முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டதுடன் தி.மு.க. பொதுக்குழுவிலும் வேதனைப்பட்டு பேசினார். இந்த சூழலில் சென்னை வேப்பேரி பெரியார் திடலில் நடைபெற்ற தி.மு.க. கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார். அவர் கூறியதாவது:- நான் பேசிய ஒரு வார்த்தையை வைத்துக்கொண்டு என்னை என்னென்ன சொன்னார்கள் என்பது உங்களுக்கு எல்லாம் தெரியும். அதைகூட தலைவர் மு.க.ஸ்டாலின் என்னை பார்த்து அதையெல்லாம் சொல்லாதீங்க... அந்த மாதிரியெல்லாம் பேசாதீர்கள் என்று சொன்னார். கலோகியலா நாங்கள் எல்லாம் எங்கள் கடலூர் மாவட்டத்தில் பேசும் வார்த்தை அது.
அங்கிருக்கும் போதும், விழுப்புரத்தில் நாங்கள் படிக்கும் போதும் ஒரு கலோக்கியலா பேசிக்கொள்கிற வார்த்தையை பேசியதற்காக எவ்வளவு பேர், அதுவும் குறிப்பாக இந்த `பி.ஜே.பி.' எங்களையெல்லாம் ஒரு டார்கெட் செய்து சில பேர்களை தாக்க வேண்டும் என்று தாக்கிக்கொண்டிருக்கிறார்கள். அதற்கு கூட எங்கள் முதல்-அமைச்சர் என்னிடம் வேண்டாங்க அதெல்லாம்... எதற்காக இப்படி பேசுறீங்க? என்று எனக்கு ஒரு அறிவுரையை சொன்ன தலைவர்தான் இன்றைய முதல்வர். எனவே அப்படி யாராவது மனதும் புண்பட்டு இருக்குமானால் உண்மையாகவே நான் வருந்துகிறேன். நான் யாரையும் புண்படுத்த வேண்டும் என்று பேசவில்லை. அது கலோக்கியலாக பேசுகிற ஒரு வார்த்தை தான். இவ்வாறு பொன்முடி கூறினார்.