No results found

    சென்னை சித்தர்கள்: ஸ்ரீசாய் விபூதி பாபா- சிட்லபாக்கம்


    அன்னை அகிலாண்டேஸ்வரி ஆட்சி செய்யும் திருவானைக்காவல் திருத்தலத்தில் சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு மிகப்பெரிய அற்புதம் ஒன்று நடந்தது. அகிலாண்டேஸ்வரி வெற்றிலை தாம்பூலம் போட்டு துப்பிய போது அது அங்கு படுத்து உறங்கிக் கொண்டிருந்த கோவில் ஊழியர் வாய்க்குள் சென்றுவிட்டது. அந்த நிமிடமே அந்த கோவில் ஊழியர் மிகப்பெரும் சக்தியை பெற்றார்.

    அகிலாண்டேஸ்வரி அருளால் அந்த நபர் கவிபாடும் ஆற்றலை எட்டினார். கற்பனைக்கும் எட்டாத பாடல்களை இயற்றி புகழ்பெற்றார். ‘காளமேகம்’ என்று உலகமே போற்றும் வகையில் அவர் சிறப்புகளை அடைந்தார்.

    இதேபோன்று சீரடி சாய்பாபாவிடமும் ஒரு பக்தர் வெற்றிலை எச்சிலை பெற்று மாபெரும் சித்தபுரு‌ஷராக மாறினார். சாய்பாபாவிடம் அருள் பெற்ற அவர், தமிழகத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது இயற்பெயர் ஜெகநாதன். மதுரையில் 1900-ம் ஆண்டு கோபால அய்யர்- சீதாலெட்சுமி தம்பதியருக்கு இவர் மகனாக பிறந்தார்.

    சிறு வயதிலேயே அவருக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டது. தோல் வியாதி அவரை தொற்றிக் கொண்டது. இதனால் குடும்பத்தினர், உறவினர்கள் அனைவரும் அவரை அன்பு காட்டி அரவணைக்கவில்லை. வாழ்க்கையில் விரக்தி அடைந்த ஜெகநாதன் தனது 13-வது வயதில் மதுரையில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு வந்தார்.

    சென்னையிலும் அவருக்கு வாழ வழிகிடைக்கவில்லை. வயிற்றுப் பசியை தீர்க்க அவருக்கு யாரும் வேலை வாய்ப்பும் தரவில்லை. இது ஜெகநாதனுக்கு தற்கொலை உணர்வை தூண்டியது. மெரினாவுக்கு சென்று கடலில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

    நினைத்தபடியே கடலுக்குள் குதிக்க அவர் முயன்றபோது, வயதான பெரியவர் ஒருவர் தடுத்து நிறுத்தினார். ‘‘தற்கொலை செய்து கொள்வதால் எந்த பயனும் இல்லை. வாழ்ந்து காட்ட வேண்டும்’’ என்று அறிவுறுத்தினார். பிறகு, ‘‘உனது வாழ்க்கையை மாற்றிக் கொள்ள வேண்டுமானால் இன்றே நீ சீரடிக்கு செல். அங்கு இருக்கும் மகான் உனக்கு வழிகாட்டுவார்’’ என்று கூறினார்.

    சொன்னதோடு நிற்காமல் சீரடி வரை சென்று வருவதற்கு தேவையான பணத்தையும் எடுத்துக் கொடுத்தார். ஜெகநாதனுக்கு நடப்பது எல்லாம் நம்ப முடியாத அளவுக்கு இருந்தது. பெரியவர் சொன்னது போல சீரடிக்கு சென்று அங்குள்ள மகானை சந்திக்க மனதுக்குள் முடிவு செய்தார். மறுநாளே சீரடிக்கு புறப்பட்டுவிட்டார்.

    சீரடியில் கலியுகத்தின் கண் கண்ட தெய்வமான சாய்பாபா தன்னை நோக்கி வரும் ஒவ்வொருவருக்கும் அருள் பாலித்துக் கொண்டு இருப்பதை ஜெகநாதன் பார்த்தார். ஜெகநாதனுக்கு தோல் வியாதி இருந்ததால் தன்னை பாபா அருகில் சேர்த்துக் கொள்வாரா என்று சந்தேகப்பட்டார். ஆனால் நடந்ததோ அதிசயமும், அற்புதங்களும்.

