No results found

    Google Tamil News | சுய உதவிக்குழு பெண்களை குறிவைத்து 100 கோடி ரூபாய் சுருட்டிய கில்லாடி- போலி வங்கி நடத்திய எம்.பி.ஏ. பட்டதாரி


    சென்னை உள்பட முக்கிய நகரங்களில் போலியான ஊரக வங்கியை நடத்தி பெண்களை குறி வைத்து பட்டதாரி வாலிபர் மோசடியில் ஈடுபட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாரத ரிசர்வ் வங்கியின் உதவி பொது மேலாளர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அதில், 'ஊரக மற்றும் வேளாண்மை விவசாயிகள் வங்கி' என்ற பெயரில் போலியான வங்கி செயல்பட்டு வருவதாகவும் இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதுபற்றி உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். மத்திய குற்றப்பிரிவு வங்கி மோசடி தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.

    கூடுதல் கமிஷனர் மகேஸ்வரி, துணை கமிஷனர் தங்க ஜோதி ஆகியோரது மேற்பார்வையில் கூடுதல் துணை கமிஷனர் பிரபாகரன், உதவி கமிஷனர் முத்துக்குமார் மற்றும் இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் சென்னை அம்பத்தூர் உள்பட 9 ஊர்களிலும் போலி வங்கி செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அம்பத்தூர் லேடான் தெருவில் போலி ஊரக வங்கியின் தலைமை அலுவலகம் செயல்பட்டு வந்துள்ளது. அங்கு சென்று போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. ரிசர்வ் வங்கியின் அனுமதி பெற்றிருப்பது போல போலி சான்றிதழ் தயாரித்து வங்கியை மோசடியாக நடத்தியதும் விசாரணையில் தெரிய வந்தது.

    சென்னையை போன்று மதுரை, திருமங்கலம், ஈரோடு, நாமக்கல், சேலம், விருதுநகர், கள்ளக்குறிச்சி, கோவை, பெரம்பலூர் ஆகிய 8 இடங்களிலும் போலி வங்கி செயல்பட்டது தெரியவந்தது. இந்த போலி வங்கியை திருமுல்லைவாயலை சேர்ந்த சந்திரபோஸ் என்பவர் மிகவும் துணிச்சலாக நடத்தி வந்தது வெளிச்சத்துக்கு வந்தது. இதைத் தொடர்ந்து சந்திரபோசை போலீசார் கைது செய்தனர். சென்னையை போன்று வெளி மாவட்டங்களிலும் போலி வங்கியில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களை கைப்பற்றினார்கள். வங்கி கணக்கில் இருந்த ரூ.56 லட்சத்து 65 ஆயிரத்து 336 பணமும், சந்திரபோசின் பென்ஸ் காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

    மோசடி ஆசாமியான சந்திரபோஸ், ஊரக பகுதிகளில் உள்ள மகளிர் சுய உதவிக்குழு பெண்களை குறிவைத்து ரூ.100 கோடி அளவுக்கு பணத்தை சுருட்டியாக கூறப்படுகிறது. இந்த மோசடி வித்தையை அரங்கேற்றி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் போலி வங்கியை இவர் நடத்தி வந்ததும் இதன் மூலம் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை வாடிக்கையாளர்களாக சேர்த்திருப்பதும் வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது. லண்டனில் எம்.பி.ஏ. படித்துள்ள சந்திரபோஸ் வங்கி செயல்பாடுகள் பற்றிய தகவல்களை படித்துள்ளார். இதை வைத்தே அவர் மோசடி செய்வதில் கில்லாடியாக வலம் வந்துள்ளார். அவரது மோசடி லீலைகள் பற்றி புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. அதன் விவரம் வருமாறு:- "ரூரல் அண்டு அக்ரிசல்ச்சர் பார்மர்ஸ் கோ-ஆபரேட்டிவ் பேங்க்" (ஆர்.ஏ.எப்.சி. வங்கி) என்ற பெயரில் போலி வங்கியை தொடங்கிய சந்திரபோஸ், வங்கியில் உறுப்பினராக சேருவதற்கு வாடிக்கையாளர்களிடம் ரூ.700 பணம் வசூல் செய்துள்ளார். இதனை வைத்து வங்கி கணக்கை தொடங்கி கொடுத்து ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் கார்டுகளை போலியாக பயன்படுத்தி ஆர்.ஏ.எப்.சி. ஸ்டிக்கரை ஒட்டி வாடிக்கையாளர்களிடம் கொடுத்துள்ளார். இந்த கார்டை வைத்து வங்கியில் பணம் எடுக்கலாம் என்றும், பொருட்களை வாங்கி கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார். அதன்படி இந்த கார்டும் பயன்படுத்தப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் வசிக்கும் சுயஉதவி குழு பெண்கள், விவசாயிகள் ஆகியோரின் பண தேவையை கருத்தில் கொண்டே ஊரக வங்கி என்று வங்கிக்கு பெயர் வைத்து சந்திரபோஸ் மோசடியை அரங்கேற்றி இருக்கிறார். ஒவ்வொரு வங்கி கிளையிலும் நூற்றுக்கணக்கானோர் வாடிக்கையாளர்களாக சேர்ந்து இருக்கிறார்கள். அவர்களிடமிருந்து டெபாசிட் உள்பட பல வழிகளில் சந்திரபோசும், வங்கி பணியாளர்களும் பணத்தை கறந்துள்ளனர். ஒவ்வொரு வங்கி கிளைகளிலும் 4-ல் இருந்து 5 பேர் வரை பணியாற்றி வந்துள்ளனர். வங்கியின் தலைவர் என்று தன்னை கூறிக் கொண்டு செயல்பட்டு வந்த சந்திரபோஸ், மேலாளர், உதவி மேலாளர் என ஊழியர்களையும் நியமித்துள்ளார். இதற்காக இவர்களிடமிருந்து ரூ.2 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரையில் பணத்தையும் வசூல் செய்துள்ளார். இந்த பணத்தில் இருந்தே மாதா மாதம் வங்கி பணியாளர்களுக்கு சம்பளம் கொடுத்துள்ளார். வங்கி நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருக்கிறார். விவசாய கடன், பெண்களுக்கான கடன், தனிநபர் கடன், மாதாந்திர கடன், வார கடன் என விதவிதமான வழிகளில் கடன் வழங்குவதாக கூறி விளம்பரம் செய்து பெண்கள் மற்றும் விவசாயிகளை சந்திரபோஸ் ஏமாற்றி இருப்பதும் தெரிய வந்துள்ளது. ஆர்.ஏ.எப்.சி. வங்கியில் முதலீடு செய்தால் எப்போது வேண்டுமானாலும் கடன் பெற்றுக் கொள்ளலாம் என்று மக்களை நம்ப வைத்து சந்திரபோஸ் மோசடி செய்திருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ரிசர்வ் வங்கி அனுமதி அளித்திருப்பது போன்ற போலி சான்றிதழை சந்திர போஸ் தயாரித்ததன் பின்னணி பற்றி முழுமையாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சந்திரபோசின் மோசடிக்கு மேலும் பலர் உடந்தையாக இருந்திருப்பதும் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக சந்திரபோசை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்த உள்ளனர். இந்த மோசடியின் பின்னணியில் வங்கி ஊழியர்கள் யாரும் உடந்தையாக இருந்துள்ளார்களா? என்கிற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. சந்திரபோசை காவலில் எடுத்து விசாரிக்கும் போது போலி வங்கி மோசடி தொடர்பாக மேலும் பல தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Previous Next

    نموذج الاتصال