ஆனால் அந்த சித்தர் சென்னையில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர் என்பது உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது. அதுமட்டுமல்ல, அந்த சித்தரின் அருள் அலைகள் இன்னமும் அந்த ஜீவ சமாதியில் இருந்து வற்றாமல் பொங்கி வந்து கொண்டே இருக்கிறது என்பதும் சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிரூபிக்கப்பட்டு உள்ளது. பொதுவாகவே ஜீவ சமாதியில் அடங்கி இருக்கும் சித்தர்கள், தங்களுக்கு தேவை யானதை குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட நபர்கள் மூலம் நிறைவேற்றிக் கொள்வார்கள் என்று சொல்வதுண்டு. இதனால்தான் எந்த ஒரு சித்தரும் மனம் உவந்து அழைக்காமல் அவர்களது ஜீவ சமாதி ஆலயத்துக்கு அவ்வளவு எளிதில் யாராலும் சென்று விட முடியாது என்பார்கள். சித்தர்கள் மனம் வைத்தால்தான் நாம் அவர்களது உறைவிடங்களுக்கு செல்ல முடியும்.
மேலும் சித்தர்கள் தங்களைப் பற்றிய தகவல்களை உரிய காலத்தில் யாராவது ஒருவர் மூலம் வெளிப்படுத்துவார் என்பார்கள். நாம் இந்த கட்டுரையில் காணப்போகும் சித்தரும் இப்படித்தான். மிக சமீபத்தில் தன்னை வெளிப்படுத்திக் கொண்டார். ஆனால் இன்னும் அவர் தன்னை முழுமையாக வெளிப்படுத்திக் கொள்ளவில்லை என்பதே உண்மை. அதன் காரணமாகத்தான் இந்த சித்தர் பற்றிய உண்மையான பெயர் உள்பட எந்த முக்கிய தகவலும் இதுவரை அறியப்பட முடியாமலேயே உள்ளது. பொதுவாக சித்தர்கள் தங்களது உண்மை யான பெயர், ஊர் உள்ளிட்ட எந்த தகவலையும் அவ்வளவு எளிதில் யாரிடமும் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். இதனால் அவர்கள் தோற்றம், பேச்சு, பாடல் போன்றவைகளில் எதாவது ஒன்றை அடிப்படையாக வைத்து மக்கள் பெயர் சூட்டி விடுவதுண்டு. நாளடைவில் அந்த சித்தருக்கு அந்த பெ யரே நிலைத்து விடும்.
அந்த வகையில் தான் தற்போது சென்னையில் பொன் மார் சித்தர் புகழ் பெற்று வருகிறார். கடந்த 2018-ம் ஆண்டுதான் இந்த சித்தர் தன்னை வெளிப்படுத்திக் கொண்டார். சுமார் 2 ஆயிரம் ஆண்டு களுக்கு முன்பு இந்த பகுதியில் வாழ்ந்த இந்த சித்தர், ஒரு சிறிய மண்டபம் போன்ற ஆலயத்துக்குள் அடங்கி கிடக்கிறார் என்பது பொன்மார் பகுதி மக்கள் யாருக்குமே தெரியவில்லை. மக்களும் கண்டு கொள்ளவில்லை. சித்தரும் ஆழ்ந்த அமைதியில் அமிழ்ந்து போனார். இந்த நிலையில் பொன்மார் பகுதி மக்கள், தங்கள் ஊரில் உள்ள சக்திபுரீஸ்வரர் ஆலயத்தை சீரமைத்து உரிய திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்தனர். அதன்படி திருப்பணி வேலைகள் தொடங்கின.
ஆனால் அந்த திருப்பணிகளை திட்டமிட்ட படி முடித்து கும்பாபிஷேகத்தை நடத்த இயலவில்லை. ஏன் இப்படி தடை ஏற்படுகிறது என்று மக்கள் குழம்பிப் போனார்கள். அப் போது தென்காசியை சேர்ந்த ஈஸ்வரன் என்ற சிவனடியார் மூலம் சில தகவல்கள் வெளிப்பட்டன. “சக்திபுரீஸ்வரர் ஆலயத்தின் வடகிழக்குப் பகுதியில் மண்டபம் ஒன்று இருக்கும். அந்த மண்டபத்தை சுத்தம் செய்து, அங்கு விளக்கு ஏற்றுங்கள். ஆலய கும்பாபிஷேகம் உள்பட அனைத்துப் பணிகளும் தொய்வின்றி நடக்கும்” என்று சிவனடியார் மூலம் உத்தரவு வந்தது. 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18-ந் தேதி இந்த உத்தரவு வெளியானது. அன்றைய தினமே திருப்பணிக்குழுவினர் ஆலயத்தின் வடகிழக்கு பகுதிக்கு சென்று பார்த்தனர். அங்கு மண்டபம் ஒன்று சிதலமடைந்து காணப்பட்டது. மண்புற்று வளர்ந்து மூடி இருந்தது.
