இவரது பூர்வீகம் சென்னை கொருக்குப் பேட்டை. இவரது உறவினர்கள் தற்போதும் அங்கு வாழ்ந்து வருகிறார்கள். மற்ற விவரங்கள் அதிகமாக தெரியவில்லை. இவருக்கு உரிய வயதில் பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். ஆனால் திருமணம் ஆன தினத்தன்றே இவர் தெய்வீக பிறவி என்பதை அவரது கணவர் உணர்ந்துகொண்டார்.
ரெயில்வே பிரஸ் அலுவலகத்தில் பணியாற்றி வந்த அவருடன் ஸ்ரீ லஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி அம்மா சேர்ந்து வாழவில்லை. அன்றே அவர் ஆன்மிக பாதைக்கு வந்துவிட்டார். அவருக்கு சிறு வயதில் ஆன்மிக நாட்டம் உண்டு என்பது மட்டுமே அவரது பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் தெரியும். ஆனால் அவர் பிறவியிலேயே சித்த புருஷராக வாழ்ந்து வருகிறார் என்பதை யாருமே முழுமையாக உணரவில்லை.
இளம் வயதிலேயே சென்னை பாரிமுனை, தம்புசெட்டி தெருவில் காளிகாம்பாள் கோவில் அமைந்துள்ள பகுதியில் சுற்றி வருவார். அந்த தெரு முனையில் (ராயபுரம் பாலம் தொடங்கும் இடத்துக்கு முன்பு) அமர்ந்து இருப்பார். யாரிடமும் எதுவும் அவர் கேட்பதில்லை. அந்த தெருவில்தான் அங்கும் இங்குமாக நடந்து கொண்டே இருப்பார்.
முதலில் இவரை யாரும் பெரிதாக நினைக்கவில்லை. ஆனால் சில குறிப்பிட்ட அதிசயங்களை நிகழ்த்திய பிறகுதான் இவர் சக்திவாய்ந்த சித்தர் என்பதை தெரிந்து கொண்டனர். அதன்பிறகு அவருக்கு தேவையான உதவிகளை அந்த தெருப் பகுதி மக்கள், பெண்கள் செய்தனர். அவர் அமர்ந்திருந்த இடத்தின் உரிமையாளர் தனது கட்டிடத்தின் ஒரு அறையை ஸ்ரீலஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி அம்மாவுக்கு ஒதுக்கி கொடுத்தார்.
அங்குதான் சுமார் 40 ஆண்டுகள் ஸ்ரீலஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி அம்மாள் வசித்தார். ஒவ்வொரு நாளும் அவரது பார்வையில் இருந்தும், வார்த்தையில் இருந்தும் அற்புதங்களும், அதிசயங்களும் நிகழ்ந்து கொண்டே இருந்தன. அவருக்கு தேவையான பணிவிடைகளை செய்த ராமாயி, மல்லிகா ஆகியோர் தற்போது அதே தம்புச்செட்டி தெருவில் அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீலஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி அம்மா ஆலயத்தை பராமரித்து வருகிறார்கள்.
அவர்கள் ஸ்ரீ லஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி அம்மா பற்றி அடுக்கடுக்காக தகவல்களை தெரிவித்தனர். அந்த தகவல்கள் அனைத்தும் கேட்பவர்களை ஆச்சரியத்தின் உச்சிக்கே அழைத்து செல்கிறது. அந்த அளவுக்கு ஸ்ரீ லஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி அம்மாவின் அருள் அலைகள் தம்புச் செட்டி தெருவில் நிறைந்து இருந்தன. இப்போதும் இருக்கிறது.
