சித்தர்களின் நிலையை உணர்ந்து கொள்வது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. அதிலும் சமீபத்திய காலத்தில் மக்களுக்காக வாழ்ந்து நல்ல ஒழுக்கத்தை போதித்து சென்ற மகான்களின் வாழ்க்கையை அவ்வளவு எளிதில் மற்றவர்களால் புரிந்து கொள்ளவே இயலாது. அவர்கள் பரிபூரணமாகி ஜீவசமாதி அடைந்த பிறகு தான் பல சித்தர்களின் சிறப்புகள் நமக்கு தெரியவரும்.
சென்னையில் இத்தகைய நிலையில் எத்தனையோ சித்தர்களின் ஜீவசமாதி உள்ளன. ஆனால் பக்கத்து தெருவில் இருப்பவர்களுக்கு கூட அந்த சித்தரை பற்றி தெரியாத நிலை தான் உள்ளது. ஆனால் அவர்கள் பரிபூரணமாகி இருக்கும் இடங்கள் அருள் அலைகளால் நிரம்பி இருக்கும். அவர்கள் குறிப்பிட்ட காலத்தில் தங்களைத் தாங்களே மக்களிடம் வெளிப்படுத்திக் கொள்வார்கள்.
அப்படி ஒரு சிறப்பான ஜீவசமாதி அமைந்திருக்கும் இடம் தான் கரையான்சாவடி எம்.எஸ்.வி நகர் பகுதி ஆகும். அங்கு ஸ்ரீநாகநந்தா சுவாமிகள் ஜீவசமாதி அமைந்துள்ளது. ஆனால் எம்.எஸ்.வி. நகரில் வசிக்கும் 99 சதவீதம் பேருக்கு இந்த ஜீவசமாதி பற்றி தெரியாமலேயே இருப்பது ஆச்சரியமாக உள்ளது.
ஸ்ரீநாகநந்தா சுவாமிகளின் உண்மையான பெயர் நாகரத்தினம். இவர் திருத்தணியில் உடையார் தெருவில் பிறந்து வளர்ந்தவர். நல்ல வசதியான குடும்பத்தில் பிறந்த இவர் வாலாஜாபாத்தில் பள்ளி கல்வியை படித்தார். அப்போது அவரது ஆன்மீக குருவை சந்திக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.
ஆன்மீகத்தில் தீவிர ஈடுபாடு கொண்ட அவர் சிறு வயதிலேயே துறவியாக செல்ல முயற்சி செய்தார். ஆனால் அவரால் அந்த நிலைக்கு செல்ல முடியவில்லை. அவர் குறித்து யாரிடம் கேட்டாலும் ‘சன்னியாசியாக போய்விடுவார்’ என்றே தெரிவித்தனர்.
ஆனால் சன்னியாசியாக போவதற்கு முன்பு இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டால் தான் அதற்குரிய ஞானத்தை பெற முடியும் என்று அவரிடம் தெரிவிக்கப்பட்டது. இதனால் நாகரத்தினம் திருமணத்திற்கு சம்மதித்தார். திருமணமாகி அவருக்கு 2 பெண் குழந்தைகளும், 2 ஆண் குழந்தைகளும் பிறந்தனர்.
அவர்களுக்கு கல்வி கொடுத்து உரிய வசதிகள் அனைத்தையும் செய்து கொடுத்த பிறகு தனது ஆன்மீகப்பாதையில் செல்ல நாகரத்தினம் முடிவு செய்தார். அதன்படி, திடீரென ஒரு நாள் வீட்டை விட்டு வெளியேறினார். பல்வேறு ஆலயங்களுக்கும் தலயாத்திரையாக சென்றார். அதில் அவரது மனது பக்குவப்பட்டது.
இமயமலை, காசி உள்பட பல்வேறு புண்ணிய தலங்களுக்கும் சென்று பயற்சிகள் மேற்கொண்டார். பெங்களூரில் கைலாசா ஆசிரமத்தில் நீண்ட நாட்கள் தங்கி இருந்தார். துறவு வாழ்க்கை மேற்கொண்டதால் அவரது பெயர் நாகரத்தினம் என்பது மாறி ஸ்ரீநாகநந்தா சுவாமிகள் என்று அழைக்கப்பட்டது.
