No results found

    Google Tamil News | கந்தசஷ்டி திருவிழாவில் இன்று சூரசம்ஹாரம்: திருச்செந்தூரில் பக்தர்கள் குவிந்தனர்


    முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். கோவிலில் இந்த ஆண்டு கந்தசஷ்டி திருவிழா கடந்த 25-ந்தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடந்து வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், 6-ம் நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலையில் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு இன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது. காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெறுகிறது.

    மாலை 4 மணியளவில் சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு எழுந்தருளுகிறார். கடற்கரையில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. சூரசம்ஹாரம் முடிந்ததும் சந்தோஷ மண்டபத்தில் சுவாமி-அம்பாளுக்கு அலங்காரமாகி தீபாராதனை நடைபெறுகிறது. தொடாந்து சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் புஷ்ப சப்பரத்தில் எழுந்தருளி, கிரிப்பிரகார உலா வந்து கோவிலை சேர்ந்த பின்னர் சாயாபிஷேகம் (அதாவது கண்ணாடியில் தெரியும் சுவாமியின் பிம்பத்துக்கு அபிஷேகம்) நடைபெறும். விழாவையொட்டி கோவில் வளாகத்தில் உள்ள தற்காலிக கூடாரங்களில் திரளான பக்தர்கள் தங்கியிருந்து விரதம் இருந்து வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்துள்ளனர். அவர்கள் கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்கின்றனர்.

    சூரசம்ஹாரம் நடைபெறும் கடற்கரைக்கு பக்தர்கள் எளிதில் வந்து செல்லும் வகையில், தடுப்பு கம்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. கடற்கரையில் நடைபெறும் சூரசம்ஹாரத்தை பக்தர்கள் எளிதில் காணும் வகையில், பல்வேறு இடங்களில் பிரமாண்ட டிஜிட்டல் திரை அமைக்கப்பட்டு உள்ளது. சுமார் 2,700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், ராமதாஸ், கணேசன், செந்தில் முருகன், இணை ஆணையர் (பொறுப்பு) அன்புமணி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    Previous Next

    نموذج الاتصال