வளம் ஆகியவை நிறைந்தது. அது ஞானபிரகாச சுவாமிகளை மிகவும் கவர்ந்தது. அங்குள்ள இயற்கை பேராற்றலின் அற்புதத்தில் சுவாமிகள் ஆழ்ந்து விட்டார். தன்னை மறந்து மலைகுன்றுகளை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டே இருந்தார். அந்த மலை அவரை அழைத்தது போல இருந்தது. அடுத்த நொடியே சுவாமிகளின் கால்கள் தானாக அந்த மலையை நோக்கி நடந்தன. அங்குள்ள ஒரு மலைக்குன்றின் மீது ஏறினார். அங்கு பாறைகளின் இடுக்கில் பெரிய குகை ஒன்று இருந்தது. சற்று உயரத்தில் சுனையுடன் கூடிய மற்றொரு குகை இருந்தது. அருகே மிகப்பெரிய மரம் ஒன்று வளர்ந்திருந்தது. அந்த மரம் அருகே சென்றபோது ஏதோ ஒரு சக்தி ஈர்ப்பது போன்று ஞானபிரகாச சுவாமிகள் உணர்ந்தார். அந்த மரத்தின் மீது ஏறினார். அந்த மரத்தில் இருந்து கீழே இறங்க அவருக்கு மனம் வரவில்லை. மரத்தில் பரன் ஒன்று கட்டினார். அதன் மீது அமர்ந்து சுகாசனத்தில் ஈடுபட்டு குண்டலினியைத் தட்டி எழுப்பி ஹடயோகத்தில் மூழ்கி விட்டார். நாட்கள் ஓடிக்கொண்டே இருந்தன. தன் நிலை இல்லாத, தன் உணர்வு இல்லாத ஆழ்ந்த சமாதி நிலையில் சுவாமிகள் மூழ்கி போனார். உலக வாழ்வியல் எதுவும் தன்னிடம் ஒட்டாமல் அவர் பேரானந்தத்துக்குள் ஆழ்ந்து கிடந்தார். எத்தனை நாட்கள் அவர் அப்படி ஹடயோகத்தில் இருந்தார் என்பது தெரியாது. அவர் மீது பாம்பு, பல்லி, பூரான்கள் ஏறி இறங்கின. அசைவற்று தியானத்தில் இருந்த அவரை அந்த உயிரினங்கள் எந்த தீங்கும் செய்யவில்லை. அந்த அளவுக்கு அவரது தவத்தின் ஆற்றல் மிகவும் உயர்வாக இருந்தது. பல நாட்கள் கழித்து அவர் தவத்தில் இருந்து மெல்ல விடுபட்டார். பரனில் உதிர்ந்து கிடந்த இலைச்சருகுகளை எடுத்து சாப்பிட தொடங்கினார். அப்போது வயதான ஒருவர் அவர் அருகில் தோன்றினார். அவரது கையில் ஒரு தட்டு வைத்திருந்தார். அந்த தட்டில் ஒரு கோவணத்துண்டும், சில பழங்களும் இருந்தன. பழத்தை ஆசையோடு எடுக்க கை நீட்டிய சுவாமிகள் தட்டில் கோவணத்துண்டு இருப்பதை பார்த்தார். அதன் பிறகுதான் தான் பிறந்த மேனியாக இருப்பதை உணர்ந்தார். அந்தத் துண்டை எடுத்து உடுத்திக் கொண்டு பழங்களை எடுத்து சாப்பிட்டார். பசி அடங்கியதும்தான் தன் அருகில் நின்ற முதியவர் மாயமாகி இருப்பதை அறிந்தார். இறைவனே தன்னை சோதிக்க இப்படி வந்திருப்பதை புரிந்துக்கொண்டார். முற்றும் துறந்த நிலை தனக்கு இன்னும் வரவில்லையே என்பதை நினைத்து வருந்தினார். அந்த நினைவோடு சென்னைக்கு திரும்பி வந்தார். சென்னை மண்ணடியில் நடேச ஆச்சாரி என்ற தனது இளம்வயது நண்பர் வீட்டில் தங்கினார். பிறகு குருநாதர் மவுன சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றார். அப்போது பாகாலா மலையில் ஏற்பட்ட அனுபவத்தை குருவுடன் பகிர்ந்துக் கொண்டார். அன்று கைவல்யத்தின் ஆழ்ந்த ஞானப்பொருளை மிக தெளிவாக ஞானப்பிரகாச சுவாமிகள் உரையாற்றினார். அதைக் கேட்ட சில அன்பர்கள் திருவொற்றியூருக்கு வந்து இதே போன்று சொற்பொழிவு ஆற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். அதை ஏற்று ஞானப்பிரகாச சுவாமிகள் திருவொற்றியூர் சென்றார். அவரது சொற்பொழிவை கேட்ட அன்பர்கள் ஞானப்பிரகாச சுவாமிகளை நிரந்தரமாக திருவொற்றியூரிலேயே தங்க செய்து தினமும் சைவ சித்தாந்த விளக்கங்களை கேட்க