பெங்களூரில் கைலாசா ஆசிரமத்தில் அவர் மாதா சாந்தானந்தம் அம்மையாரை சந்தித்தார். இந்த அம்மையாருக்கு ஆரணி அருகே உள்ள திமிரி என்ற ஊர் தான் பூர்வீக ஊராகும். இளம் வயதிலேயே இவரும் துறவு பாதையை தேர்வு செய்து இருந்தார்.
ஸ்ரீநாகநந்தா சுவாமிகளுக்கு தேவையான அத்தனை பணிவிடைகளையும் இவர் செய்து வந்தார். குறிப்பிட்ட காலக்கட்டத்திற்கு பிறகு ஸ்ரீநாகநந்தா சுவாமிகள் சென்னைக்கு இடம் பெயர்ந்தார். கரையான்சாவடி பகுதியில் குடியேறி ஆன்மீக பணிகளை மேற்கொண்டார்.
ஸ்ரீநாகநந்தா சுவாமிகளுக்கு ராஜராஜேஸ்வரி அம்பாள் மீது அபரிமிதமான பற்று உண்டு. ஒவ்வொரு செயலிலும் அவர் ராஜராஜேஸ்வரி அம்பாளை பார்த்தார். அம்பாளை அவர் அம்மா என்று தான் அழைப்பார். தினமும் அம்பாளை பூஜிக்காமல் அவர் எந்த செயலிலும் ஈடுபட்டதே கிடையாது.
அவரை பற்றிய சிறப்புகள் சென்னையில் உள்ள பலருக்கும் தெரியவந்தது. அவரை நாடிச்சென்று ஆசி பெற்றனர். தன்னை நாடி வருபவர்களுக்கு பாராயணம் மூலம் ஆன்மீக மேம்பாட்டை ஸ்ரீநாகநந்தா சுவாமிகள் உருவாக்கினார். நுற்றுக்கணக்கானவர்கள் அவரால் ஆத்மஞானம் பெற்றனர்.
வியாசர்பாடி பகுதியில் இருந்து ஏராளமானவர்கள் ஸ்ரீநாகநந்தா சுவாமிகளை அடிக்கடி தேடி வருவது உண்டு. அவர்கள் அனைவருக்கும் அவர் வேதங்களை போதித்து ஆன்மீகத்தில் உயர்வு பெறச் செய்தார். அது மட்டுமின்றி தன்னை நாடி வரும் ஒவ்வொருவரும் நல்ல உணவு உண்ண வேண்டும் என்பதிலும் அவர் கவனமாக இருந்தார்.
அன்னதானம் செய்ய வேண்டும் என்பதை தனது பாதையை பின்பற்றுபவர்களுக்கு ஒரு பாடமாகவே அவர் நடத்தினார். ஒரு காலக்கட்டத்தில் அவர் ஆன்மீக நிலையில் உயர்ந்த இடத்திற்கு சென்று இருந்தார். அவர் வழங்கிய பரிபாஷை உத்தரவுகள் மற்றும் தகவல்கள் அப்படியே பலித்தன. இதனால் அவரை தேடி வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் இருந்தும் தேடி வந்தனர்.
என்றாலும், எல்லோரையும் ஸ்ரீநாகநந்தா சுவாமிகள் தன் அருகில் சேர்க்கவில்லை. யார் யாருக்கு எவ்வளவு ஆத்ம பலம் தேவையோ அதற்கேற்ப ஆன்மீக அமுதத்தை வழங்கினார். 1985-ம் ஆண்டு ஐப்பசி மாதம் ஒரு நாள் திடீரென மயங்கி விழுந்தார்.
அவர் பரிபூரணம் அடைந்து விட்டதாக பலரும் நினைத்தனர். சுமார் 3 மணி நேரம் அவர் உடலில் எந்த உணர்வும் இல்லை. அவரை ஐக்கியம் செய்து விடலாம் என்றே பலரும் நினைத்தனர். ஆனால் 3 மணி நேரம் கழித்து அவர் மீண்டும் உயிருடன் எழுந்தார்.
அப்போது அவர் கூறுகையில், ‘எனது அம்மாவை நான் பார்த்துவிட்டு வந்து இருக்கிறேன். புரட்டாசி மாதம் அனுஷம் நட்சத்திரம் தினத்தன்று இரவு 9.15 மணிக்கு பரிபூரணம் ஆவேன். அதுவரை உங்களுடன் இருப்பேன்’ என்றார்.
