செல்பேசி செயலி மற்றும் வேலை வாய்ப்பு இணையதளம் ஆகியவற்றின் வாயிலாக மாநிலத்தில் வேலை தேடுபவர்களும், பணியமர்த்தும் நிறுவனங்களும் சுமூகமாக இணைக்கப்படுகின்றன என்றும் அவர் குறிப்பட்டார். இதேபோன்ற வேலைவாய்ப்பு முகாம்கள் வரும் மாதங்களில் தேசிய மற்றும் மாநில அளவுகளில் தொடர்ந்து நடத்தப்படும் என்று பிரதமர் குறிப்பிட்டார். 10 லட்சம் வேலை வாய்ப்புகளை வழங்கும் வகையில் மத்திய அரசு பணியாற்றி வருவதாக அவர் தெரிவித்தார். 2047-ஆம் ஆண்டிற்குள் வளர்ந்த நாடாக இந்தியா முன்னேற இளைஞர்களின் முக்கிய பங்களிப்பை சுட்டிக்காட்டிய பிரதமர், சமூகத்திற்கும், நாட்டிற்குமான தங்களது கடமையை நிறைவேற்றுமாறு அவர்களைக் கேட்டுக்கொண்டார். வேலை கிடைப்பதை தங்கள் முன்னேற்றத்தின் இலக்காகக் கொண்டிராமல் இளைஞர்கள் தொடர்ந்து கற்றுக் கொண்டு, திறன் பெற வேண்டும் என்றும் பிரதமர் கோரிக்கை விடுத்தார்.
விரைவில் தேர்தல் அறிவிக்கப்பட உள்ள குஜராத் மாநிலத்தில் நேற்று நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் பிரதமர் மோடி காணொளி மூலம் உரையாற்றினார். பல்வேறு நிலைகளில் வெவ்வேறு பணியிடங்களுக்கு நியமன கடிதங்களைப் பெற்றுள்ள விண்ணப்பதாரர்களுக்கு அப்போது அவர் வாழ்த்து தெரிவித்தார். குஜராத் மாநிலத்தில் 10,000 இளைஞர்களுக்கு பணி நியமன கடிதங்கள் வழங்கப்பட்டிருப்பதோடு அடுத்த ஓராண்டில் 35,000 இடங்களை நிரப்ப இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாகவும் பிரதமர் கூறினார். குஜராத்தில் ஏராளமான வேலை வாய்ப்புகளும், சுய வேலை வாய்ப்புகளும் உருவாவதற்கு மாநிலத்தின் புதிய தொழில்துறை கொள்கைதான் முக்கிய காரணம் என்றார்.