இந்த மூன்று வழித்தடங்களுடன் கூடிய 2-வது கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தை நிறைவேற்ற மொத்தம் சுமார் ரூ.62 ஆயிரம் கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் ஏற்கனவே சென்னையில் தொடங்கி விட்டன. சென்னையின் முக்கிய பகுதிகளில் 2-வது கட்ட மெட்ரோ ரெயில் உயர்மட்ட பாதைகள் அமைப்பதற்கான பணிகள் ஆங்காங்கே தீவிரமாக நடந்து வருகின்றன. உயர்மட்ட பாதை தவிர 3 வழித்தடங்களிலும் சுமார் 42.6 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப்பாதையில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த 42 கி.மீ. தொலைவு சுரங்க பாதையில் மொத்தம் 48 ரெயில் நிலையங்கள் உருவாக்கப்பட இருக்கின்றன. சுரங்கப்பாதை அமைப்பதற்கான பணிகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
இதில் 3-வது வழித்தடமான மாதவரம்-சோழிங்கநல்லூர் வரையிலான பாதையில் முக்கியமான பணியான சுரங்கம் தோண்டும் பணி தொடக்க விழா இன்று (வியாழக்கிழமை) மதியம் மாதவரம் பால் பண்ணை பகுதியில் நடந்தது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த விழாவில் கலந்து கொண்டார். அவர் மாதவரம் பால் பண்ணை பகுதியில் இருந்து புரசைவாக்கம் கெல்லீஸ் வரை சுரங்கம் தோண்டும் பணியை தொடங்கி வைத்தார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த பாதையில் சுரங்கம் தோண்டுவதற்கான எந்திரங்கள் கடந்த ஜூன் மாதமே சென்னைக்கு கொண்டு வரப்பட்டுவிட்டது. மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட திட்டத்தில் தோண்டப்படும் சுரங்கப்பாதைகளில் இரட்டை சுரங்கங்கள் அமைக்கப்படுகிறது. இந்த சுரங்கங்களை தோண்டுவதற்காக 3 வழித்தடங்களிலும் மொத்தம் 23 சுரங்கம் தோண்டும் எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
இந்த 23 எந்திரங்களில் 3-வது வழித்தடத்தில் 15 எந்திரங்கள் பயன்படுத்தப்படும். 4-வது மற்றும் 5-வது வழித்தடங்களில் தலா 4 சுரங்கம் தோண்டும் எந்திரங்கள் பயன்படுத்தப்படும். இந்த எந்திரங்கள் அனைத்தும் வெளிநாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்டு உள்ளன. மாதவரம்-சோழிங்கநல்லூர் வரையிலான 47 கி.மீ. நீள தடத்தில் மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் பணிகள் சமீபத்தில் தொடங்கப்பட்டுள்ளன. வரும் 2026-ம் ஆண்டுக்குள் மெட்ரோ 2-ம் கட்ட பணிகளை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் பணிகளில் மாதவரம் பால் பண்ணை பகுதியில் அமைய இருக்கும் மெட்ரோ ரெயில் நிலையம் 3 வழித்தடங்கள் சந்திக்கும் மிகப்பெரிய ஜங்சனாக அமைய உள்ளது. இதனால் மாதவரம் பால் பண்ணையில் அமைய இருக்கும் மெட்ரோ ரெயில் நிலையம் சுமார் 16 மீட்டர் ஆழத்தில் அதிநவீன வசதிகளை கொண்டதாக இருக்கும்.