    ஜெகநாதனை அழைத்து, புன்னகை பூக்க பாபா அரவணைத்துக் கொண்டார். ‘ஸ்பரிச தீட்சை’ மூலம் ஜெகநாதனின் உடல் முழுக்க பாபா தொட்டுவிட்டார். அடுத்த சில நாட்களில் ஜெகநாதனின் உடலில் இருந்த தோல் நோய் முற்றிலும் குணமாகியது. ஜெகநாதனுக்கு ஆச்சரியம் தாங்க இயலவில்லை.

    அதோடு பாபா நிறுத்தவில்லை. ஒரு நாள் ஜெகநாதனை அழைத்து, ‘‘உனக்கு வேறு என்ன வேண்டும்? கேள் தருகிறேன்’’ என்றார். உடனே ஜெகநாதன், ‘‘உங்களைப் போல மற்றவர்களின் நோயை தீர்த்து வைக்கும் வரத்தை நீங்கள் எனக்கு தரவேண்டும்’’ என்று கேட்டார்.

    பாபா அப்போது வெற்றிலை தாம்பூலம் தரித்து மென்று கொண்டிருந்தார். ஜெகநாதன் கேட்ட வரத்தை அந்த வினாடியே அவர் கொடுத்தார். அதாவது ஜெகநாதனை தன் அருகே அழைத்து தான் மென்று கொண்டிருந்த வெற்றிலை தாம்பூலத்தை அப்படியே அவரது வாயை திறக்கச் சொல்லி உமிழ்ந்துவிட்டார். ஜெகநாதனும் தன்னை மறந்த நிலையில் அந்த தாம்பூலத்தை உட்கொண்டார்.

    அந்த வினாடி முதல் பாபாவின் அருள் கடாட்சம் ஜெகநாதனுக்குள் பரவி இருந்தது. அதாவது 13 வயதிலேயே சாய்பாபாவின் குரு அருள் ஜெகநாதனுக்கு கிடைத்தது. எத்தனை கோடி தவம் செய்தாலும் யாருக்கும் கிடைக்காத பாக்கியம் இது. அந்த அருள் வெள்ளத்தை சுமந்து கொண்டு ஜெகநாதன் சீரடியில் இருந்து சென்னை வந்து சேர்ந்தார்.

    சென்னையில் பாபாவை தினமும் வணங்கும் வகையில் இடம் அமைத்துக் கொண்டு வாழத் தொடங்கினார். இல்லற வாழ்க்கையிலும் ஈடுபட்டார். என்றாலும், சாய்பாபா மீது கொண்ட பக்தியே அவரது மனதில் ஓங்கி இருந்தது. நாளுக்கு நாள் சாய்பாபா மீது கொண்ட பக்தி அதிகரித்தது. ஒரு தடவை தனது கையை கத்தியால் கீறி ரத்தத்தை எடுத்து அந்த ரத்தம் மூலம் பாபாவின் உருவத்தை வரைந்து வழிபட்டார்.

    இந்தநிலையில் அவருக்கு ஏனோ வாழ்க்கையில் ஒருதடவை கடுமையான விரக்தி ஏற்பட்டது. மீண்டும் தற்கொலை எண்ணம் தலைதூக்கியது. சென்னை எலியாட்ஸ் கடற்கரைக்கு சென்ற அவர், கடலில் குதித்து உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சி செய்தார். அப்போதும் ஒரு முதியவர் வந்து அவரை தடுத்து நிறுத்தினார்.

    தனது கைத்தடியால் ஜெகநாதனை பின்னோக்கி இழுத்தார். பிறகு, ‘‘உனக்கு இன்னும் நிறைய பணிகள் உள்ளன. சீரடிக்கு வா’’ என்று அந்த முதியவர் கூறினார். பிறகு கண் இமைக்கும் நேரத்துக்குள் அவர் மறைந்து போனார். வந்தது சாய்பாபா என்று அறிந்த ஜெகநாதன் மெய்சிலிர்த்தார்.

