No results found

    பப்ஜி- பிரீபயர் போன்ற ஆன்லைன் விளையாட்டுகளுக்கு முடிவு கட்டாமல் விடப்போவதில்லை- நீதிபதிகள் ஆவேசம் | Google Tamil News


    மதுரை ஐகோர்ட்டு பதிவாளர் தாமாக முன்வந்து மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:- நமது தேசத்தின் எதிர்காலம் இளைய தலைமுறையின் கைகளில் உள்ளது. அவர்கள்தான் நம் நாட்டின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக உள்ளார்கள், அதற்காக அவர்கள் உடல், உளவியல், பொருளாதாரம், சமூகம் என எல்லாவற்றிலும் தகுந்தவர்களாக இருக்க வேண்டும். ஆனால் இன்றைய இளம்தலைமுறையினர் பப்ஜி, பிரீ பயர் போன்ற ஆன்லைன் விளையாட்டுகளில் மூழ்கி, கல்வி மற்றும் ஆரோக்கியமான பொழுதுபோக்குகள் போன்றவற்றிலிருந்து அவர்கள் விலகிச் செல்கிறார்கள். அதன் மூலம் அவர்கள் தங்கள் எதிர்காலத்தை பணயம் வைக்கிறார்கள்.

    அதன் விளைவாக நமது நாட்டின் வளர்ச்சி பெருமளவில் பாதிக்கப்படுகிறது. எனவே இந்த வகையான ஆன்லைன் விளையாட்டுகளின் அச்சுறுத்தலை கட்டுப்படுத்துவதற்கான அவசரத்தேவை ஏற்பட்டுள்ளது. இளைஞர்களை, அதிலும் குறிப்பாக மாணவர்களுக்கு விழிப்புணர்வை நாம் ஏற்படுத்த வேண்டும். இந்த விவகாரத்தில் காவல்துறைக்கும், சமூக ஆர்வலர்களுக்கும் பங்கு உள்ளது. பிள்ளைகள் ஸ்மார்ட் போன்கள் மற்றும் கம்ப்யூட்டர் மூலம் என்ன செய்கிறார்கள் என்பதை கவனிக்க வேண்டிய முக்கிய பொறுப்பு பெற்றோருக்கு உண்டு. ஆன்லைன் கேம்களை விளையாடுபவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து கேம்களை அன்-இன்ஸ்டால் செய்ய வைக்க வேண்டும். ஆகையால் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு நிரந்தர தடை விதிக்கும் வகையில் இணையதள மாற்றங்களை ஏற்படுத்தவும், ஆன்லைன் விளையாட்டு விளையாடுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை உருவாக்கவும் மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:- இந்த விவகாரம் எதிர்கால தலைமுறையினர் சம்பந்தப்பட்டது. இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. ஆன்லைன் விளையாட்டுகளில் மூழ்கியதால் தற்போதைய இளைஞர்கள், மாணவர்கள் மைதானங்களுக்கு சென்று விளையாடுவதையே மறந்து விட்டனர். இப்படியே இந்த விவகாரத்தை விட்டு விட்டால் பெரும் ஆபத்தில் முடியும். இதற்கு முடிவு கட்டாமல் இந்த கோர்ட்டு விடப்போவதில்லை. எனவே ஆன்லைன் விளையாட்டுகளை முழுவதுமாக தடை செய்வது குறித்து மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும். வருகிற 27-ந்தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

    Previous Next

    نموذج الاتصال