புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும், அதனைத்தொடர்ந்து மண்டலமாகவும் வலுவடைய வாய்ப்பு உள்ளது. ஆனால் அது புயலாக மாறுவதற்கு வாய்ப்பு இல்லை என்று தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 14-ந்தேதி வரை 5 நாட்களுக்கு பெரும்பாலான இடங்களில் மழை பெய்யக்கூடும். இன்று (10-ந்தேதி) தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழையும், தூத்துக்குடி, சிவகங்கை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் கனமழையும் பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை (11-ந்தேதி) மற்றும் 12-ந்தேதி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட வட மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் கனமுதல் மிக கனமழை பெய்யும். 13, 14-ந்தேதிகளிலும் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை கடற்கரை பகுதி முதல் தமிழக கடலோர பகுதிகளில் கனமழை இன்று மாலையில் இருந்து 14-ந்தேதி வரை பெய்யக்கூடும் என்று வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனர். நாளை 11-ந்தேதி திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமுதல் மிக கன மழையும் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.