அவரை ‘சித்த புருஷினி’ என்றே சித்தர் ஆய்வாளர்கள் அழைத்தனர். எம் மதத்தவரும் குரு தொண்டு செய்வது அவசியம். அவர் எவ்விடத்தில் இருக்கின்றாரோ அங்கு எல்லாம் சித்தியாகும். அப்படி குருவை தியானிப்பதால் மறுபிறப்பு உண்டாவதில்லை. ஒரு ஜீவனுக்கு சகல சுகத்தையும் கொடுப்பது குருவே என்று சித்த புருஷினி ஸ்ரீ லஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி அம்மா அடிக்கடி சொல்வது உண்டு.
அதனால்தான் சித்தர்களை அறிந்த உண்மையான பக்தர்கள் அவரை நெருங்கும்போதே, ‘ஜெய் குருவே, அம்மாவே சரணம்‘ என்று சொல்லியபடிதான் அருகில் செல்வார்கள். மற்றவர்கள் அவ்வளவு எளிதில் ஸ்ரீ லஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி அம்மா அருகில் செல்ல முடியாது.
ஒரு தடவை ஒரு நபர் அத்துமீறி ஸ்ரீலஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி அம்மா அருகில் செல்ல முயன்றபோது, அவரது கண்களுக்கு மிகப்பெரிய மலைப்பாம்பு வாசலில் கிடப்பது போன்று தெரிந்தது. அதைப் பார்த்துவிட்டு அந்த நபர் அலறியடித்து ஓட்டம் பிடித்தார். யார்- யார் ஆத்ம பசியோடு வருகிறார்கள் என்பதை ஒரு வினாடியிலேயே ஸ்ரீ லஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி அம்மா தெரிந்து கொள்வார்.
ஆத்ம ஞானம் வேண்டி வருபவர்களை அவர் புன்னகை சிந்த வரவேற்பார். பரிபாஷையில் அவர்களுக்கு ஏதேதோ சொல்லி ஆசீர்வாதங்கள் வழங்குவார். அந்த வகையில் அப்படி பலன் பெற்றவர்கள் சென்னையில் இன்றும் நூற்றுக்கணக்கானவர்கள் இருக்கிறார் கள். தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு எல்லாவித துன்பங்களையும் துடைக்கும் கருவியாகவும், மாபெரும் ஆறுதல் தரும் சக்தியாகவும், நல்வழிப்படுத்தும் மகானாகவும் ஸ்ரீ லஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி அம்மா திகழ்ந்தார்.
பக்தர்கள் யாராவது உடல்நிலை சரியில்லை என்று வந்தால் அவர்களிடம் 10 பாட்டில் அமிர்தாஞ்சன், நீலகிரி தைலம் ஆகியவற்றை வாங்கிவரச் சொல்வார். அவர்கள் வாங்கி வந்ததும், அந்த 10 பாட்டில் அமிர்தாஞ்சனையும் தனது முகத்திலும், உடம்பிலும் பூசிக்கொள்வார். குறிப்பாக 2, 3 பாட்டில் அமிர்தாஞ்சன் தைலத்தை அள்ளி எடுத்து முகம் முழுக்க பூசிக்கொண்டு, ‘இனி உன் நோய் தீர்ந்துவிடும் சென்று வா’ என்பார்.
அவர் சொன்னபடியே நோய்கள் தீர்ந்தன. ஒரு விரல் நுனியில் தொட்டு எடுக்கும் தைலத்தை பூசினாலே முகத்தில் தீக்காயம் ஏற்பட்டது போல எரியும். 2 பாட்டில் தைலம் முழுவதையும் முகத்தில் பூசிக்கொண்டு ஸ்ரீலஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி அம்மா அவர்கள் ஆசீர்வதிக்கும் போது எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும் என்று மல்லிகா தெரிவித்தார்.
அப்படி அவர் தைலம் பூசும் சமயத்தில் அவரது முகம் தங்கமாக மாறி ஜொலிக்கும் என்றும் கூறினார். சில சமயம், சில பக்தர்களிடம் சூடாக தோசை வாங்கி வரச்சொல்லி தனது வயிற்றில் இறுக்கமாக கட்டிக்கொள்வார். இதன் மூலம் அந்த நபரின் கர்மா தீர்க்கப்படுவதாக பக்தர்கள் நம்பினார்கள்.
