No results found

    Google Tamil News | தஞ்சையில் மாமன்னர் ராஜராஜசோழன் 1037-வது சதயவிழா கொண்டாட்டம்: யானை மீது திருமுறைகள் வீதிஉலா


    சோழ சாம்ராஜ்யத்தின் புகழ் பெற்ற மன்னர்களுள் ஒருவர் ராஜராஜ சோழன். இவர் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தன்று பிறந்தார். இவரது பிறந்தநாள் சதய விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு 1037-வது சதய விழா இரண்டு நாள் அரசு விழாவாக நடைபெற்று வருகிறது. இனி ஆண்டுதோறும் அரசு விழாவாக நடத்தப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். நேற்று முதல் நாள் விழா நடைபெற்றது. ராஜராஜ சோழன் பிறந்த சதய நட்சத்திரமான இன்று 2-ம் நாள் விழா தஞ்சை பெரிய கோவிலில் தொடங்கியது. இதற்காக இன்று தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது. முதலில் அரண்மனை தேவஸ்தானம் நிஷாந்தி மற்றும் ஆறுமுகம் குழுவினரின் மங்கள இசையுடன் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.

    இதையடுத்து கோவில் பணியாளர்களுக்கு புத்தாடைகளை தருமபுரம் ஆதீனம் 27-வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் வழங்கினார். தொடர்ந்து யானை மீது திருமுறைகள் வைக்கப்பட்டு 4 ராஜவீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. அடியார்கள், ஓதுவார்கள் திருமுறை பாராயணம் பாடியப்படி வீதி உலா வந்தனர். அப்போது பழங்கால கொம்பு உள்ளிட்ட இசைக்கருவிகளை இசைத்தபடி வந்தனர். இதில் பெரியகோவில் உருவம் பொறித்த பிரமாண்ட மாதிரி அரங்கம் வாகனத்தில் வைக்கப்பட்டு வீதி உலாவில் பின்தொடர்ந்து வந்தது.

    இதையடுத்து பெரிய கோவிலுக்கு வெளியே உள்ள மாமன்னன் ராஜராஜ சோழன் சிலைக்கு அரசு சார்பில் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் சதயவிழாக்குழு தலைவர் து.செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து பல்வேறு இயக்கம், கட்சிகள், அமைப்பு சார்பில் ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. ஏராளமானோர் சிலைக்கு மாலை அணிவித்தனர். தொடர்ந்து பெரிய கோவிலில் பெருவுடையார் மற்றும் பெரிய நாயகி அம்மனுக்கு பால், மஞ்சள், தயிர் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களால் பேரபிஷேகம் நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம் தலைமையில் நடந்த இந்த பேரபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். மதியம் பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு பெருந்தீப வழிபாடு நடைபெற்றது. மாலையில் மங்கள இசை, குரலிசை நிகழ்ச்சி, திருமுறை பண்ணிசை அரங்கம், திருநெறிய தமிழிசை நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. சதயவிழாவை முன்னிட்டு பெரியகோவில் அருகே உள்ள பாலம், சோழன் சிலை பூங்கா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு தஞ்சை மாநகரம் விழாக்கோலம் பூண்டது.

    Previous Next

    نموذج الاتصال