    அந்த முதியவர் பயன்படுத்திய கைத்தடி மட்டும் அங்கேயே இருந்தது. அந்த கைத்தடியை எடுத்துக் கொண்ட ஜெகநாதன், மீண்டும் சீரடிக்கு புறப்பட்டு சென்றார். அங்கு சாய்பாபாவை தரிசனம் செய்தார். அன்று முதல் ஜெகநாதனின் ஆன்மீகப்பணி தீவிரமானது.

    சென்னை திரும்பிய அவர், அந்த கைத்தடியை தன்னோடு வைத்துக் கொண்டு அற்புதங்களை அடுத்தடுத்து செய்தார். மேலும் சக்திகளை பெறுவதற்காக அவர் தவம் செய்யவும் தொடங்கினார். சில மாதங்கள் அவர் புதுக்கோட்டைக்கு அருகே உள்ள ஒரு பகுதியில் குகைக்குள் சென்று தவம் செய்தார். அங்கு அவதூதராக அவர் இருந்தார். அந்த நிலையில் அவர் இருக்கக் கூடாது என்று அவரது பக்தர்கள் விரும்பினார்கள். அப்போதும் ஒரு அதிசயம் நடந்தது.

    பாபா மீண்டும் முதியவர் வடிவில் அங்கு வந்தார். காவி நிறத்தில் உடைகளை கொடுத்து, ‘‘இதை அணிந்து கொள். இதை அடையாளமாகக் கொண்டு ஆன்மீகப் பணிகளை செய்’’ என்று உத்தரவிட்டார். இப்படி மூன்று முறை பாபாவின் அருளைப் பெற்ற அவர், சித்தபுரு‌ஷர்களுக்குரிய அனைத்து சக்திகளையும் பெற்றார்.

    அவருக்குள் அற்புதங்களை நிகழ்த்தும் ஆற்றல்கள் நிரம்ப வந்திருந்தன. அந்த அற்புத ஆற்றல்களை ஜெகநாதன் பயனுள்ள வகையில் மாற்றினார். அவரது கையில் நினைத்தவுடன் உதியை வரவழைக்கும் ஆற்றல் இருந்தது. அந்த உதி மூலம் அவர் எத்தனையோ பேரின் நோய்களை தீர்த்தார்.

    குறிப்பாக தோல் சம்பந்தப்பட்ட நோய்கள், அவர் தரும் விபூதியால் குணமானது. புற்றுநோய் கூட அவரது விபூதிக்கு முன்பு அடிபணிந்தது. நோய்கள் நீங்கவும், வேலைகள் கிடைக்கவும், கடன் தொல்லைக் தீரவும், குடும்ப பிரச்சினைகள் தீரவும் அவர் கொடுத்த விபூதிகள் வழிகாட்டின.

    இதனால் அவரை மக்கள் ‘விபூதி பாபா’ என்று அழைக்கத் தொடங்கினார்கள். நாளடைவில் அது ‘சாய் விபூதி பாபா’ என்று மாறி நிலைத்தது. பல்லாயிரக்கணக்கானவர்கள் விபூதி பாபாவிடம் விபூதி பெற்று பலன் அடைந்தனர். சிலருக்கு கர்ம வினைகளையும் அவர் தீர்த்துவைத்தார்.

    சிலர் உயிர் பிழைக்க மாட்டார்கள் என்று டாக்டர்களால் கைவிடப்பட்டநிலையிலும், தனது அபூர்வ சக்தி காரணமாக விபூதி பாபா, அவர்களை பிழைக்க வைத்து ஆச்சரியப்படுத்தினார். பாபா வழங்கிய கைத்தடியும், விபூதியும் நினைத்துப்பார்க்க முடியாத அற்புதங்களை விபூதி பாபா மூலம் நடத்தின.

    விபூதி பாபாவிடம் கரூர் நரசிம்ம பாபா, மண்ணி வாக்கம் பாபா ஆகியோர் சீடர்களாக இருந்தனர். புதுக்கோட்டை சிவ பிருந்தா தேவிக்கு ‘சாய்மாதா’ என்று சன்னியாசதீட்சை அளித்தது விபூதிபாபா என்பது குறிப்பிடத்தக்கது. விபூதிபாபாவின் அற்புதத்தை உணர்ந்த அவரது அடியவர் ஸ்ரீநாகராஜ பாபா, சிட்லபாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் அவரை பராமரித்து வந்தார்.