ஒரு தடவை தன்னை நாடி வந்த ஐய்யப்பப் பக்தர்களுக்கு மீன் மற்றும் அசைவ உணவை பிசைந்து கொடுத்து சாப்பிடச் சொன்னார். சில பக்தர்கள் தயங்கியபோது சிரித்துக்கொண்டே சாப்பிடு நல்லதே நடக்கும் என்றார். அந்த பக்தர்கள் சபரி மலைக்கு சென்றபோது யாருக்கும் கிடைக்காத அளவுக்கு ஐய்யப்பனின் தரிசனம் கிடைத்ததாம். இதன் மூலம் ஸ்ரீ லஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி அம்மாவின் மகத்துவத்தை புரிந்துகொண்டு ஆச்சரியப்பட்டு போனார்கள்.
அதேபோன்று அந்த பகுதியில் இருக்கும் ஆட்டோக்களில் ஏதாவது ஒரு ஆட்டோவில் ஏறி அமர்ந்து சென்னை நகரின் ஏதாவது ஒரு பகுதிக்கு தினமும் சென்று வருவார். ‘ஏன் அப்படி செல்கிறீர்கள்?’ என்று அவரிடம் ஒரு தடவை கேட்டபோது, ‘என் பக்தர்கள் எல்லோரும் என்னைத் தேடி வரமுடியாது. எனவே அவர்களைத் தேடி நான் செல்கிறேன்’ என்று சொன்னார்.
இத்தனைக்கும் அவர் ஆட்டோவில் இருந்து இறங்குவதில்லை. ஆனால் அவரது சக்தி அவர் உடம்பில் இருந்து பிரிந்து சென்று பக்தர்களை ஆசீர்வதித்துவிட்டு வருமாம். ஒரு தடவை அவரை ஆட்டோவில் அழைத்து சென்ற டிரைவர் ஒருவர் ஸ்ரீ லஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி அம்மா இறங்கி செல்வதை பார்த்திருக்கிறார். அதே சமயத்தில் ஆட்டோவுக்குள்ளும் ஸ்ரீ லஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி அம்மா இருந்துள்ளார். அதிர்ச்சி அடைந்த அந்த ஆட்டோ டிரைவர் ஸ்ரீ லஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி அம்மாவின் சக்தியை அறிந்து அனைவரிடமும் சொல்லி வியந்திருக்கிறார்.
இப்படி பல தடவை அற்புதங்கள் நடந்து இருக்கிறது. வாரத்துக்கு ஒரு தடவை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்துக்கு சென்றுவிட்டு கதம்பப் பூவை வாங்கி தலை நிறைய வைத்துக்கொண்டு வருவார். அவரது வாழ்வியல் நடைமுறைகளும் வித்தியாசமாக இருந்தன. ஒரு மாதம் முழுக்க அசைவ உணவு சாப்பிடுவார். ஒரு மாதம் முழுக்க இளநீராகக் குடிப்பார். ஒரு மாதம் முழுவதும் தயிர் மட்டுமே சாப்பிடுவார். ஏன் இப்படி வித்தியாசமாக சாப்பிடுகிறீர்கள்? என்று கேட்டபோது, ‘நான் தினமும் ஒரு அவதாரம் எடுப்பவள். அதற்கு ஏற்ப சாப்பிடுகிறேன்’ என்று சிரித்துக்கொண்டே பதில் அளித்தார்.
புகழ்பெற்ற டிரம்ஸ் இசை கலைஞர் சிவமணி அடிக்கடி இவரைத் தேடி வந்து ஆசி பெற்று செல்வதுண்டு. ஒரு தடவை டெல்லியில் உயர்ந்த விருது வாங்கிவிட்டு சென்னை திரும்பியதும் விமான நிலையத்தில் இருந்து நேரடியாக தம்புச்செட்டி தெருவுக்கு வந்து சித்தர் அம்மாவிடம் ஆசி பெற்ற பிறகே வீட்டுக்கு சென்றாராம்.