அன்றே அவற்றை அகற்றி சுத்தம் செய்தனர். அப்போதுதான் அது சித்தரின் ஜீவ சமாதி என்ற உண்மை மக்களுக்கு தெரிய வந்தது. ஆனால் அந்த சித்தர் யார்? அவர் பெயர் என்ன? எந்தக் காலத்தில் இங்கு ஐக்கியமானார்? என்னென்ன அற்புதங்கள் நிகழ்த்தி மக்களை நல்வழிப்படுத்தினார்? என்பன போன்ற எந்த தகவலும் தெரியவில்லை. இவை பற்றி அறிந்து கொள்ள முயற்சிகள் நடந்தன. அப்போது அந்த சித்தர் மீண்டும் ஒருவர் மூலம் தன்னைப் பற்றிய தகவல்களை வெளியிட்டார். “உங்கள் பெயர் என்ன?” என்று கேட்டபோது அந்த சித்தர் அதை வெளியிட மறுத்து விட்டார். அதே சமயத்தில் இந்த ஊர் பெயரிலேயே தன்னை அழைக்குமாறு அறிவுறுத்தினார். இதையடுத்து அந்த சித்தரை மக்கள் பொன்மார் சித்தர் என்று அழைக்கத் தொடங்கினார்கள். தற்போது அந்த சித்தருக்கு அந்த பெயரே நிலைத்து விட்டது. பொன்மாரில் உள்ள சக்திபுரீஸ்வரர் ஆலயத்தின் ஒரு பகுதியாக இந்த சித்தரின் ஆலயம் இருக்கிறது. எனவே இந்த ஆலயத்தில் சக்தி புரீஸ்வரரையும், சக்தி புரீஸ்வரியையும் இந்த சித்தர் பிரதிஷ்டை செய்து வந்ததாக கருதப்படுகிறது. ஜீவ சமாதி உள்ளே மேல்புற கருங்கல்லில் சிவனும், சக்தியும் இணைந்த அர்த்தநாரீஸ்வரர் கோலம் உள்ளது. அதையும் பொன்மார் சித்தர் வழிபட்டு வந்ததாக மக்கள் கருதுகிறார்கள். சித்தர் ஆய்வாளர்கள் தற்போதுதான் பொன்மார் சித்தர் பற்றி கூடுதல் தகவல்களைப் பெற ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். முதல் கட்ட ஆய்வில் முருகப் பெருமான் நிகழ்த்திய சூரசம்ஹாரத்துடன் தொடர்புடையவராக இந்த சித்தர் கருதப்படுகிறார். மிகப்பெரிய தெய்வீகப் பணிகளை செய்து விட்டு அந்த சித்தர் இங்கு பரிபூரணம் பெற்று இருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது. மன்னர்கள் காலத்தில் இந்த ஆலயத்தின் சிறப்புகள் தெரிய வந்து, மன்னர்கள் திருப் பணிகள் செய்து இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். ஆலயம் முழுவதும் கருங்கற்களால் கட்டப்பட்டுள்ளது. கல்வெட்டுகளும், அரிய சிற்பங்களும் ஆலயம் முழுக்க உள்ளன. மீன் சின்னம் இருப்பதால் பாண்டிய மன்னர்கள் திருப்பணி செய்து இருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. மற்ற சின்னங்கள் மூலம் விஜயநகர மன்னர்களும் இந்த ஆலய மேம்பாட்டில் முக்கிய பங்கு வகித்து இருப்பது தெரிகிறது. தெற்கு நோக்கிய இந்த ஆலயத்தில் சக்தி புரீஸ்வரர் கிழக்கு நோக்கி அருள் பாலிக்கிறார். சக்தி புரீஸ்வரி தெற்கு முகமாக உள்ளாள். ஆனால் பொன்மார் சித்தரின் ஜீவ சமாதி ஆலயம் வடக்கு திசை நோக்கி உள்ளது. சித்தரும் வடக்கு திசை பார்த்து அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார். கடந்த 2018-ம் ஆண்டில் இருந்து இந்த சித்தர் அடிக்கடி பக்தர்களின் கனவில் சென்று தன்னைப் பற்றிய தகவல்களை வெளிப்படுத்தி தனது ஜீவ சமாதிக்கு அழைத்து வந்து விடுவதாக சொல்கிறார்கள். அப்படி