    1982-ம் ஆண்டு சாய் விபூதிபாபா பரி பூரணம் அடைந்தார். அவரது அடியவரான ஸ்ரீநாகராஜபாபா தனது இல்லத்திற்கு எதிரே இருந்த தனது துணைவியார் பெயரில் உள்ள இடத்தில் சாய் விபூதி பாபாவுக்கு ஜீவசமாதி அமைத்தார். அங்கு அற்புதமான ஜீவ ஆலயம் எழுந்துள்ளது.

    அந்த ஜீவசமாதியில் சாய்பாபாவின் பெரிய சிலை நிறுவப்பட்டுள்ளது. சாய் விபூதி பாபாவின் சிலையும் வைக்கப்பட்டுள்ளது. சாய் விபூதி பாபாவுக்கு முதியவர் வடிவில் வந்து சாய்பாபா கொடுத்த கைத்தடியும் இந்த தலத்தில் இருக்கிறது. இதனால் சாய்பாபாவின் கருணையும், சாய் விபூதிபாபாவின் அருள் அலையும் இந்த ஜீவசமாதியில் நிரம்பி வழிகிறது.

    அதுமட்டுமல்ல சாய் விபூதி பாபா தான் வாழ்ந்த காலத்தில் விபூதியால் செய்த அற்புதங்கள் இன்றும் இந்த தலத்தில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. வேறு எங்கும் இல்லாத பேரதிசயமாக தினமும் இங்கு விபூதி மழை பெய்து கொண்டிருக்கிறது. தினமும் இரவில் விபூதி கொட்டுகிறது. இந்த விபூதியை பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்கிறார்கள்.

    நம்பிக்கையுடன் பெற்று செல்பவர்களுக்கு இந்த விபூதி நோய் தீர்க்கும் மருந்தாகவும், அருள் தரும் சக்தியாகவும் உள்ளது. பொதுவாகவே பாபாவின் உதி எனப்படும் விபூதி ஒருவரிடம் இருந்தால் அவருக்கு எந்த குறையும் வராது என்பார்கள். உடலாலும், மனதாலும் வல்லமையாக மாற்றும் சக்தி பாபாவின் உதிக்கு உண்டு என்பது லட்சக்கணக்கான பக்தர்களின் அனுபவம் ஆகும்.

    சாய்பாபாவை சரண் அடைந்தவர்கள் அவரது உதியை பொக்கி‌ஷமாக கருதுவார்கள். பாபா என்ற திருநாமத்துக்கு எந்த அளவுக்கு சக்தி இருக்கிறதோ, அதே அளவுக்கு அவரது உதிக்கும் சக்தி இருக்கிறது என்பது நம்பிக்கையாக இருக்கிறது. அந்த உதியை சிட்லபாக்கத்தில் உள்ள ஆலயத்தில் பாபா தினமும் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

    சென்னை சிட்லபாக்கம் அஸ்தினாபுரம் பகுதியில், எம்.சி. நகர் என்ற இடம் உள்ளது. அங்கு வெங்கட்ராமன் நகரில் முதல் மெயின் ரோட்டில் சாய் விபூதி பாபா ஆலயம் இருக்கிறது. தினமும் இங்கு காலையில் காகட ஆரத்தி, மதியம் மத்தியான ஆரத்தி, மாலையில் தீப் ஆரத்தி, இரவில் சேஜ் ஆரத்தி ஆகிய நான்கு நேர ஆரத்தி தவறாமல் நடக்கிறது.

    தினமும் மதியம் அன்னதானமும் வழங்குகிறார்கள். சென்னையில் இருப்பவர்கள் இந்த அதிஷ்டானத்துக்கு சென்று சாய்பாபா, சாய்விபூதி பாபா ஆகிய இருவரின் அருளை பெறலாம். இந்த தலத்தில் குங்கும மழையும் பெய்வது உண்டு. அடிக்கடி விஷ்ணுசகஸ்ர நாமம், லலிதா சகஸ்ரநாமம், ராமநாப ஜெபம், சத்திய நாராயண பூஜை ஆகியவை விமரிசையாக செய்யப்படுகிறது.

    Previous Next

    نموذج الاتصال