ஆசைப்பட்டனர். இதைக் கேட்ட சுவாமிகள் 1965-ம் ஆண்டு திருவொற்றியூரில் நிரந்தரமாக தங்க தொடங்கினார். தன்னை நாடி வந்தவர்களுக்கு மவுன ஞானத்தின் உன்னதத்தை போதித்தார். ஆனால் பலருக்கும் மவுன ஞானத்தில் ஆர்வம் ஏற்படவில்லை. இதை தெரிந்துக் கொண்ட ஞானப்பிரகாச சுவாமிகள், “சிவாமிர்த ஆத்மஞான சபை” என்ற அமைப்பை உருவாக்கினார். அதன் மூலம் ஆசிரமங்கள் வைத்து ஆன்மீக பாடங்களை நடத்தி சனாதன தர்ம விளக்கங்களை தெளிவாகவும், விரிவாகவும் எடுத்துரைத்தார். ஞானப்பிரகாச சுவாமிகளின் ஆன்மீக விளக்கங்கள் அனைத்து தரப்பு மக்களையும் வெகுவாக கவர்ந்தது. மாற்று மதத்தினரும் அவரை தேடி வந்து ஆன்மீக வி‌ஷயங்களில் விளக்கங்கள் கேட்டு தெளிவுப் பெற்றனர். இதற்காக ஆசிரமத்திலேயே சுவாமிகள் இருந்து விடவில்லை. ஒவ்வொரு மாதமும் ஏதாவது ஒரு சீடர் வீட்டுக்கு சென்று லலிதா சகஸ்ர நாமம், விஷ்ணு சகஸ்ர நாமம், திரிசதி போன்றவற்றை பாராயணம் செய்து பூஜை செய்தார். பவுர்ணமி தோறும் சத்யநாராயண பூஜை செய்து வாழ்க்கை இன்பத்தை பெறும்படி பலருக்கும் அறிவுறுத்தினார். இத்தகைய பூஜைகளின் தொடர்ச்சியாக குடும்பத்து பெண்களுக்கும் தீட்சை அளித்து அவர்களை ஆன்மீகத்தில் மேம்படுத்தினார். மகா சிவராத்திரியை வித்தியாசமாக கொண்டாட செய்தார். எல்லா பக்தர்களிடமும் வில்வ இலையை கொடுத்து நேரடியாக அர்ச்சனை செய்ய வைத்தார். மார்கழி மாதம் ஆலய மாட வீதி வலம் வரும் மரபை ஏற்படுத்தினார். சிவபஞ்சாட்சர கோ‌ஷத்தை உச்சரித்துக் கொண்டே வலம்வர செய்தார். திருவண்ணாமலையை போன்று திருக்கழுக்குன்றத்தில் 1967-ம் ஆண்டு கிரிவலம் செல்லும் பழக்கத்தை தொடங்கி வைத்தார். கடந்த 55 ஆண்டுகளாக இந்த பழக்கம் இன்றும் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இப்படி மக்கள் மத்தியில் ஆன்மீகத்தை தழைக்கச் செய்து சேவையாற்றிய ஞானப்பிரகாச சுவாமிகள் ராமகிருஷ்ண பரமஹம்சர் போல காசை கையில் தொடாமல் இருந்தார். மக்கள் தரும் பொருட்களை வைத்து பூஜைகள் நடத்தினார். சுய விளம்பரம் செய்வதில் துளியும் விருப்பம் இல்லாமல் இருந்த அவர் தனது சீடர்கள், பொது மக்கள் உதவியால் ஆசிரமத்தை நடத்தி வந்தார். அவரது தவ ஆற்றலின் அலை காரணமாக அவரது ஆன்மீக பணிகள் ஆச்சரியப்படும் வகையில் தொய்வின்றி நடந்தன. சுவாமிகளுக்கு விநாயகர் மீது மிகுந்த இஷ்டம் உண்டு. எனவே ஆசிரமத்தில் விநாயகர் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். வியாழன் தோறும் மவுன விரதம் இருந்த அவர் சிவாமிர்த ஆத்ம ஞான ஆசிரமத்தை வழிநடத்த ஸ்ரீராமலு தலைமையில் குழு ஒன்றை உருவாக்கினார். அந்த குழு தற்போதும் வெற்றிகரமாக இயங்கி வருகிறது. மிகப்பெரும் சித்தபுரு‌ஷராக திகழ்ந்த ஞானப்பிரகாச சுவாமிகள் 1983-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 21-ந்தேதி பரிபூரணம் அடைந்தார். அவரது உடல் பத்மாசனத்தில் நிலைப்படுத்தப்பட்டு ஜீவ சமாதி செய்யப்பட்டது. அந்த சமயத்தில் இடைவெளி இல்லாமல் மழை பெய்தது குறிப்பிடத்தக்கது. சுவாமிகளின் அருள் ஆற்றல் இப்போதும் திருவொற்றியூர் வடக்கு மாட வீதியில் உள்ள அவரது ஆசிரமத்தில் வழிகாட்டியாக வந்து கொண்டே இருக்கிறது. ஒரு தடவை அங்கு சென்று வாருங்கள். அந்த உண்மை உங்களுக்கும் புரியும்.

    Previous Next

    نموذج الاتصال