வருபவர்கள் பொன்மார் சித்தர் அருகில் அமர்ந்து சிறிது நேரம் தியானம் செய்தாலே பல்வேறு ஆச்சரியங்களையும், அற்புதங்களையும் நிகழ்த்தி விடுகிறாராம். பொன்மார் சித்தர் ஜீவ சமாதி ஆலயத்தை நிர்வகிக்கும் ரேவதி ராஜசேகர் கூறுகையில், “இன்று விளக்குக்கு ஊற்ற எண்ணை இல்லையே, என்ன செய்வது? என்று நினைத்த சிறிது நேரத்துக்குள் யாராவது வந்து எண்ணை தந்து விட்டு சென்று விடுவார்கள். இப்படி தினம், தினம் நிறைய அற்புதங்களை சித்தர் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்” என்றார். இந்த சித்தர் தன்னை வெளிப்படுத்திக் கொண்ட இந்த 4 ஆண்டுக்குள் தினசரி மதியம் அன்னதானம் செய்யும் அளவுக்கு பக்தர்களை வரவழைத்து கொண்டிருக்கிறார். தினமும் சுமார் 40 பேருக்கு இங்கு பசியாற்றப்படுகிறது. பொன்மார் சித்தர் அம்பாளை வணங்கியவர் என்பதால் கடந்த ஆண்டு ஜீவ சமாதி ஆலயத் துக்குள் மகாமேரு பிரதிஷ்டை செய்யப்பட் டுள்ளது. அதன் அருகில் அமர்ந்து சிறிது நேரம் தியானம் செய்தாலே போதும் வாழ்வில் புது அனுபவத்தை காண முடியும் என்கிறார்கள். அவலும், கஞ்சியும் பொன்மார் சித்தருக்கு மிகவும் பிடிக்குமாம். அமாவாசை தோறும் கஞ்சி படைத்து வழிபடுகிறார்கள். பிரதோஷம், பவுர்ணமி நாட்களிலும் சித்தர் அருள் பெற நிறைய பேர் வருகிறார்கள். சமீபகாலமாக வியாழக்கிழமைகளில் பொன்மார் சித்தரை வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்ற நம்பிக்கை பக்தர்கள் மத்தியில் பரவியுள்ளது. வியாழக்கிழமை இலுப்பை, வேப்பம், நல்லெண்ணை, நெய், தேங்காய் எண்ணை என்று 5 வகை விளக்கு ஏற்றினால் பொன்மார் சித்தர் மனம் குளிர்ந்து விரும்பியதை எல்லாம் தருவார் என்கிறார்கள். பொன்மார் சித்தர் வடக்கு நோக்கி இருப்பதால், கல்வி மேம்பாடு, குழந்தை பாக்கியம் தருவதில் நிகரற்றவராக உள்ளார். இங்கு பிரார்த்தனைக்கு வருபவர்கள், “ஓம் ஆதி ரூபமே அருந்தவ சிவன் மைந்தனே, ஜோதி ரூபமாய் எம் உள்ளம் புகுந்து ஒளிர்பவனே, அஷ்டலட்சுமியின் அருளைப் பொழிபவனே, பொன்மார் சித்தனே போற்றி, போற்றி” என்று மனம் உருகி சொல்லி வழிபட்டால் நிச்சயமாக பலன் உண்டு. பிப்ரவரி மாதம் 18-ந்தேதி பொன்மார் சித்தர் தன்னை வெளிப்படுத்திக் கொண்டதால் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 18-ந்தேதி மகா குருபூஜை நடத்தப்படுகிறது. சென்னை சித்தாலப்பாக்கம் அருகில் பொன்மார் உள்ளது. தாம்பரம், தி.நகரில் இருந்து மாநகர பேருந்து கள் செல்கின்றன. தாம்பரத்தில் இருந்து 15 கி.மீ., மேடவாக்கத்தில் இருந்து 9 கி. மீ. தொலைவில் பொன்மார் உள்ளது. பொன்மார் சித்தர் ஜீவ சமாதிக்கு ஒரே ஒரு தடவை சென்று வந்தால் மாற்றம் ஏற்படுவதை உணர்வீர்கள். இந்த ஜீவ சமாதியை விரைவில் பெரிய அளவில் கட்ட திட்டமிட்டுள்ளனர். பொன்மார் சித்தர் பற்றிய கூடுதல் தகவல்களை ஜீவ சமாதி ஆலய நிர்வாக தலைவர் ரேவதி ராஜசேகரிடம் 9962947404 மற்றும் 7397347754 என்ற எண்களில் கேட்டுக் தெரிந்து கொள்ளலாம்.