சில பக்தர்களை பார்த்ததும் அவர்களுக்கு என்ன பிரச்சினை இருக்கிறது என்பதை உணர்ந்துகொண்டு தீர்த்துவைத்த அற்புதத்தை யும் ஸ்ரீ லஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி அம்மா நிகழ்த்தி இருக்கிறார். தனது கையில் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தியும் அவர் கர்ம வினைகளை தீர்ப்பதுண்டு. ஒருவரை பார்த்து விட்டு தனது கையில் உள்ள சோடா பாட்டில் மூடியை அவர் சுழற்றினால்கூட வினைகள் விலகி ஓடியதாக சொல்கிறார்கள்.
பட்டணம் பொடி உரிமையாளர் இவரது மகிமையை உணர்ந்து தினமும் இவருக்கு காலை உணவு கொடுத்து பணிவிடை செய்தார். அவர் வருவதற்கு தாமதம் ஆகிவிட்டால் 50 பைசாவை அருகில் உள்ள கடையில் கொடுத்துவிட்டு வெளியில் தெருவில் நின்றபடி போனில் பேசுவதுபோல பேசச் சொல்வார். அப்படி அவர் சொன்ன காலக்கட்டத்தில் செல்போன் நடைமுறைக்கே வரவில்லை.
ஆனால் இப்போது செல்போனில் பேசுவது போல அந்த நாளிலேயே சித்தர் அம்மா வெற்றிடத்தில் நின்று பேசவைத்தார். அப்படி பேசும் வார்த்தைகள் குறிப்பிட்ட நபருக்கு போய் சேர்ந்துவிடுமாம். அடுத்த 10 நிமிடங்களில் அந்த நபர் சித்தர் அம்மாவிடம் வந்து நிற்கும் அதிசயங்கள் அடிக்கடி நிகழ்ந்தது உண்டு.
பரிபாஷையில் பேசினாலும் எத்தனையோ பேருக்கு அவர் ஞான வழியை காட்டியுள்ளார். ஆத்ம மேம்பாடு அடைய எண்ணற்றவர்களுக்கு பாடம் புகட்டியுள்ளார். எந்திர வாழ்க்கை மிகுந்த சென்னை நகருக்குள் இருந்தபடி மிகப்பெரிய ஆத்ம சேவை செய்த ஸ்ரீ லஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி அம்மா அவர்கள் கடந்த 2000-ம் ஆண்டு ஜனவரி மாதம் 30-ந் தேதி பரிபூரணம் அடைந்தார்.
அப்போது நடந்த 48 நாள் குருபூஜையில் இசை அமைப்பாளர் கங்கை அமரனும் பங்கேற்றார். அதன்பிறகு 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் 25-ந் தேதி அவர் வாழ்ந்த இடத்தில் அவருக்கு சிறிய ஆலயம் அமைக்கப்பட்டு தினசரி பூஜைகள் நடந்து வருகின்றன. அவருக்கு பணிவிடை செய்த ராமாயி, மல்லிகா போன்றோர் பூஜைகளை கவனித்துக் கொள்கிறார்கள்.
ஆண்டுதோறும் மாசி அல்லது பங்குனியில் அம்மாவின் குருபூஜை நடத்தப்படுகிறது. வருகிற 20-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஸ்ரீ லஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி அம்மாவின் 22-வது குருபூஜை நடைபெற உள்ளது. அன்று காலை 10 மணிக்கு யாக பூஜையும், 11 மணிக்கு அபிஷேகமும் நடக்கிறது.
ராஜேஸ்வரி அம்மாவுக்கு பிடித்தது கதம்பம். ஒரு முழம் கதம்பப்பூ வாங்கி போட்டு வழிபடுங்கள். ராஜேஸ்வரி அம்மாவின் அருள் நிச்சயம் கிடைக்கும்.