அவர் சொன்னதை அப்போது யாரும் நம்பவில்லை. என்னவோ சொல்கிறார் என்று நினைத்து விட்டனர். ஆனால் புரட்டாசி மாதம் தொடங்கியதும் ஸ்ரீநாகநந்தா சுவாமிகள் தனக்குரிய ஜீவசமாதி ஏற்பாடுகளை தானே செய்ய தொடங்கி விட்டார். ஜீவசமாதி அமைப்பதற்கான மண், செங்கலை அவரே வரவழைத்தார்.
வில்வம், திருநீரு போன்றவைகளை ஏராளமாக வாங்கி இருப்பு வைத்தார். புரட்டாசி மாதம் அனுஷம் நட்சத்திரம் அன்று காலையில் வங்கி பணத்தை எடுத்து வரச்செய்து தயாராக வைத்திருக்க சொன்னார். பூ, மாலைகள் கூட வாங்கி வைத்துவிட்டார்.
சொன்னபடியே அனுஷம் திதி நாளன்று இரவு 9.15 மணிக்கு தியானத்தில் அமர்ந்தார். பத்மாசனத்தில் அமர்ந்த நிலையிலேயே அவர் தனது உடலில் இருந்து ஆத்மாவை பிரித்துக்கொண்டு விடை பெற்றார். சொன்னபடியே சொன்ன நேரத்தில் ஸ்ரீநாகநந்தா சுவாமிகள் பரிபூரணம் அடைந்தார். இதை கண்டு அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர்.
கரையான்சாவடியில் ஏற்கனவே அவர் குறிப்பிட்டு இருந்த இடத்தில் அவர் ஜீவசமாதி வைக்கப்பட்டார். அந்த ஜீவசமாதி கருவறை மேடையில் லிங்க பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. எதிரே நந்தியும் வைக்கப்பட்டுள்ளது. இரண்டே அறைகளில் மிக மிக சிறிய ஜீவ சமாதி ஆலயமாக ஸ்ரீநாகநந்தா சுவாமிகளின் ஜீவசமாதி ஆலயம் அமைந்துள்ளது.
வீடுகளுக்கு மத்தியில் அமைந்திருந்தாலும் தியானம் செய்வதற்கு ஏற்ற அமைதியான சூழ்நிலை அங்கு இருக்கிறது. 2 அடி பள்ளத்தில் ஜீவசமாதி ஆலயம் இருக்கிறது. சுற்றிலும் உள்ள வீடுகள் உயரமாக உள்ளன. மாதந்தோறும் அனுஷம் நட்சத்திரம் தினத்தன்று அங்கு சிறப்பு பாராயணங்கள் நடத்தப்படுகின்றன.
ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் அனுஷம் நட்சத்திரத்தன்று மகா குரு பூஜை நடத்துகிறார்கள். கடந்த ஆண்டு புரட்டாசி மாதம் 36-வது ஆண்டு குரு பூஜை நடத்தப்பட்டது. ஸ்ரீநாகநந்தா சுவாமிகளுக்கு பணிவிடை செய்து வந்த மாதா சாந்தானந்தம் அம்மையார் இந்த பூஜைகளை கவனித்து வருகிறார்.
ஜீவசமாதி ஆலயம் அமைந்துள்ள இடத்தின் அருகிலேயே ஒரு சிறிய அறையில் அவர் தங்கி இருக்கிறார். ஸ்ரீநாகநந்தா சுவாமிகளிடம் உண்மையான வேண்டுதல்களை வைத்து தியானம் செய்பவர்களுக்கு பலன் கிடைப்பதாக அவர் தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி அந்த ஜீவசமாதி பகுதியில் பல்வேறு சித்தர்களும் இரவு நேரங்களில் வந்து செல்வதாக தெரிகிறது. சலங்கை ஒலி சத்தம் கேட்டு அந்த பகுதியில் உள்ள சிலர் இதை உணர்ந்து உள்ளனர். இதனால் ஸ்ரீநாகநந்தா சுவாமிகளின் ஜீவசமாதி அபரிமிதமான சக்திகளுடன் இருப்பது உறுதியாகி இருக்கிறது.
வாய்ப்பு கிடைத்தால் கரையான்சாவடி சென்று ஸ்ரீநாகநந்தா சுவாமிகளை வழிபடுங்கள். எம்.எஸ்.வி. நகரில் சாலை யோரத்தில் மாதா சிலை இருக்கும். அதற்கு பின்னால் உள்ள பகுதியில் இந்த ஜீவ சமாதி இருக்கிறது. அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அந்த ஜீவசமாதிக்கு சென்று வருவது மிகவும் நல்லது.